Thursday, September 22, 2022

தமிழர்கள் ஹிந்தி கற்றுக் கொள்ளக் கூடிய  காலம் வந்துவிட்டது. ஏன் தெரியுமா?
 

@avargal unmaigal



இனிமேலும் தமிழர்கள் ஹிந்தி தெரியாது போடா? ஹிந்தி கற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை.

தமிழர்களின் சிந்தனைகள் செயல்பாடுகள்  இந்தியா முழுவதும் பரந்து விரிய வேண்டுமானால் அவர்கள் கண்டிப்பாக ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தங்களது எண்ணங்களைச் சிந்தனைகளை வட இந்தியாவில் கடைக்கோடியில்  வசிக்கும் ஹிந்தி பேசும் மக்களிடம் சென்று அடையும்படி செய்ய முடியும். அப்போதுதான் இந்தியா மாறுபட்ட இந்தியாவாக  புதிய இந்தியாவாக மாற முடியும்.

இதைச் சொல்லக் காரணம் வட இந்தியர்கள் தென் இந்தியர்களைக் காட்டிலும் படிப்பறிவு மிகக் குறைந்தவர்கள் பல இடங்களில் அவர்களுக்குச் சரியான கல்வி அறிவு கிடைக்கச் சிறிதும் வசதிகள் கூட இல்லை.. தங்களுக்குத் தேவையான அடிப்படை உரிமைகள்  அரசிடம்  தட்டிக் கேட்க்கும் அளவிற்குக் கூட அறிவில்லாமல்தான் இருக்கிறார்கள் அதனால்தான் அங்கு  மத வெறியாட்டங்களும் தலித்துகளுக்கு எதிரான செயல்களும் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டு இருக்கின்றன.


அப்படிப்பட்டவர்கள் இருப்பதால்தான்  வட இந்தியத் தலைவர்கள் பல வெற்றிகளைத் தொடர்ந்து பெற்று மத்திய ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து இருக்கிறார்கள். மத வெறியை ஊட்டி வருகிறார்கள். அதில் எல்லாம் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் கல்வியறிவு எல்லா மக்களுக்கும்  கிடைக்க வேண்டும். அப்படி இல்லையெனில் படித்த மேற் சாதியில் பிறந்தவர்கள் படிப்பறிவு இல்லாதா மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி அதன் மூலம் தங்களுக்கு தேவையானவற்றைச் சாதித்துக் கொள்கிறார்கள்


இதற்கு முக்கியம் கல்வியறிவு வேண்டும் நல்ல முற்போக்கு சிந்தனைகள் வேண்டும்... அதை அரசு செய்து தராது.. ஆனால் அதை அரசிடம்  தட்டிக் கேட்க வேண்டும் என்றால் போராட வேண்டும் . போராடாமல் ஏதும் கிடைத்துவிடுவதில்லை...

ஆனால் போரட்டாதிற்கு முன் நமக்கு என்னென்ன  உரிமைகள் இருக்கிறது அதில் என்ன உரிமைகள் நமக்குக் கிடைக்கிறது கிடைக்கவில்லை என்பதை அறியக் கொஞ்சமாவது   சிந்திக்கத் தெரிய வேண்டும்.. அப்படிச் சிந்திக்கவே தெரியாமல் இருப்பவர்களுக்கு  அவர்களின் சிந்தனையை வளர்க்க  யாரவது  அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்... அப்போதுதான் அவர்கள் சிந்திக்கத் தொடங்கிப் போராடத் தொடங்குவார்கள்


அவர்களின் கண்களைத் திறக்க பெரியாரின் கொள்கைகளை அவர்களிடத்தும் நாம் எடுத்துச் சொல்ல வேண்டும்... பெரியாரின் கொள்கைகளை நாம் தமிழில் தமிழகத்தில் மட்டுமே பேசிக் கொண்டிருப்பதால் இனி பயன் இல்லை அதை ஹிந்தியில் பேசி இந்தியாவின் கடைக் கொடியில் இருக்கும் மக்களிடத்தும் செல்லுமாறு எடுத்துரைக்க வேண்டும் அதற்குத்  தமிழர்கள் ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும்.. ஆங்கிலத்தில் பேசலாம்தானே என்றால் பேசலாம் ஆனால் அது அடித்தட்டு மக்களுக்குப் புரியாது தெரியாது  அடித்தட்டு மக்களுக்குச் செல்ல வேண்டுமென்றால் அவர்கள் பேசும் உள்ளூர் மொழியில்தான் நமது கடுத்துக்களை சிந்தனைகளை எடுத்துரைக்க முடியும் அது அவர்களுக்குப் புரியும்


இப்படிச் செய்தால் தென் மாநில தலைவர்களும் வருங்காலத்தில் இந்தியாவை ஆள முடியும் தென் மாநிலங்கள் பெற்ற வளர்ச்சி போல இந்தியாவும் ஒரே சீராக வளர்ச்சிகள் பெற முடியும் இந்தியாவும் புதிய இந்தியாவாக மாற முடியும்

திருக்குறள் திருவள்ளுவரால் தமிழில் எழுதப்பட்ட ஒரு சிறந்த நூல் அதில் சொல்லி இருக்கும் கருத்துக்கள் காலம் காலமாக எல்லோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் ஆனால் அது தமிழ் மொழியிலிருந்தால் மட்டும் எல்லோரையும் சென்று சேருமா என்ன? அது உலகத்தில் உள்ள பல  உள்ளூர் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதாலே அது உலகின் மிகச் சிறந்த நூலில் ஒன்றாக இன்றும் போற்றப்படுகிறது



பிடிஆர்#PTR இந்தியாடுடேயில் ஆங்கிலத்தில் பேசிய போது அவரின்  பேச்சுகள் வட இந்தியா முழுவதும் படித்தவர்கட்கிடையே ஒரு அதிர்வை ஏற்படுத்தி அது பாராட்டதக்கதாக இருந்தது,. அதையே அவர் ஹிந்தியில் பேசி இருந்தால் வட இந்தியாவில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களிடையே சென்று ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் அல்லவா?. ஒரு தீக்குச்சி இருந்தால் போதும் ஒரு பெரிய காட்டையே  எரித்துவிடலாம் அதுபோலத்தான் பீடி ஆரின் பேச்சும்   அவர் போல பலரும் பேசப் பேசத்தாம் மாற்றம் எழும் .ஆ ராசாவின் பேச்சும் ஹிந்தியிலிருந்திருந்தால் அவர் இந்தியத் தலைவர்களில் ஒருவராக வலம் வர முடியும்.


ஸ்டாலின் நினைத்தால் திமுக கட்சியைத்  தேசியக் கட்சியாக அறிவித்துப் பிடிஆர் ,ஆ.ராசா  போன்ற பலரையும் வட மாநில தலைவர்களாக அறிவித்து அங்கு வலம் வரச் செய்யலாம். அப்படி செய்தால் இந்திய வரலாற்றில் சிறப்பு மிக்க தேசியதலைவராக அவரின் பெயரும் இடம் பெறும்

ஆனால் என்ன அவர் அப்படியெல்லாம் செய்ய அவரிடம் போர்க்குணம் இல்லை. மோடியிடம் சரணடைந்து ஆன்மிக வழியில் செல்லும் எண்ணம்தான் இருக்கிறது

டிஸ்கி : தமிழர்கள் ஹிந்திக் கற்றுகொள்வதால் தங்கள் அறிவை அல்ல ஹிந்திகாரர்களின் அறிவை வளர்க்க உதவும். இந்தியாவை வளர்க்க உதவும் அதனால்தான் சொல்லுகின்றேன் தமிழர்கள் ஹிந்திக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று



அன்புடன்
மதுரைத்தமிழன்
( என் மனதில் எழும் எண்ணங்கள் )





இன்று நான் எழுதிய பதிவை படித்தது முகநூலில் நான் படித்த பதிவில் உள்ள கருத்துக்கள்  இங்கு பொறுத்தமாக இருக்கும் என்பதால் சகோதரர்  Sathish Chelladurai பகிர்ந்த பதிவை இங்கு மறுபதிவு செய்கின்றேன்

@Sathish Chelladurai
முக்கியமான பதிவு கருதி பகிர்கிறேன்...
Mathur Sathya post


இதுவரை பீகாரில் ஏறத்தாழ 50க்கு மேற்பட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான சாமானிய மக்களின் இல்லங்களுக்கு சென்று சந்தித்து பேசி வருகிறேன்.

ஒவ்வொருவருக்கும் நான் தமிழ் நாட்டில் இருந்து வருகிறேன் என்றதும் அத்தனை மரியாதையும் உர்ச்சாகமும் வந்துவிடுகிறது. "என் மாமா பயன் அங்கதான் வேலை பாக்குறான்", "எங்க சித்தப்பா பத்து வருசமா அங்க தான் இருக்காரு", "என் பங்காளி சொல்வான் அந்தூரு மாதிரி வரவே வராதுன்னு" என்பது போன்ற வரிகளை நான் கேட்காத கிராமமே இல்லை. எல்லா வீட்டிலும் "அய்யோ உங்க மக்களெல்லாம் சோறு தான சாப்பிடுவீங்க.. முன்னாடியே நீங்க வர்ரது தெரிஞ்சிருந்தா சோறு வச்சிருப்போம்" என்பார்கள் மிகுந்த அன்புடன்.
அப்போது எனக்கு ஏற்படும் உணர்வை எப்படியாவது "வடக்கன்", "பான்பராக் வாயன்" என்று கேலிப் பேசித் திரியும் விடலைப் பசங்களுக்கு கடத்திவிட வேண்டும் என்பது போல் இருக்கும்.

எதோ பிறவியிலேயே கல்வியும் மேம்பட்ட ஆற்றலையும் பெற்றது போலவும், இயல்பாகவே தங்கள் முளையில் முற்போக்கு சிந்தனைகள் ஊற்றுவது போலவும் வடக்கே இருப்பவர்கள் மீது காட்டும் ஏளனம் பார்ப்பனியம் தான். இங்க நீ படிச்சது, நல்ல ரோட்ல நடமாடுறது, நல்ல தண்ணில குளிக்கிறது எதுவுமே சும்மா வரல, உன் சொந்த உழைப்பில வரல. உனக்காக உன் முன்னாடி வாழ்ந்து செத்தவங்க போராடி தான் நீ இங்க சொகுசா இருக்க. அவங்களுக்கு அது இன்னும் வாய்க்கல. அதான் வித்தியாசம். தன் உழைப்பே போடாத அப்பன் சொத்தில் உட்கார்ந்துக் கொண்டு இல்லாதவர்களை பழிக்கும் பண்ணையார் மவனுக்கும்... போராளிகள், சீர்திருத்தவாதிகள் போராடி வாங்கித்தந்த உரிமைகளை அனுபவைத்துக்கொண்டு அது இல்லாதவர்களை பழிக்கும் உனக்கும்  ஒரு வித்தியாசமும் இல்ல மகனே.

பிகு: நமக்கு பஞ்சாயத்தெல்லாம் இங்கிருக்கும் அதிகார வர்க்க பார்ப்பனிய சிந்தனைக் கொண்ட பணக்காரனுகளோட தான்.



1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.