அப்படி வந்தவர்கள் இப்போது அமெரிக்காவில் இங்குள்ள அரசியல் சூழ்நிலையால் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்தால், கண்ணில் கண்ணீர் வருவதற்குப் பதிலாக ரத்தம்தான் வரும். அமெரிக்கா வந்த பிறகு வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கலாம். ஆனால் அதற்காக எல்லோருடைய பொருளாதார நிலையும் முழுமையாக உயர்ந்துவிட்டது என்று சொல்ல முடியாது. வெளியில் இருந்து பார்க்கும் வாழ்க்கைக்கும், அந்தக் குடும்பம் மாதந்தோறும் போடும் கணக்குக்கும் வித்தியாசம் இருக்கிறது.
நான் அறிந்த சில குடும்பங்களில், பல ஆண்டுகள் இங்கே வாழ்ந்த பிறகும் ஓய்வுபெறுவது இன்னும் ஒரு திட்டமாகவே இருக்கிறது. ரிட்டையர்மெண்ட் பற்றிப் பேசிக் கொள்கிறார்களே தவிர, போதும், இனிமேல் வேலைக்குப் போக வேண்டாம் என்று முடிவெடுக்க முடியவில்லை அவர்களால் ஆனால் இந்தியாவிலோ அதற்கு நேர்மார்தான் ஐம்பது ஐம்பதைந்திலே ஒய்வு பெற்று சமுக இணைய தளங்களில் தங்கள் நேரத்தை செல்வழிப்பதை பார்க்கின்றேன்.
சரி, இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையாலும் டிரம்ப் அரசு எடுக்கும் குடியேற்ற முடிவுகளாலும் H-1B விசாவில் இருப்பவர்கள் படும் அவதியைச் சொல்லி முடியாது. அது கன்னித்தீவு தொடர்கதை போலத்தான் நீண்டுகொண்டே இருக்கிறது. குடியேற்ற அறிவிப்புகளால் பயணமும் குடும்ப ஏற்பாடுகளும் நிச்சயமற்றுப் போன இந்தியர்களின் அனுபவங்களும் செய்திகளில் பதிவாகிக் கொண்டே இருக்கின்றன.
அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களின் பிரச்சினையை, டாலரில் சம்பாதிக்கிறார்கள் அவர்களுக்கு என்ன குறை என்று முடித்துவிட முடியாது. அதேபோல், விசா பிரச்சினை என்றால் இந்தியாவுக்கு வந்துவிட வேண்டியதுதானே என்பதும் முழுமையான பதில் அல்ல. வேலை, குடியிருப்பு நிலை, குழந்தைகளின் படிப்பு, பெற்றோரின் முதுமை, இரு நாடுகளிலும் இருக்கும் சொத்துகள்—இவை அனைத்தையும் சேர்த்துத்தான் அந்த முடிவைப் பார்க்க வேண்டும்.
அங்கே என்னப்பா பிரச்சினை முடியலைன்னா இங்கே வந்துட வேண்டியதுதானே. அமெரிக்காவில் இருக்கும் நண்பரிடம் இப்படிச் சொல்வது எளிது. ஆனால் அவர் திரும்பி வர வேண்டியது இரண்டு பெட்டிகளோடு மட்டும் அல்ல. பல ஆண்டுகளாகக் கட்டிய வாழ்க்கையோடு.
ஒரு வேலை இருக்கிறது. அதன் அடிப்படையில் விசா இருக்கிறது. குழந்தைகள் ஒரு பள்ளியில் படிக்கிறார்கள். வீடு வாங்கியிருக்கலாம். மாதத் தவணைகள் இருக்கலாம். கணவன், மனைவி இருவருக்கும் வெவ்வேறு வேலைச் சூழல்கள் இருக்கலாம். இவற்றுக்கு நடுவில் இந்தியாவில் வயதான பெற்றோரும் இருக்கிறார்கள். எங்கே வாழ்வது என்ற கேள்வி இப்படிப்பட்ட குடும்பங்களுக்கு வெறும் நாட்டுப்பற்றுக் கேள்வி அல்ல. அடுத்த மாதம் முதல் வாழ்க்கையை எப்படி நடத்துவது என்ற கேள்வியும் சேர்ந்திருக்கிறது.
அமெரிக்காவில் H-1B விசாவில் வேலை பார்க்கும் ஒருவருக்கு வேலை போனால், சம்பளம் மட்டும் நிற்பதில்லை. இந்தியாவில் வேலை இழந்த ஒருவருக்கும், அமெரிக்காவில் வேலை விசாவில் இருக்கும் ஒருவர் வேலை இழப்பதற்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. இரண்டாவது நபருக்கு வருமானத்தோடு, அங்கே தொடர்ந்து தங்குவதற்கான சட்ட அடிப்படையும் கேள்விக்குள்ளாகலாம்.
H-1B விசாவில் இருப்பவருக்கு வேலை போன பிறகு புதிய வேலை கிடைத்தால் மட்டும் போதாது. புதிய நிறுவனம் உரிய H-1B மனுவையும் காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். எல்லோருக்கும் முழு 60 நாட்கள் கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது. அதிகபட்சம் 60 நாட்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தங்கும் காலத்தின் முடிவு—இதில் எது முன்னதாகவோ அதுதான் முக்கியம். தகுதியுள்ளவர்களுக்கு புதிய மனு தாக்கலின் அடிப்படையில் வேலை தொடங்கும் விதிகளும் இருக்கின்றன; எல்லா வழக்குகளிலும் அந்தக் காலத்திற்குள் இறுதி ஒப்புதல் வந்திருக்க வேண்டும் என்பதில்லை.
அந்தக் குடும்பத்துக்கு ஒவ்வொரு நாளும் முக்கியமாகிவிடுகிறது. கிடைக்கும் அந்தக் குறுகிய அவகாசத்தில், சிலருக்கு அந்தக் காத்திருப்பு தூக்குக் கைதியின் மனநிலையைப் போலவே கொடுமையாக இருக்கும். அதை அனுபவித்து பார்த்தவர்களுக்கு மட்டுமே அந்த கொடுமைகள் அவஸ்தைகள் புரியும். பிள்ளை பெறும் பெண்ணின் அவஸ்தையை விட இது கொடுரமானது.
புதிய வேலையோ, தொடர்ந்து தங்குவதற்கான வேறு சட்ட வழியோ அமையவில்லை என்றால், குடும்பத்தோடு கிளம்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கும். பள்ளியில் படிக்கும் குழந்தையின் படிப்புக்கு மாற்று ஏற்பாடு, வாங்கிய கார் மற்றும் வீட்டை விற்பதா அல்லது வேறு ஏற்பாடு செய்வதா என்று எத்தனை முடிவுகள்! அது மிக மிகக் கடினமான காலம். அதை அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் கொடுமை புரியும்.
நாம் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லவேண்டுமென்றாலே எவ்வளவு முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்குக் கால அவகாசம் இருந்தும்கூட பலர் தடுமாறித்தான் போகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் இவர்களின் சூழ்நிலையை எண்ணிப் பாருங்கள்.
இங்கே நம் ஊர் ஆட்கள், சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா என்று டயலாக் சொல்லிக்கொண்டு, இந்தியாவிற்கு வந்துவிடுங்கள் உங்கள் திறமைகளைக் கொண்டு இந்தியாவை வல்லரசாக மாற்றலாம் என்கிறார்கள். கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கிறது. ஆனால் வந்த பிறகு என்ன செய்யப் போகிறார்கள் என்பதற்குப் பதில் சொல்லாமல் அழைத்தால், அது காதில் பூ சுற்றுவதாகத்தானே இருக்கும்.
AI செலவும் வணிக நிச்சயமின்மையும் காரணமாக, இருக்கும் ஊழியர்களுக்கே வழக்கமான சம்பள உயர்வு தர முடியவில்லை என ஸ்ரீதர் வேம்புவின் Zoho நிறுவனம் சொல்கிறது. அப்படியிருக்க, வெளி நாட்டிலிருந்து திரும்பும் அனைவருக்கும் ஏற்ற வேலையும் சம்பளமும் தயாராக இருக்கின்றன என்று எப்படி எளிதாகச் சொல்ல முடியும்.
இந்தியாவில் படித்தவர்களுக்கே தங்கள் படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத சூழலைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க, வெளிநாட்டிலிருந்து திரும்புகிற எல்லோருக்கும் என்ன வேலை தயாராக வைத்திருக்கிறோம். அவர்களுடைய அனுபவத்திற்கு ஏற்ற ஆராய்ச்சி வேலைகளும் தயாரிப்பு மேம்பாட்டு வாய்ப்புகளும் தேவையான அளவுக்கு இருக்கின்றனவா வந்துவிடுங்கள் என்று அழைப்பவர்கள் இதற்கும் பதில் சொல்ல வேண்டாமா?
இந்தியாவில் உலகளாவிய நிறுவன மையங்கள், செயற்கை நுண்ணறிவு, தயாரிப்பு நிறுவனங்கள் போன்ற துறைகள் வெளிநாட்டு அனுபவமுள்ளவர்களுக்கு வாய்ப்பளிக்கலாம் என்று அனுபவமுள்ளவர்கள் சொல்கிறார்கள். அதே நேரத்தில் சம்பள வித்தியாசங்களும் பணிச் சூழல் சவால்களும் தொடர்வதாகத்தான் தகவல்கள் வருகின்றன. அதனால், அமெரிக்க அனுபவம் இருக்கிறது; இந்தியாவில் வேலை தானாகக் கிடைக்கும் என்று கணக்கிடுவதும் ஆபத்தான முன்னெண்ணம்.
அமெரிக்க அனுபவத்தை வைத்து இந்தியாவில் பெரிய சம்பளம் வாங்கலாம் என்று நினைத்து வருபவர்கள், சில நிறுவனங்களில் Overqualified அல்லது Too Expensive என்ற நிராகரிப்பையும் சந்திக்க நேரிடலாம். நீண்ட காலம் பழகிய பணிச் சூழலிலிருந்து மாறும்போது, புதிய நிறுவனத்தின் வேலைநேரமும் மேலதிகாரிகளின் அணுகுமுறையும் சிலருக்கு ஒத்துப்போகாமல் இருக்கலாம். வேலை கிடைப்பது ஒரு பிரச்சினை என்றால், கிடைத்த வேலையில் தன்னைப் பொருத்திக் கொள்வது இன்னொரு பிரச்சினையாகலாம்.
நாம ஊருக்கு வந்தா சொந்தபந்தமெல்லாம் நம்மளைக் கொண்டாடும் என்று நினைப்பதிலும் சிலருக்கு ஏமாற்றம் ஏற்படலாம். பத்து ஆண்டுகளில் ஊர் மாறியிருக்கும். நண்பர்களின் வாழ்க்கை மாறியிருக்கும். அவர்களுக்கென்று வேலை, குடும்பம், பொறுப்புகள் வந்திருக்கும்.
சிலருக்கு சொந்த பந்தங்களின் பார்வையில் வெறும் டாலர் ஏடிஎம் ஆகத் தெரிகிறோமோ என்ற ஏமாற்றமும் ஏற்படலாம். யாராவது பணத்தைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தால், நான் வந்திருக்கிறேனா, என் பணம் வந்திருக்கிறதா என்ற கேள்வியும் மனதில் வரலாம்.
அமெரிக்காவில் பழகிய அன்றாட வசதிகளை இங்கே எதிர் பார்க்கும்போது, போக்குவரத்து நெரிசல், மாசுபாடு, அன்றாட வேலைகளுக்காக அலைய வேண்டிய சூழல் போன்றவை சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இது எந்த நகரத்தில், எந்தப் பகுதியில் வாழ்கிறோம் என்பதையும் பொறுத்திருக்கிறது. திரும்பிக் குடியேறுவது குறித்த அனுபவங்களில் நகர வசதிகள் பற்றிய இந்த ஏமாற்றங்களும் இடம்பெறுகின்றன.
ஊருக்குப் போய்விட்டால் சொந்த மண்ணில் நிம்மதியாக வாழலாம் என்ற கனவோடு திரும்புபவர்களில் சிலருக்கு, முதல் சில மாதங்களே கடினமாக இருக்கலாம். வெளிநாட்டில் விசாவுக்காகப் போராடியவர்கள், ஊருக்குத் திரும்பிய பிறகு வேலை, சம்பளம், குழந்தைகளின் படிப்பு என்று மீண்டும் புதிதாக ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கும்.
அதனால்தான் சிலர் இந்தியாவுக்குத் திரும்புவதற்கு முன் வேறு நாடுகளின் வாய்ப்புகளையும் பார்க்கிறார்கள். அது இந்தியாவை வெறுப்பதால் என்று உடனே முடிவுகட்ட வேண்டாம். தங்களுடைய அனுபவத்திற்கு ஏற்ற வேலை எங்கே கிடைக்கும், குடும்பத்தை எங்கே நிலைநிறுத்த முடியும் என்ற கணக்காகவும் இருக்கலாம்.
அதனால் மக்களே, அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளாமல் நீங்கள் கொடுக்க வேண்டியது தீர்ப்பல்ல.
இந்தியாவுக்குத் திரும்பியவரைப் பார்த்து, அங்கே தோற்றுவிட்டாரா என்று கேட்க வேண்டியதில்லை. அமெரிக்காவில் தொடர்ந்து இருப்பவரைப் பார்த்து, பெற்றோரை விட்டுவிட்டு டாலருக்காக இருக்கிறார் என்றும் தீர்ப்பு சொல்ல வேண்டியதில்லை.
ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
அமெரிக்காவில் இருப்பது வெற்றிக்கான நிரந்தரச் சான்றிதழும் அல்ல. இந்தியாவுக்குத் திரும்புவது தோல்விக்கான ஒப்புதலும் அல்ல.
---------------------------------------------------------------------------------------------
சமூக வலைத்தளங்களில் தெரியும் மகிழ்ச்சியே முழு வாழ்க்கையல்ல. பிறரின் சிறந்த தருணங்களோடு நம் வாழ்க்கையை ஒப்பிட்டு வருந்துவதைப் பற்றிய சிந்தனைப் பதிவு.
சமூக வலைத்தளப் போலிப் பிம்பம் https://avargal-unmaigal.blogspot.com/2026/10/socialmediareality-highlight-reel.html
---------------------------------------------------------------------------------------------
அன்புடன்,
மதுரைத்தமிழன்
#அமெரிக்கவாழ்க்கை #விசாபிரச்சினை #வெளிநாடுவாழ்இந்தியர்கள் #தாய்நாடுதிரும்புதல் #H1B #NRILife #VisaUncertainty #ReverseCultureShock #ReturnToIndia #அவர்கள்உண்மைகள் #மதுரைத்தமிழன்

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.