Friday, October 2, 2026

 70 லட்சம் பார்வைகளை கடந்த “அவர்கள்...உண்மைகள்” - என் சைலன்ட் ரீடர்ஸ்களுக்கு நன்றி
    

#அவர்கள்உண்மைகள் #MaduraiThamizhan #TamilBlog #TamilBlogger #TamilWriting #TamilReaders #TamilBloggers #SilentReaders #BlogMilestone #70LakhViews #7MillionViews #TamilLiterature #தமிழ்வலைப்பதிவு #தமிழ்பதிவர் #தமிழ்வாசகர்கள் #சைலன்ட்ரீடர்ஸ்


நேற்று( 10/1/2026 ) அவர்கள்...உண்மைகள்” -ப்ளாக்கை  திறந்து பார்த்தபோது, பார்வைகள் எண்ணிக்கை 70,19,932 என்று காட்டியது.

சில நொடிகள் அந்த எண்ணையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

70 லட்சத்தைத் (7 மில்லியன் )தாண்டிவிட்டது.

ஒரு காலத்தில் இந்த ப்ளாக்கிற்க்கு 10 லட்சம் பார்வைகள் வந்தபோது அதையே பெரிய விஷயமாக நினைத்து ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். பிறகு (6 மில்லியன் )60 லட்சம் பார்வைகளை எட்டியபோதும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக இன்று 70 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது.

என்ன சொல்வது என்று தெரியவில்லை.

இதை  சாதனை என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால்  இந்த எண்ணை மட்டும் பார்த்து மகிழ்வதைவிட, இந்த எண்ணுக்குப் பின்னால் இருக்கும் மனிதர்களைத்தான் நினைக்கத் தோன்றுகிறது. ஏனென்றால், இந்த 70,19,932 பார்வைகளில் ஒவ்வொரு பார்வைக்கும் பின்னால் யாரோ ஒருவரின் நேரம் இருக்கிறது

யாரோ ஒருவர் ஏதோ ஒரு நேரத்தில் இந்த ப்ளாக்கிற்க்கு வந்திருக்கிறார்.   ஒரு பதிவைப் படித்திருக்கிறார்.  சிலர் பிடித்திருந்தால் நண்பர்களுக்கு அனுப்பியிருக்கலாம்.  சிலர் பிடிக்காமல் அடுத்த பதிவுக்குப் போயிருக்கலாம்.  சிலர் பாராட்டியிருக்கலாம்.   சிலர் விமர்சித்திருக்கலாம்.  சிலர் என்னைத் திட்டியிருக்கலாம்.  சிலர் எதுவும் சொல்லாமல் வாசித்துவிட்டு சென்றிருக்கலாம். அந்தக் கடைசி வகை வாசகர்கள்தான் இன்று என்னை அதிகமாக நினைக்க வைத்தார்கள். அவர்களைத்தான் ஆரம்ப கால முதற்கொண்டு நான் அவர்களை சைலண்ட வாசகர்கள் என்று சொல்லி பல தடவைகள் அவர்களுக்கு நன்றி சொல்லி இருக்கின்றேன்.

ஒரு காலத்தில்  வலைத்தளங்களுக்கு  கருத்துகள் அதிகம் வரும் ஆனால் இப்போது கருத்துகள் குறைந்தாலும் வாசிப்பு இருக்கிறது. 


 ஒரு காலத்தில் ஒரு பதிவு எழுதினால் கீழே யாராவது வந்து,  முதல் வடை எனக்குதான் என்பார்கள் சிலர் தமிழ்மணம் 1 என்பார்கள் சிலர் நல்ல பதிவு என்பார்கள். இன்னொருவர் எதிர்த்து எழுதுவார். வேறொருவர், நீங்கள் சொல்வது சரிதான் என்பார். சில சமயங்களில்  பதிவிற்கு சம்பந்தமில்லாமல்  நட்போடு கிண்டலடித்து எழுதுவார்கள்.

அந்த நாட்கள் வேறு. இப்போது வாசிக்கும் முறையும் மாறிவிட்டது. பலர் பதிவு முழுவதையும் வாசிக்கிறார்கள்; ஆனால் கருத்து எழுதுவதில்லை. சிலர் படித்துவிட்டு அமைதியாகப் போய்விடுகிறார்கள். சிலர் ஒத்துக்கொள்வார்கள் சிலர் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். சிலர்  இமெயில் கருத்து சொல்லுவார்கள் ... ஏது எப்படியோ ஆனால் அவர்கள் வருகை  தொடர்கிறது.

உண்மையைச் சொன்னால், முன்பு சில நேரங்களில் ஒரு பதிவுக்கு கருத்து வராமல் போனால் எனக்குள்ளும் ஒரு சந்தேகம் வந்திருக்கிறது: யாராவது படிக்கிறார்களா என்று  ஆனால் இன்று இந்த 70,19,932 என்ற எண்ணிக்கை அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டது. ஆமாம் யாரோ படித்துக்கொண்டிருக்கிறார்கள்.

என்  வலைத்தளத்திற்கு தொடர்ந்து வருகை தந்து கருத்துகள்  போடாமல் அமைதியாகப் படித்துவிட்டு செல்லும் அனைவருக்கும் இன்று தனியாக ஒரு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. நீங்கள் கருத்து போடவில்லை என்பதால் உங்களை நான் மறந்துவிடவில்லை.

உங்கள் பெயர் எனக்குத் தெரியாமல் இருக்கலாம்.   நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள் என்று தெரியாமல் இருக்கலாம்.   நீங்கள் என்னுடன் ஒத்துக்கொள்கிறீர்களா, இல்லையா என்பதும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இந்த எண்ணிக்கையில் நீங்கள் இருக்கிறீர்கள்.

அதுவே போதும்.  இப்படி  தொடர்ந்து எழுதுபவனுக்கு  சில நேரங்களில் ஒரு கருத்தை விட, யாரோ ஒருவர் இன்னும் வந்து படிக்கிறார்” என்ற உணர்வே மிகப் பெரிய ஊக்கம். காரணம் சிலர் அலுவலக இடைவேளையில் வாசித்திருக்கலாம்.  சிலர் பயணத்தில் மொபைலில் வாசித்திருக்கலாம்.   சிலர் இரவு அமைதியில் வாசித்திருக்கலாம்.  சிலர் வேறு நாடுகளிலிருந்து தமிழின் வாசனையைத் தேடி வந்திருக்கலாம். இப்படி எப்போது, எங்கிருந்து, எந்த மனநிலையோடு நீங்கள் வந்தீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் வந்திருக்கிறீர்கள். வாசித்திருக்கிறீர்கள். அதற்காக மனமார்ந்த நன்றி.

“அவர்கள்...உண்மைகள்” ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரை பல விஷயங்கள் மாறிவிட்டன. அரசியல் மாறிவிட்டது.   ஊடகங்களின் முகம் மாறிவிட்டது.  மக்கள் செய்திகளைப் பார்ப்பதும், வாசிப்பதும் மாறிவிட்டது.   சமூக வலைதளங்கள் வாசிப்பின் வேகத்தையே மாற்றிவிட்டன. ஆனால் எழுத வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இன்னும் மாறவில்லை.

சில நேரங்களில் எழுதாமல் இருந்திருக்கலாம். சில நேரங்களில் ஒரு பதிவு எழுதுவதற்கே பல நாட்கள் ஆகி இருக்கலாம். ஆனால் மனதில் ஏதாவது ஒரு விஷயம் உறுத்திக்கொண்டே இருந்தால், ஒரு கேள்வி எழுந்தால், ஒரு அநியாயம் கண்ணில் பட்டால், அல்லது நையாண்டியாகச் சொல்ல வேண்டிய ஏதாவது தோன்றினால் இதைப் பற்றி எழுதலாமேஎன்ற எண்ணம் வந்துவிடுகிறது.

அதுதான் இந்த ப்ளாக்கை இன்னும் உயிரோடு வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.  இந்த எண்ணிக்கை நம்முடையது

*70,19,932 பார்வைகள் என்பது என் எண்ணிக்கை மட்டும் அல்ல. பல ஆண்டுகளாக வந்து வாசித்தவர்களின் எண்ணிக்கையும் இது.

என்னைப் பாராட்டியவர்களுக்கு நன்றி.  என்னை விமர்சித்தவர்களுக்கு நன்றி.  என்னுடன் ஒத்துக்கொண்டவர்களுக்கு நன்றி.  என்னுடன் ஒத்துக்கொள்ளாதவர்களுக்கும் நன்றி.   பதிவைப் படித்து சிரித்தவர்களுக்கு நன்றி.   அதிலும், எந்தச் சத்தமும் இல்லாமல் தொடர்ந்து வந்து வாசித்துச் செல்லும் என் silent readers-க்கு ஒரு தனி நன்றி.

உங்கள் அமைதியும் ஒரு வகையான ஆதரவுதான்.

நேற்று counter 70,19,932 என்று காட்டியது. நாளை அந்த எண்ணிக்கை இன்னும் கூடலாம். எவ்வளவு ஆகும் என்று தெரியாது; அதைப் பற்றி இப்போது யோசிக்கவும் இல்லை.

இன்று எனக்குத் தரும் மகிழ்ச்சி ஒன்றுதான்:  

பல வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய சில வார்த்தைகள், இன்று கூட யாரோ ஒருவரை இந்த blog-க்கு அழைத்து வருகின்றன.

எழுதுபவனுக்கு  அதைவிட பெரிய சந்தோஷம் வேறு என்ன இருக்க முடியும்?
    
#அவர்கள்உண்மைகள் #MaduraiThamizhan #TamilBlog #TamilBlogger #TamilWriting #TamilReaders #TamilBloggers #SilentReaders #BlogMilestone #70LakhViews #7MillionViews #TamilLiterature #தமிழ்வலைப்பதிவு #தமிழ்பதிவர் #தமிழ்வாசகர்கள் #சைலன்ட்ரீடர்ஸ்


70,19,932 முறை இந்த வாசல் வழியாக வந்து சென்ற அனைவருக்கும் நன்றி.

கருத்து போட்டிருந்தாலும் சரி  
கருத்து போடாமல் அமைதியாக வாசித்திருந்தாலும் சரி  
நீங்கள் வந்ததால்தான் இந்தப் பயணம் இவ்வளவு தூரம் வந்திருக்கிறது.

#நான்  கிறுக்கி கொண்டே இருப்பேன்.

நீங்கள் வாசித்துக்கொண்டே இருந்தால் அதுவே எனக்கு போதும்.

அன்புடன்,  
மதுரைத்தமிழன்



#அவர்கள்உண்மைகள் #MaduraiThamizhan #TamilBlog #TamilBlogger #TamilWriting #TamilReaders
#TamilBloggers #SilentReaders #BlogMilestone #70LakhViews #7MillionViews #TamilLiterature
#தமிழ்வலைப்பதிவு #தமிழ்பதிவர் #தமிழ்வாசகர்கள் #சைலன்ட்ரீடர்ஸ்

2 comments:

  1. எழுதுவதற்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியே தனிதான். சமகால அரசியலை நகைச்சுவையுடன் வழங்குவது உங்கள் தனிச் சிறப்பு. . அரிய தகவல் சார்ந்த பதிவுகளும் வாசிப்பவர்களை ஈர்க்கிறது. தொடரட்டும் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. எழுத்துப் பணி தொடர வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.