Sunday, September 8, 2019

கட்டுபடுத்துவதும் அணைப்பதும்

முள்ளை முள்ளால் எடுப்பதுபோல், பல சமயம் செயற்கையாகத் தீ மூட்டி காட்டுத் தீயை அணைப்பார்கள். எரியும் பொருள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு அருகே இருந்தால் அதன் மூலம் தீ பரவும்.

எடுத்துகாட்டாக, ஒரே ஒரு வைக்கோலை தீயில் வையுங்கள். தீ அருகே உள்ளவரை மட்டுமே வைக்கோல் கொழுந்துவிட்டு எரியும். அதன் பின்னர் வெறும் கங்குடன் அணைந்துவிடும்.
ஆனால், நிறைய வைக்கோலை முறுக்கி தீயில் வைத்தால் தொடர்ந்து கொழுந்து விட்டு எரியும். இதே கருத்தைப் பயன்படுத்தி தீயைப் பரவ விடாமல் செய்யலாம்.


முன்னுரிமை
மேலே உள்ள படத்தில், x என்ற இடத்தைச் சுற்றியுள்ள பகுதியில் தீயை அணைப்பது எளிதல்ல. எனவே, அதற்கு முன்னுரிமை தரமாட்டார்கள். தீ பரவாத காட்டுப் பகுதியைப் பாதுகாப்பதே முக்கிய குறிக்கோளாக இருக்கும்.

இடைவெளி ஏற்படுத்துதல்
மரத்துக்கு மரம் தாவும் குரங்கு போல, எரியும் பொருட்களின் வழியே தீ பரவும். எரியும் பொருட்களுக்கு இடையே இடைவெளி ஏற்பட்டால் தீ பரவாது. மேலே உள்ள படத்தில் x என்ற இடத்தில் தீப்பற்றி காற்று வீசும் திசையில் தீ பரவுகிறது.

தீ பரவும் திசையில் சில அடி தொலைவுக்கு, புதர், புல், மரங்களை வெட்டி ஒரு வெட்ட வெளியை உருவாக்குவார்கள். இடையே ஒரு சில புதர்கள், மரங்கள் இருந்தாலும், ஒரு வைக்கோல் கொழுந்து விட்டு எரியாமல் அணைந்து விடும். எனவே தீ பரவாது.
தாவரங்களை அகற்றுவது

குறிப்பிட்ட பகுதியைத் தேர்வுசெய்து, அந்தப் பகுதியில் செயற்கையாகத் தீ மூட்டுவார்கள். ஓரளவுக்குத் தாவரங்கள் எரிந்து போனதும் நீர் ஊற்றி அணைத்து விடுவார்கள்.
இப்போது எரியும் காட்டுக்கும் மற்ற அடர்ந்த காட்டுப் பகுதிக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டு விடும். இந்த இடைவெளியைத் தாண்டி தீ பரவ முடியாது.

பின்புறம் அணைப்பது
விமானம், ஹெலிகாப்டர் கொண்டு தீயின் பின்புறம் அணைப்பார்கள். காற்றின் திசை மாறினால், மற்ற இடத்துக்குப் பரவாமல் தடுக்க இது உதவும். x பகுதியின் அருகே மரங்கள் எரிந்து முடிந்ததும், அது பொட்டல் காடாக மாறும். தீ மறுபடி அந்தப் பகுதி வழியே பரவாது.

நீர்க் கரைசல்
தீயை அணைக்கப் பயன்படுத்தப்படும் நீரில், நுரைத் தடுப்பான் (foam retardant) அதிகம் இருக்கும். இந்த நீர்க்கரைசல் தீயை அணைப்பதோடு, எரியாத மரங்களைத் தீ பிடிக்காமல் காப்பாற்றும்.

போயிங் 747
இந்த வகை விமானத்தை நீர்த் தொட்டி போல மாற்றி, பொலிவியா நாட்டின் அரசு அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க முயற்சி செய்து வருகிறது.

- த.வி.வெங்கடேஸ்வரன்
மத்திய அரசு விஞ்ஞானி

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.