2026-ல் விஜய் 'கிங்' ஆகிறாரோ இல்லையோ... பலருக்கு 'செக்' வைக்கும் குதிரை! -அறிவாலயத்தின் கிலியும்... அசுரக் கணக்கும்
விஜய்க்குக் கூடிய கூட்டம், ஓட்டாக மாறுமா? கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் களத்தில், ஆளுங்கட்சியான அறிவாலயம் முதல் எதிர்க்கட்சியான கமலாலயம் வரை அனைவரையும் தூங்கவிடாமல் மண்டையைக் குடைய வைக்கும் ஒற்றைக் கேள்வி இதுதான்.
சினிமா வெளிச்சம், மாநாட்டுப் பந்தல் பிரமாண்டம் இவற்றையெல்லாம் தாண்டி, தற்போதைய தமிழக அரசியல் களத்தின் யதார்த்த நிலவரம் என்ன? விஜய் கட்சியின் பலம், பலவீனம் என்ன இவரால் யாருக்கு பாதிப்பு என்பதை எனக்கு தெரிந்த மாட்டில் விளக்குகிறேன்
விஜய்யின் அரசியல் என்ட்ரியை, மூத்த அரசியல் விமர்சகர்கள் பலரும் 2006-ல் கேப்டன் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக-வுடன் தான் ஒப்பிடுகிறார்கள். அன்று ‘கேப்டன்’ எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து நின்றபோது, சுமார் 8.4% வாக்குகளைப் பெற்றார். ஆனால், அவர் வென்றது விருத்தாசலம் என்ற ஒரே ஒரு சீட் மட்டும்தான்!
இதற்குக் காரணம் நமது தேர்தல் முறை ஒரு கட்சி மாநிலம் முழுக்க 10% ஓட்டு வாங்கினாலும், அந்த ஓட்டுகள் பரவலாகச் சிதறிக் கிடந்தால் சீட் கிடைக்காது. அதுவே, குறிப்பிட்ட சில தொகுதிகளில் 30% முதல் 35% ஆக வாக்குகள் குவிந்தால் மட்டுமே எம்.எல்.ஏ போர்டு வைக்க முடியும்.
விஜய்க்கு இன்று களத்தில் இருக்கும் ஆகப்பெரிய சவாலே இதுதான். அவருக்கு ரசிகர் மன்றக் கட்டமைப்பு தமிழகம் முழுக்கப் பரவலாக இருக்கிறது. ஆனால், பூத் கமிட்டி போட்டு, ஓட்டுகளைப் பெட்டிக்குள் கொண்டு சேர்க்கும் அளவுக்கு அடர்த்தியான அமைப்பு ரீதியான பலம் இன்னும் வரவில்லை.
விஜய்யின் அரசியல் வியூகம், உதிரி வாக்குகளை நம்பியிருக்காமல், குறிப்பிட்ட சில சமுதாய மற்றும் பிராந்திய வாக்குகளை குறிவைப்பதாகவே எனக்கு தோன்றுகிறது
எந்தெந்தப் பகுதிகளில் எந்தெந்தக் கட்சிகள் மீது மக்களுக்குக் கடுங்கோபம் இருக்கிறதோ, அங்கே போய் வலையை வீசுவதுதான் இவர்களின் இப்போதைய ஸ்கெட்ச். வன்னியர் பெல்ட் மற்றும் தலித் வாக்குகள் அதிகம் உள்ள வட தமிழக பகுதிகளில், பல ஆண்டுகளாகப் பாமக மற்றும் விசிக-வுக்கு ஓட்டளித்து அதிருப்தியில் இருக்கும் இளைய சமுதாயத்தை வளைப்பது ஒரு திட்டம். மறுபக்கம் அது போல அதிமுகவின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் கொங்கு மண்டலம் இங்கு, தற்போது இரட்டை இலைக்குள் நடக்கும் தலைமைப் பஞ்சாயத்துகளால் கட்சித் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். அங்குள்ள வாக்கு வங்கி 'வெற்றிடத்தை' நிரப்ப ஒரு கணக்கு. எல்லாவற்றுக்கும் மேலாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள 18-25 வயது இளைஞர்கள். திராவிடக் கட்சிகளின் ஊழலையும், வெற்றுப் பேச்சுகளையும் பார்த்து வெறுத்துப்போய், எந்தக் கட்சிக்கும் நிரந்தர விசுவாசியாக இல்லாத இந்த 'ஸ்விங் வோட்டர்ஸ்' மத்தியில் விஜய்யின் ‘ஸ்ட்ரைக் ரேட்’ அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
தற்போதைய அரசியல் சூழல், மக்களின் மனநிலை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, நான் கணித்திருக்கும் மூன்று விதமான சாத்தியக்கூறுகள் இதுதான்
1. தனித்துப் போட்டிடிட்டால் வாக்கு சதவிகிதம் 7% - 10% காவும் 0 - 3 தொகுதிக்ளை வெல்லாம். 2006-ல் விஜயகாந்த் செய்தது போல, வாக்குகளைப் பிரிப்பார். திமுக/அதிமுக வேட்பாளர்களின் வெற்றியைத் தடுப்பாரே தவிர, கிங் மேக்கராக முடியாது.
2. பலமான கூட்டணி வைத்து போட்டியிட்டால் வாக்கு சதவிகிதம் 12% - 15% காவும் 10 - 15 தொகுதிகளை வெல்லலாம்| காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அல்லது சில சிறிய கட்சிகளுடன் இணைந்தால், வாக்குகள் குவியும். அப்போது சட்டசபையில் ஒரு பலமான எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கலாம்.
3. எப்படி வடமாநிலங்களில் 2014ல் மோடிக்கு அலைவிசியதோ அது போல'அலை' வீசினால் வாக்கு சதவிகிதம் 18% மாகவும் 20 - 30 வரைக்கு தொகுதிகளை வெல்லாம் ஆளுங்கட்சி மீது கடும் அதிருப்தி உருவாகி, விஜய்யை மட்டுமே முழுமையான மாற்றாக மக்கள் நம்பினால் மட்டுமே இது சாத்தியம். இது ஒரு 'அதிசயக்' கணக்கு. . ஆனால் ஆளும் கட்சிக்கு எதிரான் அலைகள் இல்லை என்பதுதான் யாதர்த்த நிலவரம்
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், திமுக தலைமை பயப்படுவது விஜய்யின் வெற்றியைப் பார்த்து அல்ல; அவர் பிரிக்கப்போகும் வாக்குகளைப் பார்த்துதான்!
ஒரு தொகுதியில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான வெற்றி வித்தியாசம் வெறும் 5,000 ஓட்டுகள் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பதற்றமான தொகுதியில் விஜய் கட்சி 10,000 ஓட்டுகளைப் பிரித்தால், அது யாருக்கு லாபமோ இல்லையோ, நிச்சயம் ஆளுங்கட்சிக்குத்தான் பெரிய ஆபத்து.
குறிப்பாக, 2026-ல் எந்தக் கட்சிக்கும் பெரிய 'அலை' இருக்காது. தொகுதிக்குத் தொகுதி மைக்ரோ மேனேஜ்மென்ட் செய்துதான் சீட்களை வெல்ல வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு இருக்கிறது. இந்தச் சூழலில், ‘மதில் மேல் பூனை’யாக இருக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஓட்டுகள் ஒட்டுமொத்தமாக விஜய்யை நோக்கித் திரும்பினால், அது பல தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தலைகீழாக மாற்றிவிடும்.
விஜய்யின் தற்போதைய திட்டம் 2026-ல் ஆட்சியைப் பிடித்து முதல்வர் நாற்காலியில் அமர்வதல்ல..அதுதான் யாதர்த்தமாக இருக்கும் . சீமானைப் பின்னுக்குத் தள்ளி, அதிமுகவின் பலவீனத்தைப் பயன்படுத்தி ‘நான்தான் தமிழ்நாட்டின் அடுத்த பிரதான எதிர்க்கட்சி என்று நிரூபிப்பதுதான்! 2026-ல் எதிர்க்கட்சி வரிசையில் கெத்தாக உட்கார்ந்துவிட்டால், 2031-ல் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குச் செல்லும் வழி சுலபமாகிவிடும் என்பதுதாகத்தான் அவரின் லாங் டேர்ம் பிளான் இருக்க வேண்டும்
ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம் 2026 தேர்தல் சதுரங்கத்தில்... விஜய் 'கிங்' ஆகிறாரோ இல்லையோ, நிச்சயம் பலரை 'செக்' வைக்கும் 'நைட்' (Knight - குதிரை) ஆக வலம் வருவார் என்பதில் துளியும் சந்தேகமில்லை!
அன்புடன்
மதுரைத்தமிழன்
#TNPolitics2026 #ThalapathyVijay #TVK #ElectionAnalysis #DMKvsTVK #MaduraiThamizhan #VijayPolitics #VijayConference #TamilnaduElections #PoliticalSurvey #2026Elections #ADMKvsTVK #CaptainLegacy #MGRStyle

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.