Wednesday, November 6, 2019

யாருக்காக அனுதாபப்படுவது கதறித் துடித்த குழந்தைக்கா அல்லது கண்ணீர் விட்ட தாயிற்க்கா ?

அரசுப் பள்ளி ஆசிரியர் தேன்மொழி சதாசிவம் எழுதிப் பதிவிட்ட பதிவு இது இதைப் படித்த பின் என் மனதில் எழுந்த வேதனைக்கு அளவே இல்லை எனலாம் கோடிக்கணக்கில்  கண்டெயனிரில் பணம் பிடிபடுவதும் இந்த நாட்டில் தான் மக்கள் தண்ணீராகப் பணம் செலவழிப்பதும் இந்த நாட்டில்தான் சினிமாவிற்கு முதல் ஷோவிற்கு 1500 ரூபாய் பணம் கொடுத்து டிக்கெட் வாங்குவதும் இந்த நாட்டில்தான் அதே நாட்டில் ஒரு நூறுரூபாய் எவ்வளவு முக்கியமாக ஒரு உழைக்கும் பெண்ணிற்கு இருக்கிறது என்பதை நம்மால் அறியும் போது இதயத்தை முள்ளால் குத்தி கிழிப்பது போலத்தான் இருக்கிறது அவளுடைய ரணமே ரணப்படுத்தியிருக்கிறது.வறுமையும் கையறுநிலையும் வதைக்கும் அந்தப்பெண்ணைப்போன்றவர்களின் அருகில் நின்றுதான் நாம் கோடிகளின் ஊழலைச் சந்திக்கிறோம்.அர்த்தமற்றுப்போகிறது எல்லாம்

நான் படித்து மனம் நெகிழ்ந்த தேன்மொழி சதாசிவம் எழுதிய உண்மை பதிவு கீழே உங்களுக்காக

அரசுப் பள்ளி நிகழ்வு

இன்று காலை பள்ளி பிரார்த்தனைக் கூட்டத்தின் போது மின்னல் வேகத்தில் ஒரு பெண் உள்ளே வந்து ஒரு மூன்றாம் வகுப்பு மாணவியை அனைத்து ஆசிரியர் மாணவர் முன்னிலையில் அடித்து மிதித்து துவம்சம் செய்து விட்டார். ஆசிரியர் யாராலும் அவரைக் கட்டுப் படுத்தவே முடியவில்லை. ஒரு ஆசிரியர் அக்குழந்தையை வலுக்கட்டாயமாக இழுத்து வகுப்பறைக்குள் சென்று விட்டார்.

அந்தப் பெண் ஆங்காரத்துடன் கண்ணீர் வழிய உடம்பு நடுங்கச் சொன்னார். பெட்டியிலிருந்து நூறு ரூபாயை அக்குழந்தை எடுத்துக் கொண்டு வந்து விட்டாள். கடையில் இருபது ரூபாய்க்குத் தின்பண்டங்கள் வாங்கி உண்டு விட்டு மீதிப் பணத்தைச் சட்டைப் பையில் வைத்திருக்கிறாள்.மீதிப் பணத்தைப் பறித்துக் கையில் வைத்துக் கொண்டு உடல் நடுங்க அப்பெண் கத்தியதை என் வாழ்நாளில் மறவேன்.

"நூறு ரூவா. நூறு ரூவா. நூறு ரூவாயவா தூக்கிட்டு வர? அந்த நூறு ரூவாக்கி நான் எவ்வளவு கருமாயப் படுறேன் நொம்பலப் படுறேன் நூறு ரூவாயத் தூக்க எப்பிட்றீ மனசு வந்துச்சு உன்னக் கொல்லமா விட மாட்டேன்" அலறினாள்.

நான் கூற வந்தது குழந்தை பணத்தை எடுத்து வந்ததையோ தாயிடம் கொடூரமாக அடி வாங்கியதையோ அல்ல.

கண்களை விரித்து உடல் மொத்தமும் நடுங்க நூறு ரூவா நூறு ரூவா என்று அவள் கத்தியதை நினைக்க நினைக்க மனம் கொந்தளிக்கிறது. நூறு ரூபாய் என்பது எவ்வளவு பெரிய விஷயம் அவளுக்கு.ஒரு நூறு ரூபாய், பெற்ற மகளைக் கண் மண் தெரியாமல் அடித்துக் கொல்ல வைக்கிறது. நீ செத்தாலும் பரவால்ல வீட்டுக்கு வராதே எனக் கூக்குரலிட வைக்கிறது.

பிரார்த்தனைக் கூட்டம் முடியும் வரை அடி பட்ட புலியாக ஜன்னல் வழி மகளை ஆங்காரமாய் பார்த்துக் கொண்டே இருந்தார். கூட்டம் முடிந்த கையோடு அப்படியே தோளோடு அணைத்து அவரைப் பேசவே விடாமல் கைகளைப் பிடித்துக் கூட்டி வந்து விட்டேன். நொடியில் கோபம் மறைந்து டீச்சர் நூறு ரூவா டீச்சர் என அழ ஆரம்பித்தாள்.

நமக்கோ நம் வீட்டுக் குழந்தைகளுக்கோ "நூறு ரூவா"யின் அருமை தெரியுமா?

குழந்தைகளுக்கு அதைச் சொல்லி வளர்க்கிறோமா? வருமானம் என்ன? செலவு என்ன? சேமிப்பு என்ன?வருடத்திற்கு மூன்று முறை ஆடை எடுத்தது போய் தோன்றும் போதெல்லாம் ஷாப்பிங் ஷாப்பிங் என்று வாங்கிக் குவிக்கிறோமே?

"அளவறிந்து வாழாதான் வாழ்க்கை
உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்".

இக் குறளில் வரும் "உளபோல இல்லாகி" என்ற பதத்தினை எண்ணுந்தோறும் வியக்கிறேன். இன்னும் நிறைய தூரம் போகவேண்டும்.


அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. தாயின் வேதனையை படித்து மனம் கனத்து போனது.
    தாயின் கஷ்டம் தெரியாமல் அந்த குழந்தை எடுத்து வந்து விட்டதே!

    ReplyDelete
  2. வீணே பணம் ஏலவாகும் இடங்களோடு நினைத்துப் பார்க்கையில் மனம் கலங்கித்தான் போகிறது.

    ReplyDelete
  3. அச்சோ :( பாவம் அந்த தாயும் குழந்தையும்தான் ..
    நம்ம ஊரில் நாள் முழுக்க வேலை செய்தாலும் அந்த 100 ரூபாய்  சம்பளத்தை  வாங்க  எத்தனை கஷ்டப்பட்டிருப்பார் அந்த தாய் .அந்த குழந்தை அறியாமல் செய்திட்டா தாயின் இயலாமைதான் இப்படி கோபப்பட வச்சிருக்கு .மனம் என்னமோ செய்கிறது . நாங்க எங்க மகளுக்கு பணத்தின் அருமையை சொல்லி புரியவைத்தே வளர்த்திருக்கிறோம். .


    ReplyDelete
  4. நேற்று ஒரு முதியவர், குப்பைத் தொட்டியிலிருந்து பொருட்களை எடுத்து தன் டிரை சைக்கிளில் பிரித்து வைத்துக்கொண்டிருந்தார். நான் அவரிடம், இதெல்லாம் எதுக்கு எடுக்கறீங்கன்னு கேட்க, அவர், கிலோ 10 ரூபாய்க்கு இதை வாங்கிக்க ஆட்கள் இருக்காங்க என்றார். ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிப்பீங்க என்றதற்கு, 300-400 ரூபாய் சம்பாதித்துவிடுவேன் என்றார்.

    சிலர், 120 ரூபாய் சினிமா டிக்கெட், போக வர ஆட்டோ செலவு 200 ரூபாய், சினிமா தியேட்டரில் 500 ரூபாய்க்கு உணவு என்றெல்லாம் செலவழிக்கும்போது எனக்கு ரொம்ப நெர்வஸா இருக்கும். (நான் இது மாதிரி தியேட்டர்ல அளவுக்கு அதிகமா ரூபாய் கொடுத்து சாப்பிடவே மாட்டேன்... அந்த டாம்பீகத்தை வெறுக்கறேன்)

    கோடிக்கணக்கான் சொத்துக்கள் உடைய ஏ.வி.எம். செட்டியார், ஆஸ்பத்திரியில் படுத்திருந்தபோது கடைசியாக தன் மகன் சரவணனிடம் சொன்னது, 'ஏப்பா..பாத்ரூம்ல வேஸ்டா லைட் எரியுதுப்பா. அணைத்துவிட்டுச் செல்'.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.