Monday, January 20, 2020

கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் தன் நண்பர் ரஜினிக்கு இப்படித்தான் முரசோலியில் பதில் கொடுத்திருப்பார்


ரஜினி திமுகவை எவ்வளவு கேவலப்படுத்தினாலும், ரஜினியோடு சேர்ந்து வியாபாரம் செய்ய உதயநிதி தயங்குவதில்லை.  ரஜினியை வைத்து படம் தயாரிக்க மாறன் சகோதரர்கள் தயங்குவதில்லை.   அதன் காரணமாகத்தான், இன்று முரசொலியில், ரஜினியை மயிலிறகால் வருடிக் கொடுக்கும் ஒரு தலையங்கம்.

இதே கலைஞர் உயிரோடு இருந்திருந்து, அவர் முன்னால் இப்படி ஒரு நபர் முரசொலியை இழித்துப் பேசியிருப்பார் என்றால், தயவு தாட்சண்யமின்றி அந்நபரை கலைஞர் விமர்சித்திருப்பார்.    அவருக்கு, முத்து, அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, செல்வி, செல்வம் ஆகியோரை விட, முரசொலியே மூத்த பிள்ளை. முரசொலியைப் பற்றி இப்படித்தான் குறிப்பிடுகிறார் கலைஞர்


“தவழ்ந்தாடும் – தத்தி நடக்கும் – தணலை மிதிக்கும் – விழும்! எழும்! ஆனாலும் எந்த நிலையிலும் கொண்ட கொள்கையை மண்டியிட வைத்ததில்லை முன்வைத்த காலைப் பின் வைக்க நினைத்ததுமில்லை! முரசொலி நான் பெற்ற முதல் குழந்தை! ஆம் அந்த முதற் பிள்ளைதான் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனைப்போல கிண்கிணி அணிந்த கால்களுடன் பகைவர்கள் பலரைக் களத்தில் சந்திக்க சென்று வா மகனே! செருமுனை நோக்கி! என அனுப்பி வைக்கப்பட்ட அன்புப் பிள்ளை!
கலைஞர் மு. கருணாநிதி

அவர் தலையங்கம் எழுதியிருந்தால் எப்படி இருக்கும் தெரியுமா ?  இப்படித்தான் இருக்கும்.

கைகுலுக்கிக் கொண்டு கக்கும் நஞ்சு.

முரசொலி ஏடு, திராவிட இயக்கத்தின் போர்ப்பரணி பேசும் ஏடு மட்டும் அல்ல.  அது தமிழர்கள் மற்றும் தமிழ்மொழியின் பெருமை பேசும் ஏடு.  ஒரு குறிப்பிட்ட சாதிக்காகவோ, ஒரு மதத்துக்காகவோ நடத்தப்படும் ஏடு அல்ல.  அது ஒரு இனத்துக்கான ஏடு.   கரையான் புற்றில் கருநாகம் குடிபுகுந்தது போல, ஒருவர் மரணத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஆக்ரமித்தவரால் நடத்தப்படும் ஏடு அல்ல.  தமிழுணர்வை முடக்க நினைக்கும் கைபர் கணவாய் வழிவந்தவர்களை எதிர்த்து நடத்தப்படும் ஏடு.  ஆட்சியாளர்களுக்கு ஆலாபனை பாடும் ஏடு அல்ல இது.   அடக்குமுறைக்கு எதிராக போர்முரசம் கொட்டும் ஏடு இது.

ஆட்சியாளர்களை எதிர்த்ததற்காக எத்தனை அடக்குமுறைகளை சந்தித்தது முரசொலி என்பது, அடுத்தவரின் வசனங்களால் ஒளிபெற்ற நடிகர்களுக்கு தெரியாது.  நெருக்கடி நிலையில், பெரிய பெரிய ஊடக நிறுவனங்களே கொடுங்கோல் ஆட்சியின் தணிக்கைக்கும், வரி ஆய்வாளர்களின் வேட்டைக்கும் அஞ்சி துதிபாடிக் கொண்டிருந்தபோது,  அன்றைய கொடுங்கோன்மையின் ஊற்றுக்கண்ணாக இருந்த அம்மையாரை ஹிட்லராக வர்ணித்த ஏடு முரசொலி.

தொண்ணூறுகளில் அதிமுகவின் கொடுங்கோல் ஆட்சியில் ஓட ஓட விரட்டப்பட்ட அந்த நடிகருக்கு அன்று அடைக்கலம் கொடுத்தது திமுக என்பதை அந்நடிகர் வசதியாக மறந்து விட்டார்.   எந்த அம்மையார் விரட்டினாரோ, அந்த அம்மையாருக்கு அஞ்சி “தைரியலட்சுமி” என்று தஞ்சமடையும் கோழை அல்ல முரசொலி.  

“உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்” என்று அடுத்தவர் வசனங்களை நம்பி வாழ்வை நடத்தும் நடிகர்களுக்கு, தமிழே உயிராக, தமிழே உணர்வாக தமிழ்தாங்கி வரும் முரசொலியின் அருமை புரியாது.

தமிழுணர்வோடு, அரசியல் செய்திகளையும், உலக செய்திகளையும், தமிழ்கூறும் நல்லுககத்துக்கு வழங்குவதே முரசொலியின் தலையாய பணி.   “யார் பிராமணன்” என்று சாதிப் பெருமை பேசும் ஏடு அல்ல முரசொலி.  பிற மதத்தினரையும், மதங்களையும் இழிவு செய்து, ஒரு மதத்தை ஒருநாளும், முரசொலி உயர்த்திப் பேசியதில்லை.  மாறாக, அண்ணா கூறிய, ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று சமத்துவத்தை போதிக்கும் ஏடுதான் முரசொலி.

தன்னையும், தன்னை சுற்றி உள்ள கூட்டத்தையும் ஆன்மீக அரசியல் செய்வதாக ஏமாற்றி, அந்த ரசிகர்களின் உழைப்பில் வரும் பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்தும் நடிகருக்கு, உழைப்பாளிகளின் ஏடான முரசொலியைப் பற்றி தெரியாதது வியப்பில்லை.

தன் திரைவாழ்வின் அந்திம காலத்தில் இருக்கும் அந்த நடிகருக்கு, அடுத்த புகலிடமாக அரசியல் தோன்றுவதில் வியப்பில்லை.   அரசியலை அவர் ஓய்வெடுக்கும் முதியோர் இல்லமாக கருதுகிறார்.   அப்படி ஒரு முதியோர் இல்லத்தை நடத்தி வரும் பார்ப்பன கூட்டத்தின் அங்கீகாரத்தை பெருவதற்காகவே அவர் முரசொலியை இழித்துப் பேசியிருக்கிறார். 

அரசியல் களம் அனைவருக்கும் பொதுவானது.  இங்கே ஆண்டானும் அடிமைகளும் மோதலாம். களம் பொதுவானது.  ஆனால், இப்படியானதொரு அரசியல் களத்தில், ஏழைகளும், உழைப்பாளிகளும், தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும், சிறுபான்மையினரும் இருக்கக் கூடாது என்று எண்ணும் ஒரு கூட்டத்தின் அங்கீகாரத்தை பெற அந்த நடிகர் முயல்கிறார். அவர்களை அரசியல் களத்திலிருந்து அகற்றி, அடிமைகளாக்க முயலும் கூட்டத்தில் சேர அந்த நடிகர் தவம் கிடக்கிறார். 

அந்த கூட்டத்தில் அவர் திருமண உறவு கொண்டிருந்தாலும், அவர் அவர்களில் ஒருவராக ஒருநாளும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டார் என்பதை அந்நடிகர் உணர வேண்டும்.  கனகலிங்கத்துக்கு பூணூல் அணிவித்த பாரதியாரின் பெருந்தன்மை இப்போது துக்ளக்கை நடத்தும், ஆராதிக்கும் அந்த கூட்டத்துக்கு இல்லை.   அந்த நடிகரின் முகமூடியை பயன்படுத்தி மீண்டும் சனாதனத்தை நிலைநிறுத்த முயலும் அந்தக் கூட்டத்தின் சதிச் செயலுக்கு, அந்த நடிகர் இரையாகிப் போனது காலத்தின் கோலமே.

“ஒரு துளி வியர்வைக்கு ஒரு துளி காசு” கொடுத்ததாக அந்த நடிகர் பாடிய தமிழை அழிக்கவும், முடக்கவும் முயலும் அந்தக் கூட்டத்துக்குத்தான் அந்நடிகர் லாவணி பாடுகிறார்.

உயரப் பறக்க நினைக்கும் ஊர்க்குருவி ஒன்றுதான் இப்போது துக்ளக்கை நடத்தி வருகிறது.   அந்த ஊர்க்குருவி தன்னை பிதாமகர் என்றும், இந்திய அரசியலை ஆட்டிப் படைக்கும் வித்தகர் என்றும் கருதிக் கொள்கிறது.   துக்ளக்கின் ஆசிரியர் சோ பட்ட கடனால் துக்ளக்கை அவர் ஒரு பார்ப்பனருக்கு விற்க, அந்த பார்ப்பனரால் துக்ளக் ஆசிரியரான ஒண்ட வந்த பிடாரியே அந்த ஊர்க்குருவி.

முரசொலி கட்டிடத்தின் மூலத்தை ஆராயும் அந்த பார்ப்பனக் கூட்டம், அந்த ஊர்க்குருவி, துக்ளக் அலுவலகத்தில் அதன் உரிமையாளர்களின் விருப்பத்தை மீறி, அவர்கள் எதிர்ப்பையும் மீறி ஆக்ரமிப்பு செய்து அமர்ந்திருப்பதை, ஊர்க்குருவி புகழ்பாடும் அந்த நடிகர் மறந்து விட்டார்.

தமிழாலும், தமிழக மக்களாலும் வாழ்வைப் பெற்ற அந்த நடிகர் தமிழ் மக்களுக்கு கடமைப் பட்டுள்ளார்.  தன் கடமையையும், நன்றியையும் மறந்து, தமிழ் மக்களோடு கை குலுக்கிக் கொண்டே நஞ்சை கக்குகிறார் அந்நடிகர். 

அப்படிப்பட்ட ஒருவருக்கு முரசோலி வேம்பாய் கசப்பதில் வியப்பேதும் உண்டோ ?

எழுதியவர்

 சவுக்கு சங்கர்   நன்றி



அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.