Thursday, March 1, 2012



மீண்டும் பள்ளிக்கு போகலாம்....., தொடர்பதிவு (மதுரைத்தமிழனின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறுது)

சகோதரி ராஜியின் வேண்டு கோளுக்கிணங்க இந்த பதிவு எழுதப்பட்டது.அவரின் மூலம் எனது கடந்தகால நினைவுகள் இங்கு மீட்கப்பட்டு பதிவாக வெளி வருகின்றது. அதாவது மதுரைத்தமிழனின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்ற சகோதரி ராஜி செய்த முயற்சியின் விளைவுதான்

படிக்காதவன்....ஆனால் பள்ளிக்கு சென்றவன்.

1 லிருந்து 5 வரை ( மதுரையில் உள்ள எஸ்.எஸ்.காலனியில் இருந்த கவர்மெண்ட் ஸ்கூல்)

முதல் வகுப்பு:
முத்தம் தந்து
முன்னேறு என்று சொல்லி
முகச் சிரிப்போடு அனுப்பி வைத்தாள் தாய்.
முகத்தை சுற்றி காதை தொட்டால்
முப்பது காசு தருவேன் என்ற சொன்னார் தந்தை.
முயற்சி செய்து தொட்டதும்
முகச்சிரிப்போடு காசை கொடுத்து சென்றார்.
முதுகில் தட்டி பலியடாக அழைத்து சென்று
மூலையில் உள்ள முதல்வகுப்பில் விட்டு சென்றார் பள்ளி தலைமை ஆசிரியர்
முரட்டு பெண்ணை மணமுடித்த அப்பாவி கணவன் போல
முதல் வகுப்பை தொடர்ந்தேன் (படித்து முடித்தேன்.)

இரண்டாம் வகுப்பு:
இடத்தை தேய்த்தது போதும் என்று
இடம் மாற்றி இரண்டாம் வகுப்பில் உட்காரவைத்தார்கள்.
இரண்டு கோடு போட்ட நோட் கொடுத்து
இனிய தமிழை எழுத கற்று கொடுத்தார்கள்.
இரண்டாம் வகுப்பு இனிமையாக சென்றது.

மூன்றாம் வகுப்பு:
மூன்றாம் வகுப்பில் வந்த ஆசிரியை கல்யாணி.
கருப்பாக இருந்தாலும்
களையாக இருக்கும் ஆசிரியை
அது மட்டும்தான் எனக்கு இன்று வரை
ஞாபகம் இருக்கிறது.

நான்காம் வகுப்பு: இந்த வகுப்பு எனக்கு மறக்க முடியாத வகுப்பு. அப்படி என்ன நடந்துச்சுன்னு நினைக்கிறிங்களா.???
எனக்கு பிடித்த இரு சிறுவயது (மீனாட்சி,சரஸ்வதி) தேவதைகள் என் கூட படித்தனர்.ஆனால் அவர்களையே பார்த்தவாறு நான் படித்தது போல நடித்தேன். இன்னும் அவர்கள் அழகு முகம் எனக்கு ஞாபகம் உள்ளது ஆனால் என்ன படித்தேன் யார் டீச்சர் என்பது எல்லாம் மறந்து போய்விட்டது.

ஐந்தாம் வகுப்பு : தேவதைகளுடனும் நண்பர்களுடனும் ஐந்தாம் வகுப்பை முடித்தேன்.ஐந்தாம் வகுப்பில் நான் படித்தது ஐந்தும் ஐந்தும் பத்து வாயை கொஞ்சம் பொத்து என்று மட்டும்தான் படித்தேன்.


6 லிருந்து 10 வரை ( மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி)

இந்த பள்ளியில்தான் என் அனைத்து சகோதர்களும் படித்தனர். அதனால் இதே பள்ளியில் சேர்த்துவிட என் குடும்பதினர் முடிவு செய்தனர். ஆனால் அந்த பள்ளியில் சேர நுழைவுத்தேர்வு ஒன்றை வைத்தனர். என்னடா இந்த மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை என்று துணிந்து சென்றேன். நான் படித்த படிப்பை சோதித்து பார்க்க இந்த பள்ளி ஆசிரியர்களுக்கு என்ன திறமை இருக்கிறது என்று பார்த்துவிடுவோம் என்று கொடுத்த கேள்விதாளை வாங்கி பார்த்து கொண்டிருந்தேன். எனக்கு தெரிந்த  சில கேள்விகளுக்கு பதில் அளித்தேன் அது சரியா இல்லையா என்பது கூட எனக்கு தெரியாது. அந்த சமயத்தில் அங்கு வந்த என் சகோதரனை பார்த்த ஆசிரியர் என்னப்பா இந்த பக்கம் என்று கேட்க அவனும் என் இளைய பிரதரை பள்ளியில் சேர்க்க வந்து இருப்பதாக சொல்ல அவரும் யார் உன் சகோதரன் என்று கேட்க அவனும் என்னை நோக்கி கை காட்ட ,அவர் என்னருகில் வந்து கேள்விதாளை என்னிடம் கொடு என்று சொன்னார். நானும் கேள்வி குறியோடு நமக்கு இந்த பள்ளியில் இடம் கிடைக்காது போலிருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் நடந்தது இவன் உன் சகோதரன் என்று சொல்கிறாய் எனவே அவனை நான் என் வகுப்பில் சேர்த்து கொள்கிறேன் என்று சொன்னார்,இப்படித்தான் அந்த பள்ளியில் எனக்கு சீட்டு கிடைத்தது.

பள்ளிக்கு செல்லும் போது சுவைத்ததும் படித்ததும்

பள்ளி வாசலில் விற்கும் ஜிகிர்தண்டா ,மிக்ஸர் மாங்காய். குச்சி ஐஸ், இழந்தபழம், நாவாப் பழம் ஆகியவை நான் சுவைத்ததும் இன்னும் சுவைக்க ஆசைப்படுவதும்...


நான் ஆறாம் வகுப்பில் இருந்ததைவிட ஆசிரியருக்காக ஒரு நாள் விட்டு ஒரு நாள் கனரா பேங்குக்கு போய்வந்ததுதான் அதிகம்.அவர் வாங்கும் சம்பளத்தை பேங்கில் போட்டு அதை எடுத்து வருவதுதான் எனது வேலை அதற்கு நான் அரைநாள் எடுத்து கொள்வேன் அப்புறம் எங்க படிக்கிறது மக்கா. அடுத்து விளையாடுவது  கபடி, ஒளிந்து பிடித்து, ஏறிபந்து. அந்த காலத்துல எறிபந்து விளையாடும் போது , பாடிய பாட்டு

பந்து.. பந்து..
என்ன பந்து
எறி பந்து
என்னா ஏறி
தூக்கி எறி என்று சொல்லியவாறு தூக்கி எறிவோம் ----

6 லிருந்து 10 வரை ஒரே பள்ளிதான் .வகுப்பும் ரூமும் மட்டும்தான் ஒவ்வொரு வருடமும் மாறியேதே தவிர மற்றவையெல்லாம் மாறவில்லை அதே நண்பர்கள் அதே விளையாட்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் ஒன்றேதான். அதனால் இந்த ஐந்து வருடத்தில் என் நினைவில் நின்ற சில நிகழ்ச்சிகளை மட்டும் இங்கே சொல்லுகிறேன்.

என் பள்ளி நாட்களில் மறக்க முடியாத நாட்கள் இன்ஸ்பெக்ஷன் நாட்கள் .இன்ஸ்பெக்டர் வருகிறார் என்கிற சேதி எங்களுக்கு தீபாவளியாகவும், ஆசிரியர்களுக்கு  காலரா பரவுவது போலவும் தோற்றமளிக்கும்..நான்  சிகரெட் பெட்டியில் கிளிக் கூண்டு செய்து அதில் வண்ணப் பேப்பரை ஒட்டி அலங்கரிப்பேன், ஜிகினாத் தாளில் கொடி,கலர் பேப்பரில் செயின் செய்வது, ஆமணக்கு இலையுடன் விறகு கரியை சேர்த்து இடித்து வகுப்பு போர்டில் பூசி புதிய போர்டுகாளாக மாற்றுவேன் இந்த மாதிரி வேலைகளை செய்வது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். பள்ளி ஆசிரியர்கள் மிகவும் தேர்ந்த கிரிமினல்கள். அவர்கள் நன்றாகப் படிக்கிற மாணவர்களை சீட் மாற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக உட்கார வைப்பார்கள். இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்கிற போது ரெண்டம் ஆக கேட்பது போல் சேகர் நீ சொல்லு ,ரமணி நீ சொல்லு என்று இடமும் வலமுமாக கையை நீட்டிக் கேட்பார்கள். இன்ஸ்பெக்டர்.... என்னையையோ, முருகைய்யாவையோ கேட்டால் கதை கந்தல் என்பது வேறு விஷயம்.

நான் ஏ,பி,சி,டி கற்றது கணக்கு வகுப்பில்தான் என்ன உங்களுக்கு கண்ணை சுத்துதா? எனக்கு அப்படிதாங்க கண்ணை சுத்திச்சு..கொஞ்சநாளா எது கணக்கு வகுப்பு எது ஆங்கில வகுப்புன்னு தெரியாமா இருந்துச்சுங்க காரணம் என் கணக்கு வாத்தியார் இதை x னு வச்சிக்குங்க. இதை Y னு வச்சிக்குங்க என்று  எண்களைப் மாற்றி கொண்டிருந்தது கடைசியில் இதுதான் விடை என்று சொல்லி  புரியலன்னா, கேளுங்க என்றார். என்னை பார்த்து நீ முழிக்கிற முழியை பார்த்தா உனக்கு புரிஞ்ச மாதிரி தெரியலையேன்னு கேட்டார்  நான் எனக்கு நன்றாகவே  புரியுது என்று தலையை ஆட்டினேன். ஆனால் என் மண்டையில் உதித்த கேள்வி சார் கணக்கு தானே சொல்லிக் குடுக்குறீங்க, அதுல எதுக்கு ஏ,பி,சி, எக்ஸ்,ஒய் எல்லாம் வருது என்று கேட்க நினைத்து கேட்காமல் வாயை பொத்தி இருந்தேன்,

எனது ஆறாம் வகுப்பில் இருந்து 10ஆம் வகுப்பு வரை என் கூட படித்தவன் ரவிசங்கர். பிராமிண பையன். பிராமின் என்பதற்கு எந்தவித அடையாளம் அவனிடம் கிடையாது. அவனை போல குரங்கு சேட்டைகள் பண்ணுவதில் அவனுக்கு இணையாரும் கிடையாது.

ஏழாம் வகுப்பில் எங்களுக்கு வந்த தமிழ் ஆசிரியர் பெயர் கு.ரங்கநாதன். அவர் திருநெல்வேலிகாரர் ஒருநாள் அவர் டவுன் ஹால் ரோடில் போகும் போது இவன் அவரை ஏய் குரங்கு நாதா ....ஏய் குரங்கு நாதா என்று கேலி செய்துள்ளான்.பள்ளிக்கு வெளியே நடந்தது என்பதால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை அதனால் அடுத்த நாள் பள்ளி வந்ததும் அவனை மாட்டை அடிப்பது போல அடித்துவிட்டார் ஆனால்  என் நண்பனோ ஒரு குரங்கு பையல் அன்று மாலையே அவர் ரோட்டில் போகும் போது மீண்டும் ஏய் குரங்கு நாதா என்று கூப்பிட்டு கிண்டல் பண்ணினான். அதற்கு மேல் அவரால் அவனை கட்டுப்படுத்த முடியவில்லை அவர்தான் அமைதியாக சென்றுவந்தார். அவன் நண்பனான நான் பண்ணிய  உருப்படியான காரியம்  எனது வீட்டில் எனக்கு செலவுக்கு கொடுத்த காசை சிறிது சேமித்து மேலும் வகுப்பில் உள்ள மற்றவர்களிடம் இருந்து காசு வசூலித்து ஒரு சட்டை டவுசர் வாங்கி மிகவும் கஷ்டப்பட்ட எங்கள் வகுப்பில் படித்த மாணவனுக்கு வாங்கி கொடுத்ததுதான். அந்த நேரத்தில் அது எனக்கு ஒரு சாதனையாக தெரிந்தது.

எட்டாம் வகுப்பில் என் கூட படித்தவன் ராமன் என்றவன் அவனை 'குரங்கன்' என்றுதான் அழைப்போம் அவன் செய்யதா சேட்டைகள் கிடையாது.இவன் எப்போதும் தீக்குச்சிகளை வைத்து இருப்பான். சில சமயங்களில் ரயில்வே பிரிட்ஜில் வரும் போது தீக்குச்சியை தரையில் போட்டு பெண்கள் வரும் போது காலால் தீக்குச்சியை ஒரு தேய்த்து ஒரு உதை உதைப்பான் உடனே அந்த குச்சி தீப்பிடித்து அந்த பெண்களுக்கு அருகில் செல்லும் அதை பார்த்து அவர்கள் பயந்து ஒடுவார்கள்.

அரசரடி மகபூபாளையம் போன்ற இடத்தில் இருந்து வருபவர்கள் நான் இருந்த ரயில்வேகாலனி வழியாகத்தான் வருவார்கள். நான் ரயில்வேகாலனியில் இருந்ததால் இவர்கள் வரும் நேரத்தில் நானும் இவர்கள் கூட சேர்ந்துதான் பள்ளி செல்வோம் போகிற வழியில் ரயில்வே பள்ளிக்கு செல்லும் பெண்களையும் கவர்மெண்ட் கேர்ல்ஸ் ஸ்கூலுக்கு செல்லும் பெண்களையும் கேலி செய்வதுதான் எங்கள் வழக்கம்.


என் கூட படித்த மற்றொரு நண்பன் பெயர் முருகைய்யா, அவனின் அப்பா மதுரை ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள ஸ்டேட் பேங்கில் வேலை செய்துவந்தார். அவர் ஒரு முருகபக்தர். ஆனால் அவர் பையனோ மிகப் பெரிய வாலு.படிப்பில் என்னைவிட மிக மோசம். இப்போது அவன் மதுரை அரசரடியில் பகுதியில் மிகப் பெரிய ரவுடி என்று என் சகோதரன் 6 வருடங்களுக்கு முன் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன்.மதுரை மக்காஸ் அப்படி ஒரு ரவுடி இன்னும் இருக்கானா இல்லை என் கவுண்டர்ல போட்டு தள்ளிட்டாங்களா என்று விசாரித்து சொல்லவும்)

ஒன்பதாம் வகுப்பில் என் கூட மூன்று ராமன்கள் படித்தார்கள் ஒருத்தன் "குரங்கு ராமன்". மற்றொருவன் மிகவும் குண்டாக இருப்பதால் :குண்டு ராமன்" இன்னொரு ராமன் மிகவும் நெட்டையாக இருப்பதால் நெட்டை ராமன்( ஓட்டக ராமன்) என்று நண்பர்களாக அழைக்கபடுவார்கள். இந்த வகுப்பில் நான் செய்த மற்றொரு நல்ல செயல் என் கூட படித்தவனுக்கு ஒரு மாதம் என் வீட்டில் இருந்து நான் எடுத்து செல்லும் மதிய உணவை நான் சாப்பிடாமல்  நந்தகுமார் என்பவனுக்கு கொடுத்ததுதான். காரணம் இவன் வசித்தது மதுரையில் உள்ள தீடீர் நகர் பகுதியில் வசித்ததுதான் அப்போது தமிழ்நாட்டில் புயல் மழையாக இருந்ததால் இவன் வீட்டில் வெள்ளம் புகுந்தது அப்போது கஷ்டப்பட்ட அவனுக்கு என்னால் முடிந்த உதவியை செய்தேன்.

அப்போது நடந்த இன்னொரு நிகழ்ச்சி ஒரு நாள் பள்ளியில் காலையில் நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தில் க்யூவில் நான் மட்டும்தான் இருந்தேன் காரணம் எனக்கு அப்போது சினிமா பார்ப்பது அவ்வளவாக பிடிக்காது அதனால் நான் பள்ளிக்கு கட்டு அடிக்கவில்லை. அன்று மற்ற அனைவர்களும் கட்டு அடித்து  பார்க்க சென்ற படம் ரஜினி நடித்த காளி படம்தான்...

பத்தாம் வகுப்பில் நான் அதிக அளவு படம் பார்க்க ஆரம்பித்தேன் அப்போது நான் பார்த்த படம் எல்லாம் ரீகல் தியோட்டரில் வந்த ஆங்கிலப்படம்தான். ஆங்கிலத்தில் அப்போது எனக்கு தெரிந்ததெல்லாம் A,B,C.D மட்டும்தான் மக்காஸ். ஆனாலும் விரும்பி ஆங்கில படம் பார்ப்பேன்.

பத்தாம் வகுப்பில் நடந்த மற்றோரு மறக்க முடியாத ஆனால் இன்று நினைத்தாலும் சிரிக்கும் சம்பவம் இதுதான். எங்கள் வகுப்பில் மொத்தம் 47 பேர்கள் படித்தோம். அதில் பாஸானவர்கள் மொத்தம் 5 பேருமட்டும்தான். மார்க் சீட்டை வாங்கும் போது நாங்கள் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை காரணம் என்னைச் சேர்த்து 42 பேர்களும் பெயில் அதில்  யாரு அதிக பாடத்தில் பெயில் என்று ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் பண்ணி சந்தோஷம் பட்டுக்கொண்டோம் ஆனால் பாஸ் பண்ணிய 5 பேர்களும் ஏதோ தீண்டதகாதவர்கள் மாதிரி அன்று நடத்தபட்டனர்.


தினசரி பள்ளிக்கு சென்று ஆட்டம் போட்ட வந்த நான் பெயிலாகி விட்டில் இருந்தது என்ன செய்ய வேண்டுமென்றே புரியவில்லை.அந்த நாட்கள் தான் என் வாழ்வில் திருப்புமுனையை கொடுத்தநாட்களாகும்.அதன் பின் படித்து பெயிலான பாடத்தில் பாஸ் செய்தேன். மீண்டும் அதே ஸ்கூலில் சேர முயற்சித்தேன் ஆனால் பெயிலானவர்களை மீண்டும் சேர்க்கமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள் ஆனால் என் கூட படித்த பெயிலான பிராமின் பையனை சேர்த்து கொண்டார்கள். அப்போது என் தந்தை மட்டும் என்னுடன் பள்ளிக்கு வந்து இருந்தால் எனக்கு அங்கு சீட் கிடைத்திருக்கும் அவரது வேலையின் காரணமாக அவரால் வர முடியவில்லை  அதுமட்டுமல்ல அங்குள்ள தலைமையாசிரியர் என் அப்பாவின் கிளப் நண்பர் அதனால்தான் என்னவோ அவர் மறுத்துவிட்டார். கடைசியில் நான் படித்த படிப்புக்கு கரிமேட்டில் உள்ள கார்ப்ரேஷன் பள்ளியில்தான் இடம் கிடைத்தது.

நல்ல நண்பர்களையும் நல்ல ஆசிரியர்களையும் அங்குதான் நான் பார்த்தேன். அந்த நண்பர்களோடுதான் கல்லூரி படிப்பையும் ஒழுங்காக முடித்தேன்

ப்ளஸ் 1 & 2 வில் நடந்த நிகழ்ச்சிகள்

ஒரு நாள் வகுப்பின் இறுதி ப்ரியடில் பாடத்தை நடத்திய ஆசிரியர் பாடத்தில் உள்ள 10 பாயிண்ட்களை யார் சீக்கிரம் மனப்பாடம் செய்து சொல்லுகிறார்களோ அவர்கள் வீட்டிற்கு போகலாம் என்று சொன்னார் நான் உடனே எழுந்திருந்து சார் என்னால் வகுப்பில் இருந்து மனப்பாடம் எல்லாம் செய்யமுடியாது என்று சொன்னேன். அதற்கு அவர் நீ சொல்லி முடித்தால்தான் நீ வீட்டிற்கு போக முடியும் என்று சொன்னார். நான் உடனே உங்களால் முடிந்தை செய்யுங்கள் ஆனால் நான் இப்போ மனப்பாடம் செய்ய மாட்டேன் என்று அழுத்தம் திருந்தமாக சொல்லிவிட்டு உட்கார்ந்து நோட்டில் படம் போட ஆரம்பிதேன்.எனது நண்பர்கள் எல்லாம் சொல்லி முடித்துவிட்டு எனக்காக காத்து இருந்தார்கள் வாத்தியாரும் வரட்டு கெளரவத்தில் இருந்தார் நானோ வீம்பில் இருந்தேன். கடைசியில் வென்றது நான் தான். இப்படி ஒருத்தன் அழுத்தமாக இருப்பதை நான் என் வாழ்கையில் பார்த்ததே இல்லை என்று சொல்லி சென்றுவிட்டார். அதன் பிறகு அவர் என் வழிக்கு அவர் வருவதே இல்லை.

+ 2 படிக்கும் போது இலங்கை தமிழர்களுக்காக எல்லா கல்லூரிகளும் பள்ளிகளும் ஸ்டிரைக் பண்ணி விடுமுறை விட்டு இருந்தார்கள் ஆனால் எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மட்டும் பள்ளியை திறந்து வைத்து எல்லோரும் கண்டிப்பாக வர வேண்டும் என்று உத்தரவு போட்டு இருந்தார். எங்களுக்கோ மிகவும் கடுப்பு இருக்கும் நாட்களில் ஓழுங்காக பாடம் நடத்துவதில்லை ஆனால் ஸ்டிரைக் நாளில் பெரிய பாடம் நடத்தி கிழிச்சுட போறங்கா அப்படின்னு நாங்களும் ஸ்டிரைக்கில் கலந்து பள்ளி செல்லாமல் இருந்தோம். ஒருவாரம் கழித்து பள்ளி திறந்ததும் தலைமை ஆசிரியர் அப்பாவை கூட்டிகிட்டுதான் பள்ளி வர வேண்டும் என்று சொல்லிவிட்டார்.

எனது ஒரு நண்பன் தன் அப்பாவை அழைத்து வந்தான். தலைமை ஆசிரியர் அவரிடம் உங்கள் பையன் கடந்த ஒருவாரகாலமாக ஏன் பள்ளி வரவில்லை என்று கேட்டீர்களா என்றார் அதற்கு அவர் ஊரெல்லாம் ஒரே ஸ்டிரைக் என் பையன் மீறி வந்தால் யாராவது அவனை அடித்து விடுவார்கள் அதனால்தான் அவன் வரவில்லை என்றார் அதை கேட்ட தலைமை ஆசிரியர் கடகட வென சிரித்தார் அவர் ஏன் சிரித்தார் என்று நினைக்கிறிர்களா? எல்லாம் நல்ல காரணம்தான். என் நண்பன் ஜிம்முக்கு தினசரி போய் உடலை மிக ஸ்டிராங்கா வைத்து இருப்பான் 10 ஆளையும் தூக்கி எறிந்துவிடும் பலம் அவனிடம் உண்டு அதனால்தான் அவர் அப்படி சிரித்தார். ( இப்போ அந்த நண்பன் மனைவிக்கு பயந்தவனாக வலம் வந்து கொண்டிருக்கிறான்.அவனது மனைவியோ மதுரை அண்ணா நகர் பகுதியில் கவுன்சிலராக இருந்து அவரது பேச்சை கேட்கும் படி செய்து இருக்கிறார்) இதிலிருந்து தெரிவது என்னவென்றால் என்னதான் நாம் ஜிம்முக்கு போய் உடலை ஸ்டிராங்காக வைத்து இருந்தாலும் கடைசியில் பொண்டாடிக்கு பயந்து போக வேண்டியது இருக்கிறது.மதுரைத்தமிழா நீ எப்படி என்று கேட்பது என் காதில் விழுகிறது அதற்கெல்லாம் பதில் சொல்லி என்னால் வம்பில் மாட்டிக் கொள்ள முடியாதுங்கோ


எங்கள் தலைமை(ராஜைய்யா) ஆசிரியரிடன் ஒரு கெட்ட குணம் உண்டு எப்போது மாணவர்களின் பெற்றோர்கள் அவரை பார்க்க வரும் போதுதெல்லாம் அவர் ரொம்ப பிஸி போல காண்பித்து வந்தவரை வாங்க உட்காருங்க என்று சொல்லாமல் ரொம்ப நேரம் நிட்க வைப்பார். அதனால் நான் என் சகோதரனை அழைத்து சென்றேன் ஆனால் அவரோ அப்பாவை கூட்டி வந்தால் மட்டும் என்னை அனுமதிப்பதாக சொன்னார். எனவே நானும் மற்றவர்களைப்போல அப்பாவை அழைத்து சென்றேன் அவரைப்பற்றி என் அப்பாவிடம் பற்றி சொல்லி இருந்தால் என் அப்பா அவர் ருமின் கதவைதட்டினார் அப்போது வழக்கம் போல தலைமை ஆசிரியர் பிஸியாக இருப்பது போல நடிக்க ஆரம்பித்தார் என் அப்பாவோ கொஞ்சம் சத்தமாக எக்ஸ்க்யூஸ்மி என்று சொல்லியவாறு என்ன சார் கூப்பிட்டு அனுப்பினேர்காளாமே என்ன விஷயம் என்று கேட்டாவாறு அவர் முன்னால் சேரை இழுத்து போட்டு உட்கார்ந்தார் இதை எங்கள் தலைமை ஆசிரியர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. உடனே தலைமை ஆசிரியர் இவன் எல்லோரையும் ஸ்டிரைக் பண்ன தூண்டி இருக்கிறான் என்று சொன்னார் அதற்கு என் தந்தை இவன் அதை செய்து இருக்கமாட்டான் யார் செய்ய தூண்டினார்களோ அவர்களை தண்டியுங்கள் என்றார் உடனே தலைமை ஆசிரியர் அப்ப இவன் பண்ணவில்லை என்றால் யார் தூண்டினார்கள் என்பதை சொல்ல சொல்லுங்கள் என்றார். அதற்கு என் தந்தை என் மகன் யார் தூண்டியது என்பதை சொல்லவும் & காட்டி கொடுக்கவும் மாட்டான். அது அவன் வேலை அல்ல அது உங்கள் வேலை என்றார். இதை தவிர என் மகன் மேல் வேறு ஏதாவது குற்றம் உள்ளதா சொல்லுங்கள் அவனை அடித்து உதைக்கிறேன் என்றார். அதைவிட்டு விட்டு அவனுக்கு டி.ஸி கொடுத்துவிடுவேன் என்று எல்லாம் மிரட்டாதீர்கள். நீங்களும் கவர்மெண்ட் சர்வென்ட் நானும் கவர்மெண்ட் சர்வென்ட்  உங்களை எப்படி கையாள்வது என்று எனக்குதெரியும் என்று சொல்லிவிட்டு எனக்கு வேலைக்கு செல்லும் நேரமாகிவிட்டது என்று சொல்லி மேலும் ஏதாவது இருந்தால் பையனிடம் சொல்லி அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டு அவர் பதிலை எதிர்பார்க்காமல் சென்றுவிட்டார். அதன்பிறகு தலைமை ஆசிரியர் என்  வாழ்க்கையில் இப்படி மகன் மேல் நம்பிக்கை கொண்ட அப்பாவை பார்த்ததே இல்லை என்று சொல்லிவிட்டு என்னை க்ளாஸுக்கு போக அனுமதி அளித்தார்.

இதே போல இன்னோரு மாணவனோ அவன் தந்தையை கூப்பிட்டு வந்து இருந்தான். கடைசியில் தலைமை ஆசிரியரின் செயல் அவருக்கு மிகவும் எரிச்சல் ஊட்டியதால் பொறுமை இழந்த அவரும் கண்னாபின்னாவென்று கத்த ஆரம்பித்தார். கடைசியில்தான் தெரிந்தது அவர் அவனின் உண்மையான அப்பாவல்ல என்றும் வந்தவர் அவன் காசு கொடுத்து கூட்டிவந்த ஆள் என்று..

ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் .....அப்போது எங்களது கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை ரேவதி.அவரது படங்களை புத்தகத்தில் வைத்து இருப்போம்.

அந்த காலத்தில் சைக்கிளுக்கு டிரைவர் வைத்து இருந்த ஒரே ஆள் நான் தான். அதை பற்றி விரிவான பதிவு பின்னால் எழுதுகிறேன்.


எல்லாம் சொல்லிய நான் நாங்கள் எழுதிய ப்ளஸ் 2 தேர்வை பற்றி சொல்லமல் முடித்தால் நன்றாக இருக்காது என்பதால் அதை இங்கு சொல்லி முடிக்கிறேன்.

எங்கள் வகுப்பில் படித்தவர்கள் அனைவருக்கும் ஆங்கில கிராமர் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்போம். ஆனால் இருவன் மட்டும் கான்வெண்ட் ஸ்கூலில் படித்தவன் என்பதால் கொஞ்சம் அவனுக்கு தெரியும். அதனால் ஆங்கிலம் 2வது பேப்பருக்கு அவனைத்தான் நம்பி இருந்தோம். எங்களது இறுதி தேர்வு மதுரைக்கல்லூரியில் வைத்து இருந்தார்கள் எங்கள் கெட்ட நேரம் என்று நினைக்கிறேன் எங்களை மாடியிலும் ஆங்கிலம் தெரிந்த என் நண்பனை கிழே உள்ள ரூமிலும் போட்டுவிட்டார்கள். கடைசியில் நாங்கள் ப்யூனுக்கு பணம் கொடுத்து அவன் எழுதி தரும் பதிலை என்னிடம் வந்து கொடுக்குமாறு ஏற்பாடு செய்து இருந்தோம். பரிட்சை ஆரம்பித்து அரை மணீ நேரம் ஆகி இருக்கும் அதில் இருந்து எப்போது எல்லாம் அந்த ப்யூன் என்னை கடந்து செல்கிறானோ அப்போதெல்லாம் வகுப்பில் உள்ள அனைவரும் என்னை திரும்பி பார்த்து பதில் வந்து விட்டதா என்று தலையை அசைத்து கேட்பதும் அதற்கு நான் இல்லை என்று தலையாட்டுவதுமாக காலம் முழுவதும் கரைந்து பரிட்சையும் முடிந்துவிட்டது. நாங்களோ செம கடுப்பில் அந்த ப்யூனை அழைத்து கேட்டபோது அவன் தவறுதலாக வேறு ருமில் உள்ள எவனுக்கோ கொடுத்துவிட்டது தெரிந்தது. அவனை நன்கு அடித்துவிட்டு கொடுத்த காசை புடுங்கி கொண்டோம்.அதிர்ஷ்டவஷமாக  எல்லாத் தேர்வுகளிலும் நாங்கள் வெற்றி பெற்றோம். இன்னொரு தேர்வில் தேர்வை கண்காணிக்கும் ஆசிரியர் 100 ரூபாய் கொடுத்தால் எல்லோரும் பார்த்து எழுதலாம் என்று சொன்னார் நாங்களோ தேர்வு முடிந்ததும்தான் தருவோம் என்று சொல்லி தேர்வு முடிந்ததும் கேள்விகல் மிக எளிதாகவும் எங்களுக்கு தெரிந்தவைகளாகவும் இருந்ததால் நாங்கல் அதிகம் காப்பி அடிக்கவில்லை அதனால் உனக்கு 50 ரூபாய் போதும் என்று சொல்லி கொடுத்தோம்.
.
எல்லா எக்ஸாம்லயும் காப்பி அடிச்சே பாஸ் பண்ணுனாங்களே உங்க நண்பர்கள் அவர்கள் இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறார்கள் என்றுதானே கேட்கிறீர்கள் ?
அவர்கள் எல்லோரும் சேர்ந்து ஜெராக்ஸ் கடை வச்சிருக்கிறார்கள்.ஹீ.ஹீ..ஹீ.ஹீ

இப்படியாகாத்தான் எனது பள்ளி படிப்பு முடிந்தது. இப்போது எனக்கு இன்னொருமுறை சென்று ஒழுங்காக படிக்க வேண்டுமென்று ஆசை உள்ளது....ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்



நான் ப்ளஸ் 2 படிக்கும் போது ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் உள்ள மணிஸ் பேக்கரிக்கு எதிரில்தான் என் நண்பன் ,சரவணா எலக்க்ரிக்கல்ஸ் என்ற கடை வைத்து இருந்தான். அங்கு உட்கார்ந்துதான் போறவர பெண்களை பார்த்து ஜொள்ளு வடிப்பது அதனால் அந்த பக்கம் யாரவது இளம் பெண் போய் இருந்து இப்போது வலைத்தளம் பக்கம் வந்தால் கொஞ்சம் ஹாய் சொல்லிட்டு போங்கோ மக்காஸ்??????

என்ன இந்த மதுரைக்காரன் இவ்வளவு மோசமானவானா என்று நினைத்துவிட்டீர்களா....நல்ல மீண்டும் ஒரு முறை படிச்சுபாருங்க நான் எந்த எந்த மோசமான செயலையும் செய்யவில்லை. நான் மோசமான கும்பலில் இருந்த ஒரே நல்ல பையன்தாங்க....



இந்த இனிய நினைவு அலைகளைத் தொடர்பதிவாக்கும்படி சகோதரி ராஜி அன்புடன் கேட்டு கொண்டதால் நான் இதை தொடர் பதிவாக நேரம் இருந்தால் மட்டும் எழுத இவர்களை அன்புடன் அழைக்கிறேன்.



22 comments:

  1. பள்ளி அனுபவங்களை நல்லா ரசனையுடன் சொல்ல் இருக்கீங்க. நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. மதுரைக்காரங்கல்லாம் ரொம்ப நல்லவிங்கன்னு தெரியும். (நானில்லையா இப்ப?) பளளி அனுபவங்களை இவ்வளவு விரிவா எழுதி அசத்திட்டிங்களே... அதுசரி... ரேவதி? அந்தக் குட்டைக் கத்திரிக்காயை எனக்கு பிடிக்கவே பிடிக்காது. பள்ளி அனுபவங்கள் அருமை.

    ReplyDelete
  3. 4 ஆம் வகுப்பிலேயே லவ்வா? வெளங்கிடும்

    ReplyDelete
  4. ரொம்ப சேட்டக்கார பையனோ!!அருமைப்பதிவு வாழ்த்துகள்.

    தொடர்பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  5. ரொம்ப சேட்டக்கார பையனோ!!அருமைப்பதிவு வாழ்த்துகள்.

    தொடர்பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  6. ரொம்ப சேட்டக்கார பையனோ!!அருமைப்பதிவு வாழ்த்துகள்.

    தொடர்பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  7. என்னதான் நாம் ஜிம்முக்கு போய் உடலை ஸ்டிராங்காக வைத்து இருந்தாலும் கடைசியில் பொண்டாடிக்கு பயந்து போக வேண்டியது இருக்கிறது. உண்மையோ...?

    ReplyDelete
  8. நாலாவது வகுப்புலயே சைட்டா? உங்க வீட்டு அம்மினி போன் நம்பர் 0......... தானே. இருங்க இந்த பதிவை அவங்களை படிக்க சொல்றேன்.

    ReplyDelete
  9. ரெண்டாவது படத்துல உங்க கூட இருக்குறது யாரு?

    ReplyDelete
  10. அதனால் அந்த பக்கம் யாரவது இளம் பெண் போய் இருந்து இப்போது வலைத்தளம் பக்கம் வந்தால் கொஞ்சம் ஹாய் சொல்லிட்டு போங்கோ மக்காஸ்??????
    >>>
    அவங்களுக்கெல்லாம் பிளாக் படிக்குற பழக்கம் இருக்குமா? ஏன்னா, இப்போ அவங்களுக்கு 60வயசுக்கு மேல ஆகியிருக்குமே.

    ReplyDelete
  11. ஆமணக்கு இலையுடன் விறகு கரியை சேர்த்து இடித்து வகுப்பு போர்டில் பூசி புதிய போர்டுகாளாக மாற்றுவேன்
    >>>
    நாங்க கோவைக்காய் இலையை அடுப்புகரியுடன் அரைத்து சிலேட்டு, போர்டுக்கு பூசுவோம். நம்ம பிள்ளைங்கலாம் இது போன்ற அனுபவத்தை இழந்துட்டாங்க சகோ

    ReplyDelete
  12. இந்தப்பதிவை மிக அருமையாகவும், நகைச்சுவையாகவும், எழுதியுள்ளீர்கள்.

    அதற்கு என் அன்பான பாராட்டுக்கள்.

    என்னையும் தொடர் பதிவிட அழைத்துள்ளீர்கள். அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    கட்டாயமாக எழுத முயற்சிக்கிறேன்.

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  13. oh..you are from MC school gang..thats great. I think allmost of my M.Sc classmate boys are from MC school.

    Compared to UC school MC school students are better behaved I thought.

    Nice memories, it really took me also to my childhood days. Thanks for inviting me. I will try to write a blog on my school days.

    ReplyDelete
  14. @லஷ்மி அம்மா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றிகள்

    ReplyDelete
  15. @கணேஷ் சார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றிகள்
    மதுரைக்காரர் மட்டுமல்ல எல்லோரும் நல்லவர்கள்தான் சூழ்நிலைதான் மனிதனை மாற்றுகின்றன.எனது பதிவுகளை படித்த உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நான் மோசமானவனாக கூட இருக்கலாம்.ஆனால் நேரில் பார்த்தால் அல்லது எனது அருகில் வசித்தால் அந்த எண்ணத்தில் மாற்றம் ஏற்படும்.

    கணேஷ் சார் பால்வடியும் முகம் கொண்ட உங்களுக்கு அமலாபாலைதான் பிடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும் அதனால் ரேவதியை பிடிக்காமல் போனதில் அதிசய்மில்லை.

    ReplyDelete
  16. @சி.பி.செந்தில் சார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றிகள்4 வயதிலேயே அழகை ரசிக்க அறிந்து கொண்டேன். லவ்வை அல்ல.. எப்படி என் சமாளிப்பு அவ்வ்வ்வ்வ்வ்வ்வெ

    ReplyDelete
  17. @தனசேகரன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றிகள்நான் சேட்டைகார பையன் அல்ல சேட்டைகார கும்பலிடம் சேர்ந்திருந்த ஒரு நல்ல பையன்

    ReplyDelete
  18. @ சசிகலா மேடம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றிகள்

    சில சம்யங்களில் உண்மையை வெளியே சத்தம் போட்டு சொல்ல முடியாது. இந்த கேள்வியை உங்கள் கணவரிடம் கேட்டு பாருங்கள் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்

    ReplyDelete
  19. @ராஜி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றிகள்

    //நாலாவது வகுப்புலயே சைட்டா?// நாலு என்ன நாப்பது வயதுலேயும் சைட்டு அடிப்போமல..ஆனா அடிச்சுட்டு வந்து விட்டுல அடி வாங்கறதை வெளியே சொல்லமாட்டோம்ல

    //ரெண்டாவது படத்துல உங்க கூட இருக்குறது யாரு? //

    என்ன சகோதரி அந்த படத்தை மறந்திட்டிங்களா. அது நீங்கதான் நான் ஸ்குலுக்கு போக அழுத போது நீங்க மரத்தில் அடி எனக்கு சிரிப்பு காட்டி விளையாடிய போது நம் பெற்றோர்கள் எடுத்த போட்டோதான் அது..

    //இப்போ அவங்களுக்கு 60வயசுக்கு மேல ஆகியிருக்குமே.//
    இந்த 60 வயசுல சகோதரி நீங்க பதிவு எழுதும் போது அவங்க நிச்சயம் பதிவுகள் படிப்பாங்க என்ற் நம்பிக்கையில்தான் அந்த வேண்டுகோள்

    //நம்ம பிள்ளைங்கலாம் இது போன்ற அனுபவத்தை இழந்துட்டாங்க சகோ//
    நீங்க சொல்லவது நூற்றுக்கு நூறு உண்மை சகோதரி ராஜி அனுபவம் மட்டும்ல்ல செலவு இல்லாமல் நாம் அனுபவித்த சந்தோஷங்களையும் இழந்து விட்டனர் எனப்து உண்மைதான்

    ReplyDelete
  20. பள்ளி கூட நினைவுகள் என்றும் நல்ல நினைவுகளே!

    ReplyDelete
  21. நல்ல சுவாரசியமான பள்ளி வாழ்க்கை. இப்பவும் ரசிக்கவைக்குதே... பாராட்டுகள்.

    ReplyDelete
  22. மதுரமான மலரும் நினைவுகள்.. பாராட்டுக்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.