நாம் மாறாத வரையில் அவர்கள் மாற மாட்டார்கள்
வரி கட்டும்போது வளர்ந்த நாடு; வசதி கேட்டால் வளரும் நாடு!
நம்ம நாட்டில் பொதுமக்களாக வாழ்வதற்கு உழைப்பும் பணமும் மட்டும் போதாது. நிறைய பொறுமையும் வேண்டும். அதைவிட முக்கியமாக, எப்போது கேள்வி கேட்க வேண்டும், எப்போது பெருமைப்பட வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும் அறிவுரைகளையும் கேட்டுக்கொள்ள வேண்டும்.
நம்ம ஊரில் மழை பெய்து தெருவில் தண்ணீர் தேங்கினால், வடிகால் என்ன ஆனது என்று கேட்கக்கூடாது. இவ்வளவு மழை பெய்தால் எந்த நாடுதான் தாங்கும் என்று பதில் வரும்.
வெயில் அடித்துத் தண்ணீர் வரவில்லை என்றால், குடிநீர் ஏற்பாடு என்ன ஆனது என்றும் கேட்கக்கூடாது. “இவ்வளவு வெயில் அடித்தால் என்ன செய்வது என்பார்கள். மழை பெய்தாலும் நிர்வாகம் பொறுப்பில்லை. வெயில் அடித்தாலும் நிர்வாகம் பொறுப்பில்லை.
அப்படியானால் தேர்தல் அறிக்கையை வானிலை ஆய்வு மையத்திடமே வாங்கிக்கொள்ளலாமே!
வரி, கட்டணம், அபராதம் என்று நாம் பணம் செலுத்த வேண்டிய இடங்களில் எல்லாம் எவ்வளவு தெளிவு. எவ்வளவு கட்ட வேண்டும், எப்போது கட்ட வேண்டும், தாமதமானால் எவ்வளவு கூடுதலாகக் கட்ட வேண்டும் எல்லாமே முன்பே பக்காவாக தயாராக இருக்கும்.
“ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டுமானமோ, நம் பகுதியில் நடக்கும் வேறு ஏதாவது பணியோ எப்போது முடியும் என்று கேட்டால் மட்டும், ‘கூடிய விரைவில் முடிக்கப்படும்’ என்ற பதில்தான் கிடைக்கும்.. இந்த விரைவில் என்பதற்கு மட்டும் எந்தக் காலண்டரிலும் தேதி கிடையாது.
நாம் பணம் கட்டத் தாமதித்தால் அபராதம். அவர்கள் வேலை முடிக்கத் தாமதித்தால் பொறுமை. நம்முடைய தாமதம் அலட்சியம். அவர்களுடைய தாமதம் நடைமுறைச் சிக்கல்.
இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்வதற்குத்தான் நமக்கு இவ்வளவு குடிமைப் பயிற்சி!
சாலையில் ஒரு பெரிய பள்ளம் இருக்கிறது. அதைப் படம் எடுத்துப் பதிவிடுகிறோம். உடனே ஒருவர் வருவார். “நாட்டில் நடந்த நல்ல விஷயங்கள் எதுவுமே உங்கள் கண்ணுக்குத் தெரியாதா என்று சண்டைக்கு வருவார்
அவரிடம் தெரிகிறது ஐயா. நல்ல விஷயங்களும் தெரிகின்றன. இந்தப் பள்ளமும் தெரிகிறது. அதற்காகத்தானே இரண்டு கண்கள் இருக்கின்றன .நாட்டின் சாதனையைப் பார்க்க ஒரு கண்ணும், தெருவின் பள்ளத்தைப் பார்க்க இன்னொரு கண்ணும் பயன்படுத்தக்கூடாதா என்ன?
உலகமே நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறது என்று சொல்வார்கள். நாங்களும் கீழே பார்த்துக்கொண்டுதான் நடக்கிறோம். இல்லையென்றால் விழுந்துவிடுவோம். நாடு உயர்வது மகிழ்ச்சிதான். அதற்காகச் சாலையில் நடப்பவன் கீழே விழ வேண்டிய அவசியமில்லையே!
சாதனைகளைப் பற்றிப் பேசும்போது நாம் உலகத்துக்கே வழிகாட்டும் நாடு. குடிநீர் கேட்டால் இன்னும் வளரும் நாடு. வெளிநாட்டு வரவேற்பைப் பற்றிப் பேசும்போது எல்லாம் உலகத்தரம். வீட்டுக்குப் பக்கத்தில் குப்பை அள்ளவில்லை என்றால், மாற்றம் வர நேரமாகும்.
நேரமாகட்டும். ஆனால் எவ்வளவு நேரம் என்று கேட்டால் மட்டும் ஏன் கோபம் வருகிறது?
விளம்பரப் பலகையில் தலைவரின் படம் மாறுவதற்கு ஆகும் நேரத்தைவிட, அதற்குக் கீழே இருக்கும் உடைந்த நடைபாதையைச் சரி செய்வதற்கு ஏன் இவ்வளவு காலம் ஆகிறது?
தலைவரின் முகம் தெளிவாகத் தெரிய வேண்டும். மக்கள் நடக்கும் பாதை எப்படியிருந்தாலும் பரவாயில்லையா?
மாதச் செலவைச் சமாளிக்க முடியவில்லைன்என்று சொன்னால், நாட்டின் சர்வதேச மதிப்பைப் பற்றிப் பேசுகிறார்கள். அந்த மதிப்பை எடுத்துக்கொண்டு மளிகைக் கடைக்குப் போக முடியுமா என்ன? அண்ணே, இந்த மாதம் கொஞ்சம் பணம் குறைகிறது. மீதிக்குப் பதிலாக தேசியப் பெருமையை வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்ல முடியுமா?
கடைக்காரர் முதலில் நம்மைப் பார்ப்பார். பிறகு வாங்கிய பொருள்களைத் திரும்ப எடுத்து வைப்பார். அவருக்கு நாட்டுப்பற்று இல்லாததால் அல்ல. அவரும் கணக்குக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அந்த எளிய விஷயம்தான் அரசியல் பேச்சுகளில் மட்டும் காணாமல் போய்விடுகிறது.
நாட்டின் பெருமையை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், அது பள்ளிக் கட்டணத்துக்கோ மருத்துவச் செலவுக்கோ மாற்றாகாது என்கிறோம்.வாழ்க்கையைப் பற்றிக் கேட்டால் வாழ்க்கையைப் பற்றியே பதில் சொல்லுங்கள். ஒவ்வொரு கேள்விக்கும் பெருமையைப் பொட்டலம் கட்டிக் கொடுக்காதீர்கள்.
குழாயில் தண்ணீர் கேட்டால் அரசியல் வரலாறு வருகிறது . எங்கள் பகுதியில் தண்ணீர் எப்போது வரும் என்றால்? உடனே முந்தைய ஆட்சியில் என்ன நடந்தது தெரியுமா என்பதுதான் பதில் கேள்வியாக வரும்
இந்த வேலை ஏன் முடியவில்லை என்று கேட்டால் ? அவர்கள் மட்டும் ஒழுங்காகச் செய்தார்களா? நாம் கேட்டது குழாயில் தண்ணீர் வருமா என்று. பதிலுக்கு இருபது வருட அரசியல் வரலாறு வருகிறது.அந்த வரலாற்றைக் குடத்தில் பிடித்து வைத்துக்கொள்ள முடியுமா?
முன்பு தவறு நடந்திருந்தால் அதையும் கேட்போம். இப்போது நடப்பதையும் கேட்போம். பழைய தவறு, புதிய தவறுக்கான அனுமதிச் சீட்டு அல்ல.
முந்தையவர் சரியாகச் செய்யவில்லை என்பதற்காகத்தானே உங்களைத் தேர்ந்தெடுத்தோம் நீங்களும் அவரையே உதாரணமாகக் காட்டினால், மாற்றியது அரசாங்கத்தையா, பெயர்ப் பலகையையா?
பள்ளம் அதேதான்; நம் விளக்கம்தான் மாறுகிறது இதில் அரசியல்வாதிகளை மட்டும் சொல்லிவிட்டு நாமும் தப்பித்துக்கொள்ள முடியாது.
நமக்குப் பிடிக்காத கட்சி ஆட்சியில் இருந்தால், தெருவின் ஒவ்வொரு பள்ளத்துக்கும் படம் எடுக்கிறோம். நமக்குப் பிடித்த கட்சி ஆட்சிக்கு வந்ததும், அதே பள்ளம் “நிர்வாகச் சவால்” ஆகிவிடுகிறது.
தலைவர்கள்தான் மாறியிருக்கிறார்கள் . பள்ளம் மாறவில்லை. ஆனால் நம் விளக்கம் மட்டும் மாறிவிட்டது. வேலை செய்யாததற்கான காரணங்களை அவர்களைவிட நாமே ஆர்வமாகச் சொல்லிக்கொண்டிருந்தால், அவர்கள் ஏன் அவசரப்பட வேண்டும்?
“தெருவில் தண்ணீர் வரவில்லை. ஆனால் தெருவின் வாட்ஸ்அப் குழுவில் இரண்டு கட்சிக்காரர்களும் இரவு பன்னிரண்டு மணி வரை விவாதிக்கிறார்கள். காலையில் இருவரும் அதே தண்ணீர் லாரிக்காகக் குடத்துடன் நிற்கிறார்கள்.”
நாம் வாக்களித்தது அவர்களிடம் வேலை வாங்குவதற்கா, அவர்கள் சார்பில் விளக்கம் கொடுப்பதற்கா? எந்தக் கட்சியை ஆதரித்தாலும் பள்ளத்தில் விழுந்தால் நமக்குத்தான் அடிபடும். அப்போது நம் கட்சிப்பற்று வந்து முட்டிக்குக் கட்டுப் போடாது.
நல்ல வேலை செய்தால் பாராட்டுவோம். நாட்டுக்குப் பெருமை கிடைத்தால் கொண்டாடுவோம்.
அதே நேரத்தில், செய்யாத வேலையைப் பற்றிக் கேட்க வேண்டும். செலவிட்ட பணத்துக்குக் கணக்குக் கேட்க வேண்டும். கொடுத்த வாக்குறுதியை நினைவூட்ட வேண்டும் அப்படி செய்வதில் தவறு ஒன்றுமில்லை?
அரசாங்கம் நமக்குச் சேவை செய்ய வேண்டிய அமைப்பு. நாம் தினமும் அதன் புகழைப் பரப்ப வேண்டிய ரசிகர் மன்றம் அல்ல.
இது இப்படித்தான் இருக்கும் என்று ஒவ்வொரு குறையையும் நாம் ஏற்றுக்கொள்ளும்போது, அதை மாற்ற வேண்டியவர்களுக்கு வேலை சுலபமாகிவிடுகிறது. பிரச்சினையைத் தீர்க்க வேண்டியதில்லை. அதைச் சகித்துக்கொள்ள நம்மைப் பழக்கினால் போதும்.
நாளை நம் குழந்தை கேட்கலாம். “இந்தப் பிரச்சினை உங்கள் காலத்திலும் இருந்ததா என்று.. அப்போது என்ன சொல்வோம்? “இருந்தது. ஆனால் நாங்கள் மிகவும் பெருமையாக இருந்தோம் என்போமா என்ன?
அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது நாம் எவ்வளவு சத்தமாகக் கைதட்டினோம் என்ற கதையை அல்ல. அவர்கள் நிம்மதியாக வாழ நாம் என்ன கேட்டுப் பெற்றோம் என்பதைத்தான்.
அதனால் சாதனைக்குக் கைதட்டுவோம். குறைக்குக் கேள்வி கேட்போம்.
நாட்டை நேசிப்பதற்கும் நல்ல வாழ்க்கையைக் கேட்பதற்கும் எந்த முரண்பாடும் இல்லை.
தேச பெருமை இருக்கட்டும். அதோடு, குடிநீர்க் குழாயில் தண்ணீரும் வரட்டும்.
அன்புடன்
மதுரைத்தமிழன்
#அரசியல்நையாண்டி #மக்களின்குரல் #கேள்விகேட்போம் #அவர்கள்உண்மைகள் #மதுரைத்தமிழன்

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.