Thursday, April 21, 2016



கோடைக்கால சிறப்பு வகுப்புகள் மாணவர்களுக்கு  நன்மையா.. தீமையா....?? பிரபலங்கள் சொன்ன கருத்துக்கள்

முன்பு எல்லாம் வார மாத இதழ்களை எடுத்துபடித்தால் அதில் ஒரு நல்ல தலைப்புடன்  நன்மையா.. தீமையா.. என்று பல பிரபலங்களிடம் கேட்டு அவர்களின் கருத்தை சொல்லி அதை அலசி ஆராய்ந்து ஒரு கட்டுரையாவது வரும் ஆனால் இப்பொழுது எந்த இதழ்களையும் எடுத்துபடித்தால் அப்படி ஒரு கட்டுரைகள் வரவில்லை.அப்படியே வந்தாலும் அது கட்டுரையை எழுதிவரின் கருத்துக்கள் மட்டும் வெளிவரும். அதை படிக்கும் பலர் அந்த கட்டுரையின் தகவல்களை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ கருத்துக்களை பதியாமல் சென்றுவிடுவார்கள். அப்படியே கருத்துக்கள் சொல்லி இருந்தாலும் பல சமயங்களில் பதிவு அருமை மனதை தொட்டது சூப்பர் என்று சில வரிகளில் சொல்லி சென்று இருப்பார்கள். இப்படி வருவதில் சில மாற்றங்கள் செய்யலாமே என்ற நோக்கத்தில் எழுந்த பதிவுதான் இந்த பதிவு.

இந்த பதிவில்  'கோடைக்கால சிறப்பு வகுப்புகள்  குழந்தைகளுக்கு(மாணவர்களுக்கு)  நன்மையா.. தீமையா....?? என இப்படி ஒரு கேள்வியை கேட்டு அதற்கான பதிலை  இணையங்களில் இயங்கும் பிரபலமானவர்கள்
பலரிடம் இருந்து திரட்டி கொடுத்திருக்கிறேன். இப்படி நான் கேட்டு அதற்கு பதில் கருத்தை அனுப்பியவர்கள்  பேஸ்புக்கிலும் வலைத்தளங்களிலும் மிக பிரபலமாக இருக்கும் சமுக ஆர்வலர்கள், குடும்ப தலைவிகள்,  ஆசிரியர்கள்  மற்றும் பலர் அடங்குவார்கள் .கோடைவிடுமுறை ஆரம்பிக்கும் இந்த சமயத்தில் இது பலருக்கும் உபயோகமாக இருக்கும் என்பதால் இதை சமுகநலன் கருதி பிரபல பெண்கள் ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களிடம்  இருந்து கருத்தை பெற்று வெளியிடுகிறேன். இதை படிக்கும் நீங்களும் இதை பற்றி உங்கள் கருத்துகளை பின்னுட்டங்களில் பதியலாம்.


மதுரைத்தமிழனின் கருத்து : இன்று மேலை நாடுகள் பலவற்றில் இந்தியாவில் இருந்து வந்து சாதித்த மக்களாகட்டும் மற்றும் இந்தியாவில் இருந்து சாதித்த மக்களாகட்டும் ஏன் பெப்ஸியின் தலைவர் இந்திராநூயி கூகுல் சி,ஈ.ஓ பிச்சைமுத்து ஆகியோரையும் பார்த்தால் அவர்கள் யாரும் கோடை சிறப்பு வகுப்பில் படித்து வந்தவர்கள் இல்லை. இருந்த போதிலும் அவர்களும் சாதிக்கவே செய்தனர். ஆனால் இப்போது தமிழகத்தில் யாரோ கிளப்பிவிட்ட டிரெண்ட்டின் படி கோடைவிடுமுறையில் குழந்தைகள் சிறப்பு பயிற்சிகளில் சேர்ந்து நிறைய கற்றால்தான் தங்கள் குழந்தைகள் இந்த போட்டி சூழ் உலகத்தில் வெற்றி பெற முடியும் என்று நினைத்து அவர்களுக்கு ரெஸ்ட் ஏதும் கொடுக்காமல் திணிதிணி என்று தினிக்கிறார்கள் இறுதியில் கிடைக்கும் பலனை பார்த்தால் அதனால் ஒன்றுமில்லைதான்.

கோடை பயற்சி முறையே ஒரு ஏமாற்று வேலைதான்  குறுகிய காலத்தில் எதையும் படிக்க முடியாது.அது மட்டுமல்ல முறையான பயற்சியும் அளிக்க படுவதில்லை. அளிக்கவும் முடியாது. அது தான் உண்மை. இன்று நாம் சிறப்பு படிப்பு படிப்பு என்று திணிக்கும் நாம் . நாம் கடந்து வந்த காலத்தை பின்னோக்கி பார்த்து, எவ்வாறு நமது  கோடை விடுமுறையை செலவழித்தோம் என்று யோசித்து பார்த்தால் அனைவருக்கும் வரும் ஒரே பதில் விளையாட்டு  அல்லது வேறு நகரங்களில் கிராமங்களில் இருக்கும் உறவினர்கள் வீடு நண்பர்களின் வீட்டிற்கு பயணம் மேற்கொள்வது மட்டும்தான்.

இப்படி நாம் விளையாடிய விளையாட்டு, மூளையின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருப்பது மட்டுமல்லாமல்குழந்தைகளை சோம்பேறிகள் ஆக்காமல் சுறுசுறுப்புடன் வைத்து கொள்ள உதவுகிறது. இதனால் இள வயதில் obesity யை கட்டுபடுத்தி இளம் வயதில் சக்கரை நோய் ஏதும் வராமல் தடுத்து நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கின்றன.  புத்தக சுமை, வீட்டுப் பாடம் சிறப்பு வகுப்புகள், என ஸ்டிரெஸ் (stress) அடைந்த குழந்தைகளுக்கு கோடை விடுமுறை அவர்கள் அவர்களாக செயல் பட கிடைத்த வாய்ப்பு. அதுமட்டுமல்லாமல்  விடுறையில்  உறவினர் நண்பர்கள் வீட்டிற்கு   என குழந்தைகளை அழைத்து சென்று பல தரப்பட்ட மனிதர்களுடன் பழகும் வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் போது அது  அவர்கள் வளர்ந்து  வெளியே கல்லூரி வேலை என செல்லும் பொழுது மற்றவர்களுடன் அனுசரித்து போக, பழக பேருதவியாக இருக்கும்.

அதனால் நான் சொல்வது என்னவென்றால் கோடை விடுமுறையை சந்தோஷமாக பிள்ளைகளை அனுபவிக்க விடனும். அது அவர்களுக்கு  அனுபவப் பாடத்தை கற்றுக் கொடுக்கும் அதற்கு இணையான படிப்பை வேறு எதுவும் கற்று கொடுக்காது.ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.

இல்லைப்பா இந்த காலத்தில் பெற்றோர்கள் இருவரும் வேலைபார்க்க வேண்டிய காரணத்தால் இதற்கு எல்லாம் காலம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தால் சொல்லிக் கொண்டேதான் இருக்க முடியும் ஆனால் நாம் முயற்சித்தால் நிச்சயம் முடியும் ஒரு வாரம் தாய் லீவ் எடுத்தும் இன்னொரு வாரம் தந்தை லீவு எடுத்தும் தங்கள் குழந்தைகளையும் நண்பர்கள் வீட்டுக் குழந்தைகளையும் கவனித்து கொள்ள வேண்டும் அது போல நண்பர்களும் இப்படி செய்தால் நிச்சயம் நம் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க முடியும் என்பதுதன் என் கருத்து....

இனிமேல் இணைய பிரபலங்ககள் சொன்ன கருத்துக்களை அப்படியே தருகிறேன்


குடும்பத்தலைவியான ஏஞ்சலின் யுனைடெட் கிங்டத்தில் இருந்து சொல்லும் கருத்து இது :


அருமையான தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிங்க .சம்மர் ஸ்பெஷல் வகுப்புகள் தீமைதான் .

கோடை சிறப்பு வகுப்புக்கள் மாணவர்களுக்கு அவசியமேயில்லை ..நான் கேள்விப்பட்டேன் இப்பெல்லாம் 10/12 ஆம் வகுப்பு பாடங்களை அந்த முந்தைய  விடுமுறை நாட்களிலேயே சொல்லிகொடுத்து விடுகிறார்களாம். சில பள்ளிகளில் 11ம் வகுப்பிலேயே 12ம் வகுப்பு பாடங்களை நடத்தி விடுகிறார்கள் .அப்படியெல்லாம் பிள்ளைகளை துன்புறுத்துவது அவசியமா :( ஒரு நாளில் பாதிநேரம் படிப்பு பள்ளிக்கு பயணம் ஹோம்வொர்க் பரீட்சை டான்ஸ் பாட்டு  மியூசிக் வகுப்புக்கள் /கம்ப்யூட்டர் ஆண்ட்ராயிட் போன் என கழிக்கின்றார்கள் இக்கால பிள்ளைகள் ..மாலை நேரத்தில் விளையாட்டு என்பதே இல்லாமல் போயிடுச்சி ..இப்படி வாழ்க்கையை அனுபவிக்காமல் பெற்றோரின் வற்புறுத்தலுக்கு உட்பட்டு பல பிள்ளைகள் அவதிபடுகிறார்கள் பாவம்  :(   இப்படி ஸ்பெஷல்வகுப்பு போன/ 90% மதிபெண்ணுக்கு மேலேடுத்த அனைவருமே   மருத்துவம் என்ஜினீரிங் என்றா சேருகிறார்கள் ? .இதற்க்கு இத்தனை ஆர்ப்பாட்டம் தேவையா ? பெற்றோர் பிள்ளைகளுடன் இந்த விடுமுறையை செலவழிப்பது அவர்களது எதிர்காலத்துக்கு நன்மை தரும் ..
90 களில் பள்ளி படித்த போது எங்களுக்கு இப்படி ஸ்பெஷல் கிளாஸ் எல்லாம் இல்லை ..குறிப்பா இந்த யோகா ஆர்ட் கிளாஸ்லாம் அப்போ நான் கேள்விப்படவுமில்லை .அந்த சம்மர் வகுப்புக்கள் எடுக்கும் ஆசிரியர்களும் பாவம்தானே அவங்க குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க தானே விரும்புவர் !.பெற்றோர் பிள்ளைங்களை அத்தை மாமா தாத்தா பாட்டி பெரியப்பா சித்தப்பா என உறவுகள் ஊருக்கு அழைத்து சென்று உறவுகளிடம் அன்பை வளர்க்கட்டும்.உறவுகளை வீட்டுக்கு அழைத்து உறவை பலப்படுத்தட்டும் ..ஆர்ட் க்ளாசோ பெயிண்டிங் கிராப்ட் வகுப்பு  போனாலும் அங்கே செஞ்சதை யாருக்கு கொடுப்பாங்க ? இப்படி கிளாசா போயிக்கிட்டிருந்தா உறவுகளை மறந்தே போவர் பிள்ளைகள் ..கோடை விடுமுறை அவர்களின் மனதை ரிலாக்ஸ் செய்ய உதவும் அந்த புத்துணர்ச்சியுடன் ஜூன் மாதம் பள்ளிக்கு செல்லும்போது பாடத்தை கவனமுடன் படிக்க அந்த விடுமுறையின் இனிய சந்தோஷ நினைவுகள் துணை புரியும் .. பல வருஷமானாலும் நினைவுபடுத்தி பார்க்கும் நல்ல நினைவுகளை தரக்கூடியதாக விடுமுறைகள் இருக்க வேண்டும் மேலும் கொளுத்தும் வெயிலில் வீட்டில் ரெஸ்ட் எடுக்கத்தான் கோடை விடுமுறை ..
ஆகவே சம்மர் வகுப்புக்கள் வேண்டாம் வேண்டவே வேண்டாம் ..
Angelin ..


பள்ளி ஆசிரியையான மைதிலி கஸ்தூரி ரெங்கன் புதுக்கோட்டையில் இருந்து சொல்லிய கருத்து

நீங்க வளர்ந்த, உறவினர் சூழ்ந்த கிராமத்தில் தான் உங்கள் குழந்தைகள் வளர்கிறார்களா? ஆம் எனில் அவர்கள் தேவதைகளால் ஆசிர்வப்பட்டவர்.அவர்களுக்கு இந்த வகுப்புகள் தேவை இல்லை.

அல்லது பெற்றோர்களில் ஒருவர் , வீட்டில் இருந்து, அவர்களோடு கதை, கைவினைப்பொருள் என நேரம் செலவு செய்ய முடியுமா? அப்போ அவங்களுக்கு வகுப்பு தேவை இல்லை.

பாட்டி, தாத்தா ஊருக்கு குழந்தைகளை அனுப்பப்போறீங்களா? அப்படினா அவங்களுக்கும் வகுப்பு தேவை இல்லை. ஆனா இந்தியாவில் நான்கில் ஒரு குழந்தை தன் நெருங்கிய உறவினரால் பாலியல் தொந்தரவு செய்படுகிறார்கள் எனும் புள்ளிவிவரம் நினைவில் இருக்கட்டும். அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

இதர குழந்தைகள் பாதுகாப்பாகவும், பயனுள்ளதாகவும் பொழுதை செலவு செய்ய கோடைவிடுமுறையிலாவது அவர்களுக்குப் பிடித்த கலைகளை கற்க வாய்ப்பளிக்க இந்த கோடை விடுமுறைகளை பயன்படுத்தலாம். -
மைதிலி கஸ்தூரி ரெங்கன்
மகிழ்நிறை http://makizhnirai.blogspot.com

ஆசிரியரும் சமுக ஆர்வலருமான கஸ்தூரி ரங்கன் 
புதுக்கோட்டை  அவர்களின் கருத்து
கொடும் கோடையில் வகுப்புகள் தேவையா ?
என்றாவது  ஒரு அரசுப் பள்ளிக்கு  நீங்கள் சென்றதுண்டா? கோடையின் வெம்மையை தம்முள் வாங்கி உமிழும் அதன் மேசைகளையும் நாற்காலிகளையும்  தொட்டுணர்ந்தது உண்டா?
மூளை  ஆவியாகும் கொடூர  நீங்கள் உணர்ந்தது உண்டா? இத்தகு சூழலில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு என்பது மாணவர்களின் ஊழ் மட்டுமள்ள அது தமிழகத்தின், தமிழகக் கல்வித் துறையின் ஊழ்.
உடற்பயிற்சி போலத்தான் மூளைக்குப் பயிற்சியளிப்பதும் கடும் பயிற்சி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஓய்வும். தான் புதிதாகக் கற்ற விசயங்களை மாணவன் உள்வாங்கிச் செரித்து புதிய புரிதல்களை ஏற்படுத்திக் கொள்ள இந்த ஒய்வு அவசியம்.
இத்தகு ஓய்வுகளை என்றாவது நாம் குழந்தைகளுக்கு தந்திருக்கிறோமா? கோடைவிடுமுறைத் திட்டம் என்ன ? பயணம் செல்லப் போவது எங்கெங்கே? புதிய திறன் பயிற்சிகள் ஏதாவது தர திட்டமிருக்கிறதா? நல்லது உங்கள் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை சிறப்பு வகுப்புகள் தேவையில்லை.
சற்றே பயணித்து நமது கிராமப் புறங்களை அடைவோம். என்ன நடக்கிறது கோடை விடுமுறையில்? களியாட்டம், தொடர் விளையாட்டு, வம்பு சில சமயங்களில் காவல்துறை வரை போகும் அடிதடி தகராறுகள்.

புதிய திறன்களை அடைகிறார்களா கிராமத்து சிறார்கள் ?
இல்லை, மாறாக அவர்களின் உடல்திறனைப் பயன்படுத்தி பொருளீட்டுகிறார்கள்.

ஹை நல்லதுதானே இதைக் கொண்டு அவர்கள் கல்விச் செலவுகளை ஈடுகட்டலாமே?
இவ்வளோ அப்பாவியா நீங்க. இன்னைக்கு எவ்வளவு செலவு இருக்கு தெரியுமா. தெறி பட டிக்கெட் என்ன விலை தெரியுமா ? எம்புட்டு டி.வி.டி இருக்கு வாங்க. இது இல்லாம எந்த ஏரியா புரோட்டா நல்லா இருக்குன்னு பார்க்கணும். அப்புறம் ஊருக்குள்ள தல பேர்ல இல்லை தளபதி பேர்ல ரசிகர் மன்றம் ஆரம்பிக்கணும். அதுக்கு டி.ஷர்ட் வாங்கணும். எம்புட்டு விசயங்கள் இருக்கு. கோடை விடுமுறையில் ஏதாவது வேலை பார்த்தாதானே நாலு காசு சேர்த்து ஊருக்குள்ள ஒரு இது பண்ணலாம். படுபாவிக அதுல மண்ணப்போட்ராம இருக்கணும் என்பதே பெரும்பாலான ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் பிரார்த்தனை.

இந்தச் சூழலில் சில உணமைகளைப் புரிந்துகொள்வது அவசியம்.
வெயில் கொடுமையானதுதான். கற்க இயலா சூழல்தான். கற்றல் திறனைக் கூட குறைக்கும் என்பதும் உண்மைதான்.
அப்படியே விடுப்பில் அனுப்பினாலும் அந்த மாணவர்கள் என்ன செய்கிறார்கள்.
பெரும்பாலான கிராமத்து மாணவர்கள் செங்கல் காளவாய் முதல் செருப்புக் கடை வரை பணியில் இருக்கிறார்கள். பொருள் ஈட்டுகிறார்கள். அப்படி ஈட்டுவதை வெகு  சிலரே வீட்டில் தருகிறார்கள். ஏன் என்று விளக்க ஆரம்பித்தால்  இன்னொரு பதிவாக நீண்டுவிடும்.

ஆக, அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை கோடை சிறப்பு வகுப்புகள் விடுப்பை விட பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவிடாது. இதற்காக தங்கள்  கோடை விடுமுறையில் சில விட்டுத் தருதல்களை செய்யும் ஆசிரியர்கள் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள்.
 

குடும்பத்தலைவியும் கவிஞரும் எழுத்தாளருமான  கீதா மதிவாணன் ஆஸ்திரேலியாவில் இருந்து சொல்லும் கருத்து இது


கோடைக்கால சிறப்பு வகுப்புகள் அல்லது விடுமுறைக்கால சிறப்பு வகுப்புகளால்  குழந்தைகளுக்கு நன்மை என்றோ தீமை என்றோ ஒற்றை வரியில் சொல்லிவிடமுடியாது. குழந்தைகளுக்கு ஆர்வமும் திறமையும், தேர்ந்தெடுக்கும் உரிமையும் இருந்து அவர்கள் செல்வதானால் கோடைக்கால சிறப்பு வகுப்புகளால் நன்மை என்பேன். பெற்றவரின் கட்டாயத்தால் வேறுவழியில்லாமல் செல்லநேர்கிற குழந்தைகளுக்கு அது தீமைதான்; மன அழுத்தம் தரும் சங்கடம்தான். கோடைக்கால வகுப்புகளைப் பொறுத்தவரை பெற்றோர் இருவரும் பணிபுரிவதும் வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள பெரியவர்கள் வேறுயாரும் இல்லாததும்தான் முக்கியக்காரணம் என்று நினைக்கிறேன்.  இதற்கு வேறு ஏதாவது நல்லதொரு மாற்று கண்டுபிடிக்கவேண்டுமே தவிர கோடைக்கால சிறப்பு வகுப்புகள் ஒருபொழுதும் தீர்வாகாது.

வருடம் முழுவதும் படிப்பு, தேர்வு, மதிப்பெண் என்று பள்ளிக்கல்வியை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஒரு கால அட்டவணையின்படி வளரும் குழந்தைகளுக்கு விடுமுறை என்பது உற்சாகத்தையும் வழக்கமான நடைமுறைகளினின்று மாறுபட்ட அனுபவங்களையும் தரவேண்டும். மனித சஞ்சாரமற்ற தீவு வாழ்க்கையிலிருந்து விலகி நட்புகளோடும் உறவுகளோடும் பழகிக்களிக்கும் வாய்ப்பினை வழங்குவதாக இருக்கவேண்டும். பயணங்களும், கதைப்புத்தகங்களும், பொழுதுபோக்கு அம்சங்களும், புதிர்களும், புதிய அனுபவங்களும் நிரம்பியதாய் இருக்கவேண்டும் விடுமுறைக்காலம்.

ஆஸ்திரேலியாவில் நான் பார்த்து வியந்த ஒரு விஷயம், வாராந்திர விடுமுறையின்போது கூட பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவதில்லை.. அச்சமயத்தில் விடுமுறையை அவர்கள் இறுக்கமின்றிக் கழித்தால்தான் வரவிருக்கும் வாரத்தை உற்சாகத்துடன் அவர்களால் எதிர்கொள்ள இயலும் என்னும் நன்னோக்கம்தான் காரணம். ஆனால் நம் இந்தியக் கல்வித்திட்டத்தில் காலாண்டு அரையாண்டு விடுமுறைகளில் கூட தேர்வுத்தாள் விடைகளை இரண்டு முறை மூன்று முறை என்று எழுதிவரும்படி மாணவர்கள் பணிக்கப்படுகிறார்கள். இதனால் என்ன நன்மை விளைந்துவிடப்போகிறது? எந்தப் பிள்ளையும் கருத்தூன்றி எதையும் எழுதுவதில்லை. கடமைக்கு எழுதிமுடித்துவிட்டு விளையாடப்போவதிலேயே கருத்தாய் இருக்கிறது.  மொத்தத்தில் பிள்ளைகளை விளையாடவிடக்கூடாது என்பதுதான் ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஒட்டுமொத்த விருப்பமாக உள்ளது. ‘கொடுக்கப்படும் வீட்டுப்பாடம் போதவில்லை, விரைவிலேயே எழுதிமுடித்துவிட்டு விளையாடப்போகிறது என் பிள்ளை’ என்று ஆசிரியரிடம் முறையிடும் பெற்றோர் வாழும் சமுதாயத்தில் வேறென்ன எதிர்பார்க்க முடியும் நம்மால்?
கீதா மதிவாணன் (கீதமஞ்சரி)


சமுக ஆர்வலரும் பிஸினஸ்வுமனுமாகிய எழில் அருள் அவர்கள் இருந்து சொல்லிய கருத்து.
.....

எனக்கு மெயில் அனுப்ப நேரமில்லை இங்கேயே சொல்றேனே... விசு ஒரு படத்தில் வேலைக்குப் போகும் பெண்கள் பற்றிச் சொல்வாரே அது போலத்தான் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் வீட்டில் , யாரும் பார்த்துக்கொள்ள வசதியில்லாதவர்களுக்கு விடுமுறைப் பயிற்சி வகுப்புகள் ஒரு குழந்தைகள் காப்பகம். பெரியவர்கள் இருந்தால் அவர்களுடன் கொஞ்சம் சமரசம் செய்து கொண்டு பிள்ளைகளை வாழ்க்கை பற்றிக் கற்றுக் கொள்ள வசதி செய்யலாம் வாய்ப்புள்ளவர்கள்...   நன்மை , தீமை இதற்கு அப்புறம் யோசிக்கணும்... www.nigalkalam.blogspot.com

அகிலா புகழ் பலதுறையில் வித்தகரும் எழுத்தாளரும் ஒவியரும்  கவிஞரும் அந்த கால இஞ்சீனியர் பட்டதாரியுமான அகிலாபுகழ் கோயம்புத்துரில் இருந்து சொல்லும் கருத்து'


பெரும்பாலான பெரிய பள்ளிகளில், ஓவியம், நீச்சல், விளையாட்டு என்று ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே வசூல் செய்து அவற்றை, பாடத்திட்டத்திற்குள் கொண்டு வந்துவிடுகிறார்கள். சாதாரண பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, பள்ளிகளிலேயே அத்துணை வசதிகளையும் செய்துக் கொடுக்க பொருளாதாரம் இடம் கொடுப்பதில்லை. மற்றும் அதற்கான பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் இருப்பதில்லை.   

அந்த வகையில் பார்க்கும் போது, மாணவர்கள் விடுமுறை காலத்தில் இதையெல்லாம் கற்றுக் கொள்ள இந்த கோடை வகுப்புகள் ஒரு வாய்ப்பாகவே இருக்கும்.

பெற்றோர்களின் பார்வையில், இந்த வகுப்புக்கள் வரபிரசாதமே.
கோடை காலத்தில் பிள்ளைகளை வீட்டுக்குள்ளேயே வைத்து பார்க்கும் சிரமம் அவர்களுக்கு குறைகிறது.
வேலைக்கு செல்லும் பெற்றோர்களுக்கு வழக்கம் போல பிள்ளைகள் கிளம்பி போய்வருவது இன்னும் சௌகரியமே.

ஒரு சிறு வருத்தம் இதில் என்னவென்றால், விடுமுறை என்பது நம் காலத்தைப் பொறுத்தவரை, ஊர்களுக்குச் செல்வதும், அங்குள்ள வாழ்வியலை ரசிக்கக் கற்றுக்கொள்வதும்தான். அதை இந்த குழந்தைகள் தொலைத்துவிடுகிறார்கள். வழக்கம் போலவே ஒரு பையுடன் கிளம்புவதும், சோர்வாகி திரும்புவதும் பள்ளி நேரத்து செயல்பாடுகளுக்கும் இதற்கும் அதிக வேறுபாடுகள் இல்லை.

ஆற்றின் ஓரமாய் தாத்தாவுடன் ஒரு நடை, புழுதி பறக்க கொச்சங்காயை பந்தாக்கி விளையாடுவது, பாட்டியின் சிறு கைதட்டல் வடையுடன் சாப்பிடும் வரகாப்பியின் சுகம் இவ்வாறு இயற்கையுடன் பயணித்து, அதிலிருந்து கற்றுக்கொள்ளுதல் வேறு, இவ்வாறு செயற்கையாக திணிப்பவைகளைக் கற்றுக் கொள்வது வேறு.

வேலைக்குச் செல்லும் பெற்றோர், விடுமுறை நாட்களில் குழந்தைகளைப் பார்க்கும் பொறுமையில்லாத பெற்றோர் மற்றும் ஊரைவிட்டு பட்டணம் நோக்கிய மக்களின் நகர்தல் இப்படி எத்தனையோ காரணங்கள். வேறு வழியில்லாமல் இம்மாதியான வகுப்புகளை ஏற்றுக்கொள்ளும் கட்டாயம்.
கோடை வகுப்புகள் ஒரு காலத்தின் கட்டாயம்தானே தவிர, முழுவதுமாய் நல்லது என்று கொள்வதற்கில்லை.

என் வலைத்தளம் :

என் முகநூல் முகவரி :

குடும்பத் தலைவியான ஆச்சி டெல்லியில் இருந்து சொல்லும் கருத்து


கோடைக்கால வகுப்புகள் குழந்தைகளுக்கு நன்மைதான்.அனைத்து பிள்ளைகளுக்கும் விடுமுறை விடும்போது அரவணைக்க உறவினர்கள் அமைந்து விடுவதில்லை.சுற்றுலா விடுமுறை முழுவதும் யாரும் சென்றுவிடவும் முடியாது,தனது வசதிக்கும் சூழ்நிலைகளுக்கும் மீறி பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கான  வகுப்புகளை தேர்ந்தெடுத்து விட மாட்டார்கள்.

குறிப்பிட்ட அனைத்திற்கும் மேல் குழந்தைகளின் விருப்பம் என்பதை யோசிப்போம்.அவர்களை கட்டாயப்படுத்தாமல் ,பள்ளி காலங்களில் இவைகளை கற்க நேரமிருக்காது,தற்போதைய விடுமுறை நாட்களை சில மணி நேரங்கள் பயனுள்ளாதக்க தங்களால் முடிந்த வழிக்காட்டுதல் என்று புரியவைக்கலாம்.விருப்பமான வகுப்புகளை தேர்ந்தெடுக்க அனுமதிப்பும் அலோசனையும் வழங்க வேண்டும்.


கிராமங்களில் வார விடுமுறை அல்லது கோடை விடுமுறைகளில் பல பிள்ளைகள் விவசாய வேலை, கட்டுமானத் தொழில்களுக்கு செல்கின்றனர்.கட்டாயப்படுத்தியும் அழைத்துச்செல்லப்படுவார்கள்.அவர்கள் குடும்பத்தாருக்கு தங்கள் குழந்தகள் சம்பாரிப்பு உதவும் எனில்,துளியளவு அறிவுத்திறனையாவது விசாலப்படுத்த கோடைக்கால வகுப்புகள் குழந்தைகளுக்கு உதவும்.நல்லதொரு அனுபவத்தை அளிக்கும்.

இங்கனம்
ஆச்சி ஸ்ரீதர்


மென்பொருள் இஞ்சினியரும் கவிஞரும் குடும்பத்தலைவியுமான தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அட்லாண்ட அமெரிக்காவில் இருந்து சொல்லும் கருத்து:



கோடைகாலச் சிறப்பு வகுப்புகள் மாணவர்களுக்குத் தீமையே என்பது என் வாதம். ஆண்டுதோறும் அதிகாலை எழுவதும், உண்டும் உண்ணாமல், குளித்தும் குளிக்காமல் அவசர அவசரமாய்ப் பள்ளிக்கு ஓடும் குழந்தைகள் சற்று நிதானித்து வளர, வாழ விடுமுறை அவசியம். மதிய உணவும் பாதி வீட்டிற்கு வரும் என்று சொல்லும் பெற்றோர்களே அதிகம். அதற்கு ஒரு காரணம் நேரப் பற்றாக்குறையே! நண்பர்களுடன் அளவளாவி உணவு உண்ணும் குழந்தைகள் முழுவதும் சாப்பிடுவதில்லை. நான் படித்த காலத்தில் ஐம்பத்தைந்து நிமிடங்கள் உணவு இடைவேளை இருக்கும். உண்டுமுடித்து விளையாடவும் நேரமிருக்கும். ஆனால் இன்று பெரும்பாலும் இருபது நிமிடங்கள், மிஞ்சிப் போனால் அரைமணி நேரமே உணவு இடைவேளை. மாலையிலும் இன்னபிற வகுப்புகள். வண்டியில் செல்லும்போதே ஒரு சப்பாத்தியைச் சாப்பிட்டுவிட்டுச் செல்லும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். ஆக, பள்ளி நாட்களில் குழந்தைகள் குழந்தைகளாகவே இல்லை.

 கோடை விடுமுறையிலாவது அவர்கள் ஓடாமல் வாழட்டுமே! காலையில் சற்று நேரம் கழித்து விழிக்கலாம். ஒவ்வொரு வேளையும் நிதானமாக உணவு எடுக்கலாம். திட்டமிடப்பட்ட நாட்கள் அல்லாமல் நிதானமாகத் தங்கள் விருப்பம் போல் செலவழிக்கலாம். விளையாட்டை வலியுறுத்துவது நம் கடமையாகிறது. நாளெல்லாம் தொலைக்காட்சியோ கணினி விளையாட்டோ என்றில்லாமல் ஓடியாடிச் செலவழிக்கச் சூழல் வேண்டும். இந்த காரணத்துக்காகத் தான் சிறப்பு வகுப்புகளில் விடுகிறோம் என்று சொன்னால் அது நாள் முழுவதும் வேண்டாமே என்பதே என் கருத்து. ஏதோ ஒரு விளையாட்டோ, கலையோ, மொழியோ - ஒரு குழந்தை ஆர்வமாகக் கற்றுக்கொள்கிறேன் என்றால் ஒருமணி நேரமோ இரண்டு மணிநேரமோ அனுப்பலாம். ஆனால் அதையும் பெற்றோர்கள் திணிக்கக் கூடாது, குழந்தைகள் விரும்பிக் கேட்டால் மட்டுமே அனுப்பலாம்.


வரிசையில் நில், பந்தைப் பிடி, ஓடு, உட்காரு, உணவு எடுத்துக்கொள் என்று எப்பொழுதுமே திட்டமிட்டுச் சென்றால், அவர்கள் பாடும் பறவையைப் பார்ப்பது எப்போது? அசையும் இலையைப் பார்ப்பது எப்போது? மொட்டாகி மலராகிக் காயும் பூவைப் பார்ப்பது எப்போது? விதவிதமான உருவமெடுத்து உலகைப் பவனிவரும் மேகக்கூட்டங்களை ரசிப்பது எப்போது? உறவோடும் நட்போடும் பேசி அறிந்து கொள்வது எப்போது? தங்கள் கற்பனை வளத்தைத் தோண்டுவது எப்போது?



கோடைகாலச் சிறப்பு வகுப்புகளில் பெற்றோருக்கு எப்படிப்பட்ட பயன் இருந்தாலும் குழந்தைகளுக்கு  நன்மையை விடத்  தீமையே அதிகம். போக வேண்டுமா வேண்டாமா என்று கேட்டால் பெரும்பாலும் வேண்டாம் என்றுதான் சொல்வார்கள். கோடைகாலச் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் குழந்தைமையும் விளையாட்டுத்தனமும் நசுக்கப் படுகின்றன.


பெற்றோர் இருவரும் வேலை பார்க்கும் வீடுகளில் இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது என்று சொன்னால், அது தவறே ஆகும். நாம் தான் அதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். முடிந்தவர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கலாம், விடுமுறையை அந்த நேரத்திற்குத் திட்டமிட்டு எடுக்கலாம், உறவுகளின் வீடுகளில் விடலாம்.. பெங்களூரில் இருந்தபோது, எங்கள் குடியிருப்புக் குழந்தைகளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டினர் பொறுப்பு என்று வைத்துக் கொள்வோம். குழந்தைகள் நன்றாக ஓடி விளையாடுவார்கள், மதியத்தில் கைவினையோ, வண்ணம் தீட்டுதலோ செய்வார்கள், நாடகங்கள் கூடப் போட்டிருக்கிறோம். இதில் வேலை பார்க்கும் பார்க்காத அனைத்துப் பெற்றோரும் அடக்கம். சிலரது வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள இருக்கும் பெண்களும் இருப்பார்கள். ஆனால் ஒரு பெற்றோர் உடன் இருப்பதால் எந்த பயமும் இல்லை. அப்பெண்கள் இருப்பதால் பெற்றோர்க்கும் உதவிதான்.


இப்படி ஏதாவது ஒரு வழிகண்டு குழந்தைகள் கோடை விடுமுறையை விடுமுறையாகக் கழிக்க வேண்டும் என்பதே என் கருத்து, என் ஆசை! முயற்சி செய்தால் செய்யலாம்.

நன்றி!
அன்புடன்,
கிரேஸ் பிரதிபா. வி
வலைத்தள முகவரி: http://thaenmaduratamil.blogspot.com/
பேஸ்புக் முகவரி: https://www.facebook.com/kodi.malligai.7

கீதா(குடும்ப தலைவி,சென்னை & துளசி( ஆசிரியர்,கேரளா) &) இவர்கள் இருவரும் நண்பர்கள் இவர்கள் சொல்லிய கருத்து :

மதுரைத் தமிழன் உங்கள் தலைப்பு அருமை...மைண்டில் ஓடிக் கொண்டே இருக்கிறது. இது ஒற்றை பதிலாக சிறந்ததா இல்லையா என்று சொல்லிவிட முடியாது. இன்றையச் சூழலில் பல கருத்துகள் ஆம் இல்லை இரண்டிற்கும் சொல்லலாம்....நேற்று விடுபட்ட கருத்துகள்...நகரங்களில் பெரும்பான்மையான பெற்றோர்கள் இருவருமே இப்போதைய சூழலில் வேலைக்குச் செல்வதால் குழந்தைகளைச் சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டிய சூழலில் இருக்கிறார்கள்.  வீட்டில் பார்த்துக் கொள்ள பெரியவர்கள் இப்போது இருப்பதில்லையே நியூக்ளியர் குடும்பங்களாகிப் போனதால்...குழந்தைகள் நகரமாக இருந்தாலும் சரி கிராமமாக இருந்தாலும் சரி சிறிய ஊராக இருந்தாலும் சரி கண்காணிக்கப்பட வேண்டும்.  ஏனென்றால் போக்குவரத்து வசதி கூட இல்லாத குக் கிராமங்களில் கூட வீடுகளின் தலையில் ஆண்டெனா முளைத்துள்ளது. அதுவும் சன் அண்டெனா...எனது அனுபவத்தில் சொல்லுகின்றேன்.

சிறு ஊர்களில் சிறப்பு வகுப்புகள் இல்லாத பட்சத்தில் குழந்தைகள் கொடுத்துவைத்தவர்கள் கொண்டாடுகின்றார்கள் விடுமுறையை...

பல கிராமங்களில் குழந்தைகள் கூலி வேலைக்கு அனுப்பப்படுகின்றார்கள். அங்கும் குழந்தைகள் கெடுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன இப்போது. இதுவும் நேரடி அனுபவம். அப்படிப்பார்க்கும் போது நகரத்துக் குழந்தைகள் சிறப்பு வகுப்புகளுக்குச் செல்லுவது பரவாயில்லையோ என்று தோன்றுகின்றது. வீட்டிலிருந்தால் இப்போது விளையாடுவது குறைந்து டிவிதான் என்று ஆகியிருக்கிறது கலாச்சாரம்...இல்லை என்றால் கணினி விளையாட்டுகள்...அதுவும் நல்லது இல்லையே...

என் மகன் கோடை விடுமுறை என்பதற்காக எந்தச் சிறப்பு வகுப்புகளுக்கும் நான் அனுப்பியதில்லை அவனும் விரும்பியதில்லை. சுற்றுலாதான்...நெருங்கிய உறவினர் வீடு என்று...ஏன் 10,11,12 ஆம் வகுப்புகளில் கூட ட்யூஷனோ, பாடங்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கோ அனுப்பியதில்லை. அவனும் செல்லமாட்டேன் என்று சொல்லிவிட்டான். ஸ்லோ லேர்னர் வேறு அப்போது.

2 ஆம் வகுப்பிலிருந்தேகராத்தேயும் 8 ஆம் வகுப்பிலிருந்து வீணையும் கற்றுக் கொண்டான்.  ..நான் அவனுக்குப் பரிந்துரைத்தேன். மைன்ட் பாடி கோஆர்டினேஷனுக்கு  வேண்டி.  அவன் விரும்பியேதான் கற்றுக் கொண்டான். அது அவனுக்கு மைன்ட் பாடி கோஆர்டினேஷனுக்கு உதவியது. கராத்தே பயிற்சி அவனுக்கு மூளைக்கு ஆக்சிஜன் நல்ல முறையில் சர்குலேட் ஆக உதவியது. வீணை வாசிப்பில், மூளை ஸ்வரம் போட கை இசைக்க வேண்டும் இல்லையா எனவே அவனது மூளைத் திறன் அதாவது நினைவுத் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இப்படி நார்மலாக இருக்கும் ஆனால் சற்றுக் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அவர்கள் தங்கள் காலில் நிற்க உதவ சில பயிற்சிகள் கொடுக்கலாம்
இப்போது இரண்டுமே அவனால் தொடர இயலவில்லை வேலையினால்..



சர்ட்டெட் அக்கவுண்ட்(CPA) மற்றும் நகைச்சுவை பதிவாளருமான விசு  கலிபோர்னியா,அமெரிக்காவில் இருந்து சொல்லிய கருத்து

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்.என்பது நன்மையா .. தீமையா என்ற தலைப்பில் எழுதுமாறு அருமை நண்பன் மதுரை தமிழன் அழைப்பு விடுக்கையில் , உடனே நான் கூறியது தீமையே என்று தான் என்னால் எழுத முடியும் என்றேன்..

ஏன் அப்படி ...?

விடுமுறை என்பதின் அர்த்தம் என்ன? நாம் தினந்தோறும் செய்யும் வேலைகளை "விடும் முறையே "!

பள்ளி காலத்தில் அடியேன் எந்த ஒரு கோடையிலும் எந்த ஒரு சிறப்பு வகுப்பிற்கும் போனதில்லை என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்.

கோடை விடுமுறையா? சிறப்பு வகுப்புகள் தான் இல்லை, இருந்தாலும் கற்று கொண்ட பாடங்கள் தான் எத்தனை.

காலையில் ஆறும் மணிக்கு பக்கத்துக்கு வீட்டு ஆறுமுகம், விசு, வா மீன் பிடிக்க போகலாம் என்றவுடன், அருகில் உள்ள சேற்றில் சில மண்புழுக்களை எடுத்து கொண்டு ஆற்றங்கரையோரத்தில் சென்று தூண்டிலை போட்டு மணிகணக்கில் அமைதியாக காத்து கொண்டு இருந்தேனே .. அதை விட சிறப்பு வகுப்பா? பொறுமை என்ற மாபெரும் பாடத்தை அல்லவா கற்று கொண்டேன்.

அனைவரும் பிடித்த மீனை ஒன்றாக சேர்த்து அவனனவன் வீட்டில் இருந்து உப்பு, மிளகாய் சட்டி எடுத்து வந்து ஒன்றாக சமைத்தோமே. அங்கே சாதி-மதம் -மொழி எல்லாம்துண்டை காணோம், துணியை காணோம்  என்று ஓடியதே.. அதை எந்த சிறப்பு வகுப்புகள் சொல்லி தரும்.

சமைத்த உணவை அனைவரும் பங்கு போட்டு பகிர்ந்து உண்டாமே... "பகுத்துண்டு" என்று வள்ளுவன் சொன்ன குரல் அல்லவா அங்கே ஒலித்தது .

உண்ட களைப்பு தீரும் வரை கையில் இருந்த கிட்டார் மற்றும் பல இசை கருவியை மீட்டி பாடினோமே... அந்த சுகம் .. எந்த வகுப்பில் வரும் ?

பாடலுக்கு பின்  சிறிது நேரம் ஏறி கரையோரம் உறங்கிவிடு, பின்னர் எழுந்து அடுத்த இரண்டு மணி நேரம் நீச்சல் .. நீச்சலை போல் ஒரு உடற்பயிற்ச்சி  வருமா?

அதற்கு ஏன் சிறப்பு வகுப்பு?

அது முடிந்த பின்  .. குடும்பத்தோடு அல்ல நண்பர்களோடு ஒரு திரைப்படமோ அல்ல, கடை வீதியோ...

இப்படி அல்லவா கோடை விடுமுறையை கழித்தோம். விடுமுறை துவங்கி .. ஒரு மாதம் கழித்து.. எப்போது பள்ளி ஆரம்பிக்கும் என்று ஏங்குவோமே.. பள்ளிக்காக ஏங்க வைத்ததே விடுமுறை தானே.

மீண்டும் சொல்கிறேன், விடுமுறை என்பது ... நம் தினசரி பழக்க வழக்கத்தை சற்று  விடும் முறை. அதை விடுவோமே....

விசுAwesomeமின் துணிக்கைகள்


டி.என்,முரளிதரன் கல்விதுறை .சென்னை அவர்கள் சொல்லும் கருத்து

கோடை சிறப்பு வகுப்புகள் தேவை இல்லை. வகுப்பறை தாண்டி உலகத்தை கற்பதே ்அந்த கோடை விடுமுறையில்தான். 11 மாத வகுப்புச்சிறையில் இருந்து பரோலில் வந்துபோல்தான்  கோடைவிடுமுறை. அதை அனுபவிக்கட்டும் மீண்டும் செல்லும்வரை

http://www.tnmurali.com/  டி.என்,முரளிதரன்

எழுத்தாளரும் குடும்ப தலைவியுமான ரஞ்சனி நாராயணன் அவர்கள்
 பெங்களுரில் இருந்து சொன்ன கருத்துக்கள் 

சம்மர் கேம்ப் தேவையில்லை!



எங்கள் யோகா வகுப்பில் ஒரு சிறுவன் இப்போது சிறிது நாட்களாக வருகிறான். இரண்டாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு செல்லும் சிறுவன். வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பான். எங்களுக்கு அவனது பேச்சு பிடித்திருந்தாலும், எங்கள் கவனம் கலைந்துகொண்டே இருக்கும். அதுமட்டுமல்ல; ஓரிடத்தில் உட்காருவது என்பது அந்தச் சிறுவனால் முடியாத காரியம். நான் முதலில் நினைத்தது அந்தச் சிறுவன் இங்கு பயிற்சி பெறும் பெண்மணி ஒருவருடைய பிள்ளை என்று. பிறகுதான் தெரிந்தது அவனும் யோகாசனம் கற்க வருகிறான் என்று. துறுதுறுவென்று இருக்கும் அந்தக் குழந்தைக்கு எதற்கு யோகாசனம் இப்போது? ஓடிவிளையாடும் குழந்தையை இப்படி ஒரு இடத்தில் உட்காரச் சொல்வது பெரிய கொடுமை, இல்லையோ?



கோடை விடுமுறை ஆரம்பித்துவிட்டது. குழந்தைகள் வீட்டில் என்ன செய்வார்கள்? சம்மர் கேம்ப் என்று குழந்தைகளை வதைக்கும் வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டியதுதான். ஒன்று மட்டும் நான் பார்த்துவிட்டேன். குழந்தைகளை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது. ஏதோ ஒரு வகுப்பிற்கு அனுப்பிக்கொண்டே இருக்க வேண்டும். என்ன கற்கிறார்கள்? யாருக்குக் கவலை? பள்ளி மூடியிருக்கும் சமயங்களிலும் பெற்றோர்களிடமிருந்து பணம் கறக்க பள்ளிகள் கண்டுபிடித்திருக்கும் புதுவழி இந்த சம்மர் கேப்ம்ஸ். முன்பெல்லாம் தனியார்கள் நடத்தி பணம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்போது நாமே செய்யலாமே என்று பள்ளிகளும் களத்தில் இறங்கிவிட்டன.



கிரிக்கெட் பயிற்சி முகாம் என்று ஒரு பள்ளியில். சும்மா போக முடியுமா? வெள்ளை பான்ட், வெள்ளை சட்டை, அசல் கிரிக்கெட் மட்டை, அசல் பந்து, அசல் கிரிக்கெட் ஷூக்கள் தான் வேண்டும். குழந்தைகள் அங்கு விளையாடிவிட்டு வர ஒரு செட் உடைகள் போதாதே. வாங்கு இரண்டு மூன்று செட் உடைகள். இதற்கெல்லாம் எவ்வளவு ஆகும் செலவு? யாருக்கென்ன கவலை? பள்ளிக்கு வருமானம். பெற்றோர்களுக்கு குழந்தையை வீட்டில் கட்டி மேய்க்க முடியாது. பணம் போனாலும் பரவாயில்லை. வழக்கம்போல காலையில் எழுந்திருந்து கிளம்பு பள்ளிக்கு என்று துரத்தி விட வேண்டியதுதான். திரும்பி வந்தவுடன் இன்னொரு வகுப்பு. மாலையில் இன்னொரு வகுப்பு.



இதைபோல சிந்திக்கும் ஒரு பெற்றோரின் நடவடிக்கை காரணமாகவே அந்தப் பையன் எங்கள் யோகா வகுப்பில் சேர்ந்திருப்பதும். அவனுக்கு சமமாக பேசவோ, அவனை உற்சாகப்படுத்தவோ யாரும் இல்லை எங்கள் வகுப்பில். பாவம் அந்தக் குழந்தை. அன்று ஒருநாள் நாங்கள் எங்கள் பயிற்சியாளர் சொல்படி செய்துகொண்டிருந்தோம். இந்தக் குழந்தை குறுக்கும் நெடுக்கும் போய்வந்து கொண்டிருந்தான். பொழுதுபோக வேண்டுமே? பயிற்சியாளர் எத்தனை சொல்லியும் அவனால் ஒரு சில நொடிகளுக்கு மேல் எதுவும் செய்ய முடியவில்லை. எப்படியோ வகுப்பு முடியும் நேரம். எங்கள் பயிற்சியாளர் எங்களை சவாசனத்தில் படுக்கச் சொன்னார். இந்தக் குழந்தை ‘மேடம், நான் பாடட்டுமா?’ என்றான். அவரது பதிலுக்குக் காத்திருக்காமல் ஹரிகாம்போதியில் ஸ்வரஜதி பாடுகிறேன் என்று ஆரம்பித்துவிட்டான். நாங்களும் சவாசனத்தில் இருந்தபடியே கேட்டு ரசித்தோம். அதுமுடிந்தும் நாங்கள் இன்னும் எழுந்திருக்கவில்லை. என்ன செய்வான் குழந்தை? எங்களை மகிழ்விக்க கல்யாணியில் இன்னொரு பாட்டு.



குழந்தைகளை நம்மால் ஏன் கட்டி மேய்க்க முடியவில்லை? அவர்கள் என்ன ஆடுமாடுகளா. கட்டி மேய்க்க? முதலில் அவர்களைக் குழந்தைகளாகப் பார்ப்போம். அவர்களிடம் இருக்கும் அபரிமிதமான சக்திக்கு சரியான வடிகால்கள் நம்மால் கொடுக்க முடிவதில்லை. அன்றைக்கு ஒரு வீட்டில் நான்கு குழந்தைகள் இருக்கும். ஒருவருக்கொருவர் விளையாடிக் கொள்வார்கள். பொழுது போய்விடும். சாயங்காலம் வீதியில் போய் விளையாடுவார்கள் – கோலி, பம்பரம், கிட்டுபுள் என்று. அப்போது கிரிக்கெட் இத்தனை பிரபலமாகவில்லை. அதனால் கிட்டுபுள்ளால் கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டன.

சம்மர் கேம்பில் குழந்தைகள் நிறையக் கற்கிறார்கள், உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்கும் பெற்றோர்களுக்கு: சரி, அனுப்புங்கள். ஆனால் நாள் முழுவதும் குழந்தையை வெளியில் இருக்கும்படி செய்யாதீர்கள். வீடு என்பது குழந்தைளுக்கு நிச்சயம் தெரிய வேண்டிய இடம். நீங்கள் கைநிறைய சம்பாதித்து வீடு வாங்கியிருப்பதற்கு குழந்தைகள் சந்தோஷமாக அங்கு இருக்க வேண்டும் என்பதுதானே காரணம். விடுமுறையில் கூட வீட்டில் இல்லையென்றால் என்ன பொருள்?



பின் என்ன செய்யலாம், குழந்தைகளின் அபரிமிதமான சக்தியை எப்படி செலவழிக்க வைப்பது? வீட்டில் தாத்தா பாட்டி இருக்கிறார்களா? அவர்களுடன் குழந்தைகளை பரமபதம், தாயக்கட்டை, பல்லாங்குழி முதலிய விளையாட்டுக்களை விளையாட விடுங்கள். நீங்களே இவைகளை விளையாடலாம். தாத்தாக்கள் ஆடு புலி ஆட்டம் நன்றாக ஆடுவார்கள். செஸ், கேரம் முதலிய ஆட்டங்களைக் கற்றுக்கொடுங்கள். ஒரு இசைக்கருவி வாசிக்கக் கற்றுக்கொடுங்கள். (இதற்குத்தானே சம்மர் கேம்ப் என்கிறீர்களா?) தாத்தா பாட்டியிடமிருந்து தமிழ் அல்லது வேறு மொழி கற்கலாமே!



சம்மர் கேம்ப் என்பது இன்னொரு பள்ளிக்கூடம். சும்மா ஜாலியாக போய்விட்டு வரமுடியுமா? அப்படி போய்விட்டு வந்தால் நீங்கள்தான் சும்மா இருப்பீர்களா? இத்தனை செலவழித்து உன்னை அனுப்புகிறேன், நீ என்ன கற்றுக்கொண்டு வந்தாய் என்று கேட்பீர்களே! இந்த மாதிரி சம்மர் கேம்ப் குழந்தைகளுக்குத் தரும் மன அழுத்தம் பற்றி யோசித்திருக்கிறீர்களா? குழந்தையிலிருந்தே இந்த மன அழுத்தம் குழந்தைகளுக்கு வேண்டாம்.



வீட்டு வேலைகளில் குழந்தைகளை பழக்குங்கள். படுக்கையை சரி செய்யலாம். அம்மாதான் வந்து செய்ய வேண்டுமா? அவர்களது புத்தகங்கள், விளையாட்டு சாமான்களை அழகாக அடுக்கச் சொல்லுங்கள். உங்களுக்கு காலை வேளைகளில் பலவிதமாக உதவலாம். குளிர்சாதனப் பெட்டியிலிருந்து, காய்கறிகளை எடுத்துக் கொடுத்தல், அவைகளை அலம்புதல் போன்றவற்றைச் செய்யலாம். வீட்டில் தோட்டம் இருக்கிறதா? செடிகளுக்கு நீர் விடச் சொல்லுங்கள். வாங்கி வரும் காய்கறிகளை குளிர்சாதனப் பெட்டியில் தனித்தனியாக பிரித்து வைக்கச் சொல்லலாம்.



சைக்கிள் விடப் பழக்கலாம். வெளியூரிலிருக்கும் தாத்தா பாட்டிக்கு கடிதம் எழுதச் சொல்லலாம். பிறந்த நாள் வாழ்த்து அட்டைகள் செய்யச் சொல்லலாம். சின்ன சின்னத் துணிமணிகளை மடித்து வைக்கலாம். வெளியில் போகவேண்டுமா? என்னென்ன வாங்க வேண்டும் என்று பட்டியல் போடச் சொல்லுங்கள். மருத்துவரிடம் போகிறீர்களா? அவரிடம் என்னென்ன கேட்க வேண்டும் என்று பட்டியல் போடச் சொல்லுங்கள். ஏதாவது சின்ன சின்ன யோசனை கொடுத்து அதை கதையாக எழுதச் சொல்லுங்கள். பத்துவரிகள் போதும். பட்டன் தைப்பது, சின்ன சின்ன தையல் வேலைகள் என்று கற்றுக் கொடுக்கலாம். பிற்காலத்தில் வெளிநாடுகளுக்குப் போகும்போது இந்தத் தையல் வேலை எவ்வளவு பயன்படும், தெரியுமா?



தாத்தா பாட்டிகள் வெளியூரில் இருந்தால் அந்த ஊருக்கு அனுப்புங்கள், குழந்தைகளை. பெற்றோர்களின் கண்டிப்பான வளர்ப்பிலிருந்து கொஞ்சநாட்கள் விடுதலை கிடைக்கும். குழந்தைகளுக்கு அவர்களின் கொஞ்சல் குலாவல் எல்லாம் கிடைப்பதுடன், உறவுகள் பலப்படும். அன்பான மனிதர்களின் அண்மை குழந்தைகளுக்கு அவசியம் தேவை.



அடுத்த வாரம் சந்திக்கலாம்!


எனது வலைத்தளம்: http://ranjaninarayanan.wordpress.com
பேஸ்புக் முகவரி: https://www.facebook.com/Ranjanidoraiswamy
எனது வேண்டுகோளை ஏற்று தங்களின் பிஸியான நேரத்திலும் பொன்னான தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்ட இணைய பிரபலங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : நண்பர்களே இந்த பதிவை பற்றியும் இதில்  பிரபலங்கள் சொன்ன கருத்துக்களை பற்றியும் மேலும் உங்களின் கருத்துகளையும் இங்கே பதிவு செய்துவிட்டு போங்கள்..





















14 comments:

  1. இரண்டு பேர் வேலைக்குச் செல்லும் பெற்றோருக்கு இது நிச்சயமாக ஒரு வரப் பிரசாதமே . ஹைதராபாத்தில் எனக்குப் பிரச்னை இல்லை . பெரிய காம்பிலெக்ஸ் .நான் ஒரு வருடம் கோடை விடுமுறையில் ரொம்பக் கஷ்டப்பட்டேன். சென்னை வந்த புதிது. பெரியவன் மூணாவது போகிறான் சின்னவன் ரெண்டாவது போகிறான் .ஊர் புதிது, மக்கள் புதிது தமிழ் தெரியும் என்றாலும் எல்லோரும் முழுக்க முழுக்க தமிழிலேயே பேசுவது அவர்களுக்கு புரிந்து கொள்ள முடியவில்லை . பிறகு அடுத்த வருடங்களில் என் அக்கா வீட்டிற்குச் சென்று விட்டனர். எல்லோருக்கும் உறவுகள் கை கொடுப்பார்கள் என்று சொல்ல முடியாது.
    மேலும் உறவினர் வீட்டில் விடும் போது நம்மைப் பற்றி நம் குழந்தைகளிடம் இல்லாதது பொல்லாததைக் கூறி குழந்தைகள் மனதில் நஞ்சைப் பயிரிடும் அபாயம் உள்ளது . (அனுபவித்துதான் சொல்கிறேன் . நிறையப் பேருக்கு இந்த அனுபவம் உண்டு . எனவே கோடை வகுப்புகள் நல்லதே.

    ReplyDelete
  2. வணக்கம்.
    இது ஒரு புது முயற்சியாய் நான் பார்க்கிறேன். குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஒரு கேள்விக்கு இத்தனை பதிவர்களின் பதிலை ஒரு சேர படிக்கும் வாய்ப்பு. இதற்கு என் நன்றி.

    என்னையும் இதில் இணைத்து மதிப்புக் கொடுத்ததற்கு மிக்க மகிழ்ச்சி..

    http://www.ahilas.com/

    ReplyDelete
  3. நன்றி சகோ.அனைவரின் கருத்துக்களையும் வாசித்தேன் .
    அதிலும் சகோதரர் விசு அவர்கள் என்னை சிறுவயது காலத்துக்கு கொண்டு சென்று விட்டார் ..
    இக்கால் பிள்ளைகள் எத்தனை பேர் கூட்டாஞ்சோறு என்ற பேரை கேள்விபட்டிருப்பார்கள் ..என் மகளே அறியமாட்டாள் ..அருகில் அவள் வயது பிள்ளைகளுமில்லை குளிரில் பாதி நாட்கள் வீட்டுள் முடங்கி கிடக்கும் வெளிநாட்டு வாழ்வு எங்களது .இரண்டு பெற்றோரும் வேலைக்கு செல்வதால் கோடை வகுப்புக்கள் இன்றியமையாதது தான் .கூட்டு குடும்பமும் பெரியவர்களும் வீட்டுக்கு மிக அவசியம் என்பதை உணரும் தருணம் இது ..

    ReplyDelete
  4. எங்க நாட்கள் வேறு. எங்க பிள்ளைகள் நாட்கள் வேறு. அப்போது இந்த காம்ப் எல்லாம் கிடையாது. ஏகப்பட்ட நண்பர்கள்.
    பெண்ணின் தோழிகள் இங்கே வந்து அதகளப் படுத்துவார்கள். பிள்ளைகள் வெளியே தான் விளையாட்டு.
    இரண்டு ஹாமக் கட்டிக் கொடுத்துவிட்டுக்காரர்.வேப்பமரம் இருந்தது.
    அதில் உட்கார்ந்து ஆடிக் கொண்டிருப்பார்கள்.
    இங்கே எல்லாம் காம்பெடிடாவகப் போய்விட்டது.
    பெரியவனுக்கு 12 ஆம் வகுப்புக்கான ஏற்பாடுகள். சின்னவனுக்கு,கராத்தே,
    வயலின், நீச்சல்.சந்தோஷமாப் போவான். மாலையில் நண்பர்கள் வருகிறார்கள். நோ சம்மர் காம்ப்.
    இந்தக் காலனி மிக அழகு.

    ReplyDelete
  5. கோடைகால விடுமுறையின் மகிழ்வினை அனுபவித்தவர்கள் அல்லவா நாம் எல்லாம்.
    நமது குழந்தைகளுக்கு மட்டும் ஏன் கோடை விடுமுறை,கோடைகால சிறப்பு முகாம்களில் அமைய வேண்டும்.
    கல்வியிலும் வணிகம் நுழைந்ததன் பலன்,
    கூட்டுக் குடும்பம் சிதைத்ததால் ஏற்பட்ட இழப்பு குழந்தைகளுக்குத்தான்
    கோடை விடுமு றை மகிழ்ச்சி நிறைந்த விடுமுறையாகவே கழிய வேண்டும்

    ReplyDelete
  6. அனைவரது கருத்துக்களையும் வாசித்தேன். என்னைக் கேட்டால், ஏட்டுப் படிப்பல்லாத மற்றவைகளைக் கற்றுக்கொள்வதில் தவறில்லை என்றே சொல்வேன். பேச்சு, ஓவியம், எழுத்து, நடனம், இசைக் கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொள்ளுதல் ஆகியவை அடங்கும். அதுவும் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் மட்டுமே ஒதுக்கினால் சிறப்பு. மற்ற நேரங்களில் ஒழுக்கத்தையும் மனித மனங்களையும் கற்றுக்கொள்ளட்டும்....

    ReplyDelete
  7. உங்கள் இந்த முயற்சிக்கு முதலில் பாராட்டுகள் சகோ.
    பலரின் கருத்துக்களை அறிந்து கொள்ள உதவுகிறது. என்னையும் இதில் இணைத்துப் பிரபலமாக்கியதற்கு நன்றி. :)

    ReplyDelete
  8. மதுரைத் தமிழா மிக மிக நன்றி! உங்கள் முயற்சி மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. நேற்று இணையம் பிரச்சனையாக இருந்ததால் வாசிக்க இயலவில்லை. இப்போது வந்தவுடன் அனைவரது கருத்துகளையும் வாசித்துவிட்டோம். எல்லோரது கருத்துகளையும் அறிய முடிந்தமை மட்டுமின்றி அருமையான பல கருத்துகள். இன்றைய சூழலில் தாத்தா பாட்டி, பிற உறவுகள் எவ்வளவு முக்கியம் என்பதை உணர வைக்கும் கருத்துகள்.

    எங்களையும் பல பிரபலமானவர்களுடன் இதில் இணைத்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  9. நட்புகள் அனைவரின் கருத்தையும் ஒன்றிணைத்து ஒரு சிறப்பான பதிவாக இப்பதிவை வெளியிட்டமைக்கு மிகவும் நன்றி. என் கருத்தினையும் இடம்பெறச் செய்தமைக்குக் கூடுதல் நன்றி. இன்றைய சூழலில் பெற்றோர் பிள்ளைகள் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையை பலதரப்பட்ட கோணங்களிலும் நட்புகள் அலசியிருப்பதும் அதற்கான தீர்வுகளை முன்வைத்திருப்பதும் சிறப்பு. அவரவர் சூழல் சார்ந்தே அவரவர் கருத்து இருப்பது உண்மை. இதில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவதென்னவோ குழந்தைகள்தாம்.. இதே கருத்தினை குழந்தைகளிடத்தில் கேட்டால்தான் உண்மையான பதில் தெரியவரும்.

    ReplyDelete
  10. ஒரே வரியில் வேண்டாம் என முடிக்கலாம்...

    ReplyDelete
  11. கோடை வகுப்புக்கள் தேவையில்லைதான்! அருமையான கருத்துக்களை தந்த அனைவருக்கும் பாராட்டுக்கள்! தொகுத்தளித்த தங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  12. விடுமுறை விடுவதே கோடையின் வெம்மைத் தணிக்கத்தான், அந்த நேரத்தில் வகுப்புகளுக்கு செல்வது தேவையில்லாத ஒன்றுதான். இதைப் பற்றி என்னுடைய kavithaigal0510.blogspot.com - வலைத்தளத்தில் கணக்கு என்ற சிறுவர்க்கான சிறுகதை ஒன்றை பதிந்துள்ளேன். அக்கருத்துதான் என்னோடது

    ReplyDelete
  13. என்னை பிரபலமானவர்கள் தொகுப்பில் இணைத்தமைக்கு நன்றி. விசு கூறிய அனைத்தும், ஏஞ்சலின் சொல்லிய கூட்டாஞ்சோறும் என் இளமையை நினைவுபடுத்தியது. ஆனால் இன்று பாட்டி, தாத்தா வீட்டிற்கு போனால் கூட தொலைக்காட்சியும், செல்போன் விளையாட்டுக்களும் தானே அங்கும் இருக்கின்றது... என் மகன் தட்டான் பிடித்து விளையாட வாய்ப்பில்லையே என்ற வருத்தம் எப்பவும் இருந்தது எனக்கு... ஆனால் அவன் கோடை வகுப்புகளில் கற்றுக்கொண்ட கலைகள் இன்று அவன் பயன்படுத்தவில்லையென்றாலும் அவன் வாழ்க்கையின் முக்கிய தருணங்களை எளிதில் கடக்க உதவியது என்றே கருதுகிறேன்...

    ReplyDelete
  14. இதுல உண்மை என்னன்னா, இப்போ உள்ள பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவழிக்க எண்ணுவதில்லை. அவர்களுடன் விளையாட பெற்றோர்களுக்கு நேரமில்லை (ஏனென்றால், உலக பாலிடிக்சிலயும், செய்திகள் பார்ப்பதிலேயும், தொலைக்காட்சியில் மூழ்குவதிலேயும் அவர்களுக்கு நேரம் போய்விடுகிறது) இந்தத் தொல்லைகளிலிருந்து வெளியே வர, அவர்களுக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பு.. காசை வீசி குழந்தைகளை சம்மர் கேம்பில் தள்ளிவிடுவது. இதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை. நான்லாம் சம்மராவது, கேம்பாவது.. சாப்பிடற சமயத்தில் வீட்டுக்கு வருவேன். அப்புறம் வெளியில கூட்டாளிகளுடந்தான் நேரம் போகும். இப்போ நகரத்துல வெளில எங்க போறது? எல்லாக் கூட்டாளிகளும் வீடு என்னும் சிறைச்சாலையிலோ, டியூஷன் என்னும் தண்டனையிலோ, சம்மர் கேம்ப் என்னும் கொட்டடியிலோ அடைந்து கிடக்கின்றார்களே...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.