Sunday, January 23, 2011


தனக்கு டிரைவர் வேலைப் பார்ப்பவருக்கு எந்த பாஸும் நல்ல அறிவுரை கூறி வாழ்க்கையில் நல்ல முன்னேற வழிகாட்டியது இல்லை. ஆனால் நம் தமிழர்கள் பெருமை கொள்ளும்படி அந்த நிகழ்ச்சி நடந்துள்ளதை படிக்கும் போது ரொம்ப பெருமையாக உள்ளது,




அந்த தலைவர் : முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் டிரைவர் : முன்னாள் கார் டிரைவராக இருந்து கல்லூரி பேராசிரியராக உயர்ந்த கதிரேசன்.

இதுதான் உழைப்பு - கலாமிடம் கார் டிரைவராக இருந்தவர் பேராசிரியர் ஆனார்

சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் டி.ஆர்.டி.ஓவில் பணியாற்றியபோது அவரிடம் கார் டிரைவராக இருந்த கதிரேசன் என்பவர் கலாமின் அறிவுரையைக் கேட்டு அடுத்தடுத்து படித்து இன்று டாக்டர் பட்டத்துடன் கல்லூரி பேராசிரியராக உயர்நதுள்ளார்.

கடந்த 80களில் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகத்தில் (டி.ஆர்.டி.ஓ) கலாம் இயக்குநராக இருந்தார். அப்போது அவருக்கு கார் டிரைவராக இருந்தவர் கதிரேசன். இவர் ராணுவத்தில் டிரைவராக இருந்தவர். அங்கிருந்து கலாமின் கார் டிரைவராக மாற்றப்பட்டார்.

கதிரேசனின் தந்தை வெள்ளைச்சாமித் தேவர். கதிரேசன் இளம் வயதாக இருந்தபோதே தந்தை இறந்து விட்டார். இதனால் சிரமப்பட்டு பத்தாவது வகுப்பு வரைக்கும் வந்தார். ஆனால் பத்தாவது வகுப்பைக் கூட முடிக்க முடியாமல் 1979ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார்.

பின்னர் ராணுவ எலக்ட்ரிக்கல் மெக்கானிக் பிரிவில் பயிற்சி பெற்று வட கிழக்கு மாநிலங்களில் பணியாற்றினார். கடைசியாக கார் டிரைவர் பணிக்கு வந்தார்.

கலாமிடம் கதிரேசன் பணியில் சேர்ந்தபோது அவருடைய குடும்ப நிலைகளைக் கேட்டறிந்தார் கலாம். இதையடுத்து அவரை உயர்த்த முடிவு செய்த அவர், ஏன் நீங்கள் தொடர்ந்து படிக்கக் கூடாது என்று கேட்டார். மேலும் படிக்குமாறும் ஆலோசனை கூறினார்.

கலாமே இவ்வாறு சொன்னதால் நெகிழ்ந்து போன கதிரேசன் வைராக்கியத்துடன் தனது கல்வியின் 2வது இன்னிங்ஸைத் தொடங்கினார்.பத்தாவது வகுப்பில் ஆங்கிலத்தில் தோல்வியுற்றிருந்தார் கதிரேசன். முதலில் அதை முடித்தார். பின்னர் தனித் தேர்வராக பிளஸ்டூ எழுதி பாஸ் ஆனார்.1998ம் ஆண்டு ராணுவ கார் டிரைவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.


இதையடுத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தி்ல் தபால் மூலம் பி.ஏ வரலாறும், தொடர்ந்து எம்.ஏ. வரலாறும் முடித்துப் பட்டங்களை தட்டினார்.அத்தோடு நில்லாமல், பி.எட், எம்.எட் படிப்புகளையும் முடித்தார். அப்போதும் அவரது படிப்பு வேட்கை நிற்கவில்லை.நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.பில் ஆய்வுப் படிப்பை முடித்தார். அப்படியும் நில்லாமல், பி.எச்.டியையும் மேற்கொண்டு அதையும் முடித்து டாக்டராகி விட்டார்.


ஒரு வழியாக தனது படிப்பு வேட்டையை முடித்த கதிரேசன் வேலை வேட்டையைத் தொடங்கினார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக தேர்வாகி அங்கு பணியில் சேர்ந்துள்ளார்.



தனது வாழ்க்கை இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு அப்துல் கலாம் கொடுத்த ஊக்கம்தான் காரணம் என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் கதிரேசன்.கலாம் குறித்து அவர் கூறுகையில், அப்துல் கலாமுடன் பணியாற்றிய காலத்தை என்னால் மறக்கவே முடியாது. யாரிடமும் அவர் கடுமையாக நடந்து கொள்ள மாட்டார். தன்னுடன் இருக்கும் அனைவரையும் ஊக்கப்படுத்துவார்.



அவருடைய வழியில் இளைஞர்களுக்கு நாட்டுப்பற்றை உருவாக்கும் பணியை தொடர்ந்து செய்வேன் என்கிறார்.


கடின உழைப்பு என்றால் என்ன என்று கேட்போருக்கு கதிரேசன்தான் சரியான உதாரணம்

கலாம் கனவுகளைச் சொல்பவர் மட்டுமல்ல, கனவுகளை நிஜமாக்குபவர் கூட. இவர் தன்னை எப்போதும் தலைவராக எண்ணியதே இல்லை எனலாம்.



தன்னைத் தமிழர்களின் தலைவர்களாக கருதும் கலைஞர், அம்மையார், ரஜினி, விஜயகாந்த் இவர்களுக்கு டிரைவர்களாக வேலை பார்த்தவர்கள் & இன்னும் தொடர்ந்து வேலை செய்யும் ஆட்கள் எவ்வளவு நாள் இவர்களிடம் வேலை செய்கிறார்கள் . அவர்கள் அல்லது அவர்கள் குடும்பத்தினர் ஏதும் முன்னேற்றம் அடைந்துள்ளனரா என்பதை இதை படிப்பவர்கள் பின்னுட்டமாக பதில் எழுதலாம்.




4 comments:

  1. பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
    http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html

    ReplyDelete
  2. எஸ்..இதை நான் படிச்சேன் ஒரு புத்தகத்தில்...சூப்பர் ல...

    ReplyDelete
  3. பத்திரிகையில் படிச்சப்போ சந்தோஷமா இருந்துது. இங்கே அமீரகத்திற்கு வந்திருந்தபொழுதுகூட, கலாம் அவர்கள், பொது இடத்தில் தன்னிடம் முன்பு பணியாளராகப் பணிபுரிந்த ஒருவரைக் கண்டதும், தான் (அப்போது) அதிபர் என்ற கர்வமில்லாமல், அவரோடு பேச ஆரம்பித்ததைக் கண்டு அமீரகத் தலைவர்கள் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.