Saturday, March 1, 2025

 வெள்ளை மாளிகையில் வெடித்த விவாதம்: டிரம்ப், ஸெலென்ஸ்கி மற்றும் ஜே.டி. வான்ஸ் நேருக்கு நேர்!" 

 




ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர்  டிரம்ப் - உக்ரைன் அதிபா ஸெலென்ஸ்கி இடையேயான சந்திப்பு மோசமான வாக்குவாதத்தில் முடிந்தது.

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்ததிலிருந்து, அப்போதைய அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசும், மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு உதவிகளை வாரி வழங்கின. பதிலுக்கு உக்ரைன் அதிபர் பைடனுக்கு ஆதரவாகத் தேர்தல் நேரத்தில் பேசினார்.

இந்தச் சூழலில், அமெரிக்காவின் புதிய அதிபராகக் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற  டிரம்ப், இந்த விவகாரத்தில் ஜோ பைடன் அரசின் கொள்கைகளை முற்றிலு மாற்றியமைத்தார்.

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைன் மீட்க முடியாது என்றும், உக்ரைனுக்கு நேட்டோவில் இடம் அளிக்கப்படாது என்றும் டிரம்ப் அரசு கூறி வருகிறது. மேலும், இந்த விவகாரத்தில் டிரம்ப், இரு தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்தச் சூழலில், ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு தாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அளித்த உதவிகளுக்குக் கைம்மாறாக, அந்த நாட்டின் அரிய வகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்குக் காலவரையறை இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

இதற்கு ஒப்புக்கொண்ட உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி, தங்கள் நாட்டுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் பொருளாதார ஒப்பந்தத்தில் கையொப்பமிடத் தயார் என்று அறிவித்தார். ஆனால், உக்ரைனுக்கு இனியும் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார்.

இந்த சூழ்நிலையில்தான் பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்காவுக்கு வெள்ளிக்கிழமை வந்த ஸெலென்ஸ்கி, வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார்.

உக்ரைன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தந்தால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறேன் என்று ஸெலென்ஸ்கி வலியுறுத்தவே, டிரம்ப் மறுத்துவிட்டார்.

ஸெலென்ஸ்கி - டிரம்ப் இடையே நடந்த காரசார வாக்குவாதம்

ஜே.டி. வான்ஸ்: அமெரிக்காவில் பத்திரிகையாளர் சந்திப்புகளில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினைப் பற்றி கடுமையாகப் பேசிய அதிபர் ஒருவர்(பைடன்) கடந்த நான்கு ஆண்டுகளாகப் பதவி வகித்தார். அப்போதுதான், புதின், உக்ரைன் மீது போர் தொடுத்து அந்த நாட்டின் ஒரு பகுதியை அழித்தார்.

முன்னாள் அதிபர் ஜோ பைடனின் பாதையில் செல்ல நாங்கள் முயன்றோம். ஆனால், அமெரிக்காவை ஒரு நல்ல நாடாக மாற்ற வேண்டும் என்றால் அமெரிக்கா மற்ற நாடுகளுடன் நல்ல நட்புறவில் (diplomacy) இருக்க வேண்டும். அதைத்தான் அதிபர் டிரம்ப் செய்கிறார்.

ஸெலென்ஸ்கி: புதின், 2014-ல் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்தார். அந்தநேரத்தில் அதிபராக இருந்தவர் ஒபாமா. பின்னர் டிரம்ப், பைடன், இப்போது மீண்டும் டிரம்ப் இருக்கிறார். அவர் புதினின் நடவடிக்கைகளைத் தடுப்பார். ஆனால் 2014-ல், யாரும் அவரைத் தடுக்கவில்லை. அவர் உக்ரைன் பகுதியை ஆக்கிரமித்ததுடன் மக்களைக் கொன்றார். 2014 முதல் 2022 வரை, நிலைமை இப்படித்தான் இருந்தது. மக்கள் இறந்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவரை யாரும் தடுக்கவில்லை.

நாங்கள் புதினுடன் நிறைய உரையாடல்களை மேற்கொண்டோம். 2019- ல் நான் உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக, பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் மற்றும் ஜெர்மன் அதிபர் மெர்க்கலுடன் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். ரஷியப் படைகள் உக்ரைனிலிருந்து வெளியேறாது என்று அவர்கள் அனைவரும் கூறினார்கள். நாங்கள் புதினுடன் ஒரு எரிவாயு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டோம். ஆனால் அதன் பிறகும் புதின் போர்நிறுத்தத்தை மீறினார். அவர் உக்ரைன் மக்களைக் கொன்றார், நாங்கள் கைதிகளைப் பரிமாறிக்கொள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. நீங்கள் என்ன வகையான வெளியுறவுக் கொள்கையைப் பற்றிப் பேசுகிறீர்கள்?


வான்ஸ்: உங்கள் நாட்டின் அழிவை முடிவுக்குக் கொண்டுவரப் போகும் வெளியுறவுக் கொள்கையைப் பற்றி நான் பேசுகிறேன். நீங்கள் அமெரிக்க ஊடகத்திற்கு முன் வந்து குற்றம்சாட்ட முயல்வது அவமரியாதைக்குரியது என்று நான் நினைக்கிறேன். உங்களிடம் வீரர்கள் குறைவாக இருப்பதால் நீங்கள் பிற நாடுகள் மூலமாக ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறீர்கள். இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர அதிபர் டிரம்ப் முயற்சி செய்வதற்கு அவருக்கு நீங்கள் நன்றிதான் கூற வேண்டும்.

ஸெலென்ஸ்கி: எங்களுக்கு என்ன பிரச்சினைகள் உள்ளன என்பதைத் தெரிந்துகொள்ள நீங்கள் எப்போதாவது உக்ரைனுக்கு வந்திருக்கிறீர்களா? ஒரு முறை வந்துபாருங்கள்.

வான்ஸ்: நான் செய்திகளைப் பார்த்திருக்கிறேன், உங்கள் நாட்டு ராணுவத்திற்கு ஆள்களைச் சேர்ப்பதில் சிக்கல்கள் இருந்ததை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? மேலும் அமெரிக்காவிற்கு வந்து உங்கள் நாட்டின் அழிவைத் தடுக்க முயற்சிக்கும் எங்கள் நிர்வாகத்தைத் தாக்கிப் பேசுவது மரியாதைக்குரியது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

ஸெலென்ஸ்கி: போரின்போது எல்லோருக்குமே பிரச்சினைகள் ஏற்படும். ஏன் உங்களுக்கும்கூட. ஆனால் உங்களிடம் நல்ல கடல் பரப்பு இருப்பதால் இப்போது நீங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளவில்லை. ஆனால் எதிர்காலத்தில் நீங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள்.

டிரம்ப்: அது உங்களுக்குத் தெரியாது.

ஸெலென்ஸ்கி: கடவுள் ஆசீர்வாதத்தினால் உங்கள் நாட்டில் போர் இல்லை.

டிரம்ப்: நாங்கள் எதை எதிர்கொள்ளப்போகிறோம் என்று எங்களிடம் நீங்கள் சொல்ல வேண்டாம். நாங்கள் ஒரு பிரச்சினையைத் தீர்க்கவே முயல்கிறோம்.

ஸெலென்ஸ்கி: நான் அப்படிச் சொல்லவில்லை. அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கிறேன்...

டிரம்ப்: நாங்கள் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சினைகள் பற்றி நீங்கள் கட்டளையிட வேண்டாம். நாங்கள் மிகவும் நன்றாகவே இருப்போம்.

ஸெலென்ஸ்கி: மற்றவர்கள் பேச்சைக் கேட்டுச் செயல்பட்டதை நீங்கள் ஒருநாள் உணர்வீர்கள்.

டிரம்ப்: நாங்கள் மிகவும் நன்றாகவும் வலுவாகவும் இருக்கப் போகிறோம். நீங்கள் இப்போது நல்ல நிலையில் இல்லை. நீங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்க, உங்களை நீங்களே அனுமதித்துவிட்டீர்கள். இப்போது உங்களுடன் எங்களுக்கு எந்த எதிர்காலத் திட்டங்களும் இல்லை.

நீங்கள் கோடிக்கணக்கான மக்களின் உயிர்களுடன் சூதாடுகிறீர்கள். நீங்கள் மூன்றாம் உலகப் போருக்கு வித்திடுகிறீர்கள். நீங்கள் செய்வது இந்த நாட்டிற்கு மிகவும் அவமரியாதையானது.

வான்ஸ்: நீங்கள் அமெரிக்காவுக்கு ஒரு முறையாவது நன்றி சொன்னீர்களா?

ஸெலென்ஸ்கி: பல முறை சொல்லியிருக்கிறேன்

வான்ஸ்: இல்லை, இந்த கூட்டத்தில் நன்றி சொன்னீர்களா? கடந்த அக்டோபரில் நீங்கள் பென்சில்வேனியாவுக்குச் சென்று எதிர்க்கட்சிக்காகப் பிரசாரம் செய்தீர்கள். அமெரிக்காவிற்கும் உங்கள் நாட்டைக் காப்பாற்ற முயற்சிக்கும் அதிபர் டிரம்புக்கும் சில பாராட்டு வார்த்தைகளைக் கூறுங்கள்.

ஸெலென்ஸ்கி: மன்னிக்கவும், நீங்கள் மிகவும் சப்தமாகப் பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

டிரம்ப்: அவர் சப்தமாகப் பேசவில்லை. உங்கள் நாடு (உக்ரைன்) தான் பெரிய சிக்கலில் உள்ளது.

ஸெலென்ஸ்கி: அது எனக்குத் தெரியும். நான் ஒன்று கேட்கலாமா?

டிரம்ப்: இல்லை, இல்லை, நீங்கள் நிறையப் பேசிவிட்டீர்கள். உங்கள் நாடு பெரிய சிக்கலில் உள்ளது.

ஸெலென்ஸ்கி: எனக்குத் தெரியும்.

இதையும் படிக்க | 'டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்க முடியாது'- ஸெலென்ஸ்கி
டிரம்ப்: நீங்கள் இதில் வெற்றி பெறவில்லை. நீங்கள் இதிலிருந்து வெளியே வருவதற்கு எங்களால் ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது.

ஸெலென்ஸ்கி: மிஸ்டர் பிரசிடென்ட், நாங்கள் எங்கள் நாட்டில் வலிமையுடன் இருக்கிறோம். போரின் தொடக்கத்திலிருந்தே நாங்கள் தனியாக இருக்கிறோம், நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நான் நன்றி சொல்லியிருக்கிறேன்.

டிரம்ப்: முட்டாள் அதிபர்(stupid president) மூலமாக நாங்கள் உங்களுக்கு 350 பில்லியன் டாலர் வழங்கியிருக்கிறோம். உங்களுக்கு ராணுவ உதவிகளை வழங்கினோம். உங்கள் நாட்டினர் துணிச்சலானவர்கள்தான், ஆனால் அவர்கள் எங்களுடைய ராணுவ உபகரணங்களைப் பயன்படுத்தியுள்ளனர். உங்களிடம் எங்களுடைய ராணுவ உபகரணங்கள் மட்டும் இல்லையென்றால், இந்த போர் இரண்டு வாரங்களில் முடிந்திருக்கும்.

ஸெலென்ஸ்கி: ஆம், மூன்று நாள்களில். புதின் அவ்வாறுதான் சொன்னார்.

டிரம்ப்: இதுபோன்ற பேச்சுவார்த்தை மிகவும் கடினமானது.

வான்ஸ்: நன்றி சொல்லுங்கள்.

ஸெலென்ஸ்கி: நான் நன்றி சொன்னேன். நான் அமெரிக்க மக்களுக்கு நன்றி சொல்கிறேன்.

வான்ஸ்: கருத்து வேறுபாடுகள் இருப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் தவறாக இருந்து, அமெரிக்க ஊடகங்களில் அதை எதிர்த்துப் போராட முயல்வதைவிட, அந்த கருத்து வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு வழக்குத் தொடரலாம். நீங்கள் பேசுவது தவறு என்று எங்களுக்குத் தெரியும்.

டிரம்ப்: இங்கே பாருங்கள், இங்கு என்ன நடக்கிறது என்று அமெரிக்க மக்கள் பார்ப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன். அது மிகவும் முக்கியம் என்றும் நினைக்கிறேன். அதனால்தான் நான் இவ்வளவு நாள் தொடர்ந்து செய்கிறேன். நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். உங்களிடம் எந்த துருப்புச் சீட்டும் இல்லை. நீங்கள் அங்கேயே புதைந்துகொண்டிருக்கிறீர்கள். உங்கள் மக்கள் செத்துக்கொண்டு இருக்கிறார்கள். உங்களுடைய வீரர்கள் குறைந்துகொண்டு இருக்கிறார்கள். அது ரொம்ப நல்லது.

ஆனால் எங்களிடம், "எனக்குப் போர் நிறுத்தம் வேண்டும்" என்று சொல்கிறீர்கள். போர் நிறுத்தம் வேண்டுமென்றால் இப்போதே அனைத்தையும் நிறுத்திவிட்டு உங்கள் வீரர்கள் கொல்லப்படுவதை நிறுத்துங்கள்.

ஸெலென்ஸ்கி: ஆமாம், நிச்சயமாக நான் போரை நிறுத்த விரும்புகிறேன். ஆனால், நான் கூறியபடி பாதுகாப்பு உத்தரவாதங்களுடன் போரை நிறுத்த விரும்புகிறேன். போர் நிறுத்தம் பற்றி நம் மக்களிடம் கேளுங்கள் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று.

டிரம்ப்: அது நான் இல்லை. அப்படிக் கேட்டால் அது பைடன்தான். அவர் புத்திசாலித்தனமற்றவர். மேலும் ஒபாமா உங்களுக்குப் படுக்கை விரிப்புகளைக் கொடுத்தார். நான் உங்களுக்கு ஈட்டிகளைக் கொடுத்தேன். அறிக்கையிலே அப்படிதான் இருக்கிறது. அதற்கு நீங்கள் இன்னும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும், ஏனென்றால் உங்களிடம் எந்த துருப்புச்சீட்டுகளும் இல்லை. ஆனால் நாங்கள் உங்கள் நாட்டிற்கான திட்டங்களை வைத்திருக்கிறோம். எங்களின் ஆதரவின்றி உங்களால் எதுவும் திட்டமிட முடியாது. உங்களின் அணுகுமுறைகள் மாற வேண்டியிருப்பதால் இந்த ஒப்பந்தம் கடினமானதாக இருக்கும்.


தலைவர்களின் காரசார பேச்சுவார்த்தை பாதியிலேயே முடிந்துவிட்டது. பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் விருந்தைத் தவிர்த்துவிட்டு ஸெலென்ஸ்கி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார்.

அமெரிக்க அதிபருடனான வாக்குவாதத்தைத் தொடர்ந்து, உக்ரைனுக்கும், ஸெலென்ஸ்கிக்கும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.


அன்புடன்
மதுரைத்தமிழன்


01 Mar 2025

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.