தற்க்குறி" வெற்றிக் கழகத்தின் பாண்டிச்சேரி நிகழ்வு பற்றிய சிறு விமர்சனம்
பாண்டிச்சேரியில் ‘சரக்கு’ இருந்ததா? அல்லது வெறும் சலசலப்பா?
பாண்டிச்சேரி என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது ‘விடுமுறை கொண்டாட்டம்’ தான். ஆனால், விஜய் அங்கே போய் மிகத் தீவிரமாக அரசியல் பேசியிருக்கிறார். “தமிழ்நாட்டில் மட்டுமல்ல, புதுச்சேரியிலும் நாங்கள்தான் வருவோம்” என்று முழங்கியிருக்கிறார்.
சினிமாவில் ‘டபுள் ரோல்’ பண்ணுவது நடிகருக்கு கைவந்த கலை. ஆனால் அரசியலில் ஒரே நேரத்தில் இரண்டு மாநிலங்களில் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) காலூன்ற நினைப்பது அதீத தன்னம்பிக்கையா? அல்லது அறியாமையா? என்று தெரியவில்லை.
பாண்டிச்சேரி அரசியல் என்பது தமிழ்நாட்டை விட ஒரு விசித்திரமான ‘ஜக்கமக்க’ அரசியல். அங்கே முதலமைச்சராக இருப்பவரை விட, ஆளுநராக இருப்பவருக்குத் தான் ‘பவர்’ அதிகம் என்று கடந்த காலங்களில் நாம் பார்த்திருக்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அங்கே அதிகாரம் இல்லாதபோது, விஜய் அங்கே போய் “எல்லாவற்றையும் மாற்றுவேன்” என்று சொல்வது, “நான் சூரியனை மேற்கே உதிக்க வைப்பேன்” என்று சொல்வதற்குச் சமம். விஜய் ஆழம் தெரியாமல் காலை விடுகிறார் போல. முதலில் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியிலாவது டெபாசிட் வாங்க முடியுமா என்று பார்ப்பதை விட்டுவிட்டு, பக்கத்து மாநிலத்துக்கும் குறி வைப்பது, "பசிக்கு சோறு இல்லை, ஆனால் பந்திக்கு முந்திக்கொள்வேன்" என்ற கதையாக இருக்கிறது.
விஜய் பாண்டிச்சேரியில் பேசியது பொதுமக்களுக்கான பேச்சு என்பதை விட, சோர்வடைந்து போயிருக்கும் தன் கட்சி நிர்வாகிகளை உசுப்பேற்றும் பேச்சாகவே தெரிகிறது. “நாம தான் ஜெயிப்போம், 2026 நம்ம கைல” என்று அவர் பேசுவது, போருக்குப் போகும் முன் படைவீரர்களுக்குத் தரும் ‘டானிக்’ போன்றது. ஆனால் பிரச்சனை என்னவென்றால், தளபதி டானிக் கொடுக்கிறார், ஆனால் எதிரணியில் இருப்பவர்களோ (திமுக, என்.ஆர்.காங்கிரஸ், பாஜக) கையில் பீரங்கியோடு நிற்கிறார்கள். வெறும் உற்சாகத்தை வைத்துக்கொண்டு தேர்தல் வியூகங்களை உடைக்க முடியுமா?
“அதிகாரத்தில் பங்கு” என்று தமிழ்நாட்டில் சொன்ன விஜய், பாண்டிச்சேரியில் தனித்து போட்டியா அல்லது அங்கேயும் யாருடனாவது கூட்டு சேருவாரா என்று சொல்லவில்லை. பாண்டிச்சேரியில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைப்பது என்பது குதிரை கொம்பு. அங்கே எல்லோரும் யாருடனாவது ஒட்டிக்கொண்டுதான் பிழைக்கிறார்கள். விஜய் அங்கே என்ன செய்யப் போகிறார்? கூட்டணி குழப்பம் அங்கும் தொடர்கிறது ஊழலை ஒழிப்பேன் என்கிறார். பாண்டிச்சேரி அரசியலே ‘கவனிப்பு’ அரசியல்தான். அதை மாற்றப் போறேன் என்று சொன்னால், அங்கே இருக்கும் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, மக்களே கூட விஜய்யை பார்த்து சிரிப்பார்கள்.
விஜய்யின் பாண்டிச்சேரி மாநாட்டின் காரணமாக அந்த பாண்டிச்சேரி பெண் சிறப்பு காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங் என்.ஆனந்தி சீறப்பாக பணியாற்றி எல்லோருடைய கவனத்தை பெற்றதுமல்லாமல் பலரின் பாராட்டையும் பெற்று இருப்பது மட்டுமே இந்த நிகழ்வின் மிக சிறப்பு வாய்ந்த அம்சம்
மதுரைத்தமிழனின் கேள்வியும் பதிலும்
கேள்வி: தமிழ்நாட்டை விட்டுவிட்டு பாண்டிச்சேரியில் ஏன் கவனம் செலுத்துகிறார்?
பதில்: ஒருவேளை தமிழ்நாட்டில் ‘பருப்பு வேகவில்லை’ என்றால், பாண்டிச்சேரியிலாவது ‘சாம்பார்’ வைக்கலாம் என்று நினைக்கிறாரோ என்னவோ! சிறிய மாநிலம், குறைவான தொகுதிகள் என்பதால் அங்கே ஒரு ‘வெற்றி’ கிடைத்தால் அதை வைத்து தமிழ்நாட்டில் பில்டப் கொடுக்கலாம் என்பது கணக்காக இருக்கலாம்.
மதுரைத்தமிழனின் ‘பன்ச்’
விஜய் பாண்டிச்சேரியில் பேசியதில் ஒரு தெளிவு இருக்கிறது. அதாவது, நான் இன்னும் அரசியலைக் கற்றுக்கொள்ளவில்லை, ஆனால் கற்றுக்கொள்வது போலவே நடிப்பேன்” என்பதுதான் அது.
பாண்டிச்சேரிக்கு எல்லோரும் ‘ரிலாக்ஸ்’ பண்ண போவார்கள். விஜய் அங்கே போய் ‘ரிஸ்க்’ எடுத்திருக்கிறார். இந்த ரிஸ்க் அவருக்கு ரஸ்க் சாப்பிடுவது போல எளிதாக இருக்குமா? அல்லது வினையாக முடியுமா? என்பது 2026-ல் தெரியும்.
அதுவரை... "வேடிக்கை பார்ப்பதுதான் நம் வேலை!"
அன்புடன்
மதுரைத்தமிழன்

சிறப்பான தொகுப்பு தமிழரே....
ReplyDeleteநன்றி கில்லர்ஜி
Delete