Sunday, October 18, 2026

 வாட்ஸ்அப் தாமரையும் பெரியப்பாவின் தூக்கமும்!


#Whatsapp #GoodMoringTorture #Comedy

எங்க குடும்பத்துல பாசம் இருக்கோ இல்லையோ… வாட்ஸ்அப்பில் காலை வணக்கம் கட்டாயம்!

காலை ஐந்து மணி.

அலாரத்தை அணைத்துவிட்டு, இன்னும் அஞ்சு நிமிஷம் தூங்கினா இந்த உலகம் ஒண்ணும் நின்னுடாது என்று போர்வையை இழுத்தேன்.

அப்போதுதான் போன் சத்தம் போட்டது.

‘டுங்!’

கொஞ்சம் இடைவெளி.

‘டுங்! டுங்! டுங்!’

வீட்டில் யாருக்காவது ஏதாவது அவசரமோ என்று பதறிப்போய் எடுத்தால்

குடும்ப வாட்ஸ்அப் குரூப்பில் ஒரு தாமரை மலர்ந்திருந்தது.

அதற்குக் கீழே தங்க நிற எழுத்துகளில்

பிறரை நிம்மதியாக வாழ விடுவதே உண்மையான அன்பு!

அனுப்பியவர் பெரியப்பா.

மணி 5:00.

அந்த நல்ல கருத்தை அவர் அனுப்பாமல் இருந்திருந்தாலே இன்னும் கொஞ்ச நேரம் நிம்மதியாக தூங்கிருப்பேன்.

படத்தில் தாமரை. பின்னால் சூரியன். பக்கத்தில் ஒரு டீ கப். ஓரத்தில் இரண்டு பட்டாம் பூச்சிகள்.

அந்த டீயைக் குடிக்கப்போவது யார் என்று தெரியவில்லை. ஆனால் அதைப் பார்த்துவிட்டு 27 பேர் எழுந்திருக்க வேண்டியிருந்தது.

பெரியப்பா வீட்டில் ரிமோட் கொஞ்சம் தள்ளி இருந்தால்கூட,

டேய் வரும்போது அதை எடுத்துக் கொடுத்துட்டுப் போடா என்பார்.

ஆனால் காலை வணக்கம் மட்டும் நாலு குரூப் தாண்டி வந்தாலும் விடமாட்டார். நமக்குக் கொண்டுவந்து சேர்த்து விடுவார்.

அடுத்த நிமிடமே பதில்கள் வர ஆரம்பித்தன.

அருமையான கருத்து அண்ணா! 🙏

இனிய காலை வணக்கம்! 🌹

இன்றைய நாள் அனைவருக்கும் சிறப்பாக அமையட்டும்! 🙏

நேற்று சொத்துப் பிரிவினை விஷயத்தில் சண்டை போட்டுக்கொண்ட இரண்டு சித்தப்பாக்களும் ஒரே ரோஜாப்பூவை அனுப்பியிருந்தார்கள்.

பூவுக்கு மட்டும் பாகப்பிரிவினை இல்லை.

நான் படித்துவிட்டுப் போனை வைத்துவிட்டு, சிறிது நேரம் கண்ணை மூடினேன்.

அதுதான் தப்பு.

குடும்ப குரூப்பில் மெசேஜைப் படிச்சுட்டுப் பதில் போடாம இருக்க முடியுமா நம்ம ஜீயின் ‘மங்கிபாத்’ மாதிரி கேட்டோமோ இல்லையோ அருமைன்னு சொல்லிட்டு நகர்ந்துடணும்!

இல்லையென்றால் அடுத்த கல்யாணத்தில் விசாரணை வரும்.

என்னப்பா பெரியப்பா போடுற மெசேஜுக்கெல்லாம் பதிலே காணோம்

கொஞ்சம் வேலை சித்தப்பா

எங்களுக்கெல்லாம் வேலை இல்லையா?

இதற்குப் பதில் சொன்னால் குடும்பப் பிரச்சினை. சொல்லாவிட்டால் திமிர் பிடித்தவன்.

அதனால் இப்போதெல்லாம் கண்ணை முழுதாகத் திறப்பதற்கு முன்பே ஒரு 🙏 போட்டுவிடுகிறேன்.

ஒருநாள் தூக்கக் கலக்கத்தில் 🙏க்குப் பதிலாக 😂 போய்விட்டது.

அன்றைக்குப் பெரியப்பா அனுப்பியிருந்தது  வாழ்க்கை நிலையற்றது!

இரண்டு நிமிடத்தில் அம்மாவிடமிருந்து போன்.

என்னடா சிரிக்கிற?

தெரியாம பட்டுடுச்சும்மா..

அதை என்கிட்ட சொன்னா போதுமா குரூப்புல சொல்லு!

காலை 5:17க்கு இருபத்தேழு பேர் முன்னிலையில் மன்னிப்புக் கேட்டேன்.

அதற்குப் பெரியப்பா,

பரவாயில்லை தம்பி. தவறு செய்வது மனித இயல்பு. மன்னிப்பது தெய்வ குணம்! என்று இன்னொரு படத்தை அனுப்பினார்.

இந்த முறை தாமரைக்குப் பதிலாக அருவி.

இவ்வளவுக்கும் நடுவில் ஒரு சித்தி,

இந்தப் பூச்செடி யார் வீட்டுல இருக்கு?

என்று முதல் படத்துக்குக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்.

எங்கள் குரூப்பில் உரையாடல் முடியாது. வேறு திசையில் போகும்.

அன்றைக்கு மாலை பெரியப்பாவை நேரில் பார்த்தேன்.

எப்படிப் பெரியப்பா தினமும் இவ்வளவு சீக்கிரம் எழுந்து நல்ல கருத்தெல்லாம் அனுப்புறீங்க?

அவர் என்னைத் தனியாகக் கூப்பிட்டார்.

நீ வேறப்பா உங்க பெரியம்மாதான் எழுப்பி அனுப்பச் சொல்றா.

எதுக்குப் பெரியப்பா?

போன மாதம் ஒரு நாள் அனுப்பாமத் தூங்கிட்டேன். ஆறு மணிக்கெல்லாம் உங்க அத்தை போன் பண்ணி, அண்ணனுக்கு உடம்பு சரியில்லையா இன்னும் காலை வணக்கம் வரலையே’ன்னு கேட்டிருக்கா.

அப்புறம்?

அப்புறம் உங்க சித்தப்பா போன். அடுத்து மாமா போன். எல்லாருக்கும் நான் நல்லாத்தான் இருக்கேன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள ஒன்பது மணி ஆயிடுச்சு.

கொஞ்சம் குரலைத் தாழ்த்திச் சொன்னார்:

இப்போ அஞ்சு மணிக்கே அனுப்பிடுறேன். அப்புறம் நிம்மதியாத் தூங்குறேன்!

அப்போதுதான் புரிந்தது.

நான் அவர் அனுப்புவதைப் பார்த்து எழுந்திருக்கிறேன்.

அவர் எனக்கு அனுப்பிவிட்டுத் தூங்குகிறார்!

இதைத்தான் #அறிஞர் #அண்ணா கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று சொன்னாரோ என்னவோ அதை இந்த பூமர் பெரியப்பா பாலோ பண்ணி எல்லோரின் தூக்கத்தையும் கலைக்கிறார்

அன்புடன்,
மதுரைத்தமிழன்  

டிஸ்கி: குடும்ப வாட்ஸ்அப் பத்தி எழுதும்போதுகூட நம்ம ஜீயை இழுத்தாச்சு. என்ன பண்றது அவரைக் கலாய்க்காத பதிவு எனக்குச் சர்க்கரை இல்லாத டீ மாதிரி இருக்கு. பெரியப்பாவுக்குக் காலை வணக்கம் ஃபார்வர்ட் பண்ணணும்; எனக்கு ஜீயை இழுக்கணும். அவரவருக்கு ஒரு பழக்கம்! என்ன சொல்றீங்க மக்களே?

UKபடிப்புக்கு offer கிடைத்தாலும் விசா உறுதியல்ல.புதிய விதிகள்,CAS, நிதி ஆதாரம்,கட்டணத் திரும்பப்பெறுதல் பற்றி மாணவர்களும் பெற்றோரும் அறிய வேண்டியவை

 UK படிப்புக்கு இடம் கிடைத்துவிட்டதா? பணம் கட்டுவதற்கு முன் இதைக் கவனியுங்கள்! https://avargal-unmaigal.blogspot.com/2026/10/uk-studyinuk-ukstudentvisa.html




அமெரிக்காவில் H-1B விசா நெருக்கடி, வேலை இழப்பு, இந்தியா திரும்பும்போது எதிர்கொள்ளும் மாற்றங்கள் NRI குடும்பங்களின் தவிப்பைப் பேசும் பதிவு 


அமெரிக்காவில் விசா பயம் இந்தியா திரும்பினால் ‘ரிவர்ஸ் கல்ச்சர் ஷாக்’! NRI குடும்பங்களின் தவிப்பு  லிங்க -------> https://avargal-unmaigal.blogspot.com/2026/10/nri-h1b-nrilife-visauncertainty.html

 

#Whatsapp #GoodMoringTorture #Comedy #குடும்பவாட்ஸ்அப், #காலைவணக்கம்,  #தமிழ்நகைச்சுவை, #கலாய்ப்பு , 

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.