Wednesday, April 3, 2019

@avargal unmaigal
படித்ததில் பிடித்தது மட்டுமல்ல பயனுள்ளதுமான, பெண்களுக்கான பதிவு

தனது இரு பெண்களையும் திருமணம் செய்து கொடுத்த பின்னர், கணவரும் வேலைக்குப் போய் விட, தினமும் தனிமையில் இருக்க நேரிட்ட அந்த பெண்மணி, தனக்கு உடல் முழுதும் வலிப்பதாக அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார்.

அவரது கணவர் அந்த பெண்மணியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். பரிசோதனைகளில் உடல்ரீதியான எந்த பிரச்னையும் அந்த பெண்ணுக்கு இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவருக்கு வந்திருப்பது Psychosomatic disorder என்றும், மனநல மருத்துவரை அணுகும்படியும் அந்த பொது மருத்துவர் கூறி இருக்கிறார்.

Psychosomatic disorder என்றால் என்ன?
இது ஒரு சைக்கலாஜிக்கல் டிஸ்ஆர்டர்தான். உளவியல் சார்ந்த ஒரு நோய். Psychosomatic disorder நோயானது மனதையும் உடலையும் இணைக்கும் ஒன்று. மன ரீதியான பாதிப்பு உடல் நல பாதிப்பாக வெளிப்படும். உடலில் புதிதாக ஒரு வலி உண்டாகலாம் அல்லது ஏற்கனவே சிறிய அளவில் உள்ள ஒரு நோய் பெரிய அளவில் மிகவும் மோசமாகி விட்டதை போல உணரலாம்.

உளவியல் ரீதியான காரணங்கள், மன அழுத்தப் பிரச்னைகள் போன்றவற்றால் இது ஏற்படுகிறது. இரு பாலருக்குமே இந்த பிரச்னை வந்தாலும் குறிப்பாக பெண்களுக்கு இந்த பிரச்னை அதிகம் ஏற்படுகிறது. இன்னும் எளிமையாகச் சொன்னால் சிலருக்கு உடலில் ஒரு சில பாகங்களில் தொடர்ந்து வலி, வலி என்று சொல்லி பல மருத்துவர்களை அணுகுவார்கள். பரிசோதனைகள் பலவற்றைச் செய்து பார்த்தால் அவர்களுக்கு உடல் ரீதியாக ஒன்றுமே பிரச்னை இருக்காது. இதைத்தான் Psychosomatic disorder என்கிறோம். உங்களுக்கு உடல்நலப் பிரச்னை ஏதுமில்லை என ஒரு மருத்துவர் சொன்னால் நம்பாமல் வேறு ஒரு மருத்துவரை நாடுவார்கள். பின் ஏதாவது நல்ல அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் அவருக்கு இந்த பிரச்னை இருக்கும் என்று அறிந்து மனநல மருத்துவர்களைப் பார்க்கச் சொல்லி பரிந்துரை செய்வார்கள்.

ஆனால், இவர்களுக்கு இந்த பிரச்னை இருக்கிறது என்று மருத்துவர்கள் கண்டுபிடிக்கும் முன்னரே இவர்கள் பல பரிசோதனைகள் செய்திருப்பார்கள். சிலர் அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு கூட போய் இருப்பார்கள். பல மருத்துவர்களிடம் சென்று கையில் பெரிய ஃபைல் அல்லது நிறைய ரெக்கார்டுகள் வைத்திருப்பார்கள். நிறைய செலவழித்திருப்பார்கள்.

எப்படி கண்டுபிடிப்பது?
நிஜமான உடல் நலப்பிரச்னைகளில் வரும் அறிகுறிகள் போலவே இவர்களுக்கும் இருக்கும் என்பதனால் ஒரு வேளை நிஜமாகவே அவர்களுக்கு உடல்நலப் பிரச்னை இருந்து அதை கவனிக்காமல் போய்விட்டால் என்ன ஆவது? எனவே, முதலிலே இதனை எந்த மருத்துவராலும் உறுதி செய்ய முடியாது- சோதனைகளுக்கு பின் தான் தெரியும்.

நிறைய அனுபவமிக்க மருத்துவர்கள் ஒரு சில முறைகளிலே இதனை கண்டறிந்து விடுவார்கள். ஆனாலும் எடுத்த உடனே உங்களுக்கு இருப்பது மனநலப் பிரச்னைதான் என்று சொல்லக்கூடாது. அவர்களுக்கு பரிசோதனைகளில் உடல் ரீதியாக எந்த பிரச்னையும் இல்லை என்று உறுதி செய்த பின்னர்தான் இந்த பிரச்னையாக இருக்கலாம் என மன நல மருத்துவர்களிடம் அனுப்புவார்கள். சரியாக வழி நடத்துவார்கள்.

அப்போது அவர்கள் வலி என்று சொல்வது பொய்யா? எனக் கேட்டால் அது பொய் இல்லை. அவர்களுக்கு உண்மையிலே வலி இருக்கும். அதற்கு காரணம் உளவியல் ரீதியான பிரச்னைகள்தான். இவ்வாறு வலி ஏற்படுபவர்களுக்கு அன்பும் ஆதரவும் கிடைக்க கிடைக்க அந்த வலியினை ஆழ்மனது தொடர ஆரம்பிக்கிறது. ஆனால், உடல்நலத்தில் எந்த பாதிப்பும் அவர்களுக்கு இருக்காது.

உதாரணத்திற்கு மேலே சொன்ன பெண்மணி போல் ஒருவர், அதுவரை பிஸியாகவே இருந்தவர், பிள்ளைகளை திருமணம் செய்து கொடுத்த பின் அவரவர் அவரவர் குடும்பங்களில் பிஸியாக இருக்க, தனிமையில் இருக்கும் தாய்க்கோ அவர்களுக்கு தன் மீதான அன்பு குறைகிறதே என்ற ஏக்கம் ஏற்படும்.

அந்த ஏக்கம் தொடரும் போது அது உளவியல் பிரச்னையாக உருவெடுக்கிறது. அப்போது அவர்களுக்கு வலி உணர்வு ஏற்படும். அதை பிள்ளைகளிடம் தெரிவிப்பார்கள். இவர் சொல்ல சொல்ல பிள்ளைகளின் கவனம் இவர் மீது வரும். அந்த அன்பை, அனுதாப அலையை மறுபடி பெற நினைக்கும் அவரது ஆழ்மனம் இந்த வலியை மேலும் தொடரும்.

ஒரு கவன ஈர்ப்பு போல(Attention Seeking). அவர்களது உளவியல் பிரச்னையினால் தான் இது ஏற்படும். அவர்களை அறியாமலே நடப்பது இது. இதில் அவர்கள் மீது தவறேதுமில்லை.உடல் வலி, வயிற்று வலி மட்டுமல்ல வாந்தி வருவது போல் இருத்தல், அதிகம் வியர்த்துப் போதல், கண் தெரியாமல் போதல் போன்ற மாதிரி கூட இது ஏற்படலாம். கண்ணில் எந்த பிரச்னையும் இருக்காது. ஆனால் இவர்களுக்கு கண் தெரியவில்லை என்பார்கள்.

ஆனால் விழுவது கூட பாதுகாப்பான இடத்தில்தான் விழுவார்கள். இப்படி சில விஷயங்களை வைத்து இவர்களின் இந்த நிலைமையை கண்டறியலாம். சிலர் காது கேட்கவில்லை என்பார்கள்.

மன அழுத்தத்தின் காரணமாக தோல் பிரச்னைகள் கூட ஏற்படலாம்.சில குழந்தைகள் பரிட்சை சமயத்தில் வயிறு வலி, தலை வலி என்பார்கள். சிலர் பரிட்சை பயத்தினால் அப்படி சொல்வதுண்டு. சில பிள்ளைகளுக்கு உண்மையிலே இந்த Psychosomatic disorder பிரச்னையில் அப்படி வலி வருவதுண்டு. சில பிள்ளைகளுக்கு Psychosomatic epilepsy அதாவது காக்கா வலிப்பு கூட இந்த நோயினால் வருவதுண்டு.

Psychosomatic disorder இருப்பவர்கள் உங்களுக்கு உடல்ரீதியாக எந்த பிரச்னையும் இல்லை. இந்த பிரச்னையினால் தான் இப்படி வலி வருகிறது என்று சொன்னால் நம்பவே மாட்டார்கள். ‘நான் வலிக்கிறது என்று சொன்னால் நீங்கள் என்னை நம்பாமல் கேலி செய்கிறீர்கள். என் கஷ்டம் உங்களுக்கு புரியவில்லை’ என கோபப்படுவார்கள். வருத்தப்படுவார்கள். அவர்களுக்கு தகுந்த சிகிச்சையை மெல்ல மெல்ல கொடுத்து தான் அவர்களை சரி செய்ய முடியும்.

காரணங்கள் என்ன?
யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். குறிப்பாக சில பிரச்னைகளால் இது அதிகம் ஏற்படலாம்.மரபு ரீதியாக இவ்வாறு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பெற்றோருக்கு இருக்கும் பட்சத்தில் பிள்ளைகளுக்கு இந்த பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்களுக்கு இவ்வாறு ஏற்படலாம். சிலர் சிறு வயதிலே அதிகம் பயப்படுபவர்களாக, பதற்றம் கொள்பவராக இருக்கலாம். பெரிதாக ஆக அவர்களின் சிறு உடல்நலப்பிரச்னையை கூட அதிகளவில் கற்பனை செய்து பெரிய வலியாக அவர்கள் நினைக்கலாம். உளவியல் பிரச்னை அதிகமாகி இவ்வாறு ஏற்படலாம்.

தொடர்ந்து மன அழுத்தத்தை ஏற்படுத்தும் பிரச்னைகளால் இது போல் சிலருக்கு ஏற்படலாம். எந்நேரமும் பிஸியாக இருந்து விட்டு இனி என் வாழ்க்கையில் என்ன இருக்கிறது என விரக்தி நிலைமையில் தனிமையில் வாடும் சிலருக்கு இவ்வாறு ஏற்படலாம்.

பெற்றோரை இழந்த குழந்தைகள், வன்முறையால் பாதிக்கப்பட்டவருக்கும் இவ்வாறு ஏற்படலாம். சிறுவயதில் உடல் ரீதியான துன்பங்களை அனுபவித்தவர்கள் அதை வெளியே சொல்லாமல் மறைத்து வைக்கும்போது மன அழுத்தம் காரணமாக பின்னாளில் அது உளவியல் பிரச்னையாகி உடலில் வலியாக வெளிப்படும். குறிப்பிட்ட இடத்தில் வலியை உணர்வார்கள்.

சிகிச்சைகள்
மனதுக்கு எந்த அளவு சக்தி இருக்கிறது என்பதை இந்த நோய் நமக்கு உணர்த்தும். Psychosomatic disorder நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டாயம் மனநல சிகிச்சை அவசியம். பெரிதாக மருந்து மாத்திரைகள் அளிக்க வேண்டியதில்லை. ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட், நடத்தை தெரபி, கவுன்சிலிங், அவர்களது எண்ணங்களை மாற்றி அமைப்பது போன்ற உளவியல் ரீதியான சிகிச்சைகள் அவர்களுக்கு கொடுக்கப்படும்.

உளவியல் சிகிச்சை அளிக்காமல் இவர்களை மீட்டு கொண்டு வருவது சாத்தியமில்லை. சிகிச்சை அளிக்காது போனால் நிலைமை இன்னும் மோசமாகலாம். உளவியல் சிகிச்சை அளித்தால் இந்த நோயினால் வலி வலி என்று எப்போதும் சோர்வாக இருந்தவர்கள் கூட இயல்பான நிலைக்குத் திரும்பி யதார்த்த வாழ்வை வாழ ஆரம்பிப்பார்கள்!

தகவல்: மனநல மருத்துவர் சித்ரா அரவிந்த்.
‍இணையத்தில் படித்தது..பகிர்வு Ezhil Arul


அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. நல்ல பகிர்வு.

    எழில் அருள் அவர்களுக்கு பாராட்டுகள். இங்கே தந்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு....

    ReplyDelete
  3. சிறந்த உளநல வழிகாட்டல்

    ReplyDelete
  4. ஆஆஅ ட்றுத் இப்போ பெண்களுக்காகவும் போஸ்ட் போடுறாராம் என அறிஞ்சு ஓடி வந்தேன்ன்ன்:)..

    வாழ்க்கைக்கு தேவையான விழிப்புணர்வுப் போஸ்ட்!

    ReplyDelete
  5. நல்லதொரு பதிவு

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.