Saturday, October 10, 2026

 அமெரிக்காவில் தவிக்கும் இந்தியர்களும் இந்தியாவில் அதை ரசிக்கும் குரூர மனங்களும்!
     

#IndianDiaspora #NRILife #ImmigrantFamilies #GreenCard #H1B #ChooseEmpathy


வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு ஒரு பிரச்சினை என்றதும், சமூக வலைதளங்களில் சிலருக்கு வரும் சந்தோஷத்தைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

இந்தியாவை விட்டுப் போனீங்கல்ல இப்ப அனுபவிங்க என்பது போன்ற கமெண்ட்டுகள்

அட, வெளிநாட்டுக்குப் போனது என்ன குற்றமா?

சொந்த ஊரில் வேலை கிடைக்காமல் சென்னைக்குப் போனவர் இருக்கிறார். நல்ல வாய்ப்பு கிடைத்து பெங்களூருக்குப் போனவர் இருக்கிறார். அதேபோல அமெரிக்காவுக்குப் போனவரும் இருக்கிறார். தங்களுக்கும் குடும்பத்துக்கும் கொஞ்சம் நல்ல வாழ்க்கை அமையாதா என்றுதானே எல்லோரும் போகிறார்கள்.

ஆனால் அமெரிக்காவுக்குப் போனவர் மட்டும் இந்தியாவுக்கு எதிரியாகிவிடுவது எப்படி.

மைக்ரோசாப்ட், அடோப் உள்ளிட்ட சில நிறுவனங்களின் கிரீன் கார்டு நடைமுறையில் முக்கியமான PERM விண்ணப்பங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இதனால் ஏற்கெனவே உள்ள எல்லா H-1B விசாக்களும் ரத்தாகிவிட்டன என்பதல்ல. அனைவரும் உடனே நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்பதும் அல்ல. ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் நிரந்தர வசிப்புரிமைத் திட்டங்களில் புதிய நிச்சயமற்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. (அதே சமயத்தில் H-1B யில் இருக்கும் போது வேலைவாய்ப்பு போனால் அவர்கள் இங்கே 60 நாட்கள் மட்டுமே இருக்க முடியும்  அதுமட்டுமல்ல புதிய வேலை கிடைத்தாலும் அதற்கு H-1B விசா ரினிவ்  முன்பு போல எளிதல்ல மிக கடினமாகி இருக்கிறது )


அந்தக் கவலையைத்தான் சிலர் கிண்டலுக்கான விஷயமாக எடுத்துக் கொள்கிறார்கள்.

அங்கே இருப்பது அவர்களுடைய வேலை மட்டும் இல்லை. குடும்பம் இருக்கிறது. குழந்தைகளின் பள்ளி இருக்கிறது. மாதந்தோறும் கட்ட வேண்டிய செலவுகள் இருக்கின்றன. பல ஆண்டுகளாக அமைத்துக்கொண்ட வாழ்க்கை இருக்கிறது.

பெட்டியை எடுத்துக்கிட்டு இந்தியாவுக்கு வந்துட வேண்டியதுதானே!


சொல்லிவிட்டோம். நமக்கு வேலை முடிந்தது.

அந்தக் குடும்பத்துக்கு அங்கேதான் வேலை ஆரம்பிக்கிறது. குழந்தையின் படிப்பு, துணையின் வேலை, வீடு, சேமிப்பு என்று ஒவ்வொன்றையும் யோசித்து முடிவு செய்ய வேண்டும். நாடு மாறுவது முடியாத காரியமல்ல. ஆனால் நாம் ஒரு கமெண்ட் போடும் நேரத்தில் அது நடந்துவிடாது.

அதிலும் குழந்தைகளை நினைத்துப் பாருங்கள்.

அமெரிக்காவில் வளர்ந்த குழந்தைக்கு அங்கிருக்கும் பள்ளியும் நண்பர்களும்தான் பழக்கம். இந்தியாவில் தாத்தா, பாட்டி, உறவினர்கள் இருக்கலாம். சில குழந்தைகள் வந்து போயிருக்கலாம். சிலர் வந்திருக்கவே மாட்டார்கள்.

குடும்பம் இடம்பெயர வேண்டிய நிலை வந்தால், அந்தக் குழந்தையும் தன் பழக்கமான வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேண்டும். அதன் கவலை விசா விதிகளைப் பற்றியதாக இருக்காது. நண்பர்களை விட்டுப் பிரிவதும் புதிய பள்ளிக்குப் பழகுவதும்தான் அதற்குப் பெரிய விஷயமாக இருக்கும்.

அந்தக் குழந்தையின் பெற்றோர் ஒருகாலத்தில் அமெரிக்காவைப் புகழ்ந்து பேசியிருக்கலாம். இந்தியாவைப் பற்றித் தேவையில்லாமல் குறை சொல்லியிருக்கலாம்.

அதற்காக அந்தக் குழந்தை என்ன தவறு செய்தது?

சரி, வெளி நாட்டுக்குப் போன சிலர் தங்களுடைய சம்பளத்தையும் வசதியையும் வைத்து மற்றவர்களைத் தாழ்வாகப் பேசுகிறார்கள். எனக்கும் அந்தப் பேச்சுகள் பிடிக்காது.

அவர்கள் பேசியதை எடுத்துச் சொல்லுங்கள். கேள்வி கேளுங்கள். பதிலுக்குக் கிண்டல்கூட செய்யுங்கள்.

ஆனால் அவர்களுடைய குடும்பம் சிரமப்படும்போது அதைப் பார்த்துச் சந்தோஷப்படுவது வேறு. ஒருவரின் ஆணவத்தை விமர்சிப்பதற்கும், அவருடைய வாழ்க்கை தடுமாற வேண்டும் என்று ஆசைப்படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

அதோடு வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லோரும் அப்படிப் பேசுகிறவர்களும் அல்லவே.

நமக்கு எரிச்சலூட்டிய ஒரு பதிவை வைத்துக்கொண்டு, அங்கே வேலை செய்யும் அத்தனை குடும்பங்களுக்கும் நல்லா வேண்டும் என்று சொல்வது என்ன நியாயம்?


பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லாதபோது ஊருக்குப் போக வேண்டியவரின் நிலையை யோசித்துப் பாருங்கள்.
தனது விசா சூழலில் போய்விட்டுத் திரும்ப முடியுமா என்ற அச்சம் இருந்தால், அவருடைய முடிவு எளிதாக இருக்காது.

அம்மாவைவிட வேலையா முக்கியம் என்று நாம் கேட்டுவிடுவோம்.


அவருக்கும் அம்மா முக்கியம்தான். அதனால்தான் தவிக்கிறார். கூடவே தன்னை நம்பியிருக்கும் குழந்தைகளையும் குடும்பத்தையும் சேர்த்து யோசிக்க வேண்டியிருக்கிறது.

அந்த முடிவை நாம் அவருக்காக எடுக்க முடியாது. குறைந்தபட்சம் அவரைத் திட்டாமல் இருக்கலாம்.

குடியேற்ற முறையில் மோசடி இருக்கிறதா? விசாரிக்கட்டும். நிறுவனங்கள் சட்டத்தை ஏமாற்றியிருக்கின்றனவா? தண்டிக்கட்டும். அமெரிக்கத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் உரிமைகளும் பாதுகாக்கப்படட்டும்.

அதற்கும் ஓர் இந்தியக் குடும்பத்தைப் பார்த்து இப்ப நல்லா மாட்டிக்கிட்டீங்க என்று சிரிப்பதற்கும் என்ன சம்பந்தம்?

அந்த நிறுவனத்தின் முடிவை எடுத்தவர் இந்தத் தொழிலாளியா குடியேற்ற விதிகளை எழுதியவர் இவரா அங்கே வேலை செய்ததற்காக மட்டும் இவரும் குற்றவாளியாகிவிட்டாரா?

உதவி செய்யுங்கள் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களுக்காக உருகி ஒரு பதிவு எழுதவும் வேண்டாம்.

சும்மா இருந்தால்கூடப் போதும்.

அவர்கள் தங்கள் குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவது என்று தவித்துக்கொண்டிருக்கும்போது, நாம் கமெண்ட் போட்டுக் கொண்டாடாமல் இருந்தாலே போதும் .


போராட்டத்தைத் தடுக்க அரசே போக்குவரத்தை முடக்குவதா? என்ன ஒரு விந்தை https://avargal-unmaigal.blogspot.com/2026/10/righttoprotest-delhiprotest.html


அன்புடன்,
மதுரைத்தமிழன்

#மதுரைத்தமிழன் #மனிதநேயம் #புலம்பெயர்ந்தஇந்தியர்கள் #வெளிநாட்டுவாழ்க்கை #குடும்பங்களின்கவலை #IndianDiaspora #NRILife #ImmigrantFamilies #GreenCard #H1B #ChooseEmpathy

2 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.