“எப்படிடா 5000 ரூபாய் பணம் கேட்டான்னு எடுத்துக் கொடுத்தேன்னு சொல்றே”
“வேற என்னடா பண்றது. குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்றான். அதான்”
“அவன் எப்பவுமே இப்படித்தான். ஏதாவது ஒரு காரணம் சொல்லி எல்லார்கிட்டேயும் பணம் வாங்கிகிட்டே இருக்கான். அவனப் பாத்தாலே நம்ம பசங்க எல்லாரும் பறந்து ஓடுறானுங்க. கடன் கேட்டு கேட்டு கடைசியில பத்து ரூபாய் கூட வாங்காம விடமாட்டான். அப்படியும் நீ கொடுக்கலன்னு வச்சிக்க உன்கிட்ட ஒரு டீயாவது வாங்கி குடிச்சிட்டுதான் போவான். அவன்கிட்ட போய் ஏமாந்திட்டியேடா. அந்த பணம் வந்த மாதிரிதான்”.
அவன் என்பவன் யார்? கார்த்திகேயன். எங்களுடன் படித்தவன்தான். ஆனால் எங்களுடன் பழகியவன் அல்ல. பள்ளிப் பருவத்தில் எங்களை விட்டு வெகு தூரத்திலேயே இருப்பான். அவன் அப்பா ஊரில் மிகப்பெரிய பணக்காரர். இவனுக்குத்தான் படிப்பே ஏறவில்லை. கடைசியில் பட்டயப்படிப்பு என்று அழைக்கப்படும் டிப்ளமோவில் பணம் கட்டி சேர்த்து விட்டார். அது முடித்தவுடன் எப்படியும் வேலை கிடைக்காது என்று தெரிந்து அருகில் உள்ள பல்கலைக் கழகத்தில் பணம் கொடுத்து ஒரு நிரந்தர வேலை வாங்கி கொடுத்திருந்தார். அவன்தான் இப்படியெல்லாம் செய்து கொண்டிருக்கிறான்.
“ஏன்டா. நல்லா வசதியாத்தானே இருக்கான். அப்புறமும் ஏன் இப்படி நடந்துக்கிறான்?” – தெரியாமல் கேட்டேன்.
“மூணு வருஷம் வரைக்கும் வேலை பர்மனென்ட் கிடையாது. புரொபெஷன் பீரியட்ல சம்பளம் கம்மிதான். அதான்”.
“அதுக்கு.... வீட்டுல வசதியா இல்ல. இப்படியெல்லாம் நடந்துக்கிறத அவன அவமானமா நினைக்கலையா?”
“அட போடா. என் நிச்சயதார்த்ததுக்கு பார்ட்டி வைக்க பசங்கள கூப்பிட்டேன். எல்லோரும் வந்துட்டானுங்க. அவன் மட்டும் வரல. அப்பதான் கல்யாணம் ஆகியிருந்ததால அவன் பொண்டாட்டி போகக்கூடாதுன்னு ஆர்டர் போட்டுட்டா. ஆனா இவன் என்ன பண்ணான் தெரியுமா? மறுநாள் வந்து நான்தான் பார்ட்டிக்கு வரலியே. எனக்கு செலவு பண்ண வேண்டிய 200 ரூபாய் கொடுன்னு கேட்டான். அது பார்ட்டிடா. வரமுடியலன்னா அடுத்த முறை கலந்துக்கன்னு சொன்னேன். அடம்பிடிச்சு 200 ரூபாய் வாங்கிட்டுதான் விட்டான். அதோட நானும் அவன் பழக்கத்தையே விட்டுட்டேன்”
இவன் சொல்ல சொல்ல எனக்கு அவனைப் பத்தி இருந்த எண்ணமெல்லாம் கொஞ்ச கொஞ்சமாய் மாறத் தொடங்கியது. அப்போ அந்தப் பணம் வராதா?
சரி நான் யார்? வீட்டுக் கஷ்டத்திலேயும் விடாமல் படித்து, வேலை கிடைக்காமல் அலைந்து, நண்பனின் கணினி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, மாட்டு சாணம் அள்ளும் அளவிற்கு அவனிடம் அவமானப்பட்டு, அவனை விட்டு வெளியேறி, இப்போதுதான் சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறேன். சம்பளம் வாங்கி இரண்டு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் அதில் 5000 ரூபாயை இழந்து விட்டேன். இழந்து விட்டேன் என்று ஏன் நினைக்க வேண்டும்? இவனுக்கு அவன் மீது பொறாமையிருந்து வேண்டுமென்றே சொல்லியிருந்தால்...
பணத்தை எப்படியும் அவனிடமிருந்து வாங்கிவிட வேண்டும். அன்றிலிருந்து சென்னையிலிருந்து ஊருக்கு வரும் போதெல்லாம் அவனைக் கண்டு பணம் கேட்பதும், அவனும் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தராமல் இருப்பதும் வாடிக்கையாகி விட்டது. ஒருமுறை மனைவிக்கு வளைகாப்பு என்பான். மறுமுறை மாமனாரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறேன் என்பான். இன்னொரு முறை வேலைக்கு கொடுத்த பணத்திற்கு வட்டி கட்டவே வழியில்லாமல் நானும் குழந்தையும் ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டுமே சாப்பிடுகிறோம் என்று கூசாமல் பொய் சொல்வான்.
உண்மையா? பொய்யா? என்று தெரியாமல் நானும் வந்து விடுவேன். இவனிடம் சென்று அவனைப் பற்றி கேட்டால் “அவன் அப்படித்தான் சொல்வான். இப்போதுதான் அவன் சிதம்பரத்தில் வீட்டுமனை வாங்கியிருக்கிறான்” என்பான். மறுமுறை கேட்கும்போது “இப்போது அவன் பெயரில் ஒரு சுமோ வாங்கியிருக்கிறான்” என்பான்.
சுமோவைக் காட்டி அவனிடம் பணம் கேட்டால் இது முழுக்க முழுக்க கடன் என்பான். எப்படியாவது அவனிடம் பணம் வாங்கி விடலாம் என்ற எண்ணத்தை கொஞ்சம் கொஞ்சமாய் இழக்க ஆரம்பித்தேன்.
இந்த நேரத்தில் எனக்கும் என் நிறுவனத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு என உயர ஆரம்பித்தேன். நிறுவனத்தின் மூலம் வெளிநாடு செல்ல வாய்ப்பு வந்தது. அதில் இரண்டு, மூன்று ஆண்டுகள் உருண்டோடியது. வீட்டில் எனக்குப் பெண் பார்த்து நிச்சயித்ததால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஊருக்கு வந்து சேர்ந்தேன். திருமணத்திற்கு அவன் உட்பட அனைவரையும் அழைத்தேன். திருமணம் முடிந்த கையோடு சென்னைக்கே வந்துவிட்டேன்.
அன்று தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது.
“ஹலோ! நான் கார்த்தி பேசறேன்” – அவன்தான்.
“சொல்லுடா. என்ன விஷயம்?”
“கல்யாணத்துல போட்டோ எடுத்ததுல ஸடுடியோவுக்கு 7000 ரூபாய் பாக்கி இருக்காமே?”
“ஆமாம்”
“அதான். எப்ப தருவேன்னு அவன் கேட்க சொன்னான்”
“ஸ்டுடியோகாரன் கிட்டே நான் பேசறேன். அவன் நம்பர குடு”
“அவன் கிட்ட நான் பேசிட்டேன். அவன் எனக்கு பணம் தரவேண்டியிருக்கு. அதான் நீ தரவேண்டியத வாங்கிக்க சொல்லிட்டான். எனக்கு கொஞ்சம் அர்ஜெண்ட். எப்ப வாங்கிக்கலாம்?”
அவனிடம் பேச வாய் எடுப்பதற்குள் நிறுவன மேலாளர் அழைத்ததால் “6 மணிக்கு மேல பேசறேன்” என்று வைத்துவிட்டேன். 6 மணிக்கு சரியாக அழைத்தான். இன்னும் எனக்கு வேலை முடியவில்லை. வேலை முடிந்தவுடன் நானே அழைக்கிறேன் என்று கூறி வைத்தேன். என் வேலையெல்லாம் முடிந்து 9 மணிக்கு தொலைபேசியை எடுத்து பார்த்தபோது 20 முறைக்கு மேல் அழைத்திருந்தான். எனக்கு வந்ததே கோபம். அடக்கிக்கொண்டு நானே அவனை அழைத்தேன்.
“ஹலோ. என்னடா குடுக்குற காச கேட்ட போனையே எடுக்க மாட்டேங்கிற” என்றான்.
“இல்லை. வேலை ரொம்ப டைட்” இப்ப சொல்லு.
“எனக்கு உடனே பணம் வேணும்”
“என்னிடம் இப்ப இல்லியே”
“இல்லன்னா. யார்கிட்டேயாவது வாங்கிக் கொடு”
“யார்கிட்ட வாங்கறது. சம்பளம் வரட்டும் பார்க்கலாம்.”
“எனக்கு அர்ஜெண்ட்ன்னு சொல்றேன். என்னடா புரிஞ்சிக்க மாட்டேங்கிற. எனக்கு உடனே வேணும். நீ வேணா உங்க வீட்டுல சொல்லி ஏதாவது நகைய அடகு வச்சிக்கொடு. பணம் வந்தவுடனே மூட்டுக்கோ” என்றான்.
‘நாந்தான் சம்பளம் வந்தவுடனே தர்றேன்னு சொல்றன்ல” என்றேன்.
உடனே அவன் கோபமாக,
“என்னடா நீ. மரியாதையா பேசுனா தரமாட்டே போலிருக்கே. கொடுக்க வேண்டிய பணத்த மரியாதையா நாளைக்குள்ள தர்ற வழியைப் பாரு. இல்லன்னா உங்க வீட்டுல போய் அசிங்க அசிங்கமாய் பேசிடுவேன், ஜாக்கிரதை” என்று கூறிவிட்டு உடனே போனை வைத்துவிட்டான்.
சில்லென்று கோபம் உச்சி மண்டையில் ஏறியது. ஆனால் வேலைக்கு அலைந்து அவமானப்பட்ட காலங்களில் மனது பக்குவப்பட்டிருந்ததால் கோபத்தை அடக்கிக் கொண்டு மறுநாள் அழைப்பு வரட்டும்; பார்க்காலம் என்று விட்டு விட்டேன்.
நினைத்த மாதிரியே மறுநாள் காலை 7 மணிக்கெல்லாம் அழைப்பு வந்தது.
“என்னடா பணம் ரெடி பண்ணிட்டியா இல்லியா?”
எவ்வளவு தரணும்?” என்று கேட்டேன்.
“7000 ரூபாய்”
“நான் ஸ்டுடியோக்காரன் கிட்டேயே கொடுத்திக்கிறேன்”
“அவன்தான் என்ன வாங்கிக்க சொல்லிட்டான்னு சொல்றேன்ல”
“அத அவன் என்கிட்ட சொல்லட்டும்” – போனை வைத்தேன்.
அரைமணி நேரத்தில் ஸ்டுடியோவிலிருந்து எனக்கு போன் வந்தது.
“அண்ணே. நான்தான் பிளாஷ் ஸ்டுடியோ கதிர் பேசறேன். பணத்தை நீங்க கார்த்தி அண்ணன்கிட்ட கொடுத்திருங்க. நான் வாங்கிக்கிறேன்.” என்றான்.
அடுத்த நிமிடம் அவனிடமிருந்து அழைப்பு வந்தது.
“தட்டிக் கழிக்கலாம்னு பாத்தேல்ல. இப்ப சொல்லு. வீட்டுல் போய் வாங்கிக்கிட்டா இல்ல பேங்க்ல என் அக்கவுண்டல போடுறியா?”
“உன் அக்கவுண்ட்லேயே போடறேன். அக்கவுண்ட் நம்பர் குடு. 7000 ரூபாய்ன்னு சொன்னேல்ல. அதுல 2000த்தை போட்டுடறேன்”
“என்னடா உங்கிட்ட ஒரே ரோதனையா இருக்கு. மீதி பணத்தை எப்பத் தர்ற?”
“மீதி பணம் நான் தரவேண்டியதில்லை. நீ எனக்கு 5000 ரூபாய் தரணுமில்ல. அத கழிச்சிக்கிறேன்”
“அத... அத... அதெல்லாம் இப்ப கேட்காத. நான் ரொம்ப கஷ்டத்திலே இருக்கேன். அத நான் பொறுமையா தர்றேன்”
“நான் கொடுத்து அஞ்சு வருஷமாவுது. இன்னும் எவ்வளவு பொறுமையா தருவே. நான் கழிச்சிகிட்டு மீதியை போட்டுடறேன்”
“இல்ல. இல்ல. அதெல்லாம் கழிக்கக்கூடாது. என் மாமனார் வேற இறந்துட்டார் தெரியுமா... நீ... நான்... குழந்தைக்கு வேற... ஆபீஸ்ல வேற டென்ஷன்... என் பொண்டாட்டி பணம் வாங்கிட்டு வர்ற சொல்லி டார்ச்சர் பண்றா...”
“என் பொண்டாட்டி கூடத்தான் டார்ச்சர் பண்றா. அஞ்சு வருஷமா கொடுத்த கடன கூட வாங்க முடியாத கையாலாகாதவனா நீன்னு திட்டுறா”
“இல்ல... நீ வேணுமின்னே சொல்றே... எங்க அப்பா... வண்டி வேற பெரிய செலவு வச்சிடுச்சி... நான் வந்து... நீ... இல்ல... ஸ்டுடியோவுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அவன்கிட்டேயே கொடுத்துரு. எனக்கும் அதுக்கும் சம்மந்தமில்ல. நான் வேற எங்கேயாவது ஏற்பாடு பண்ணிக்கிறேன்”
‘இல்லைடா’ என்று சொல்வதற்குள் வைத்துவிட்டான். அதற்கு பிறகு நான் அழைத்தால் அவன் எடுப்பதே இல்லை. ஆகட்டும் ஸ்டுடியோவிலிருந்தோ இல்லை அவனிடமிருந்தோ அழைப்பு வரட்டும். 5000 பற்றியோ இல்லை 7000 பற்றியோ அப்போது பேசிக் கொள்ளலாம்.
இணையத்தில் எழுதி பகிர்ந்தவர் சுதந்திரன் எனக்கு மிகவும் பிடித்தது என்பதால் இதை இங்கே மறுபகிர்வு செய்கிறேன். இவர் சந்திக்கும் சில மனிதர்களின் ஏதாவது ஒரு குணத்தைக் கருவாகக் கொண்டு இவர் கற்பனையைக் கலந்து எழுதிய கதையே இது. இதில் 75% கற்பனையே. மீதமுள்ள 25% என்பது அந்த மனிதரின் குணநலன். “இப்படியும் சில மனிதர்கள்” என்று
அவர் சொல்லி இருக்கிறார்
இவர் சொல்லி சென்றவிதம் மிக அருமையாக இருக்கிறது என்னை மிகவும் கவர்ந்து இருக்கிறது அவருக்கு எனது தளத்தின் சார்பாக நன்றிகள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்
ReplyDeleteகற்பனை என கூறப்பட்டாலும்கூட யதார்த்தத்தினை அதிகம் காணமுடிகிறது.
ReplyDeleteசிலர் அப்படித்தான் தூரத்திலேயே வைக்க வேண்டும்
ReplyDeleteசூப்பர் கதை. சிலர் இப்படித்தான். மிகவும் ரசித்தோம் மதுரை தமிழன். முதலில் நீங்கதான் எழுதியிருக்கீங்க என்று நினைத்தோம். யதார்த்தமான கதை.
ReplyDeleteதுளசிதரன், கீதா
சுவாரஸ்யம்தான். ஆனால் இதில் கற்பனை பார்ட் என்பது அந்த 7000 கேட்டு அதை அடஜஸ்ட் செய்த பகுதியாய்த்தான் இருக்கும். ஏனெனில் அப்படிதான் நம் மனதை காம்ப்ரமைஸ் செய்துகொள்ளமுடியும்.நிஜங்களில் நாம் ஏமாந்தது ஏமாந்ததுதான்.. இதை என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.
ReplyDeleteஇவர்களை மாதிரி இருப்பவர்களிடம் இருந்து தான் நாம் வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொள்ள முடிகிறது
ReplyDelete