தாலிகள் இப்படிதான்
அறுக்கப்படும்.
----------------------------------------------------------------------------
தாலி
என்னோட பேரு
பத்மா. நல்லாயிருக்கு இல்ல? பேருக்கேத்த மாதிரி நானும் நல்லாத்தான் இருப்பேன். நான்
பெருசா ஒண்ணும் படிக்கலைங்க. வீட்டுல சோத்துக்கே திண்டாட்டம் இதுல படிப்புக்கு எங்க
வழி... அப்படி இருந்தும் நான் 5ஆம் கிளாஸ் வரைக்கும் படிச்சேன்....
எனக்கு 19 வயசுல
கல்யாணம் ஆச்சுங்க. மாப்பிள்ளை எங்க சொந்தம் தான். ஒண்ணுமே செய்யவேண்டாம்ன்னு சொன்னதுல
என் அப்பா அம்மாவுக்கு ரொம்ப சந்தோசம். அவங்க வீட்டுலேயே எல்லா செலவும் செய்து கல்யாணம்
பண்ணினாங்க.
இதுல விஷயம்
என்னங்குறது அப்புறம் தான் எனக்கு வெளங்கிச்சு.
என் வூட்டுக்காரருக்கு
குடி பழக்கம். எல்லா எடத்துலேயும் தேடியும் பொண்ணு கிடைக்கல, நாங்க தான் இருந்தோமே
அன்னாடம்க்காயச்சியா..
கொஞ்ச நாள் ஆனா
எல்லாம் சரியாயிடும், ஒரு குழந்தை பொறந்தா எல்லாம் சரியாயிடும், அப்படின்னே 5 வருஷம்
ஓடிபோச்சுங்க. இந்த அஞ்சு வருஷத்துல தப்பி பொறந்தது ஒரு புள்ளை.
ஏன் தப்பி பொறந்ததுன்னு
சொல்றேன்னா, இந்த ஆளுக்கு குடிச்சு குடிச்சு, "அந்த" விஷயத்துல ரொம்ப வீக்கு.
அப்படியும் பொறந்துச்சு பாருங்க இந்த புள்ள, அதுக்கு புடிச்ச கிரகம்.
அடி உதை, பட்டினி,
அழுகை, திரும்ப அடி உதை அழுகை..என்னங்க வாழ்க்கை இது? எனக்கு தாங்க முடியாத பாரம் மனசுல,
ஒரு வயசு பொண்ணு ஆசைபடற சாதராண விஷயம் கூட எனக்கு கிடைக்கலேன்னு தெனைக்கும், தோ , இந்த
தெருக்கோடியில இருக்குற மாரியாத்தாள் கிட்ட போய் புலம்புவேன்.
என்னடா கோர்டுக்கு
போய் பிரிஞ்சுட வேண்டியதுதானேன்னு நீங்க கேட்கலாம், ஆனா என்ன மாதிரி அன்னாடம் காய்ச்சிக்கெல்லாம்
அது ரொம்ப உசரத்துல இருக்குற விஷயம்ங்க.
ஆனாலும் என்
மனசுல ஒரு வெறி, நல்லா வாழணும்ன்னு. அதுக்கோசரம் தப்பான வழிக்கு போரவ இல்லை இந்த பத்மா.
நல்லா வாழணும்ன்னா,
நான் இன்னொரு கல்யாணம் பண்ணனும். இந்த புருஷன் கட்டியிருக்குற தாலி கழுத்துல இருக்கும்
போது எப்படி இது நடக்கும்.. என்னோட கனவெல்லாம் ஒரு ராஜகுமாரன் வந்து என்ன இவன் கிட்டேருந்து
காப்பாத்தி என்ன அவனோட மகாராணி ஆக்கிக்கணும் அப்படிங்கறது தான்.
எப்படி நடக்கும்ன்னு
தெரியல, ஆனா நடக்கும்கிற நம்பிக்கை மட்டும் இருந்தது.
மாரியாத்தாள்
கண்ண தொறந்தா..
நான் கொஞ்ச நாளா
இந்த ஆள இன்னமும் நம்பியிருந்தா வேலைக்காகாதுன்னு, வீட்டு வேலைக்கு போக ஆரம்பிச்சிருந்தேன்.
அப்படி வேல செய்யிற ஒரு வீட்டுல, அந்த வீட்டுக்காரம்மாவுக்கு என்னோட கதை முழுசா தெரியும்.
அவுங்களோட தம்பி கல்யாணமே வேண்டாம்ன்னு இருந்தவரு, என்ன ஆச்சோ தெரியல என் கதைய கேட்டப்புறம்,
ஒரு நாள், சடார்ன்னு என்ன பார்த்து
"என்ன புள்ள,
என்ன கட்டிக்கிறியா?" ன்னு கேட்டுபுட்டாரு.
எனக்கு என்ன
பதில் சொல்றதுன்னே தெரியல.... ஒரு பக்கம், என்னோட ராஜகுமாரன், இன்னொரு பக்கம் என் கழுத்துல
இருக்குற தாலி, நான் என்ன பண்ணட்டும்?
"அய்யா
நீங்க வசதியானவங்க, நானோ குப்பத்து ஆளு, இது எப்படி சரி வரும்ன்னு" தெகிரியமா
கேட்டுபுட்டேன்.
"நீ தான்
எனக்கு முக்கியம், நீ எங்கிருந்து வர, உன் வசதி என்ன அப்படிங்கிறது இல்ல" அப்படின்னுட்டாரு
.
"உங்க வீட்டுல?"
"எல்லாருக்கு
சம்மதம், நீ அத பத்தி கவலைப்படாதே, நீ என்ன சொல்ற?"
ஒரே ஒரு நாள்
டைம் குடுங்கன்னு சொல்லிபுட்டு ஓடி வந்துட்டேன்.
நேர ஓடினது மாரியாத்தா
கோயிலுக்கு தான்..
"அம்மா,
ஒருபக்கம் தாலி, இன்னொருபக்கம் புதுசா வாழ்க்கை, நான் என்னம்மா பண்ணட்டும்னு"
அழுதுபுட்டேன்.
அப்போதான் அந்த
குடிகாரன் வந்தான், கோயில்ன்னு கூட பார்க்காம காசு கேட்டு அடிச்சான்.
மாரியாத்தா பதில்
கொடுத்துட்டா எனக்கு.
அடுத்த நாள்
இல்ல, அன்னிக்கே அவுங்க வீட்டுக்கு போனேன், அவரையும், அவங்க அக்காவையும் பார்த்தேன்
என் சம்மதத்த சொன்னேன். நாளைக்கு வெள்ளிக்கிழமை, மாரியாத்தா கோயிலுல என் கழுத்துல தாலி
கட்ட முடியுமான்னு கேட்டேன்.
அவுங்க அக்கா,
என் தம்பிக்கு கல்யாணம் ஆகாதான்னு இவ்வளவு காலம் காத்துக்கிட்டு இருந்தோம், அதனால எனக்கு
சம்மதம்ன்னாங்க. உடனே காலெண்டர் பார்த்து 9:30 லேர்ந்து 10:30 காலைல நல்ல நேரம்ன்னாங்க.
அவரும் 9:30
உன் கழுத்துல தாலி ஏறும்ன்னாறு..
இதுல பாருங்க
யாருமே இருக்குற தாலிய என்ன பண்ணறதுன்னு யோசிக்கவே இல்லை.. என்னைத்தவிர.
நான் நேர வீட்டுக்கு
போனேன், அந்த ஆள் இருந்தாரு...
சோறு என்னடி
ஆச்சுன்னாரு, பட்டினி கிடந்தது சாவுடான்னேன்
என்னடி சொன்னே
அப்படின்னு கை ஒங்கினாரு , கைல கிடச்ச அருவாமணைய எடுத்தேன். பயமுறுத்தரதுக்காக தான்,
இந்தாள வெட்டிட்டு நான் ஏன் ஜெயிலுக்கு போகணும்?
அருவாமணை வேல
செஞ்சுது. அடுத்த நாளும் விடிஞ்சிது.
நல்லா குளிச்சு
முடிச்சு இருக்குறதுலேயே நல்ல புடவையா எடுத்து கட்டிக்கிட்டு, புள்ளைய தூக்கிட்டு நேர
அவுங்க வீட்டுக்கு போயிட்டேன்.
அங்க எனக்கு
புதுசா சேல , புள்ளைக்கு ட்ரெஸ் எல்லாம் எடுத்து வெச்சிருந்தாங்க... என் கவனம் எல்லாம்
9:30 மணிக்கு எப்போ ஆவும்ன்னு தான்.
மணியும் ஆச்சு.
நேர கோயிலுக்கு போனோம்.
அங்க
என் புருஷன்
இருந்தான், நான் வரசொன்னதால.
என்னடி? அப்படின்னான்...
அவனுக்கு ஒண்ணும் புரியல.
மாரியாத்தாள
ஒரு வாட்டி பார்த்தேன். "அம்மா நீ தான் மொதல் தாலி கொடுத்த, இப்போ ரெண்டாவது வாழ்க்கையும்
நீதான் கொடுத்திருக்க, அறியா பிள்ள நான், நீ தான் என்ன காப்பாத்தணும்" ன்னு வேண்டிக்கிட்டு
சடார்ன்னு என்
கழுத்துல இருந்த தாலிய கழட்டி அந்தாள் மேல விட்டெறிஞ்சேன்.
எனக்கு இனிமே
அந்தாள் கூட எந்த சம்பந்தமும் இல்லை.
இவருக்கு பூஜைல
வெச்சு கொண்டு வந்த தாலிய இவரோட அக்கா எடுத்து கொடுக்க, அவரு என் கழுத்துல ரெண்டு முடிச்சும்,
அவரோட அக்கா ஒரு முடிச்சும் போட்டாங்க.
பத்மா குமார்
ஆக இருந்த நான் பத்மா பிரகாஷ் ஆனேன்.
சுத்தி குப்பத்து
ஆளுங்களுக்கெல்லாம் என்ன நடந்துதுன்னு புரிஞ்சு எல்லோரும் கை தட்டினாங்க, என்னோட பழய
ஊட்டுக்காறாரு ஒண்ணும் பேசாம தலைய குனிஞ்சுகிட்டே போயிட்டாரு.
பார்க்க பாவமா
தான் இருந்துச்சு, அதுக்கு நான் என்ன பண்ண முடியும், அவரோட சான்ஸ் அவர் சரியா பயன்படுத்திக்கல
அவ்வளவு தான்.
எனக்கு என் வாழ்க்கைய
நான் நல்ல படியா வாழணும் அவ்வளவுதான்.
இதுல நடுவுல
இந்த தாலி அறுப்பு போராட்டம் நடக்க போறதா குப்பம் பூரா ஒரே பேச்சு. எனக்கு சிரிப்பு
தாங்க வருது. ஒருத்தியோட தாலிய கழட்டிபுட்டா, அவளோட புருஷன் உடனே திருந்திட போறானா?
இல்ல அவளோட வாழ்க்கை தான் சீராக போறதா? ஒண்ணும் இல்லீங்க.. நம்ம வாழ்க்க நம்ம கைல.
தாலி பொண்ணுக்கு
வேலி, இது அடுத்த தமாஷ். தாலி பொண்ணுக்கு வேலி இல்லைங்க, ஆணுக்கு தான் வேலி நீ ஒரு
பொண்ணுக்கு கடமை பட்டிருக்கே, அதனால ஒழுங்கா இருன்னு அவனுக்கு அப்போ அப்போ நினைவு படுத்துறது
தான் பொண்ணோட கழுத்துல இருக்குற தாலி.
அதே மாதிரி ஒரு
பொண்ணோட கழுத்துல ஏறும்போது , அவளால ஏதும் செய்ய முடியாம போகலாம், ஆனா ஒரு பொண்ணோட
கழுத்துல இருந்து தாலி ரெண்டு வழியா தான் இறங்கும்.
ஒண்ணு அவ அறுத்து
எறியணும், ரெண்டு அவ புருஷன் சாகணும்.
அதுல அழுகின
பழம் மாதிரி ஒரு சில புருஷங்க இருக்காங்க, என்னோட முதல் புருஷன் மாதிரி, அப்போ அழுகுன
பழத்த என்ன பண்ணுவாங்க? அதத்தான் பொண்ணுங்களும் பண்ணனும்.
இதோ இவர் வரலைன்னா
என்ன பண்ணியிருப்பேன்ற கேள்விக்கு, நிச்சயம் ஏதாவது பண்ணியிருப்பேன் (தப்பு தண்டா இல்ல),
அந்தாள விட்டு போயிருப்பேன்....
இப்போ பாருங்க,
சொந்த பிளாட்ல, ஏசி ரூம்ல உட்கார்ந்துகிட்டு உங்க கிட்ட பேசிகிட்டு இருக்கேன். எல்லாம்
அவர் கொடுத்த கொடை தாங்க. என் புள்ள, யூனிபார்ம் போட்டுகிட்டு பளிச்சுன்னு கான்வென்ட்
ஸ்கூல்ல படிக்கிறான். நானும் ரெண்டாவது முழுகாம இருக்கேன்.
அதுல பாருங்க,
என் வீட்டுக்காரரு, பேச்சுல என்ன அன்பு, கண்ணியம், எந்த கெட்ட பழக்கமும் இல்லை, கை
நெறய சம்பாதிக்கிறாரு, என்ன எப்படி மதிக்கறாரு தெரியுமா?
இவ்வளவு ஏங்க
என்னோட மொத ராத்திரி
அன்னைக்கு, இவரு சொல்லறாரு, நீ கட்டில் மேல படுத்துக்கோ, நான் கீழ தரைல படுத்துக்கறேன்,
இன்னும் கொஞ்ச நாள் போட்டம், நீ கொஞ்சம் அவகாசம்
எடுத்துக்கோ,
அவசர படவேண்டாம், அப்புறமா நிதானமா குழந்தை பத்தி யோசிக்கலாம்ன்னு சொல்றாரு.
அடி வாங்கியே
பழக்க பட்ட எனக்கு இந்த அன்பும் மரியாதையும், தாங்கவே முடியலைங்க.
நான் கேட்டேன்
"நீங்க எந்த நம்பிக்கைல என் கழுத்துல தாலி கட்டினீங்க? நான் எந்த நம்பிக்கையில
உங்களுக்கு கழுத்த நீட்டினேன், அதே நம்பிக்கைதாங்க நம்ம வாழ்க்கை முழுவதும்ன்னு
"
சொல்லிட்டு
இத சொல்றதுல
எனக்கு எந்த வெட்கமும் இல்லைங்க...
அவர எந்திரிக்க
சொன்னேன், மொத்தமா எல்லாத்தையும் உருவினேன், நானும் மொத்தமா எல்லாத்தையும் கழட்டிட்டு,
அப்படியே அவர் மேல பாஞ்சேன்....
அன்னைக்கு நான்
இருந்த அறை இருட்டாச்சு, ஆனா என் வாழ்க்கை பிரகாசமாச்சு.
இத விட ஒரு பொண்ணுக்கு
என்ன வேணும்? சொல்லுங்க?
இந்த கதையை பேஸ்புக்கில்
எழுதியவர் ஸ்ரீராம் ஸ்ரீனிவாசன் அவரின் அனுமதியுடன் இங்கே பகிரப்படுகிறது.
https://www.facebook.com/livelyram
Sriram Srinivasan
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : தலைப்பு மட்டும்
என்னது,
நண்பர்களே நீங்கள் எழுதிய சிறுகதைகள் அல்லது கவிதைகள் இந்த தளத்தில் வெளிவர விரும்பினால் அதை எனக்கு அனுப்பவும் என் தளத்திற்கு ஏற்றவாறு இருப்பதாக கருதினால் அதை வெளியிடுகிறேன்
நண்பர்களே நீங்கள் எழுதிய சிறுகதைகள் அல்லது கவிதைகள் இந்த தளத்தில் வெளிவர விரும்பினால் அதை எனக்கு அனுப்பவும் என் தளத்திற்கு ஏற்றவாறு இருப்பதாக கருதினால் அதை வெளியிடுகிறேன்
வருங்காலம் இப்படித்தான் ஆகும். 'காரிகை ஒருத்தியைக் கை பிடித்து அவள் காரியம் யாவிலும் கைகொடுத்து' என்று நடக்கவில்லையானால், இருவருக்கும் டேஞ்சர் தான். நல்ல கதை. இது குப்பத்துக்கு மட்டுமல்ல..எல்லாக் குடும்பத்துக்கும்தான்
ReplyDeleteநல்ல கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மதுரைத் தமிழன்.
ReplyDeleteஇத வீரமணி கொய்யாவுக்கு அனுப்பி வைங்க மருத!
ReplyDeleteThe title of the story hurts when it is read on this day, an auspicious day.
ReplyDeleteதாலி அகற்றல் என்பது இடியம் கிடையாது. தாலி அறுத்தல் என்பதே இடியம்.
தாலி அகற்றிய பின் குளிக்கச்செல்லலாம். குளித்திவிட்டு போட்டுக்கொள்ளலாம். பைக் திருடர்கள் அதிகமானால், பெண்கள் தாலியை அகற்றிவிட்டு மஞ்சள் கயிறை மட்டும் போடுவார்கள். பங்குனி உத்திரத்தில் இருக்கும் தாலியை அகற்றிவிட்டு. புதுத்தாலி அணிவார்கள்.
இப்படியாக பல காலகட்டங்களில் - அதாவது கணவன் இருக்கும் காலங்களில் - உடன் வாழ்கின்றானோ, தனித்து வாழ்கின்றானோ, அல்லது எங்குபோனானோ - தாலி எடுத்தல் அகற்றல் என்னும் செயலைத்தான் குறிக்கும்.
அதே வேளையில் தாலியை அறுத்தல் என்பது கணவன் மரணித்தலையே குறிக்கும். அதாவது அந்த இடியத்தின் பொருள் கணவன் மரணித்துவிட்டான்; இவள் கைம்பெண் ஆகிவிட்டாள். அல்லது விதவை. தாலி அறுத்தல் = கணவன் சாவு.
எனவேதான் இப்போராட்டம் நடாத்துவோர், நாங்கள் தாலி அகற்றும் - அதுவும் கூட அவர்கள் கடசிக்கொள்கைகளைக்கொண்ட பெண்டிர்களை மட்டும் - நிகழ்ச்சியைத்தான் செய்கிறோம். தாலி அறுபபது எங்கள் வேலையன்று. பின் யார் செயல்?. இறைவன் செய்வான். கணவனைச்சாகடிப்பது இறைவந்தானே?
புரட்சிக் கதைதான்.
ReplyDeleteஅட! அருமை! பெண்கள் இது போன்று தைரியமாக முடிவு எடுக்கத் தெரிந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்! படித்த பெண்களே யோசிக்கும் போது...இது உண்மையான நிகழ்வு என்றால்.....ஹாட்ஸ் ஆஃப் டு பத்மா.......பிரகாஷ். எந்த ஆண் இப்படி ஒரு முடிவு எடுப்பான்?!! இல்லைஎன்றால், இப்படிப்பட்ட கதாப்பாத்திரங்களைப் படைத்த அந்த எழுத்தாளருக்கு ஹாட்ஸ் ஆஃப்!
ReplyDelete- கீதா
நல்ல கதை. இன்றைக்கு தேவையான கதையும் கூட...
ReplyDelete