எந்த இடத்தில்
என்ன கேள்வி கேட்பது என்கிற விவஸ்தையே இல்லேயேப்பா?” (பலமுகம்)
சமூக வலைதளங்களில்
நடந்து வரும் இதுபோன்ற விவாதமே விநோதமாக இருக்கிறது! அரசியல்வாதிகள் போலில்லை, சினிமா
பிரபலங்கள்! அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தாக வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
ஆனால் அரசியல்வாதிகள் அப்படியல்ல. தினம் தினம் கூவ வேண்டியிருக்கிறது. கூவ மறந்தால்,
ஓட்டு போடும்போது அவர்களை மறந்துவிடும் பொதுஜனம்.
இதில் கலையுலகம்
எப்படி? சினிமாக்காரனாக இருக்க வேண்டும். ஆனால் அரசியல்வாதிக்குரிய லட்சணங்கள் வேண்டும்.
அரசியல்வாதிக்கு கிடைக்கிற எல்லா மரியாதைகளும் தனக்கும் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
அப்படியென்றால் அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டுமல்லவா? அதுதான் நடக்காது.
சந்திப்பதேயில்லை. அப்புறம் எப்படி கேள்வி கேட்பது?
விமான நிலையங்களுக்கு
வரும் அவர்களை மறித்து கேள்வி கேட்கிறார்கள். சாவு வீட்டுக்கு வந்தாலும் சரி. சடங்கு
வீட்டுக்கு வந்தாலும் சரி. இங்க விட்டுட்டா முடியாது என்கிற ஆவேசத்தோடு கேட்கிறார்கள்.
ரஜினி பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி பல்லாண்டுகளாகிறது.
அவரிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன. எங்கு கேட்பது? எப்படி கேட்பது? எங்காவது
பார்க்கிற இடத்தில் வழிமறித்துதான் கேட்கிறார்கள். அதுவும் மின்னல் நிமிடத்தில் முடிந்துவிடுகிறது.
ரஜினி நின்றால்தானே கேட்பதற்கு? ஆனாலும் பார்க்கிற இடங்களிலெல்லாம் கேட்பதும் தொடர்கிறது.
இனிமேலும் தொடரும்.
சரி… இளையராஜா
விஷயத்திற்கே வருவோமே! முன்பெல்லாம் ரஜினி போல ஒதுங்கியே இருந்தவர் இப்போதெல்லாம் அதிசயமாக
பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். அவர்களின் கேள்விகளுக்கு பதிலும் சொல்கிறார். ஆனால்
எப்படியென்று நினைக்கிறீர்கள்?
இளையராஜாவின்
ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு. ஒரு மாலை நாளிதழ் நிருபர் இப்படியொரு கேள்வி கேட்டார்.
“ஐயா. ஆயிரம் படத்துக்கு இசையமைச்சுட்டீங்க. எவ்வளவோ ஹிட் பாடலை கொடுத்திருக்கீங்க.
அந்த பாடல்களிலெல்லாம் நம்ம ஊர் இசைக் கலைஞர்களின் பங்களிப்புதான் இருந்தது. ஆனால்
இப்பவெல்லாம் ஹங்கேரியிலிருந்து இசைக்கலைஞர்களை அழைச்சுட்டு வந்து பயன்படுத்திறீங்களே,
அதுக்கு விசேஷ காரணம் எதும் உண்டா?
இந்த கேள்வியில்
பொதிந்து கிடக்கும் நியாயம் எல்லாருக்கும் புரியும். எவ்வளவோ ஹிட் பாடல்களில் உறுதுணையாக
இருந்தவர்கள் நமது ஊரிலேயே இருக்கும்போது ஏன் இவர்கள் பிழைப்பை கெடுத்துவிட்டு எங்கிருந்தோ
வருகிற சிலருக்கு கொட்டிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் அது. அதற்கு இளையராஜா
என்ன சொன்னார் தெரியுமா?
“நான் சொல்லிடுவேன்.
அதை புரிஞ்சுக்குற அளவுக்கு உனக்கு அறிவிருக்கா? சங்கீத ஞானம் இருக்கா?”
சுப்புடுவுக்கு
சங்கீதப்புலமை உண்டு. சங்கீத கச்சேரிகளை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்வார். ஆனால்
“நீ வந்து பாடு” என்றோ, “நீ வந்து ஆடு” என்றோ” என்று எந்த வித்வானும் சொன்னதில்லை.
எந்த நாட்டியத் தாரகையும் கோபித்துக் கொண்டதில்லை. நிருபர்கள் எல்லாரும் சுப்புடு இல்லைதான்.
ஆனால் மேலே கேட்ட கேள்வியில் தவறில்லை அல்லவா? அதுமட்டுமல்ல, அந்த நிருபர் இளையராஜாவின்
பதிலை எழுதி, அவர் மட்டுமே படிக்கப் போவதில்லை. அதை சங்கீதம் தெரிந்த பலரும் படிப்பார்கள்.
ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி படிப்பார். கற்றறிந்த பேராசிரியர் படிப்பார். இளையராஜாவின் வார்த்தைகளை
அப்படியே பிரதியெடுக்கும் நிருபருக்கு கூட அது புரியாமல் போகட்டும். படிப்பவர்களுக்கு
புரியும் அல்லவா? அதற்கப்புறம் நிருபர் பேசவில்லை.
இதுபோல கேள்வி
கேட்ட பலருக்கும் இளையராஜா சொன்ன பதில்… “நான் உன் எதிர்ல வந்து உட்கார்ந்துட்டா என்ன
வேணும்னாலும் கேட்ருவியா? நீயும் நானும் சமம் ஆகிடுவோமா?”
அவ்வளவு ஏன்?
“இளையராஜா இசையமைத்த சிம்பொனி இசை இன்னும் வெளியிடப்படவில்லை. அதை கேட்பதற்கு ஒவ்வொரு
தமிழனும் ஆர்வமாக இருக்கிறான். அதை சீக்கிரம் வெளியிடுங்கள்” என்று கேட்டுக் கொண்டது
ஒரு முன்னணி வார இதழ். உடனே அந்த இதழின் மீது வழக்கு போடப்பட்டது. இன்னும் கூட வழக்கு
நடந்து கொண்டிருக்கிறது.
இளையராஜாவிடம்
கேள்வி கேட்கும் ஒவ்வொரு நிருபருக்கும் ஒவ்வொரு விசித்திர அனுபவம் இருக்கிறது. ஒரு
பெண் நிருபர். “முன்பெல்லாம் நீங்க இசையமைச்சா அத்தனை பாடலும் ஹிட்டாகும். இப்போ அஞ்சு
பாடல்கள் ஒரு படத்தில் வந்தால், அதில் ஒன்ணுதான் ஹிட்டாவுது?” என்றார்.
இப்படியெல்லாம்
இளையராஜா போன்ற உலகம் போற்றும் இசையறிஞரிடம் கேட்கக் கூடாதுதான். ஆனால் 80களில் இருந்த
இளையராஜாவின் பாடல்களுக்கு ஆசைப்படும் ரசிகர்களின் பார்வையில்தான் அந்த கேள்வியை கேட்டார்
அவர். இதற்கு பதில் சொல்வது சங்கடமான விஷயம்தான். “நெக்ஸ்ட்?” என்று அடுத்த கொஸ்டீனுக்கு
போயிருக்கலாம். ஏனென்றால் கேள்வியில் தவறில்லையே?
இளையராஜா என்ன
செய்தார் தெரியுமா? “இதை கேட்கதான் இங்க வந்தியா? எந்திருச்சு போம்மா…!”
‘நந்தலாலா’ சமயத்தில்
ஒரு பெண் நிருபர் கேட்டார். “மிஷ்கின் படத்துக்கு இசையமைக்கிறீங்க? அவர் வித்தியாசமான
டைரக்டர். இந்த படத்தில் உங்க இசையில் வித்தியாசமா எதும் ட்ரை பண்ணியிருக்கீங்களா?”
“இதையேன் எங்கிட்ட
கேட்கிற. போய் மிஷ்கின்கிட்ட கேளு…” என்றார் ராஜா. “என்ன சார் இப்படி பதில் சொல்றாரு?”
என்று அந்த நிருபர் மிஷ்கினை தொடர்பு கொண்டார். “அவர் அப்படிதான். கோவிச்சுக்காதீங்க”
என்றார் மிஷ்கின்.
இப்படி எல்லா
பந்துகளையும் திருப்பி அடித்தே பழக்கப்பட்டவர் இளையராஜா. ஆனால் அவர்களெல்லாம் சற்றே
சுரணை கெட்ட சினிமா நிருபர்களாக இருந்ததால், மறு பேச்சு பேசாமல் எழுந்து வந்திருக்கிறார்கள்.
ஆனால் அரசியல் நிருபர்கள் அப்படியல்ல. பல சந்தர்ப்பங்களில் ஜெயலலிதாவையும், கலைஞரையும்,
விஜயகாந்தையும், இன்னும் பல அரசியல் தலைவர்களையும் விரட்டி விரட்டி கோபப்படுத்தியிருக்கிறார்கள்.
அது இன்றளவும் தொடர்கிறது.
ஆரம்பகாலத்தில்
இளையராஜாவுடன் பணியாற்றிய அத்தனை லெஜன்ட் டைரக்டர்களும் அவரை விட்டு ஓடியதற்கு என்ன
காரணம்? இசைஞானிக்கு அந்த தனியார் தொலைக்காட்சி நிருபரும் ஒன்றுதான். தன்னிடம் வரும்
இயக்குனர்களும் ஒன்றுதான்.
முன்பெல்லாம் நிருபர்கள்
மட்டும இருந்தார்கள். இப்போது நிருபர்கள் கூட்டத்தில் ரசிகர் மன்ற தலைவர்களும் ஊடுருவிட்டார்கள். தப்பி தவறி வருகிற
சிலரை ‘கேள்வி கேட்டதே குற்றம்’ என்று மட்டம் தட்டுகிற வேலை நடக்காமல் இருக்குமா என்ன?
ஆனால் முன்பு போல பெரிய கலைஞர்களிடமும் மூத்த அறிஞர்களிடமும் மற்றவர்கள் வைத்திருந்த
பயமும் பக்தியும் இப்போது இல்லை. எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், ஒரு மிஸ்டருடன்
பெயரை சொல்லி அழைக்கிற அளவுக்கு ஃபிரீக் ஆக வளர்கிறது இளைய சமூகம்.
மிஷ்கினை பேட்டியெடுக்கப்
போனால், நீ அந்த ஆங்கில நாவலை படிச்சுருக்கியா? இந்த நாவல் பற்றி தெரியுமா? என்றெல்லாம்
கேள்வி கேட்பார். “படமெடுக்கிற உங்களுக்குதான் அதெல்லாம் தேவை. என்னை போன்ற நிருபருக்கு,
உன் படம் தொடர்பான பத்து கேள்வி கேட்க தெரிந்தால் போதும்” என்று பதில் சொன்ன நிருபர்கள்
இங்கு உண்டு. இங்கு இளையராஜா என்ன? மிஷ்கின் என்ன? ஒரே பதில்தான்.
அது மட்டுமல்ல,
இளையராஜாவும்
ஒரு இசையமைப்பாளர்தானே? இவருக்கு முன்னால் ஜி.ராமநாதன், எம்.எஸ்.விஸ்வநாதன்கள் செய்த
சாதனைகள் போலதானே இவரது சாதனையும். பிறகென்ன இவருக்கு மட்டும் தேவதூதன் இமேஜ்? வேறொன்றுமில்லை.
பல்லாண்டு
காலமாக மிதிபட்டு கிடந்த சமூகத்திலிருந்து எல்லாவற்றையும் உடைத்துக் கொண்டு வீறு கொண்டு
எழுந்த இசை சூறாவளி என்பதால் மட்டுமேதான் அந்த இமேஜ். அந்த மரியாதையை இன்றளவும் அவருக்கு
கொடுக்க நினைக்கிறது சமூகம். ஆனால் அவர் பால் அன்பு கொண்ட ஒவ்வொருவரையும் அவரே
விரட்டி விரட்டி அடித்துக் கொண்டிருக்கிறார் தன் செய்கையால்.
“எங்க அப்பா
செத்தப்ப கூட நான் அழுததில்ல. இளையராஜா பாட்டை கேட்டுதான் அழுதேன்” என்கிறார் ஒருவர்.
“அவர்ட்ட போயி இப்படி கேட்டுட்டானே?” என்று பாய்கிறார் இன்னொருவர். “கடவுளின் அவதாரம்
அவர்” என்கிறார் மற்றொருவர். “உனக்கு அறிவிருக்கான்னு கேட்டதுக்கு பதில் செருப்பை எடுத்து
அடிச்சிருக்கணும்” என்கிறார் வேறொருவர். அடேய்… உங்களையெல்லாம் நினைத்தால் சிரிப்புதான்
வருகிறது.
‘ஆண்டை’ மனோபாவத்தோடு
நடந்து கொள்வது இளையராஜாவின் வழக்கம். அதையெல்லாம் சகித்துக் கொண்டு கைகட்டி நிற்பவர்கள்
நிற்கட்டும். அதற்காக எல்லாரும் நிற்க வேண்டும் என்று நினைப்பது சரியா?
அதுமட்டுமல்ல,
ஒவ்வொரு செய்தி நிறுவனமும், தங்கள் அளவுக்கு தகுதியான நிருபர்களைதான் வேலைக்கு வைத்திருக்கிறார்கள்.
“அறிவிருக்கறதாலதான் கேட்கிறேன்” என்று பதில் சொல்கிற அளவுக்கு தைரியமும் அறிவும் இருந்தால்
அதுவே நிருபர்களுக்கு யதேஷ்டம்!
இங்கே ‘நான்’
என்கிற எவரும் தப்பிக்கவே முடியாது.
பிடிக்காத கேள்விகள்
வந்தால் “சேரை தூக்கி அடிப்பேன்” என்று சொல்கிற விஜயகாந்துக்கும் வேறு வழியில்லை. அவரை
அன்றாடம் சந்திக்கும் நிருபர்களுக்கும் வேறு வழியில்லை. ஆனால் இசைஞானிக்கெல்லாம் நிறைய
வழிகள் இருக்கின்றன. அதில் ஒன்று வீட்டிலும் சரி. வெளியிலும் சரி. நிருபர்களை கண்டால்
அந்தப்பக்கம் முகத்தை கூட திருப்பக் கூடாது.
இன்னொன்று…?
ம்ஹூம்… வேணாம்!
-ஆர்.எஸ்.அந்தணன்
இந்த பதிவு நீயூதமிழ்சினிமா
http://www.newtamilcinema என்ற இணையதளத்தில் வெளிவந்ததது.
நன்றி
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : இளையராஜாவின்
பலமுகங்கள் என்று ஒரு பதிவை வெளியிட்டு அதில் நான் இணையத்தில் பார்த்த பதிவுகளை பதியப்
போவதாக சொல்லி இருந்தேன். அப்படி நான் படித்த சில தளங்கள் இப்போது அதன் ஒனர்களால் டீஅக்டிவேட்
பண்ணப்பட்டு தளம் இப்போது செயல்படாமல் இருக்கிறது. ஒரு வேளை அந்த தளப்திவர்கள் மிரட்டப்பட்டு
இருக்கலாம் என நினைக்கிறேன்
விடப்போவதில்லை எனும் தீர்மானத்தில் இருக்கின்றீர்கள் தொடருங்கள்...!
ReplyDeleteநம்ம ஊரில், ஜெயித்தவன் எல்லோருக்கும் தேவதூதன் என்ற நினைப்பு வந்துவிடுகிறது. இதில் ஒரு சில விதிவிலக்குகள் (எம் எஸ் விஸ்வனாதன் போன்று) இருக்கலாம். அது அரசியலாகட்டும், சினிமாவாகட்டும், ஒரே மனோபாவம்தான். இதற்கு அவர்கள் கூடவே இருக்கின்ற அல்லக்கைகளும் காரணம். அவர்கள் ஏத்தி ஏத்தி விடுவதால், ஜெயித்தவர்கள் தாங்கள் நேரே சொர்க்கத்திலிருந்து வந்தவர்கள், சாதாரண மக்கள் தீண்டத்தகாதவர்கள், தங்களைக் கேள்வி கேட்கும் அருகதை இல்லாதவர்கள், அப்படியே கேள்வி கேட்டாலும் தன்னைத் தேவதூதனாக்கும் கேள்வி மட்டுமே கேட்கவேண்டும் என்று நினைப்பவர்கள். இதற்கு யாரும் விதி விலக்கில்லை. (க, ஜெ, ஸ், அன்புமணி/ராமதாஸ், விஜயகாந்த், ரஜினி, கமல்.... சிம்பு எல்லோரும் ஒரே மாதிரிதான்). இப்போதெல்லாம் கேள்வி கேட்கும் நிருபர்களுக்கும், கிரெடிட் கார்டு விற்கும் பெண்களுக்கும் வித்யாசம் இல்லை. எல்லோரும் கழுவி கழுவி ஊற்றுகிறார்கள்.
ReplyDeleteவயசுக் கோளாறா இருக்குமோ? குறிப்பிட்ட வயதை கடந்தபிறகு கோபம், இயலாமையால் பொத்துக்கொண்டு வருகிறதோ? நல்லதொரு இசையமைப்பாளரையும் இந்த நோய் விட்டு வைக்கவில்லை என்று தோன்றுகிறது!
ReplyDelete