Thursday, March 10, 2011



'உங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல!''


ஏப்ரல் 13... தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தல் என்றதுமே, திருமங்கலம் பக்கம் நம் நினைவுகள் திரும்புவதைத் தவிர்க்க முடியவில்லை. வழக்கம்போல் இந்த முறையும், அள்ளி வழங்கும் வைபோகங்களும் அராஜக அத்துமீறல்களும் தமிழகத் தேர்தலில் கரை புரண்டு ஓடும் வாய்ப்பு இருக்கிறது. ஐந்து வருட ஆட்சியை மனதுக்குள் அசைபோட்டு, நியாயத் தராசை நெஞ்சுக்குள் ஆடவிட்டுக்கொண்டு இருக்கும் வாக்காளன், இந்தத் தேர்தலில் ஆற்ற வேண்டிய கடமை என்ன?



தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றநரேஷ் குப்தா பக்குவம் சொல்கிறார்...



''ஒவ்வொரு வாக்காளரின் முதல் கடமை, வாக்காளர் பட்டியலில் தங்க ளின் பெயர் இருக்கிறதா என்பதைஉறுதி செய்வதுதான். வாக்களிக்கும் ஆர்வமும் அக்கறையும் மட்டும் இருந்தால் போதாது. முறைப்படி வாக்காளர் அடையாள அட்டை பெற்று, நமக்கான வாக்கு உரிமையை நாம் பெற்றிருக்க வேண்டும். நமது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா, இல்லையா என்பதை நாம் இணையதளம் மூலமே தெரிந்துகொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால், இப்போதும் தாமதமாகி விடவில்லை. உடனடியாக வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேருங்கள்.


வாக்காளர் பட்டியலில் தொடர் திருத்தம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டு இருக்கும் நிலையில், அதிகாரிகள் அந்தவேலை யில் தீவிரமாவதற்குள், வாக்காளர் பட்டியலில் நமது பெயரைச் சேர்ப்பது அவசியம். காரணம், நம் ஒவ்வொருவரின் வாக்கும் அந்த அளவுக்கு வலிமை வாய்ந்தது. 'வாக்களிப்பது புனிதமான கடமை’ என்கிறார் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். 1920-லேயே 'யங் இந்தியா’ புத்தகத்தில் வாக்களிக்கும் அவசியம் குறித்து மகாத்மா காந்தி வலியுறுத்தி இருக்கிறார். ஐந்து வருட அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியை நமது விரல் நுனிக்குக் கொடுத்திருக்கிறது ஜனநாயகம். 'என்னை யார் ஆள வேண்டும் என்பதை நானே தீர்மானிப்பேன்’ என்கிற உறுதிமொழியை ஒவ்வொரு வாக்காளரும் தங்களது தீர்க்கமான தீர்மானம் ஆக்கிக்கொள்ள வேண்டும்.



சமீப காலமாக மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பதிவாகும் வாக்குகள் குறைவாகி வருகின்றன. 'க்யூவில் நிற்க வேண்டுமே’ என்கிற சலிப்பிலும், 'இன்றைய விடுமுறையை வேறு வேலைக்காகப் பயன்படுத்தலாமே’ என்கிற அக்கறையற்ற ஆசையிலுமே பலர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வது இல்லை. சினிமா தியேட்டரில் கூட்டம் இருக்கிறதுஎன்பதற்காக நாம் எப்போதாவது திரும்பி வந்து இருக்கிறோமா? தடுப்பு ஊசி போடும் இடத்தில் கூட்டம் இருக்கிறது என்பதற்காக நாம் வந்துவிடுகிறோமா? ஐந்து வருடங்களைத் தீர்மானிக்கும் வேலைக்காக ஐந்து மணி நேரம்கூடக் காத்துக்கிடக்கலாம். பொறுமை இல்லாமல் புறக்கணிப்பு காட்டுபவர்களுக்கு இந்தப் புரிதல் அவசியம்.



இன்னும் சிலரோ, 'போட்டியிடுபவர்களில் ஒருவரும் சரி இல்லை’ என்கிற ஆதங்கத்தில் தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள். இன்றைய நிலையில், ஒரு சட்டமன்ற தொகுதியில் 15 பேருக்கும் குறையாத வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஒருவர் சரி இல்லை என்றாலும், இன்னொருவர் சரியா னவராக இருப்பார் என நம்பலாம். அப்படி யாருமே நம் மனதுக்கு ஒவ்வாதவர்களாக இருந்தாலும், நமது புறக்கணிப்பைப் பதிவு செய்யும் விதமாக 49 ஓ படிவத்தைப் பூர்த்தி செய்யலாம்!



'நம் ஒருவருடைய வாக்கால், எல்லாம் மாறிவிடுமா?’ என்கிற தயக்கமும் பல ருக்கு இருக்கிறது. நாம் நினைப்பதையே ஒவ்வொரு அரசியல்வாதியும் நினைத்தால், நம் வீடு தேடி வருவார்களா? இன்றைய நிலையில், பல தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் மிகச் சொற்பமான எண்ணிக்கையில் அமைகிறது. 'நம் வாக் குதான், நாட்டின் போக்கு’ என்பதை இத் தகைய நிகழ்வுகள் நமக்கு அப்பட்டம் ஆக்குகின்றன. அப்படி இருந்தும் வாக்களிக்கும் ஆர்வம் பெரிய அளவில் பெரு காதது ஏனோ?!



தேர்தல் களத்தைச் சுற்றி வந்தவனாகச் சொல்கிறேன்... இன்றைய அரசியலில் அரசியல்வாதிகள் அதிகாரத்துக்காக எதையும் செய்கிற அளவுக்குத் துணிந்து விட்டார்கள். அதற்காகத் தேர்தல் விதி களை மீறி பணத்தை இறைக்கிறார்கள். வாக்காளர்கள் இதற்கு ஒருபோதும் மயங்கக் கூடாது. பணத்துக்கும், பிரி யாணிப் பொட்டலத்துக்கும், மது பானத்துக்கும் வாக்குகளை அடகுவைக்கும் நிலை இனியும் தொட ரக் கூடாது. 'எனது வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்பதை ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் பொட்டில் அடித்தாற்போல் புரியவைக்க வேண்டும்.



முன்பெல்லாம் அரசியல்வாதிகள் ஓட்டு கேட்டு வரும்போது, 'எங்கள் பகுதிக்கு மருத்துவமனை வேண்டும், பள்ளிக்கூடம் வேண்டும், குடிநீர்க் குழாய் வேண்டும்’ என்று கோரிக்கை வைத்த வாக்காளர்கள் இப்போது, 'பணம் வேண்டும்’ எனப் பகிரங்கமாகவே கேட்கிறார்கள். பல இடங்களில், 'அந்தக் கட்சி வேட்பாளர் அதிகப் பணம் கொடுத்து இருக்கிறார். நீங்கள் குறைவாகக் கொடுக்கிறீர்களே?’ என வற்புறுத்திப் பணம் கேட்கும் நிலையும் நீடிக்கிறது. வாக்காளர்களின் மனப்போக்கு ஏன் இந்த அளவுக்குப் புரையோடிப் போனது என்று எனக்கு அதிர்ச்சியாகவும் அச்சமாகவும் இருக்கிறது!



இந்த நேரத்தில், ஒவ்வொரு வாக்காளரும் உணர வேண்டிய உண்மை... 'இப்படி எல்லாம் விரட்டி விரட்டிப் பறிக்கப்படும் நம் ஒவ்வொருவரின் வாக்கும் எவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருக்கும்’ என்பதைத்தான்!



ஒரு வாக்கை விற்பது, ஐந்து வருடங்களை விற்பதற்குச் சமமான வேதனை. அந்த ஐந்து வருட ஆட்சியில் தவறு ஏதும் நிகழ்ந்தால், வாக்கைச் சரியாகப் பயன்படுத்தாத நாமும்தான் அதற்குப் பொறுப்பு. வேட்புமனு தாக்கல் செய்யும்போதே ஒவ்வொரு வேட்பாளரின் கல்வித் தகுதி, சொத்து விவரம், வழக்கு நிலுவை விவரம் என அனைத்தையும் அஃபிடவிட்டில் சொல்கிறார்கள். அதுபற்றி எல்லாம் வாக்காளர்கள் அறிந்து, தெளிந்து நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.



இன்றைய நிலையில் பெரும்பாலான வாக்காளர்கள் கட்சியையும், தலைவரையுமே மனதில் வைத்து வாக்கு செலுத்துகிறார்கள். 'வேட்பாளர்களில் யார் தகுதியானவர்?’ என்பதை ஆராய்ந்து, அதன்படி வாக்களிப்பதுதான் அரசியல் நலத்துக்கு வழிவகுக்கும். தரமான ஆட்களைத் தேர்வு செய்யும் பக்குவமும் அக்கறையும் நமக்கு உண்டாகும் நாளில், நிச்சயமாக இந்த தேசமே புத்துணர்ச்சிகொள்ளும்!



அக்கப்போரும், அமளி துமளிகளும் நிரம்பிவிட்ட அரசியலில் தர்மத்தை நிலைநாட்டும் கடமை ஒவ்வொரு வாக்காளருக்கும் இருக்கிறது. 'இவ்வளவு அழுக்கை அகற்ற ஒரு துளி போதும்’ என சலவை விளம்பரங்களில் வருமே... அதேபோல் நம் விரலில் வைக்கப்படும் ஒரு துளி மையால், சமூக அழுக்கை நிச்சயம் சலவை செய்துவிட முடியும், அதை நாம் நியாயமாகப் பயன்படுத்தும் பட்சத்தில்!''







நன்றி விகடன்

7 comments:

  1. சிந்திக்க நிறைய கருத்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. ஹேய்...கொஞ்ச நேரம் முன்னாடி கட்சி ஆளுங்க எங்க வீட்டில் எத்தனை ஆளுங்கன்னு கணக்கெடுத்துட்டு போயிட்டாங்களே...மதுரையில் ஒவ்வொரு கட்சியும் தலைக்கு எவ்வளவு அதிகமா வாக்காளர்களுக்கு அமௌன்ட் கொடுக்கிறதுன்னு போட்டியே நடக்குதாம்....ஹீ...ஹீ...டண்டணக்கா...ஏய்...டனக்குனாக்கா...:)

    ReplyDelete
  3. ஆனந்தி மேடம் உங்கள் வீட்டுக்கு வரும் கட்சிகாரர்களிடம் பணம் எல்லாம் வேண்டாம் அமெரிக்காவிற்கு ஒரு டிக்கெட் மட்டும் வாங்கி கொடுக்குமாறு கேட்கவும்..

    அப்புறம் அழகிரி அண்ணாவிற்கு இமெயில் ஒன்றை அனுப்பியுள்ளேன் என் பங்கு பணத்தை உங்களிடம் கொடுத்துவிடுமாறு தகவல் அனுப்பியுள்ளேன். அந்த பணத்தை கொண்டு கொக்கோ மிட்டாய் வாங்கி சாப்பிட்டாவாரு என் பதிவிற்கு எல்லாம் பின்னுட்டம் போடுங்கள்

    ReplyDelete
  4. ///ஹீ...ஹீ...டண்டணக்கா...ஏய்...டனக்குனாக்கா////
    என்ன ராஜேந்தர் கட்சிக்கு கொள்கை பரப்பு செயலாளரா நீங்கள்

    ReplyDelete
  5. சித்ரா மேடம் உங்கள் கருத்து பதிவிற்கு எனது நன்றி

    ReplyDelete
  6. "ஓட்ட போட்டேன்னு சொல்லாதே. வித்தேன்னு சொல்லு"

    அண்ணன் அஞ்சாசிங்கம் புட்டுபுட்டு வைக்கிறார்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.