Tuesday, April 23, 2019

இப்படியும் ஒரு உணவகம் இஷ்டப்படி சாப்பிடலாம்...இஷ்டம் இருந்தால் காசு தரலாம்! 

@avargal unmaigal
கம்யூனிஸ்ட்களின் கட்டணமில்லா உணவகம்


கேரள மாநிலம், ஆலப்புழாவிலிருந்து ‘சேர்த்தலா’ செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்   பாதிராப்பள்ளியில் ஜனகீய பட்சணசாலா’ (மக்கள் உணவகம்) என மலையாளத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு உணவகம் இருக்கிறது

இந்த உணவகத்தின் உள்ளே சென்றால் இருக்கை வசதிகள் கொண்ட நீளமான அறை. அந்த அறை முழுவதும் கண்ணுக்கு விருந்தளிக்கும் காட்சி ஓவியங்கள் வருபவரை வசீகரிக்கின்றன.  இதனை  கடந்து உள்ளே சென்றால் மிக மிக சுத்தமான சுகாதாரத்துடன் உள்ள சாப்பிடும் இடம்  அதன் டைல்ஸ் தரையை  அடிக்கடி துடைத்து சுத்தம் செய்துகொண்டே இருக்கிறார்கள்.
அந்த உணவகத்தில் அப்படி என்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா..? இந்த உணவகமே விசேஷம் தான்.  உணவகங்களில் நாம் பார்த்துப் பழகிப் போன காசாளரோ, வந்தவர்களை  கவனிக்கும் சப்ளையர்களோ இங்கு இல்லை. மிரட்டும் விலைப்பட்டியலையும் இங்கே பார்க்க முடியாது.

பசியென வந்தவர்களுக்கு  பணமேதும் கேட்காமல் அமுது படைக்க வேண்டும். அதற்காக பாதிராப்பள்ளி பகுதி மார்க்சிஸ்ட் கட்சியினர் உருவாக்கியிருக்கும் அன்னச் சத்திரமே இந்த உணவகம்!

மூன்று வேளையும் யார் வேண்டுமானாலும் இங்கு வந்து இலவசமாக சாப்பிட்டுவிட்டுப் போகலாம். ஆலப்புழாவின் சுற்றுவட்டாரப் பகுதி  ஏழைகளுக்கு இப்போது இந்த உணவகம்தான் நிழல்தாங்கல்!

காலையும் மாலையும் சுடச்சுட கட்டன் சாயாவும் தருகிறார்கள். நமக்குத் தேவையான உணவை நாமே வாங்கிக் கொள்ளலாம். அளவுக் கட்டுப்பாடு கிடையாது. கைகழுவும் இடத்தில் ஒரு கண்ணாடி பெட்டி வைத்திருக்கிறார்கள்.  சாப்பிட்டு முடித்ததும், தங்களால் இயன்றதை இந்தப் பெட்டியில் போடலாம். போடாவிட்டாலும் யாரும் பொல்லாப்புச் சொல்லமாட்டார்கள்.

எளியோர் தங்களது பசித்துயர் போக்கிக் கொண்டு மனநிறைவுடன் இங்கிருந்து செல்கிறார்கள். வசதிபடைத்தோரோ கண்ணாடிப் பேழைக்குள் தங்களது ஈகையைக் காட்டிவிட்டுப் போகிறார்கள். நாம் சென்றபோது காலை மணி எட்டு. ஆவி பறக்க இட்லியும், சுடச்சுட சாம்பாரும் தயாராகிக்கொண் டிருந்தது. அப்போதே, சாப்பிட ஆட்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பரிமாறக் காத்திருந்த  தன்னார்வலரும், பாதிராப்பள்ளி மார்க்சிஸ்ட் கிளையால் நடத்தப்படும்  ‘பிரான்சிஸ் மெமோரியல் டிரஸ்ட்’டின் நிர்வாகக் குழு உறுப்பினருமான ஷானுவிடம் பேசினோம்.

“இங்கு தினமும் காலையில் 200 பேர், மதியம் 800 பேர், இரவு 100 பேர் எனஆயிரம் பேருக்கு மேல் சாப்பிடுகிறார்கள். காலையில் இட்லி - சாம்பார், புட்டு - பயறு, உப்புமா என சுழற்சி முறையில் மாறி, மாறி வரும். மதியம் தினமும் மீன் சாப்பாடு தான்.

இரவு கப்பக் கிழங்கு கஞ்சி, பயறு என மாறி, மாறி தருவோம். பாதிராப்பள்ளி மார்க்சிஸ்ட் கிளை மூலம் ஏழைகளுக்கு அன்னமிடும் திட்டத்தை  நீண்ட நாட்களாக செயல்படுத்தி வருகிறோம்.

முன்பு இந்தப் பகுதியைச் சேர்ந்த 45 பின் தங்கிய குடும்பங்களைத் தேர்வு செய்து அவர்களின் வீடுகளுக்கே சென்று உணவளித்து வந்தோம். அந்தச் சேவையின்  400-வது நாளில் இந்த மக்கள் உணவகம் மலர்ந்தது.

இதற்கு முதுகெலும்பாய் இருந்தது கேரள மாநில நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐசக். கேரள மாநில நிதித்துறை நிறுவனங்களின்சி.எஸ்.ஆர் நிதி உதவியோடு இந்த உணவகம் செயல்படுகிறது. உணவகத்துக்கு தேவையான காய்கறிகளை பக்கத்திலேயே இரண்டரை ஏக்கரில் நாங்களே இயற்கை விவசாயம் செய்கிறோம்.

இந்தப் பகுதியிலிருந்து 1,576 தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து, 22,76,000 ரூபாய் நிதியில்  இந்த உணவகத்தை எழுப்பியிருக்கிறோம். அநேகமாக, இந்தியாவிலேயே அரசியல் கட்சி ஒன்றால் நடத்தப்படும் உணவகம் இது ஒன்றாகத்தான் இருக்கும்.

இதேபோல், இப்பகுதியில்  ‘மக்கள் லேப்’ ஒன்றையும் நடத்துறோம். அங்கு, ஏழைகள் மிக, மிகக் குறைந்த கட்டணத்தில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள முடியும்” என்றார் ஷானு.

இந்த உணவகம் தொடங்க விதைபோட்ட கேரள மாநில நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐசக்கோ, “பசியில்லாத கேரளத்தை முன் னெடுக்கும் முயற்சியின் தொடக்கம்தான் இது” என சிலாகிக்கிறார்.

வயிற்றுப்பசிக்காக கொஞ்சம் அரிசியைத் திருடியதாக பழங்குடி வாலிபரை அடித்துக் கொன்ற அதே கேரளத்தில் தான் இப்படியும் ஒரு நல்ல காரியம் நடந்து கொண்டிருக்கிறது .

எப்படியோ, இனியொருவன் பசிக்கு உயிர்விடாத பூமியாகட்டும் கடவுளின் தேசம்!

எழுதியவர் என்.சுவாமிநாதன் படங்கள்: ராஜேஷ்குமார் இதழ்
காமதேனு
அனைவருக்கும் நன்றிகள்


நம்ம ஊரிலேயும் கட்சிகள் இருக்கின்றன... பல தலைமுறைக்கு கோடிக் கணக்கில் சம்பாதித்தும் இப்படி  நடத்த வேண்டும் என்று எண்ணம் அவர்களுக்கு வருவதே இல்லை.. இப்படி ஆண்டு முழுவதும் அவர்கள் நடத்த வேண்டாம் வெள்ளம் புயல் போன்றவைகள் பாதிக்கும் சமயங்களில் இப்படி நடத்தி மக்களுக்கு சேவை செய்யாலாமே அப்படி செய்த்தால் தேர்தல் அப்ப வோட்டுக்கு பணம் கொடுத்து வோட்டு கேட்க அவசியமே இருக்காதே......


அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. ஜெர்மனியில் உண்ண வருபவர்கள் தங்களால் இயன்றதை உணவகத்தில் சுவற்றில் எழுதி பண்மும் கொடுத்துவிடுவார்களாம் வசதி இல்லாமல் உண்ண வருபவர்கள் சுவற்றில் எழுதி இருக்கும் உணவுப் பொருளைக் கேட்டு வாங்கலாம் இலவசமாக பதிவில் இருக்கும் செய்தி புதியது

    ReplyDelete
  2. நல்ல மனம் வாழ்க

    ReplyDelete
  3. நல்ல உணவகம் இது. கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் சாப்பிட்டதில்லை. சேர்த்தலா போயிருக்கிறேன் ஆனால் பாதிராப்பள்ளி போகவில்லை. உறவினர் போய் மனம் நிறைந்து பணமும் போட்டுவிட்டு வந்ததாகச் சொன்னார்.

    கீதா

    ReplyDelete
  4. இது பற்றி தெரியும். ஆனால் இங்கு சாப்பிட்டதில்லை.

    நல்ல மனம் படைத்தவர்கள் செய்யும் சேவை.

    துளசிதரன்

    ReplyDelete
  5. வாழ்த்தப்பட வேண்டியவர்கள்

    ReplyDelete
  6. வியக்கவைத்த செய்தி. இக்காலத்தில் இப்படியும். போற்றத்தக்கவர்கள்.

    ReplyDelete
  7. நற்செய்தி வாழ்த்துவோம்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.