Sunday, March 7, 2021

 

#avargal unmaigal

பெண்கள் ஹீமோகுளோபின் இரும்புச்சத்து குறித்து அதிகம் கவலைப்படும் காலம் எது ? 


கர்ப்ப காலம் தான். கர்ப்பிணியாக இருக்கும் பொழுது ஒரு நாளைய இரும்புச்சத்து தேவை.27 மில்லிகிராம் குழந்தை வளர்ச்சிக்குத் தாயின் இரும்புச்சத்து கணிசமான அளவு செலவிடப்படும் சூழலில் முறையாக இந்த இரும்புச்சத்தை கர்ப்பிணித்தாய் பெற வேண்டியது கட்டாயம்.ஆனால் இந்தியாவில் இன்றளவும் பெரும்பான்மை தாய்மார்கள்கர்ப்ப கால ரத்த சோகை நோய்க்கு ஆளாகின்றார்கள்.

கர்ப்ப காலத்தில் இயற்கையான மாற்றமாகவே ரத்த சோகை ஏற்பட்டாலும் அதன் குறைபாட்டு அளவுகளைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.

ரத்த சோகை நிலையை அபாயக் கட்டத்திற்குத் தொட விட்டால் அது கர்ப்ப காலத்தில் குழந்தையின் வளர்ச்சியில் ஊறு விளைவிக்கும்.
மேலும் பிரசவ காலத்தில் இன்னும் கூடுதலாக உதிரப்போக்கு நேர்ந்துவிடின் தாயின் உயிரைப்பறிக்கும் அளவு கொடிய ஒன்றாக இருக்கின்றது இன்றளவும் இந்தியாவில் கர்ப்ப கால மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய தாய் சேய் மரணத்தில் கணிசமான பங்கு - இந்த ரத்த சோகைக்கு உண்டு.


சரி இந்தக் கர்ப்ப கால ரத்த சோகையைச் சரி செய்வது எப்படி? அது குறித்து இந்தக் கட்டுரையில் காண்போம்

 




கர்ப்பம் தறிக்காத பெண்கள் மற்றும் ஏனைய வயதுடைய பெண்களுக்கு வாரம் இரண்டு/மூன்று நாட்கள் ஈரல் 50 முதல் 100 கிராம் வரை கொடுக்கலாம் என்று கூறியிருந்தேன்.ஆனால் கர்ப்ப காலத்தைப் பொறுத்தவரை ஈரல் உண்பது என்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது.அது என்ன சிக்கல்?

100 கிராம் ஈரலில் 18 கிராம் அளவு இரும்புச்சத்து .அதுவும் சிறப்பாக உடலால் கிரகித்துக் கொள்ளப்படும் ஹீம் இரும்புச்சத்து இருக்கிறது
ஆனால் கூடவே அதில் விட்டமின் ஏ எனும் மாலைக்கண் வியாதியைத் தடுக்க உதவும்.சத்தானது மிக அதிக அளவில் இருக்கிறது.விட்டமின் ஏ கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒரு நாளைக்கு 800 மைக்ரோ கிராம் கிடைக்க வேண்டும்.விட்டமின் ஏ குறைபாடு தாய்க்கு இருப்பின் கர்ப்ப காலத்தில் அவருக்கு மாலைக்கண் வியாதி ஏற்படலாம்.பிறக்கும் குழந்தை எடை குறைவாகப் பிறக்கும் வாய்ப்பு உள்ளது.பிறக்கும் குழந்தைக்குப்  பின்னாளில் டயாபடிஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. கூடவே காது சார்ந்த நோய்கள் குழந்தைக்கு ஏற்படுகின்றது.இருப்பினும்

கர்ப்ப காலத்தில் விட்டமின் ஏ அளவுகளைத் தினமும் 10,000 யூனிட்டுகளுக்கு மேல் அல்லது வாரத்திற்கு 25,000 யூனிட்டுகளுக்கு மேல் எடுக்கும் போதுபிறக்க இருக்கும் குழந்தைகளுக்குப் பிறவி குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்று பல ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் விட்டமின் ஏ அளவுகளை மேற்கூறிய வரம்புக்கு மேல் உண்பதால் கருக்கலைப்பு ஏற்பட வாய்ப்பு சிறிது அதிகமாகின்றது என்பதால் கட்டாயம் கர்ப்பிணித்தாய்மார்கள் முதல் மூன்று மாதங்களில் ஈரல் / மீன் எண்ணெய் மாத்திரைகள் போன்றவற்றை உண்பதைத் தவிர்த்து விடுவது சிறந்தது. கர்ப்பிணிப் பெண்களின் ஒரு நாளைய விட்டமின் ஏ தேவை - 700 முதல் 800 மைக்ரோகிராம் தான்.

இதை எளிதாக முட்டைகள் பால் மற்றும் பால் பொருட்கள் மீன், மாமிசம் கேரட் , கீரை , பப்பாளி, பூசணி ஆகியவற்றிலிருந்து இந்த அளவுகளைப் பெற முடியும்  எனவே தேவைக்கு அதிகமாக விட்டமின் ஏ தரும் ஈரலைக் கர்ப்ப காலம் முழுவதுமே தவிர்ப்பது நல்லது.பிறகு இரும்புச்சத்துக்கு என்ன செய்யலாம் என்று கேட்பவர்களுக்கென்றே பிரத்தியேகமாக இரும்புச்சத்து மட்டும் அதிகமாகத் தரும் அதே நேரம் விட்டமின் ஏ துளியும் இல்லாத மண்ணீரல் எனப்படும் செவரொட்டி பலன் தரும் செவரொட்டியில் 100 கிராமில் 42 கிராம் இரும்புச்சத்து உள்ளது

எனவே கர்ப்பிணிகள் தாராளமாக வாரம் மூன்று முறை செவரொட்டி எனப்படும் மண்ணீரலை 50 முதல் 100 கிராம் புசிக்கலாம்.நான்கு கால் உயிரினங்களின் ஈரலில் உள்ள விட்டமின் ஏ அளவுகள் பின்வருமாறு

100 கிராம் செம்மறி ஆட்டு ஈரலில் 25000 யூனிட்
100 கிராம் மாட்டு ஈரலில் 18000 யூனிட்
100 கிராம் பன்றி ஈரலில் 18000 யூனிட்

அதே
ஒரு கைப்பிடி அளவு துருப்பனிக்கரடியின் ஈரலில் 90 லட்சம் யூனிட் விட்டமின் ஏ உண்டு.
எனவே எஸ்கிமோக்கள் கூட அதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் துருவப்பனிக்கரடியின் ஈரலை உண்ணவே மாட்டார்கள்
ஒரு நாளைய தேவையான 10,000 யூனிட்டுக்கு மேல் தொடர்ந்து விட்டமின் ஏ எடுக்கப்படும் போது
"Pseudo tumor cerebri" என்ற பிரச்சனை ஏற்படும். இதை HYPERVITAMINOSIS A என்று அழைக்கிறோம்.

இந்த நோயின் அறிகுறிகள்
தலைவலி
பார்வை மலுங்குதுல்
தலைச்சுற்றல்
மந்தத்தன்மை
குமட்டல்
வாந்தி
தோல் உரிதல்
எடை இழப்பு போன்றவை ஏற்படலாம்

இத்தகைய அறிகுறிகள் இருப்பவர்கள் தொடர்ந்து விட்டமின் ஏ அடங்கிய சப்ளிமெண்ட் எடுக்கிறீர்களா? என்று பாருங்கள் அல்லது நான்கு கால் உயிரினங்களின் ஈரலைத் தேவைக்கு மீறிச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறீர்களா? என்று பாருங்கள் உடனே அவற்றை நிறுத்தி விட்டால் பிரச்சனை சரியாகிவிடும்.முடிவுரை பரிந்துரைகள் கர்ப்ப காலத்தில் இல்லாத பால் புகட்டாத பெண்கள் மற்றும் இதர இனப்பெருக்கக் கால வயதினருக்கு இரும்புச்சத்து அதிகமாக வாரம் இருமுறை 50-100 கிராம் ஈரல் உண்ணலாம் அல்லது வாரம் இருமுறை 50-100 கிராம் செவரொட்டி உண்ணலாம்
இவற்றை உண்ணாதவர்கள்

சிவப்பு மாமிசம்
கீரைகள்
முருங்கைக்கீரை
பீன்ஸ்
சுண்டக்காய்
பாதாம்/ நிலக்கடலை
பீட்ரூட்
போன்றவற்றை இரும்புச்சத்துக்காக எடுக்கலாம்.

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இரும்புச்சத்துக்காகக் கட்டாயம் முதல் மூன்று மாதங்கள் ஈரல் எடுக்கக்கூடாது அதற்கடுத்த மாதங்களில் ஈரல் 50 கிராம்( வாரம் ஒரு முறை அல்லது இருமுறை எடுக்கலாம்) பிரச்சனையில்லை அதற்கு மாற்றாக வாரம் மூன்று முறை 100 கிராம் செவரொட்டி( Spleen) எடுப்பது சிறந்த இரும்புச்சத்தைத் தரவல்லது கூடவே மருத்துவர் பரிந்துரைக்கு இரும்புச்சத்து மாத்திரைகளைக் கர்ப்பிணிகள் எடுக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் அன்னைகள் மாமிசம் உண்ணாதவராக இருந்தால்
கட்டாயம் மருத்துவர் பரிந்துரைத்த இரும்புச் சத்து மாத்திரையுடன் முருங்கைக்கீரை, நிலக்கடலை, சுண்டக்காய்,பீன்ஸ் , பாதாம், பீட்ரூட் போன்றவற்றை உண்ணலாம்.

பதிவை எழுதியவர் :
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை




பலரும் படித்து பலன் பெற Dr.A.B.ஃபரூக் அப்துல்லா அவர்கள் எழுதிய பதிவை இங்கு மறுபதிவு செய்கின்றேன், நன்றி


அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. மருத்துவருக்கும் நன்றி...

    ReplyDelete
  2. மருத்துவக் குறிப்புகளுக்கு நன்றி.

    ReplyDelete
  3. மகளிர் தினத்தில் மகளிருக்குத் தேவையான அருமையான பதிவு...வாழ்த்துகளுடன்..

    ReplyDelete
  4. நல்லதொரு கட்டுரை. நன்றி.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.