உலக அளவில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான செய்தி.
அமெரிக்காவின் லூசியானா (Louisiana) மாகாணத்தைச் சேர்ந்த 'ஃபைபர் பாண்ட்' (Fibrebond) என்ற நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ கிரஹாம் வாக்கர் (Graham Walker) தான் இந்தச் செயலைச் செய்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
அப்படி அவர் என்ன செய்தார் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்
அமெரிக்காவின் ஒரு சிறிய தொழில் நகரம். அங்கே பல தசாப்தங்களாக இயங்கி வந்த குடும்பத் தொழில் நிறுவனம் 'ஃபைபர் பாண்ட்'. சமீபத்தில் அந்த நிறுவனம் 'ஈட்டன்' (Eaton) என்ற பெரிய நிறுவனத்திடம் 1.7 பில்லியன் டாலருக்கு (சுமார் 14,000 கோடி ரூபாய்) கைமாறியது. பொதுவாக, ஒரு நிறுவனம் விற்கப்படும்போது அதன் லாபம் முழுவதும் உரிமையாளருக்கே செல்லும். ஆனால், இங்கே நடந்ததோ வேறு!
நிறுவனத்தின் சி.இ.ஓ கிரஹாம் வாக்கர், நிறுவனத்தை விற்கும்போது ஒரு அதிரடி நிபந்தனையை முன்வைத்தார். "விற்பனைத் தொகையில் 15 சதவீதத்தை (240 மில்லியன் டாலர் - சுமார் 2,150 கோடி ரூபாய்) எனது தொழிலாளர்களுக்குப் போனஸாகத் தர வேண்டும். அதற்குச் சம்மதித்தால் மட்டுமே கையெழுத்திடுவேன்" என்றார். பங்குதாரர்களாக இல்லாத சாதாரண தொழிலாளர்களுக்காக ஒரு முதலாளி இப்படிப் பிடிவாதம் பிடித்தது கார்ப்பரேட் உலகையே வியப்பில் ஆழ்த்தியது. அப்படி அவர் சொன்னதை செய்தும் காட்டினார்
540 முழுநேரப் பணியாளர்களுக்குக் கவரில் போனஸ் விபரங்கள் வழங்கப்பட்டபோது, பலரும் அதை ஏதோ ஒரு 'பிராங்க்' (Joke) என்றுதான் நினைத்தனர். ஆனால், கவரைப் பிரித்தவர்களின் கண்கள் கலங்கின. ஒவ்வொரு தொழிலாளிக்கும் சராசரியாக 4,43,000 டாலர் (சுமார் 3.7 கோடி ரூபாய்) போனஸாக அறிவிக்கப்பட்டிருந்தது! இது அவர்கள் வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்கும் தொகையை விட அதிகம்.
இந்த போனஸால் வாழ்க்கையே மாறியவர்களில் ஒருவர் லேசியா கீ (Lesia Key). 29 ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், தனது அனுபவத்தை உள்ளூர் ஊடகமான WKRC-TV-யிடம் பகிர்ந்தபோது:
"இதுவரை ஒவ்வொரு மாதமும் சம்பளத்தை எதிர்பார்த்து, கடன் தொல்லையில் வாழ்ந்து வந்தேன். இப்போது என் வீட்டு அடமானத்தை அடைத்துவிட்டேன். என் சமூகத்திற்காக ஒரு துணிக்கடையைத் (Boutique) தொடங்கப் போகிறேன். இப்போதுதான் எனக்கு வாழவே தைரியம் வந்திருக்கிறது!" என நெகிழ்ந்தார். இது போன்று பலரும் தங்கள் வாழ்வில் இது நினைத்து பார்க்க கூட முடியாத அதிசயம் என்றும்கூறியிருகின்றனர்
இந்தத் தாராள மனப்பான்மைக்கு பின்னால் ஒரு வரலாறு உண்டு. 1998-ல் இந்தத் தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்தபோது, கிரஹாம் வாக்கரின் தந்தை தொழிலாளர்களைக் கைவிடாமல் சம்பளம் வழங்கினார். அந்தப் பண்பை அப்படியே பின்பற்றிய கிரஹாம், "இந்த வளர்ச்சிக்கு காரணமானவர்கள் என் தொழிலாளர்கள், அவர்களுக்கு இதில் பங்கு உண்டு"என்று கூறி இதனைச் செயல்படுத்தியுள்ளார்.
இது பற்றி அறிந்து பலரும் Social Media Reactions தெரிவித்து வருகின்றனர் அதில் உள்ள ஒரு கருத்து "இதுதான் உண்மையான தலைமைப் பண்பு. மற்ற சி.இ.ஓ-க்கள் இவரைப் பார்த்துப் பாடம் கற்க வேண்டும்!" என ஒருவர் பாராட்டியுள்ளார். மற்றவர்களோ "இப்போதெல்லாம் போனஸ் என்றாலே 50 அல்லது 100 டாலர் கிஃப்ட் கார்டு கொடுக்கும் காலத்தில், 4 லட்சம் டாலர் என்பது கனவு போல இருக்கிறது!" என வியக்கின்றனர்.
இதற்கிடையில், இந்தச் செய்தியைப் படிக்கும்போது ஒரு கசப்பான உண்மையை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது. உலக அளவில், ஆண்டுக்கு 84 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டும் நான் வேலை பார்க்கும் நிறுவனம், இந்த ஆண்டுத் தன் ஊழியர்களுக்கு வழக்கமாக அளிக்கும் ஒரு கிறிஸ்துமஸ் பார்ட்டியைக் கூட ரத்து செய்துவிட்டது. ஊழியர்களாகிய நாங்களாகவே இணைந்து எங்கள் பிராஞ்சுகளில் கொண்டாடினோம் இதுவும் அதே அமெரிக்காவில்தான் நடக்கிறது. ஒரு பக்கம் பில்லியன் டாலர் போனஸ், மறுபக்கம் ஒரு சிறு கொண்டாட்டத்திற்குக் கூட மனமில்லாத கார்ப்பரேட் ராட்சதர்கள்!
நமது இந்தியாவை எடுத்துக்கொண்டால், மக்களுக்காகச் சேவை செய்ய வந்ததாகச் சொல்லிக்கொள்ளும் பல தலைவர்கள், மக்களின் வரிப்பணத்தைச் சுருட்டித் தங்களை வளர்த்துக்கொள்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். இவர்கள் நடத்தும் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்குச் சிறு உதவி கூடக் கிடைப்பது அரிதாகவே இருக்கிறது.
இருப்பினும்,இந்தியாவில் சில நல் உள்ளங்கள் இல்லாமலும் இல்லை. வட இந்தியாவில் சில வைர வியாபாரிகள் தங்கள் தொழிலாளர்களுக்குக் கார் மற்றும் வீடுகளைப் பரிசாக வழங்கிய செய்திகளை நாம் வாசித்திருப்போம். சினிமா துறையில் கூட நடிகர் அஜித்குமார் அவர்கள் தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்குத் தொடர்ந்து பல உதவிகளைச் செய்து வருவதாகச் செய்திகள் வருகின்றன. ஆனால், இது போன்ற மனிதாபிமானம் ஒரு சிலரிடமோ அல்லது ஒரு சில இடங்களிலோ மட்டும் இருக்கக்கூடாது.
பணத்தை விட மனிதநேயமே பெரிது என்பதை உலகுக்கு நிரூபித்திருக்கும் கிரஹாம் வாக்கர் போன்றவர்கள் . "வேலைக்காரன்" என்று பார்க்காமல் "உடன் இருப்பவர்கள்" என்று நினைத்ததால்தான் இன்று அந்த 540 குடும்பங்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முன்கூட்டியே வந்திருக்கிறது. இப்படிப்பட்ட நல்ல மனிதர்கள் இன்னும் பெருக வேண்டும் என்பதுதான் நம் அனைவரின் ஆசையும்.
படிக்காதவர்கள் படிக்க எனது முந்தைய பதிவுகளின் சிறு லிஸ்ட்
"இந்தியர்கள் என்றாலே அலறுகிறார்கள்!" - உலகம் நம்மைப் பார்த்து முகம் சுழிப்பது ஏன்? https://avargal-unmaigal.blogspot.com/2025/12/blog-post_24.html
உங்க மைண்ட்செட் மாத்தணுமா? விவேகானந்தரின் ‘பவர்ஃபுல்’ ரகசியங்கள்! Gen-Z & Millennials #MindsetMatters https://avargal-unmaigal.blogspot.com/2025/12/gen-z-millennials-mindsetmatters.html
# சுத்தம் சோறு போடுமா? - இந்தியர்களின் ‘சிதைந்துபோன’ சமுக உணர்வு: ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்! https://avargal-unmaigal.blogspot.com/2025/12/shattered-social-consciousness-of.html
பிஞ்சு மனங்களும்... நஞ்சு விதிகளும்! தடை செய்ய ஆயிரம்... தாராளமாய் ஒன்றா? https://avargal-unmaigal.blogspot.com/2025/12/tender-minds-and-poisonous-rules.html
ஆண்களின் வலி தெரியுமா? வெளிநாட்டுப் பெண் ( White Lady )கேட்ட ஆவேச கேள்வி! https://avargal-unmaigal.blogspot.com/2025/12/white-lady.html
🛑 ஐரோப்பா... இனி 'கனவு தேசம்' அல்ல; 'கானல் நீர்'! - 2026 முதல் இறுகும் பிடி... https://avargal-unmaigal.blogspot.com/2025/12/2026.html
இந்தியாவை 'காலி' செய்கிறார்களா இந்தியர்கள்? - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்! https://avargal-unmaigal.blogspot.com/2025/12/blog-post_20.html
அன்புடன்,
மதுரைத்தமிழன்
#Fibrebond #GrahamWalker #HumanityFirst #Inspiration #LifeChanging #RealHero #EmployerOfTheYear #ViralNews #SuccessStory #TamilNews #மனிதாபிமானம் #நம்பிக்கை #தொழிலாளர்நலம்

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.