அந்த காணொளி பற்றி பலரும் அரைவேக்காட்டு தனமாகப் பேசி எழுதியும் கொண்டு வருகிறார்கள் அவைகள்தான் சமுக வலைத்தளங்களில் நம் கண்முன்பே வருகிறது.
அப்படி பலரும் அரைவேக்காட்டு தனமாக எழுதிப் பதிவிடும் போது ஒரு சிலர் மட்டும் அதுவும் சில பெண்கள் மட்டும் சமுக உணர்வுடன் அதைப் பற்றி மிகச் சரியாகச் சிந்தித்து தன் கருத்துகளை எழுதிப் பதிவிட்டு உள்ளனர் அப்படிப் பதிவிட்டவரில் ஒருவர்தான் அகிலா என்பவர் அவர் எழுத்தாளர், விமர்சகர் & நுண்கலைஞர். உளவியலாளர் இவர் பத்தொன்பது நூல்களை எழுதியுள்ளார்.அவர் எழுதி வெளியிட்ட பதிவுதான் இன்றைய பதிவும் மற்றொன்று புதியமாதவி என்பவர் எழுதி பதிவிட்ட இன்னொருபதிவும்
---------------------------------------------------------------------------------------
சில விஷயங்களைப் பேசக்கூடாதுன்னு நினைப்பேன், ஆனால் அத்துமீறல்களைப் பார்க்கும்போது எழுத வைத்துவிடுகிறது. இந்த பெண்ணியம் வெங்காயம் எல்லாம் என்னவென்று நிறைய பெண்களுக்குப் புரியவில்லையா அல்லது அதுவே சற்று ஓவராக எடுத்துக் கொள்ளப்படுகிறதா என்று தெரியவில்லை. இல்லைன்னா, பெண்களின் கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் எல்லாம் நிறைவேறிவிட்டதோ அப்படின்னும் தோணுது. இனி யாரும் எதுக்காகவும் போராட தேவையில்லையோன்னு தோணுது.
குளிக்கிறது தப்பில்ல, அதுவும் பாதி நிர்வாணத்தில் குளிப்பது தவறேயில்லை, அதை புகைப்படம் எடுப்பது வரை தவறில்லை. பொதுவெளியில் பகிர்வது கூட அவர்களின் விருப்பம். ஆனால் அதில் வரும் பெண்ணைக் கொச்சைப்படுத்தும் காமெண்ட்டுகள்? புகைப்படத்தைப் பதிவிடுபவர்களுக்கு, கமெண்ட் எழுதுவர்களுக்கு அதை வாசிக்கும் ஆண்களுக்கு அதுதான் பெண்ணியம் என்று நினைக்கும் பெண்களுக்கு ஆனந்தத்தைத் தரலாம். மற்ற பெண்களுக்கு? கொச்சைத்தனத்தைக் கொட்டி எழுதப்படும் எழுத்துகள் மொத்த பெண்களையும் கேவலப்படுத்துகின்றன. அம்மாவை தங்கையை அக்காவை என்று உறவுகளைக்கூட துகிலுரித்து காட்டுகின்றன.
இதைத்தானே தமிழினியில் வெளிவந்த இசைவு சிறுகதை செய்தது.. இந்த கதையின் அடிநாதமாய் இருப்பது உறவின் மீதான பாலியல் பார்வைகளை கட்டுடைப்பது தானே? அப்புறம் நீ எதுக்கு மனுஷனாக, நாகரீகம் தெரிந்தவனாக, பகுத்து ஆராயும் பண்பு கொண்டவனாக இருக்கனும்? எல்லா பொம்பளையும் பொம்பளைதான்.. அம்மா உட்பட என்றுதானே எழுதுகிறார்கள்.. ஆண் மைய சமூகத்தின் பாலியல் வேட்கைக்குள் விழுந்திருக்கும் அவ்விளம் பெண்ணைப் பார்க்கையில் பரிதாபமாக இருக்கிறது.
பெண்ணியம் என்பது வெறும் வெங்காயம் அல்ல பெண்ணே, அது ஒரு நியாயம். ஆணாதிக்கத்தின் தொடர்ச்சியாக, சொற்களால், பார்வைகளால், உடல் தீண்டல்களால், ஓர் ஆண், பெண்ணின் உடல் மற்றும் மனதின் மீது செலுத்தும் வன்முறைகளை ஒழிக்க நினைக்கும் நியாயம் அது. அதை நீ செய்யும் இந்த பாலியல் துறப்பு விஷயங்களால் சரிசெய்து விடுகிற ஒன்றல்ல என்பது உனக்குப் புரியாது பெண்ணே. அவனுக்குக் கண்ணகியும் மாதவியும் தான் தெரியும். நடுவில் தத்தளிக்கும் பெண்களை அவனுக்குத் தெரியாது. நீ ஆடையை மூடியிருந்தால் கண்ணகி என்பான், நீ ஆடை அவிழ்க்க அவிழ்க்க அவன் உன்னை மாதவியின் இடத்துக்கு நகர்த்துவான். மாதவியும் ஒருவகையில் கண்ணகியின் நிழல்தான் என்பது அவனுக்குத் தெரியாது.
அவிழ்த்தல் ஒரு விஷயமே இல்லை; எதை அவிழ்க்கிறாய் என்பதே முக்கியம். பெண்ணை பெண்ணே அசிங்கப்படுத்தும், ஆண் மைய சமூகத்துள் மறுபடியும் இழுத்துவிடும், பாலியல் இச்சைகளை பொதுமைபடுத்தும் விஷயத்துக்குள் தான் இது கொண்டு சென்று நிறுத்தும்.
அறிவு சார்ந்து இயங்க கற்றுக்கொள்ள வேண்டும். பெண்ணியம் என்பது இதுவல்ல; அது அறிவின் வழியாக உடலை மனதை சக பாலினத்துக்கு எடுத்தியம்புவது. அது புரியாதவரை இதை நாம் சகித்துக்கொள்ளதான் நேரிடுகிறது.
இந்த பதிவை முகநூலில் எழுதி பதிவிட்டவர்
திருமதி : அகிலா புகழ் Ahila Puhal
https://www.facebook.com/ahila.d
http://www.ahilas.com/
பேஸ்புக்கில் படித்த இதே நிகழ்வு குறித்த இன்னொரு பெண்மணியான திருமதி .புதியமாதவி சங்கரன் அவர்களின் பதிவு
இதை வாசிச்சிட்டு இவ பிற்போக்குவாதினு நீங்க நினைச்சா அதில எனக்கு பிரச்சனை இல்ல..
எங்க ஊர்ல பெண்கள் குளிப்பதற்கு தனி குளியலறை கிடையாது. ஆற்றில் குளத்தில் கிணற்றங்கரையில் வாய்க்காலில் குளிப்பார்கள். தங்கள் உள்பாவாடையை மார்பளவுக்கு தூக்கிக் கட்டிக்கொண்டு குளிப்பார்கள். பக்கத்தில் தான் ஆண்கள் குளிக்கும் படித்துறையும் இருக்கும். இது அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சாதாரண நிகழ்வாக கடந்து போகும். அந்தப்பெண்ணை எந்த ஓர் ஆணும் உற்றுப்பார்த்ததாகவோ அல்லது அந்த நீச்சல் உடையின் காரணமாக எதுவும் நடந்துவிடவில்லை!
ஆனால்... இன்று ..
குளிப்பதை புகைப்படம் எடுக்கிறார்கள்.
அது அவர்கள் தனிப்பட்ட விருப்பம்.
அதைப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்கிறார்கள்.
அதுவும் அவர்கள் தனிப்பட்ட விடயம்.
அப்புறம் .. அவர்கள் பேசுகிற சமூக மயிர்ப்பிளக்கும்
புரட்சி என்பது மட்டும் .. எனக்குப் புரியவில்லை.
கட்டி இருக்கும் புடவை விலகுவது பிரச்சனை இல்லை.
உன் உடையும் யாருக்கும் பிரச்சனை இல்லை.
உன் அரை நிர்வாணம் எனக்கு பிரச்சனை இல்லை.
ஆனால் பெண்ணின் பாலுறுப்பு, இரு முலைகள்
ஒரு பாலூட்டியின் உறுப்புகளாக மட்டும் இல்லை.
அப்படித்தான் அது படைக்கப்பட்டிருந்தாலும்
அது காலப்போக்கில் ஆண்மைய சமூகத்தில் அப்படியாக இல்லை! இல்லவே இல்லை!
இதை அதிர்ச்சி வைத்தியம் மாதிரி
நான் அப்படித்தான் காட்டுவேன் என்பது
என்ன மாதிரியான புரட்சி வெங்காயம்னு
எனக்குப் புரியல.
உடலே ஆயுதமாகக் கொண்டு போராடிய
மணிப்பூரின் போராளிகளை அறிவீர்கள்தானே.
உங்கள் உடல் உங்கள் போராயுதம் ஆகட்டும்.
அதைவிட்டுட்டு..உப்பு சப்பில்லாமா
அப்படித்தான் காட்டுவேன்னா..
காட்டறது கூட வேஸ்டு..
இப்போ உன் பின்னால ஒரு பெரிய
கூட்டம் இருக்கு.
உன்னை அவனுக கொண்டாடுவது
உனக்குப் போதை தரலாம்.
ஆனா..
அவன் பொண்டாட்டியோ
மகளோ காதலியோ ஏன் சின்னவீடு கூட
இப்படி போட்டோ போட்டா
இவனுக புரட்சி முகம் எங்கே போகுதுனு பாரு.
அப்புறம் தெரியும்
எல்லா வெங்காயமும்!
பெண்ணுடல் அழகானது.
ஆணுடலும் தான்!
ஆம்..
உன்னுடல் அழகானது.
அதை ரசிப்பதில் இருக்கிறது
வாழ்க்கையின் ஒவ்வொரு துளியும்..
திருமதி .புதியமாதவி சங்கரன்
Former General officer at HSBC Bank
Past: HSBC (UK)
https://www.facebook.com/puthiyamaadhavi
https://puthiyamaadhavi.blogspot.com/
நல்ல கருத்துக்கள் சிந்தனைகள் நாலுபேருக்கு சென்று அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பதிவுகளை இங்கு பகிர்கின்றேன்
அன்புடன்
மதுரைத்தமிழன்
புரிதல் நன்று...
ReplyDeleteஇவ்ளோ விசயம் நடக்குதோ... [-(
ReplyDelete