உங்களைச் சமுக வலைத்தளங்களில் இருந்து சிலர் அன்ஃபிரெண்ட் (Unfriend) பண்றாங்களா? ' - ஒரு டிஜிட்டல் சுயபரிசோதனை
"யார் போனா என்ன? யாரு இருக்காங்கன்றதுதான் முக்கியம். இதைப் படிச்சுப் பாருங்க, அப்புறம் நீங்களே அன்ஃபிரெண்ட் பட்டனைத் தேடுவீங்க!"
காலையில கண்ணைத் திறந்ததும் மொபைலைத் தேடுற நம்ம பயலுவளுக்கு, ஒரு அதிர்ச்சியான நியூஸ் காத்துக்கிட்டு இருக்கும். நண்பர்கள் பட்டியலில் ஒரு சில எண்கள் குறைந்திருக்கும். அதுதாங்க... நேத்து வரைக்கும் "ஜி/சகோ... நீங்க சொல்றதுதான் கரெக்ட் ஜி/சகோ!"னு கமெண்ட் போட்டுக்கிட்டு இருந்த யாரோ ஒரு 'உத்தமர்/உத்தமி', சத்தமில்லாம அன்ஃபிரெண்ட் பண்ணிட்டுப் போயிருப்பார். ஒரு காலத்திலெல்லாம் யாராவது விலகிச் சென்றால் "யார் அது? நாம் என்ன தப்பு செய்தோம்?" என்று ஒரு பதற்றம் வரும். ஒருவித நிராகரிப்பின் வலி இருக்கும். ஆனா இப்போ, ஒருத்தர் குறையும்போது மனசுக்குள்ள வடிவேலு மாதிரி "அடேய்... இப்பத்தன் ஒரு பாரம் குறைஞ்சுச்சு!"னு தான் நினைக்கத் தோணுது.ஏன் தெரியுமா? இது இழப்பல்ல; நம் டிஜிட்டல் உலகம் சுத்தமாவதன் அடையாளம்!
சோஷியல் மீடியான்றது இப்போ வெறும் சாப்பாட்டு போட்டோ,கதை, கவிதை போடுற இடம் கிடையாது. அது நம் கருத்துக்களைப் பகிரும் களம்.இது ஒரு லோக்கல் பஞ்சாயத்து ஆபீஸ் மாதிரி. அரசியல், சினிமான்னு எதைப் பத்திப் பேசினாலும் அங்க ஒரு பயங்கரமான யுத்தம் நடக்கும். நாம போடுற போஸ்டு சில பேருக்கு 'வைக்கிற ஆப்பு' மாதிரி இருக்கும். நமது கருத்துக்கள் எல்லாருக்கும் பிடிக்க வேண்டும் என்று அவசியமில்லை. சிலருக்கு அது கசக்கலாம், சிலருக்கு எரிச்சலைத் தரலாம். நமது அலைவரிசையோடு ஒத்துப் போக முடியாதவர்கள் இவன் கூட இருந்தா நமக்கு பிபி ஏறும்"னு நினைச்சுக்கிட்டுஎடுக்கும் எளிய ஆயுதம்தான் அந்த 'Unfriend' பட்டன்.
உண்மையைச் சொன்னால், அவர்கள் என்னை விட்டுப் பிரியவில்லை; என் கருத்துக்கள் தரும் அழுத்தத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள். அது அவர்களின் உரிமை, அதை நாம் மதிக்க வேண்டும்.
"நமக்கு 5000/10000 ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க, போட்டோ போட்டா 1K லைக்ஸ் விழுது"னு காலரைத் தூக்கி விட்டுக்கிறதே ஒரு வகையான டிஜிட்டல் கிறுக்குத்தனம் தான்."நிறைய நண்பர்கள் இருந்தால் நாம் பெரிய ஆள்" என்கிற ஒரு மாயையில் நாம் சிக்கிக்கொண்டிருக்கிறோம். அந்த கூட்டத்துல நம்மள நிஜமாவே புரிஞ்சுக்கிட்டவன் எத்தனை பேரு? உடல் நலம் இல்லை என்றதும் உங்களுக்காக பிரார்த்திக்கின்றேன் என்ற போலியான கருத்துக்கள் ஆயிரம் ஆயிரம் வரும்.. அதே நேரத்தில் உடல்னிலை சரியில்லை சிகிச்சைக்காக பண உதவி தேவைப்படுகிறது என்று சொல்லும் போது நமக்கு தெரிந்த உண்மையான சிலர் மட்டுமே நமக்கு உதவ முன்வருவார்கள்.
அதனால் பட்டியலில் இருந்து சிலர் விலகும்போது, நான் இப்படித்தான் நினைக்கிறேன்: "என் பயணத்தின் தேவையற்ற சுமை குறைகிறது". ஒத்த சிந்தனை இல்லாதவர்களுடன் வலுக்கட்டாயமாகப் பயணிப்பது ஒரு பாரம். அவர்கள் விலகும்போது பயணம் இன்னும் லேசாகிறது. கூட்டத்தின் இரைச்சல் குறையும் போதுதான், உண்மையான குரல்கள் நமக்குத் தெளிவாகக் கேட்கத் தொடங்கும்.
இவ்வளவு விவாதம், பஞ்சாயத்து, சண்டை எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறமும் உங்க லிஸ்ட்ல இன்னும் சில பேர் 'விடாக்கண்டனா' ஒட்டிக்கிட்டு இருப்பாங்க பாருங்கள்... அவங்கதான் நம்ம 'உயிர்'.
அவங்க நம்ம சொல்றதுக்கெல்லாம் ஜால்ரா போடுறவங்க கிடையாது. நாம தப்பு பண்ணா நையப்புடைப்பாங்க, நம்ம கருத்தோட மல்லுக்கட்டுவாங்க... ஆனா "அவன் எக்கேடு கெட்டுப் போறான்"னு விட்டுட்டுப் போக மாட்டாங்க. அந்த நாலு உருப்படியான பேர் போதும் எனக்கு! அவர்கள்தான் உங்கள் நிஜமான பலம்.
அவர்கள் உங்கள் எல்லாப் பேச்சுக்கும் 'ஆமாம்' போடுபவர்கள் அல்ல. உங்களோடு கடுமையாக முரண்பட்டாலும் உங்கள் மீதான அன்பைக் குறைத்துக் கொள்ளாதவர்கள். நீங்கள் பதிவிடும் வார்த்தைகளைத் தாண்டி, உங்கள் மனதைப் புரிந்து கொண்டவர்கள். மேலோட்டமாகத் தொடரும் ஆயிரம் பேரை விட, ஆழமாகப் புரிந்து கொள்ளும் இந்த ஒரு சில உறவுகளே எனக்குப் போதும்.
நண்பர்களே, உங்கள் நட்புப் பட்டியல் சுருங்குவதைக் கண்டு கலங்காதீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ள போலியான முகமூடிகளைக் களைந்து, உண்மையான உறவுகளை மட்டும் உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது. இது ஏதோ நம்ம மரியாதை குறையுற காலம் இல்ல; நம்மள சுத்தி இருக்குற குப்பைங்க குறையுற காலம். அதனால, எவன் போனா என்ன? யாரு இருக்காங்களோ அவங்களை வெச்சுக்கிட்டு ஒரு 'குட்டி' பார்ட்டியை ஆரம்பிப்போம்!
இது எண்கள் குறைவதல்ல; தேவையற்றவை விலகி, உண்மையான அன்பு நிலைபெறும் அழகான தருணம். கொண்டாடுங்கள்!
"ஆயிரம் பேர் பின்தொடர்வதை விட, ஆழமாகப் புரிந்து கொள்ளும் அந்த ஒரு சில இதயங்களே வாழ்வின் பலம்!"
அன்புடன்
மதுரைத்தமிழன்
என்னிடம் இருந்து விலகி போனவர்களை "மார்க் மண்டையன்" ரெகமெண்ட் பண்ணிய போது மனதில் எழுந்த எண்ணம்தான் இது #ஞாயிற்று கிழமை சிந்தனை

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.