Monday, November 4, 2019

நாம் மாறாவிட்டால் நம்மை மாற்றிவிடுவார்கள்?
என்னால் இனி முடியாது என்பதற்கும் எனக்கு இது இனி தேவையா? என்பதற்கு உண்டான வித்தியாசத்தை உங்களால் உணர முடியுமா?
கடந்த பத்தாண்டுகளாக வலைபதிவில் ஆயிரக்கணக்கான நண்பர்களைப் பார்த்து விட்டேன். பழகியுள்ளேன். 
இன்னமும் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களையும் பார்த்துக் கொண்டே வருகிறேன்.  சமீபத்தில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் மிக ஆச்சரியமாக இருந்த காரணத்தால் இதை எழுதத் தோன்றியது.
படித்தவுடன் உங்களுக்கு வருத்தம் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.  
அது உங்களின் இயலாமை,சோம்பேறித்தனம் தான் காரணம் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.
என் வேலை எப்போதும் ஒன்றைச் சுட்டிக் காட்டுவது. மாற்றுப் பாதை இருந்தால் அதனையும் அடையாளம் காட்டுவது. அப்படியும் நான் திருந்த மாட்டேன் என்றால் அது தவறில்லை. அது அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் என்றே எடுத்துக் கொள்வேன்.
திண்டுக்கல் தனபாலன் போல எனக்கு வலையுலக தொழில் நுட்பம் எதுவும் தெரியாது.  இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் ப்ளாக் என்பதனை நாகா என்ற நண்பர் தான் எனக்கு உருவாக்கிக் கொடுத்தார். எவ்வித எதிர்பார்ப்பு இல்லாமல் என் திறமையைப் பார்த்துச் செய்து கொடுத்தார். 
அதன் பிறகே வேர்ட்ப்ரஸ் ல் இருந்து இங்கு வந்தேன். 
ஆனால் இன்று என்னால் இதன் அடிப்படை சூட்சமங்களைப் புரிந்து கொண்டு செயல்பட முடியும் ஓரளவிற்கு கற்றுள்ளேன்.  ஆனால் தனபாலன் போல முனைவர் பட்டம் வாங்கும் அளவிற்குத் தெரியாது. எனக்கு என்ன தேவையோ? அதனை அவ்வப்போது கற்றுக் கொண்டு என்னை மேம்படுத்திக் கொண்டு உள்ளேன்.
இதை இங்கே எழுதுவதற்குக் காரணம் நான் முதல் முறையாகச் சீனிவாசன் உருவாக்கி இருந்த மின் நூல் தளத்திற்கு வாருங்கள். உங்கள் எழுத்துக்களை மின்னூலாக மாற்றி அங்கே கொண்டு போய்ச் சேருங்கள் என்று கூவிக் கொண்டே இருந்தேன்.
நான் அந்த தளத்தில் மூன்றாவது என்ற வரிசையில் என் ஈழம் வந்தார்கள் வென்றார்கள் என்பதனை மின்னூலாக மாற்றி வைத்தேன்.  இன்று எழுபது லட்சம் தரவிறக்கம் கண்ட அந்த தளத்தில் இன்று வரையிலும் அந்தப் புத்தகம் (மின்னூல்) முதல் 25 இடத்திற்குள் அப்படியே தன்னை தக்கவைத்து மேலும் மேலும் யார் யாருக்கோ சென்று கொண்டேயிருக்கின்றது.
அதனை மேம்படுத்தி அமேசான் தளத்தில் போட்டேன்.  
அதுவும் ஆச்சரியப்படத் தக்க வகையில் மிகக் குறுகிய காலத்தில் நல்ல எண்ணிக்கையைத் தொட்டது.
நான் மின் நூலுக்கு அடுத்தபடியாக அமேசான் குறித்துத் தொடர்ந்து கூவிக் கொண்டே வருகிறேன். என் புத்தகம் குறித்து வெளியிட்டு வருகிறேன். அதன் சாதக பாதக அம்சங்களைப் பல முறை எழுதி உள்ளேன்.

சரி? இந்த முன்னுரை இப்போது எழுதக் காரணம் என்ன?
இன்று அனைவருக்கும் உகந்த தளமாக ஃபேஸ்புக் தளம் உள்ளது. குறிப்பிட்ட சிலருக்கு ட்விட்டர் உள்ளது. இது எண்ணிக்கையில் மிகக்குறைவு. சிலருக்கு யூ டியுப்.  இதே போல வலைபதிவர்கள் பிரிந்து சிதறிவிட்டனர்.  
தவறில்லை.  மாற்றம் ஒன்றே மாறாதது.
ஆனால் இப்போது தொழில் நுட்பம் வளர்ந்துள்ள சூழலில் ஒரு சின்னப் பையனுக்குத் தெரிந்த அமேசான் கிண்டில் குறித்து நம்மவர்களுக்குத் தெரியவில்லை என்பதே கேட்கக் கேட்க ஆச்சரியமாக, வியப்பாக, வருத்தமாக உள்ளது.
அமேசானில் ஆன் லைன் மூலமாகப் பொருட்கள் வாங்குபவர்களுக்குக் கூட இதனைப் பற்றித் தெரியவில்லை. 
திண்டுக்கல் தனபாலன் வலையுலகின் பிதாமகன்.  
அவரிடம் உதவி பெறாதவர்கள் இங்கு யாருமே இல்லை என்று சொல்லக்கூடிய வகையில் அவர் வீடு என்பது வலையுலக அறக்கட்டளை போலவே இன்று வரையிலும் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. அவரின் சொந்தத் தொழிலை லாபகரமாகக் கொண்டு செல்கின்றாரோ இல்லையோ வலையுலகில் ஒருவருக்குப் பிரச்சனை என்றால் உடனே அதில் தான் அதிக கவனம் செலுத்துகிறார். 
இன்று வரையிலும் அவர் பதிவுக்குத் தான் அதிக விமர்சனங்கள், இன்று வரையிலும் அதிக பார்வையாளர்கள் வருகின்றார்கள். 
ஆனால் அவருக்கே கிண்டில் குறித்துத் தெரியவில்லை. 
அமேசான் கிண்டில் அக்கவுண்ட் குறித்துப் புரியவில்லை. தடுமாறி விட்டார்.  
நன்றாக என்னிடம் திட்டும் வாங்கினார். ஆனால் வெற்றி பெற்று விட்டார். 
என் புத்தகத்தைப் படித்து முடித்து விட்டு இப்படியொரு வாய்ப்பை என் அறியாமல் தவற விட்டுட தெரிந்தேனே? என்றார்.
இது மார்க்கெட்டிங் பதிவு அல்ல. நீங்கள் என் புத்தகத்தை வாங்க வேண்டும். படிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. நான் கலந்து கொண்டு இருக்கும் போட்டி என்பது உள்ளூர் போட்டி அல்ல. உலகளாவிய போட்டி. 
என்னை விட மூத்தவர்கள் இங்கே பலரும் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் இருக்கின்றார்கள். என்னை விட ஆழமாக அக்கறையுடன் எழுதுபவர்கள் இருக்கின்றார்கள். தரவுகளின் அடிப்படையில் எழுதுபவர்கள் என்று பலரும் இருக்கின்றார்கள்.  அவர்களை ஒப்பிடும் போது நான் ஒரு சின்னப்பையன். பத்து வயது பையன்.  
ஆனால் நானும் கலந்து கொள்கிறேன்.
உங்களிடம் ஆதரவை எதிர்பார்க்கிறேன். நான் என்னை சந்தைப் பொருளாக மாற்றிக் கொண்டு உள்ளேன்.  இது தான் இப்போதைய உலக நியதி. இதைச் சொல்வதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. 
வெல்வதற்கு எத்தனை வாய்ப்புகள் உள்ளதே அத்தனை வாய்ப்புகளையும் கவனிப்பது தான் வெற்றி பெறக்கூடியவர்களின் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்.
தோல்வியடைந்தால்?
கவலைப்படத் தேவையில்லை. உலகம் பெரிது. 2019 போனால் 2020 வரும். அப்போதும் கலந்து கொள்வேன்.  
ஆனால் உங்களையும் கலந்து கொள்ள வைப்பேன். கட்டாயப்படுத்துவேன். கடலில் நீந்தக் கற்றுக் கொடுப்பேன். கிணறு, ஆறு, ஏரி, குளம் போன்றவற்றில் நீந்தியது போதும் என்று கட்டாயப்படுத்தி வெளியே இழுப்பேன். 
அதற்கு முன்னோட்ட எச்சரிக்கை தான் இந்தப் பதிவு.
ஆனால் நீங்கள் உங்கள் பலவீனத்தை உணரத் தெரிந்து இருக்க வேண்டும். 
காரணம் உங்கள் மகன், மகள், பேரன், பேத்தி போன்றவர்கள் முழுமையான தொழில் நுட்ப உலகில் தான் வாழப் போகின்றார்கள். அவர்களுடன் உங்களுக்கு நல்ல உறவு இருக்க வேண்டும் என்றால், அவர்கள் உங்களுடன் பேச ஆர்வமாக உங்களை நோக்கி வர வேண்டும் என்றால் உங்களின் பழமைவாத சிந்தனைகள் மாற வேண்டும். உங்களை நீங்களே மாற்றிக் கொள்ள வேண்டும்.  உங்களைச் சுற்றிலும் என்ன நடக்கின்றது? என்ன மாற்றங்கள்? என்ன மாறுதல்கள் என்பதனை உணர்ந்து கொள்ளத் தெரிந்து இருக்க வேண்டும்.
இவையெல்லாம் தெரியாவிட்டால் குடி முழுகிப் போய்விடுமா? என்று உங்களிடம் ஒரு கேள்வி வரும். உண்மை தான். ஒன்றும் ஆகிவிடாது. 
என் உறவினர் ஒருவர் இன்னமும் வானொலி தான் கேட்டுக் கொண்டு இருக்கின்றார். இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி அப்படியே உடைக்காமல் இருக்கின்றது.  ஆனால் அவரின் மகன் பொறியியல் படித்து முடித்து விட்டு மெடிக்கல் வேலையில் சேர்ந்து 5000 ரூபாய் வாங்கிக் கொண்டு உள்ளூரில் இருக்கின்றார்.
எனக்குப் பட்டன் தொலைப்பேசி போதும் என்ற நண்பர் ஒருவர் இருக்கின்றார்.  
அவர் செய்வது எல்ஐசி ஏஜெண்ட் தொழில். இப்போது எல்ஜசி ஆன் லைன் மூலமாக முக்கால்வாசி நிர்வாகத்தை மாற்றிவிட்டது. அவரும் பிடிவாதமாக அந்த தொலைப்பேசி என்னை உளவு பார்க்கும் என்று புது வியாக்கியானம் சொல்லிக் கொண்டிருந்தார்.  அவருக்குப் பின்னால் வந்தவர்கள் மாதம் ஒரு லட்சம் சம்பாரிக்கின்றார்கள். இவர் கடந்த ஐந்து வருடமாக அதே 50 000 யைத் கடந்து வராமல் அப்படியே இருக்கின்றார்.
நான் திட்டி புரியவைத்தேன்.  இப்போது வாங்கி விட்டார். 
இப்போது வருத்தப்படுகின்றார்.
இதை எழுதுவதற்குக் காரணம் உங்கள் எழுத்துப் பயணம் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும். வேறு வாகனத்தில் பயணிக்க வேண்டும். அதற்கு உங்களுக்கு மனமாற்றம் தேவை. 
ஓசைப்படாமல் வெகுளி போல இருந்து கொண்டு இங்கே இணையத்தில் மாதம் பெருந்தொகை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ஏராளமான பேர்கள் இங்கே இருக்கின்றார்கள்.  அவர்கள் யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை. 
நீங்கள் மாங்கு மாங்கென்று எழுதிய நான்கு விமர்சனம் வந்து விடுமா? என்ற மொகஞ்சதாரோ ஹரப்பா காலத்தில் இருக்காதீர்கள்.
மின்னூல் பக்கம் வாங்க. 
அமேசான் பக்கம் வாங்க. 
உங்கள் வாகனத்தை மாற்றுங்கள்.
கிண்டில் என்பது ஒரு கருவி.  7000 முதல் 20 000 வரை வசதிகள் பொறுத்து உள்ளது.  ஆயிரக்கணக்கான புத்தகங்களை உள்ளே அடக்க முடியும். உங்கள் வீடு புத்தமாக நிறைந்து இருக்க வாய்ப்பில்லாமல் பயணத்தின் போது கையில் தூக்கிச் சென்று உங்களின் வாசிப்பின் ருசியை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
அவ்வளவு பணம் இல்லைங்கோ?
பரவாயில்லை. வீட்டில் லேப்டாப், டெக்ஸ்டாப் உள்ளதா?  அதில் கிண்டில் ஆப் தரவிறக்கம் செய்யுங்கள்.  அதில் உங்கள் பயனர் அக்கவுண்ட் திறந்து கொள்ளுங்கள்.  தினமும் ஏராளமான இலவச புத்தகங்கள் அமேசான் முதலாளி தந்து கொண்டே இருக்கின்றார்.  
ஒவ்வொரு நாளும் தருகின்றார்.  
பெரியவர்கள் சொல்வது போல படி. படி. படி. என்று சொல்லிக் கொண்டேயிருக்கின்றார்.
வீட்டில் இதுவும் இல்லைங்கோ?
பரவாயில்லை. கடன் வாங்கியாவது நீங்கள் உங்கள் மகனுக்கு மகளுக்கு நவீன ரக அலைபேசியை வாங்கிக் கொடுத்து அவனைப் படிக்க விடாமல் செய்யும் மோசக்கார பெற்றோர்களின் வரிசையில் நீங்களும் கட்டாயம் இருக்கத்தான் செய்வீர்கள்.  அல்லது உங்களின் தேவையின் பொருட்டு நீங்களே அதனை வாங்கியும் வைத்திருக்கக்கூடும்.
அதில் அமேசான் கிண்டில் ஆப் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதன் மூலமாகவும் படிக்க முடியும்.
இல்லைங்க எனக்குப் படிக்கத் தொடங்கினால் ஐந்து நிமிடத்தில் தூக்கம் வந்து என்று சொல்லக்கூடியவரா? 
பரவாயில்லை.  யூ டியுப் பக்கம் வாங்க. அதில் எப்படி சம்பாரிக்கின்றார்கள்? யார் சம்பாரிக்கின்றார்கள்? எதைச் சொல்லி சம்பாரிக்கின்றார்கள்? என்பதனை ஒரு மாதம் ஒவ்வொன்றாகப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்.
ஏதாவது ஒரு வழியில் இணையத்தைத் தெளிவாகப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள்.
குலப்பெருமை, இனப்பெருமை, மொழிப் பெருமை எல்லாம் விரைவில் அழிந்து விடும். ஆனால் உங்கள் பணப் பெருமை உங்களை, உங்களின் தலைமுறையை வாழ வைக்கும் என்பதனை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
இதனைத் தான் 5 முதலாளிகளின் கதையின் வாயிலாக உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்.
இது போட்டிக்காக எழுதப்பட்ட மின்னூலாக இருந்தாலும், வெல்ல வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்தாலும் இந்த சமயத்தில் இதன் மூலம் உலகத்தீரே இதனைக் கேட்பாயாக? என்று முக்கியமான தகவலைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்று என் அனுபவச் சாற்றைக் கசக்கிப் பிழிந்து தந்துள்ளேன். 
நிர்வாகவியல், வணிகவியல், தத்துவ இயல், தொழிலாளர் நலம், முதலாளி நலம், பொருளாதார பலம், மாறும் சூழல், மாறாத மனிதர்கள், பலவீனம் உள்ள மனிதர்கள் அடையும் துன்பங்கள், சந்திக்கும் பிரச்சனைகள் என்று ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்துச் செதுக்கி உள்ளேன்.
அடைவது உங்கள் விருப்பம்.
உங்களை நான் அடைந்தே தீருவேன் என்பது என் ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்பு.
அலைபேசியைப் பயன்படுத்துபவர்கள் இந்த இணைப்பில் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
உங்கள் கணினியில் படிக்க விரும்புபவர்கள் இந்த இணைப்பில் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
தினமும் மதியம் மூன்று மணிக்கு அமேசான் எந்தப் புத்தகங்களை இலவசமாகத் தருகின்றார்கள் என்பதனை அறிவதற்கு இந்த இணைப்பில் சென்று அறிந்து கொள்ளுங்கள்.
ராசா நான் பொழுது போவதற்கு இங்கு வந்து எதையாவது எழுதி என் நேரத்தைப் போக்கிக் கொள்ள விரும்புகிறேன். என்னை ஏன் தொந்தரவு செய்கின்றாய் என்று கேட்பவரா?
பரவாயில்லை.
உங்கள் தலைமுறை உங்களுக்குப் பாடம் கற்றுக் கொடுப்பார்கள். உங்களின் மனோதிடம் உங்களை அப்போது காப்பாற்ற வேண்டும். 
நல்வாழ்த்துகள்.
(இது திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதித் துறையில் சாதித்த சறுக்கிய முதலாளிகளைப் பற்றிப் பேசும் வாழ்வியல் தொடர்.  சுய முன்னேற்ற நூல்கள் ஜீ பூம்பா என்பது போன்ற படங்கள் எதுவும் இதில் பாடங்களாகச் சொல்லி நான் உங்களைப் பயமுறுத்தவில்லை.  கிளர்ச்சியூட்டவில்லை. உடனடி நிவாரணம் எதையும் சொல்லவும் இல்லை.
உங்கள் வாழ்க்கையை, வாழ்ந்த வாழ்க்கையை, வாழப் போகும் வாழ்க்கையைக் கொஞ்சமாவது அசைத்துப் பார்க்கும். நீங்கள் இதைப் பகிர்வதும், உங்களின் நண்பர்களின் வட்டத்திற்கு அறிமுகம் செய்வதும் உங்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. 
நன்றி. வணக்கம்
இந்த பதிவை  எழுதியவர்
ஜோதிஜி

மறுபகிர்வு
அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. மிக்க நன்றி தெய்வமே.

    ReplyDelete
    Replies
    1. ஹலோ இது என்ன தெய்வம் அது இதுன்னுட்டு

      Delete
  2. தகவலுக்கு மிக்க நன்றி
    நான் இதுவரைக்கும் கிண்டிலை பயன்படுத்தவில்லை.
    இனிமேலும் அப்படியே இருக்க மாட்டேன் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. இப்போதுதான் அங்கு படித்து விட்டு வருகிறேன்.

    ReplyDelete
  4. ஜோதிஜி தான் எழுதுவது மட்டுமன்றி மற்றவர்களையும் எழுதவைத்துவிடுவார். தான் சிந்திப்பது மட்டுமன்றி பிறரையும் சிந்திக்க வைத்துவிடுவார். அபார மனிதர். நூலைப் படித்துவிட்டு தனியாக எழுதவுள்ளேன்.

    ReplyDelete
  5. ஜோதிஜியின் தளத்திலும் வாசித்துவிட்டோம் மதுரை சகோ.

    நல்ல பயனுள்ள பதிவு. கிண்டில் டவுன்லோடும் செய்துவிட்டேன், கணினியில்.

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.