Tuesday, April 2, 2019

#avargalunmaigal
ரபேல் பேர ஊழல்’ புத்தக வெளியீடும் தடை உத்தரவும்


ரபேல் பேர ஊழல்’ புத்தக வெளியீட்டிறுகு தேர்தல் ஆணையம் தடைவிதித்ததை அடுத்து அந்த புத்தகம் இணையத்தில் பிடீஎஃப்  வடிவத்தில் மிக வைரலாக பலராலும் பகிரப்பட்டுள்ளது .. அந்த நூலின் பிடீஎஃப்  பை இந்த https://drive.google.com/file/d/15lXJsVT5zvDLgS41VY_aYpr1KThaZsrM/view  லிங்கிற்கு சென்று நீங்களும் தரவிரக்கம் செய்யலாம்





எது தடுக்கப்படுதோ அதை ஆவலுடன் படிக்கும் வாசகர்கள் அதிகம்.... ரபேல் ஊழலும் மோடியின் அவல ஆட்சியும்...

இந்த தடை பற்றி  Kumaresan Asak எழுதி வெளியிட்ட பதிவுதான் இது

--------------------------------
“நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடந்திருந்தால் 200 பேருக்குப் புத்தகம் போயிருக்கும். இடையில் தடை செய்யப்பட்டதால் தமிழகம் முழுக்க லட்சக்கணக்கானவர்களுக்குப் புத்தகத்தின் பிடீஎஃப் போய்விட்டது!”


சென்னையில் நேற்று (ஏப்.2) ‘நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’ புத்தக வெளியீடு தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையால் தடை செய்யப்பட்டதோடு, நிகழ்ச்சிக்காக அச்சிட்டு வைக்கப்பட்டிருந்த புத்தகப் படிகளையும் கைப்பற்றிச் சென்றது பற்றிய செய்தி ஊடகங்கள் வழியாகப் பரவியதைத் தொடர்ந்து என்னுடன் பேசிய பத்திரிகையாளரான ஒரு நண்பர் இவ்வாறு சொன்னார்.

எஸ். விஜயன் எழுதிய இந்தப் புத்தகத்தை மூத்த பத்திரிகையாளர் என்.ராம் வெளியிட, முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் சுந்தர், திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன், எழுத்தாளர் ஜெயராணி ஆகியோர் பெற்றுக்கொள்ளவிருந்தனர். நான் வரவேற்றுத் தொகுப்பதற்குத் தயாராகிக்கொண்டிருந்தபோதுதான் பதிப்பாளர் நாகராஜனிடமிருந்து, வாட்ஸ்அப் வழியாக, பறக்கும் படையின் உதவி செயற்பொறியாளர் கணேஷ் அனுப்பிய தடையாணைக் கடிதம் வந்து சேர்ந்தது. புத்தகங்கள் கைப்பற்றிக் கொண்டுசெல்லப்பட்டது பற்றி புத்தகாலயப் பொறுப்பாளர் சிராஜ் எனக்குத் தெரிவித்தார்.

“தங்கள் கடையில் அரசியல் சம்பந்தமான புத்தக வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாகத் தகவல் வந்ததன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. தேர்தல் விதி மீறல் உள்ளதால் புத்தகத்தை வெளியிடத் தடை செய்யப்படுகிறது. மீறும் பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என்று அந்தக் கடிதத்தில் எழுதிக் கையெழுத்திட்டுள்ளார் அதிகாரி.

எந்த நேரத்திலும் அரசியல் பேசுவது, குறிப்பாகத் தேர்தல் நேரத்தில் அரசியல் பேசுவது, ஒரு அடிப்படை ஜனநாயக உரிமை. ஆனால் எந்த அடிப்படையில் அரசியல் சம்பந்தமான புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒரு விதி மீறலாகிறது? எதிர்க்கட்சிகளின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் தலைவர்கள் ரபேல் அரசியல் பற்றிப் பேசுகிறார்கள். ஆளுங்கட்சித் தலைவர்களும் குற்றச்சாட்டை மறுப்பதன் பெயரால் பேசுகிறார்கள். தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடைபெறுகின்றன. பத்திரிகைகளில் கட்டுரைகள், தலையங்கங்கள், பேட்டிகள் வெளியாகின்றன. அவையெல்லாம் விதி மீறல்கள்தானா?

தேர்தல் கூட்டங்களில் இது பற்றிப் பேசுவதற்கு முன்னனுமதி பெற வேண்டுமோ? தொலைக்காட்சி விவாதங்களுக்கும் பத்திரிகைக் கட்டுரைகளுக்கும் தலையங்கங்களுக்கும் யாரையாவது பேட்டி எடுப்பதற்கும் கூட முன்னனுமதி பெற வேண்டுமோ?

ஏற்கெனவே தேர்தல் ஆணையம் மத்திய ஆளுங்கட்சிக்கும் தமிழக ஆளுங்கட்சிக்கும் சாதகமாகச் செயல்படுகிறது என்ற விமர்சனங்கள் இருக்கின்றன. புத்தக வெளியீடு தடை செய்யப்பட்டது அந்த விமர்சனங்களில் உண்மை இருக்கிறது என்ற எண்ணத்தையே மக்களுக்கு ஏற்படுத்துகிறது.

தடை பற்றிக் கருத்துக்கேட்ட ஊடகவியலாளரிடம் இதைக் கூறிவிட்டு எனது பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, “நிகழ்ச்சிக்குத் தடையெல்லாம் விதிக்கப்படவில்லை, விளக்கம் மட்டுமே கேட்கப்பட்டிருக்கிறது” என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறிய செய்தி வந்தது். நிகழ்ச்சி தடைசெய்யப்பட்ட தகவல் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்ட பிறகு!

உதவி செயற்பொறியாளரின் கடிதத்தில் ‘தடை செய்யப்படுகிறது’ என்றே இருக்கிற சொற்களுக்கு என்ன அர்த்தமோ? விளக்கம் கேட்பதற்குப் புத்தகங்களை எதற்காகக் கைப்பற்றிச் செல்ல வேண்டும்? நிகழ்ச்சி பற்றி விளக்கம் கேட்பதற்காகவா, புத்தகத்தைப் பற்றியே விளக்கம் கேட்பதற்காகவா?

தடை இல்லை என்று அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் புத்தக வெளியீடு எளிமையாக ஆனால் உணர்வெழுச்சியோடு நடைபெற்றது. மாறிக்கொண்டே இருந்த அந்தக் கடைசி நேரத்திலும் நிறைய அன்பர்கள் அரங்கிற்கு வந்துவிட்டார்கள்.

புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய ராம், ஊடகங்கள் மூலமாகத் தடைச் செய்தி பரவியதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையரே தன்னிடம் தொடர்புகொண்டு, இந்த நடவடிக்கை தங்களால் ஆணையிடப்பட்டதல்ல என்றும், யாரோ உள்ளூரில் செய்திருக்கிறார்கள் என்றும், அது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்ததாகக் கூறினார். ஆணையத்திற்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

பறக்கும் படைக்குத் “தகவல் கொடுத்து” நிகழ்ச்சியை முடக்க முயன்ற மூளைகள் இப்போது என்ன யோசித்துக்கொண்டிருக்கும்?

நிகழ்ச்சித் தொகுப்புக்கான தயாரிப்புடன் இருந்த எனக்குத்தான் பெரிய இழப்பு. வெளியீட்டு நிகழ்வு இல்லை என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பொறுப்பாளர்கள் யாரையும் தொடர்புகொள்ள முடியாத சூழலில், வேறொரு பணியைத் தொடங்கிவிட்டேன். நிகழ்ச்சி இருக்கிறது, ஐந்து நிமிடங்களில் தொடங்கப்போகிறது என்று தகவல் வந்தபோது, நான் புறப்பட்டுப் போய்ச்சேர ஒரு மணி நேரமாவது ஆகிவிடும் என்பதால் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. இத்தனைக்கும் இந்த நிகழ்ச்சித் தொகுப்பு வாய்ப்பை நானே கேட்டுப்பெற்றிருந்தேன். கர்னல் சுந்தரும் இந்தத் திருப்பங்களின் காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனது பற்றிய வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார்.

என்னுடன் பேசிய பத்திரிகை நண்பர் கைப்பற்றப்பட்ட புத்தகங்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்களா என்று கேட்டார். அவரிடம் சொன்னேன்: “தெரியவில்லை. அப்படியாவது அவர்கள் புத்தகத்தைப் படிக்கட்டும். எப்படிப்பட்ட ஆட்சியில் பணியாற்றுகிறோம் என்பதை உணரட்டும்.”





-=======================

அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு

    ReplyDelete
  2. அவசியமான பதிவு மாப்ஸ்

    ReplyDelete
  3. அவர்கள் ஏன் அந்த புத்தகத்தை படிக்க போகிறீர்கள்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.