Sunday, November 10, 2019



 வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றதைப் போல...

நேற்றையை பதிவில்   திண்டுக்கல் தனபாலன் ஒரு கருத்து சொல்லி இருந்தார் அதற்கு பதில் கருத்தாக  வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றதைப் போல இருக்கிறது என்று எழுதி இருந்தேன்         மற்றவர்களிடம் பாராட்டுப் பெறும்போது பெரும்பாலானவர்கள் இந்த சொற்றொடரை பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறோம். நானும் அதை பயன் படுத்தி இருந்தேன்....பொதுவாக வயது முதிர்ந்த ஒருவரிடம் பாராட்டுப் பெறுவது என்பதாக பெரும்பாலானவர்கள் கருதிக்கொண்டிருக்கிறார்கள்



ஆனால் இதன் பின் உள்ள கதை என்ன என்று இணையத்தில் தேடி பார்த்த பொழுது  கிழே உள்ள பதிவு கண்ணில் தென்பட்டடது  அதை இங்கே பகிர்கிறேன்  இதற்கான கதையைப் பார்ப்போம்.

                     
விசுவாமித்திரரின் இயற்பெயர் கௌசிகன். ஒரு நாட்டிற்கு அரசனாக இருந்தார். அக்காலத்தில் மன்னர்கள் வேட்டையாடுவதைதான் பொழுது போக்காகவும் வீரமாகவும் கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு நாள் கௌசிக மன்னர் காட்டிற்கு தன் படைகளுடன் வேட்டையாடச் சென்றார்.

                                வேட்டையாடி முடித்த களைப்பில் இருந்தனர் அனைவரும். அவர்களுக்கு அதே காட்டில் வசித்த வசிஷ்ட முனிவர் அவர்களின் களைப்பை போக்க எண்ணி அனைவரையும் அழைத்து விருந்து படைத்தார். அந்த விருந்தில் மயங்கினார் கௌசிக மன்னர்.

                      இவரோ காட்டில் தவம் இருப்பவர். இவரிடம் எதுவுமே இல்லாத போது இத்தனைப் பேருக்கு இவ்வளவு விரைவாக அருமையாக எப்படி சமைத்துப் போட முடிந்தது... என்று எண்ணினார். தன் எண்ணத்தை முனிவரிடமும் கேட்டார்.


                          அதற்கு வசிஷ்டர்,` என்னிடம் நந்தினி என்ற அபூர்வ பசு ஒன்று இருக்கிறது... அது நினைத்தவுடன் அள்ளித் தரும் சக்திக் கொண்டது...' என்றார்.

                      உடனே கௌசிகர் `நீங்களோ முனிவர். உங்களுக்கு எதுக்கு அந்த பசு? எனக்குக் கொடுத்து விடுங்கள்?' என்றார்.

                   முனிவர் ஒத்துக்கொள்ளவில்லை. கௌசிகனுக்கு தான் மன்னர் என்ற நினைப்பும், தன்னிடம் படை இருக்கிறது என்ற திமிரும் சேர்ந்து கொள்ள, வாளை உருவிக் கொண்டு அவரிடம் சண்டைக்குப் போனார்.


                     வசிஷ்டர் பல வரங்கள் வாங்கியவர். மந்திரங்கள் அறிந்தவர். ஆகையால் கௌசிகரின் வாளில் இருந்து தப்பியதோடு, அவரை தோற்றகடிக்கவும் செய்தார்.

                                  தோற்ற கௌசிகருக்கு உள்ளுக்குள் புகைந்தது. `தன்னிடம் நாடு... நகரம்.. படை பலம் எல்லாம் இருக்கிறது? என்ன பயன்? ஒரு முனிவனின் தவத்துக்கு முன்னால் எல்லாமே வெறும் பூஜ்ஜியம் என்று உணர்ந்தார். இனி நானும் தவம் இருந்து முனிவன் ஆவேன்'... என்று வைராக்கியம் கொண்டு காட்டிலேயே தவம் இருக்கத் தொடங்கினார்.
                              இப்படி பல காலம் தவம் இருந்ததின் பயனாக கௌசிக மன்னர், விசுவாமித்திரர் என்ற முனிவர் ஆனார்.

                             இருந்தாலும் விசுவாமித்திரரின் வைராக்கியம் அத்துடன் அடங்கவில்லை. வசிஷ்டரை விட பெரிய ஆளாக வரவேண்டும் என்ற தீ மனதில் எரிந்து கொண்டே இருந்தது. அதனால் மேலும் கடுமையாக தவம் இருக்கத் தொடங்கினார். அதனால் அவருக்கு ராஜரிஷி என்ற பட்டம் கிடைத்தது. ராஜரிஷி என்றால் முனிவர்களுக்கெல்லாம் மன்னன் என்று பொருள்.
                அப்போதும் அடங்கவில்லை விசுவாமித்திரரின் ஆசை. அவர் பிரம்ம ரிஷி பட்டம் வாங்க விரும்பினார். அதனால் தவத்தை தொடர்ந்தார்.


                       தேவர்கள் எல்லாம் பயந்தார்கள். விசுவாமித்திரர் ஏற்கனவே கோபமும் பொறாமை குணமும் கொண்டவர். இதில் பிரம்ம ரிஷிக்கான தகுதியை அடைந்து விட்டால் அவரை யாராலும் வெல்ல முடியாது என்று பயந்து அவரின் தவத்தைக் குலைக்க தேவலோகப் பெண்ணான மேனகையை அனுப்பி வைத்தனர்.
                       அவளது அழகில் முனிவனும் மயங்கினான். இருவருக்கும் ஒரு பெண் குழந்தைப் பிறந்தது. பெண்ணாசைக் கொண்டதால் விசுவாமித்திரரின் பிரம்ம ரிஷி கனவு தகர்ந்தது.
                   
                          புத்தி தெளிந்த விசுவாமித்திரர் மீண்டும் தவம் இருக்கத் தொடங்கினார். தேவர்கள் மறுபடியும் ரம்பையை அனுப்பி வைத்தார்கள். இம்முறை மயங்காத விசுவாமித்திரர் அவளை சபித்து அனுப்பினார்.


                       முனிவர்களுக்கு காமம்,கோபம், கர்வம் கூடாது என்பதால் இம்முறையும் அவரது தவத்தின் வலிமை குறைந்தது.

                                    பட்டு திருந்தி அனைத்தையும் அடக்கி அவர் தவம் இருக்க... கடைசியில் தேவர்கள் தோன்றி அவருக்கு பிரம்ம ரிஷி என்ற பட்டத்தைக் கொடுக்க நினைத்தனர். ஆனால் விசுவாமித்திரர் தேவர்கள் வாயால் அந்தப் பட்டத்தைப் பெறுவதை விட , தான் எதிரியாகக் கருதும் தனது முன்னோடியான வசிஷ்டர் வாயால் அதை சொல்ல வைக்க வேண்டும் என்று விரும்பினார்.
                         அதை தேவர்களிடம் வெளிப்படுத்த அவர்கள் வசிஷ்டரை வரவழைத்தனர்.

               வசிஷ்டரும் தன் வாயால் விசுவாமித்திரரை பிரம்ம ரிஷி என்று வாயாராப் புகழ்ந்து பாராட்டினார்.

                ஆக, நண்பர்களை விட எதிரி கையால் பட்டம், பாராட்டுப் பெறுவதைத்தான் இப்படி குறிப்பிடுகிறார்கள்.


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்புடன்
மதுரைத்தமிழன்

11 comments:

  1. இதன் முழுமையான சாராம்சம் இன்று அறிந்தேன் நன்றி

    ReplyDelete
  2. என்னது இவ்வளவு நாள் நண்பராகத் தானே இருந்தோம்... என்னை எதிரியாக நினைத்து விட்டீர்களே...! ஹா... ஹா...

    சரி, உங்கள் பாணியிலேயே... மதுரை பிரம்ம ரிஷியே... திண்டுக்கல் வசிஷ்டர் உங்களை வணங்குகிறேன்...!

    சேர்ந்து ஒரு பாட்டு பாடுவோமா...?

    நாளை என்றும் நம் கையில் இல்லை...
    - நாம் யாரும் தேவன் கைபொம்மைகளே...
    என்றால் கூட போராடு நண்பா...
    - என்றைக்கும் தோற்காது உண்மைகளே...
    USAIN BOLT-ஐ போல் நில்லாமல் ஓடு
    - GOLD-டு தேடி வரும்...
    உந்தன் வாழ்வும் ஓர் ஒலிம்பிக்கை போலே...
    - வேர்வை வெற்றி தரும்...

    நாங்கள் ரிசியும் இல்லை, ஓர் குசியில் சொன்னோம்...
    புடிச்சா புடிடா......

    எதிர் நீச்சல் அடி வென்று ஏத்துக்கொடி...
    அட ஜாலிஹ. நம்ம வாலி சொன்னபடி...

    ReplyDelete
    Replies
    1. கிடைக்க அறியாதவர்களிடம் இருந்து பாராட்டு பெறுவது என்பது போல நினைத்து வசிஷ்டர் வாயால் என்பதை பயன்படுத்திவிட்டேன் அதாவது சினிமா உலகில் ரஜினியிடம் இருந்து ஒரு சாதாரணமானவனுக்கு கிடைக்கும் பாராட்டைப் போல உங்களிடம் இருந்து கிடைத்த பாராட்டில் மகிழ்ந்து அப்படி கருத்திட்டுவிட்டேன் அதன் பின் தான் ஸ்டோரியை படித்த பின்பும் உங்களின் இந்த கருத்தை படித்த பின்னும்தான் முழுமையாக் அர்த்தம் உள் வாங்கி கொண்டேன் அதுதான் விஷயம் தூக்க கலக்கத்தில் பதிவிட்டதால் இப்படி பிரச்சனைகள் வந்துவிடுகிறது

      உங்களுக்க்கு நானும் எனக்கு நீங்களும் எதிரியாக இருக்க முடியாது நமக்கு எல்லாம் ஒரு எதிரி சங்கிகளின் தலைவன் மட்டும்தான்

      Delete
  3. நற்குணங்களே நிலையான உயர்வைத் தரும்... தீய குணங்கள் உயர்வைத் தருவது போலத் தோன்றினாலும், முடிவில் நம்மைக் கீழே வீழ்த்தி விடும்... ஒருவர் வணங்கும்போது, அடுத்தவர் அவருக்கு எண்ணம் போல் வாழ்வு அமையட்டும் என்பது உட்பட, மனதார ஆசி கூறினால், வணங்கியவர் இன்னும் பக்குவம் பெற வேண்டும் என்பது பொருள்... உயர்நிலையில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் வணங்கினால், இருவரும் சமம் என்றே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்... சரி, விசுவாமித்திரர் பக்குவம் பெற்று விட்டாரா...? வாங்க பார்ப்போம்...!

    கதை மேலும் :-

    விசுவாமித்திரர், வசிஷ்டரை வணங்கிய போது, அவர் தன் இரு கரங்களையும் தூக்கி அவரை ஆசீர்வதித்தார். இதனால் மனம் நொந்து, மறுபடியும் தவம் செய்ய துவங்கினார் விசுவாமித்திரர்... சிறிது காலம் ஆனது... விசுவாமித்திரரின் இஷ்டதெய்வம் (அதாங்க மனதிலிருக்கும் ஆணவம்) அவர் முன் தோன்றி கூறியது :- "விசுவாமித்திரா… நீ இப்போது சென்று வசிஷ்டரை வணங்கு... பதிலுக்கு அவர் உன்னை வணங்கா விட்டால், அவர் தலை வெடிக்கட்டும் என்று சாபம் கொடுத்து விடு…"

    உடனே சென்றார், வணங்கினார்... அவரோ, முன் போலவே இரு கரங்களையும் தூக்கி ஆசீர்வதித்தார்... இதனால் சாபம் கொடுக்கத் தயாரானார் விசுவாமித்திரர்... ஆனால், அவர் செய்த தவத்தின் காரணமாக மனதில் நல்ல எண்ணங்களே எழுந்தன...!

    "என்னவொரு முட்டாள்தனம் இது...? இவர் என்னை பிரம்மரிஷி என்று ஒப்புக் கொள்ளாவிட்டால் என்ன…? நான் கோபத்திற்கு இடம் கொடுத்து, அறிவிழந்து இவரைச் சபிக்க எண்ணி விட்டேனே…? இவ்வளவு காலம் தவம் செய்தும், எனக்குள் இருக்கும் கெட்ட எண்ணம் நீங்கவில்லையே… இவருக்குச் சாபம் கொடுக்க நினைத்ததன் மூலம், என் தவசக்தி எல்லாம் வீணாகி விட்டது... பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ஒரே ஆன்மா தானே குடிகொண்டுள்ளது... அப்படியிருக்கையில் இப்படிப்பட்ட தவறை இனி செய்யக் கூடாது…" என நினைத்து தலைகுனிந்து திரும்பினார் விசுவாமித்திரர்...

    "முனிவரே நில்லுங்கள்... நான் உங்களை வணங்க வேண்டாமா…?!" என்றார் வசிஷ்டர்.

    சட்டென்று திரும்பின விசுவாமித்திரர் திகைத்தார்...! வசிஷ்டர் கைகளை கூப்பி வணங்கி, "பிரம்மஞானம் அடைந்த உங்களை வணங்கி, உங்கள் வணக்கத்தை ஏற்றுக் கொள்கிறேன்…" என்று கூறி விசுவாமித்திரரை தழுவிக் கொண்டார்...

    மனம் நெகிழ்ந்தார் விசுவாமித்திரர்... "முனிவரே, முன்பு உங்களிடம் இருந்த கோபம் முதலான எல்லா தீய குணங்களும் நீங்கி, அனைத்தையும் பிரம்ம மயமாக பார்க்கும் தன்மை வந்து விட்டது... அதனால், இப்போது நீங்கள் பிரம்ம ஞானி, பிரம்ம ரிஷியாகி விட்டீர்கள்…" என்று மன மகிழ்வுடன் பாராட்டினார் வசிஷ்டர்...

    இப்போது சொல்லுங்கள் மதுரை தமிழரே : நட்பா...? எதிரியா...? நம் மனதை விட எதிரி யாருமில்லை... நன்றி... கவிஞர் கண்ணதாசன் வரிகளில் :-

    உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் - உலகம் உன்னிட்ம் மயங்கும்... நிலை உயரும்போது பணிவு கொண்டால் - உயிர்கள் உன்னை வணங்கும்... உண்மை என்பது அன்பாகும்... பெரும் பணிவு என்பது பண்பாகும் - இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நனமையை உண்டாகும்...

    ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு... ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு...

    ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்... அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் - இதில் மிருகம் என்பது கள்ள மனம்... உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் - இந்த ஆறு கட்டளை அறிந்த மனது - ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்... ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்...

    ReplyDelete
    Replies
    1. மிக அருமையான நல்லதொரு விளக்கம்.. நன்றி தனபாலன்

      Delete
  4. இங்கு யார் பிரும்ம ரிஷி டிடியா மதுரையா

    ReplyDelete
    Replies
    1. அழகான சேலை கட்டும் பெண்களை பார்த்தால் வழியும் நான் நிச்சயம் ரிஷியாக இருக்க முடியாது அல்லவா

      Delete
  5. படம் அதற்கு மேல் அழகாயிருக்கிறது!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.