நீங்க என்ன ஆளுங்க?" - அட்லாண்டா குளிர்ச்சியிலும் பற்றியெரியும் பட்டிமன்ற ராஜாவின் ஜாதிச் சர்ச்சையும்!
"பேசும் கலை"யின் உச்சத்தில் இருப்பவர்கள், சில நேரங்களில் "பேசக்கூடாததை" பேசிச் சிக்கலில் மாட்டுவதுதான் காலத்தின் கோலமோ?
அமெரிக்காவின் அட்லாண்டா தமிழ்ச் சங்கப் பட்டிமன்றத்தில் முழங்கிவிட்டுத் திரும்பியிருக்கிறார் பட்டிமன்ற ராஜா. ஆனால், அவர் பேசிய பட்டிமன்ற உரையைவிட, அங்கே அவருக்கு உணவு சமைத்துப் பரிமாறிய ஒரு இளம் பெண்ணிடம் அவர் கேட்டதாகச் சொல்லப்படும் அந்த "ஒரு கேள்வி"தான் இப்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவிக்கொண்டிருக்கிறது.
"என்ன ஆளுங்க நீங்க? இந்த ஒற்றைக் கேள்விதான் ராஜாவின் புகழுக்கு இப்போது 'செக்' வைத்திருக்கிறது.
என்ன நடந்தது? - ஒரு ப்ளாஷ்பேக்!
அட்லாண்டாவில் ராஜாவுக்கும் பாரதி பாஸ்கருக்கும் தமிழ் மணம் மாறாத உணவு சமைத்துக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தார் ஒரு இளம் பெண். உணவை ருசித்த ராஜா, "நல்லா இருக்கு" என்று பாராட்டுவதற்குப் பதிலாக, "நீங்க என்ன ஆளுங்க?" என்று ஜாதியைத் துருவியிருக்கிறார். அந்தப் பெண் மௌனமாகியும் விடாமல், "ஊர் எது? எந்தப் பக்கம்?" என ஜாதியை நயமாகக் கேட்டு அந்தப் பெண்ணை நிலைகுலையச் செய்திருக்கிறார்.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தன் மனக்காயத்தை அண்ணன் கார்த்திகேயன் பாஸ்டுராவிடம் (Karthikeyan Fastura) பகிர, அவர் ஃபேஸ்புக்கில் போட்ட ஒற்றைப் பதிவு ராஜாவின் 'முதிர்ந்த' பிம்பத்தைச் சிதைத்துவிட்டது. கார்த்திகேயனைப் பொறுத்தவரை அவர் ஒரு வெற்றிகரமான இளம் தொழில்முனைவோர்; தன் நிறுவன ஊழியர்களைக் குடும்பமாகப் பார்ப்பவர். அவருக்கு ராஜாவுடன் எந்தத் தனிப்பட்ட விரோதமோ அல்லது 'பட்டிமன்றப் போட்டி'யோ இருக்க வேண்டிய அவசியம் துளியும் இல்லை. தன் தங்கைக்காக அவர் எழுப்பிய குரலில் உண்மை இருப்பதாகவே நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.
"ராஜா அப்படி கேட்டிருக்க வாய்ப்பே இல்லை" என ஒரு தரப்பு வரிந்துகட்டிக்கொண்டு வாதாட, இன்னொரு தரப்போ "இதுதான் இவர்களின் உண்மையான முகம்" எனச் சீறுகிறது. நம் ஊர் பெரியவர்களிடம், குறிப்பாக தென் மாவட்டப் பின்னணி கொண்டவர்களிடம், இயல்பாகவே பேச்சினூடே ஜாதியைத் துருவிப் பார்க்கும் ஒரு 'பழக்க தோஷம்' உண்டு. ஆனால், அந்தப் பழக்கம் அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் அடுத்த தலைமுறைத் தமிழர்களுக்குப் புரியாத - பிடிக்காத - ஒரு கசப்பான விஷயம் என்பதை ராஜா உணரத் தவறிவிட்டார். (இப்படித்தான் நன்றாகப் பேசக்கூடிய நெல்லைக் கண்ணன் அவர்கள், பிரதமரைப் பற்றிப் பேசிய பேச்சும் அதன் பின் அவர் சந்தித்த பிரச்சினைகளும் அமைந்திருந்தன).
கார்த்திகேயன் பாஸ்டுராவை நான் நீண்ட காலமாக ஃபேஸ்புக்கில் தொடர்ந்து வருகிறேன். அவர் பலருக்கு வேலை கொடுத்து, அவர்களைத் தன் குடும்பத்தினர் போலத்தான் பாவித்து வருகிறார். அப்படிப்பட்ட இவருக்கும் ராஜாவிற்கும் எந்த விதமான போட்டியும் இல்லை. ஒரு அண்ணனாகத் தன் தங்கைக்கு ஏற்பட்ட மனக்காயத்தைப் பொது வெளியில் பகிர்ந்துள்ளார்.
ராஜாவை ஆதரிப்பவர்கள், குறிப்பாக அமெரிக்கப் பட்டிமன்றத்தில் கலந்துகொண்டவர்கள், "அவர் நல்லவர், வல்லவர்" என்கிறார்கள். அவர்களுக்கு அவரால் பாதிப்புகள் ஏற்படவில்லை என்பதால் அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள். ராஜாவை நான் நேரில் பார்த்ததில்லை. ஆனால், அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் வசிக்கும் எனது நெருங்கிய உறவினர்கள், அங்கு நடந்த விழாவிற்கு வந்த ராஜா எவ்வளவு அற்பத்தனமாக நடந்து கொண்டார் என்பதைப் பல வருடங்களுக்கு முன்பே என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். எவ்வளவுதான் சம்பாதித்தாலும், புகழ் பெற்றவராக இருந்தாலும், அவர் மனதில் 'அழுக்கு' ஒட்டி இருக்கிறது என்பதையே அட்லாண்டா நிகழ்வு காட்டுகிறது.
இதனை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்க விரும்புகிறேன். ஒரு இளைஞன் சில பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டான் எனில், பாதிக்கப்பட்டவர்கள் அதனை வெளியே சொல்லும் போது அவனது குடும்பத்தினர், "அவன் தங்கமான பையன், அப்படிச் செய்ய மாட்டான்" என்பார்கள். அவனுடன் பழகிய தோழிகள், "எங்களிடம் அவன் அப்படி நடந்துகொண்டதே இல்லை" என்பார்கள். காரணம், அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட பெண் சொல்லும்போது, அது உண்மையா இல்லையா என்று விசாரணை செய்ய வேண்டுமே ஒழிய, "அவன் எனக்குத் தெரிந்தவன், நல்லவன்; அப்படிச் செய்ய வாய்ப்பில்லை" என்று சப்புக் கொட்டக் கூடாது.
ராஜா, பாரதி பாஸ்கர் உள்ளிட்ட இந்தப் பட்டிமன்றக் குழுவினர் தங்களைத் தாங்களே ஒரு 'எலைட்' (Elite) பிரிவினராகக் கருதிக்கொள்கிறார்களோ என்ற ஐயம் எழுகிறது. மெத்தப் படித்துச் சமூகக் கருத்துகளைச் சொன்னாலும், இவர்களின் மனம் குறுகித்தான் கிடக்கிறது.
முன்பு ஒரு 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், "நாங்கள் கருப்பு நிறமுடையவர்களாக இருப்பதால் பல இடங்களில் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன; வெள்ளை நிறத்தவர்கள் பேசினால்தான் மக்களுக்குப் பிடிக்கும் என்று நடத்துபவர்கள் சொல்கிறார்கள்" எனப் பட்டிமன்றப் பேச்சாளர்கள் ஆதங்கப்பட்டனர். இங்கு 'கருப்பு நிறம்' என்பது எதைக் குறிக்கிறது என்பதும், அதன் பின்னால் இருக்கும் ஜாதிய அரசியல் என்ன என்பதும் நாம் அறியாததல்ல.
சர்ச்சை வெடித்ததும் ராஜா வெளியிட்டிருக்கும் வீடியோவைப் பார்த்தால்... அடடா! 'சிவாஜி' பட ரஜினியே தோற்றுப் போய்விடுவார். வார்த்தை ஜாலங்கள், உருக்கமான நடிப்பு என இதெல்லாம் மேடைக்கு வேண்டுமானால் கைதட்டல் பெற்றுத் தரும். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் கண்ணீருக்கு முன்னால் உங்களின் இந்த 'நடிப்பு' எடுபடாது. ராஜாவின் வீடியோவில் 'மன்னிப்பு' என்பதை விட 'தற்காப்பு' (Defensive) தான் அதிகமாகத் தெரிகிறது.
"ராஜா... உங்கள் நாவுகளில் தமிழ் இருக்கிறது, ஆனால் இதயத்தில் ஜாதி இருக்கிறது! மேடையில் வெளிச்சம் இருக்கிறது, ஆனால் புத்தியில் இருட்டு இருக்கிறது! கம்பனைச் சுமக்கும் உங்கள் தோள்களில், இன்னும் ஜாதிய நுகத்தடி ஏன் தொங்குகிறது?"
அன்புடன்,
மதுரைத்தமிழன்
#PattimandramRaja #AtlantaCasteIssue #KarthikeyanFastura #TamilPride #SocialJustice #MaduraiThamizhan

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.