Tuesday, April 9, 2019

இந்து மதத்துக்கு ஆபத்தா? ஒரு அலசல்



தேர்தல் நெருங்க நெருங்க மித வாதம் குறைந்து மதவாதம் (மதம் பற்றிய வாதம்) பெருகிக் கொண்டிருக்கிறது.

பாஜக ஆட்சி வந்த பின்னால், இந்து மதத்தைக் காப்பாற்ற ஒரே வழி, நமது கல்ச்சரை காப்பாற்ற ஒரே வழி பாஜகவை ஆதரிப்பது தவிர வேறில்லை என்பது போல் ஒரு மாயை உருவாக்கப்பட்டிருக்கிறது.

பாஜகவை ஆதரிக்க பல காரணங்கள் இருந்தாலும், மதம்பிடித்து ஆதரிக்கும் காரணம் எனக்கு ஏற்புடையதில்லை.

ஏன்?

பாஜக தீவிர ஆதரவாளர்கள் நம்மை மதத்தை வைத்து பயமுறுத்துகிறார்கள்.

எப்படி?
***

”பிற மதத்தினர் உங்களை அவர்கள் மதத்துக்கு இழுக்கிறார்கள். இந்துக்கள் பிறமதங்களுக்கு மாறுவது அதிகரித்திருக்கிறது. இப்படியே போனால், இந்தியாவில் இந்துக்கள் மைனாரிட்டி ஆகிவிடுவார்கள். பிறமதத்தினர் மெஜாரிட்டி ஆகி, ஆட்சிக்கு வந்து, நம்நாட்டை வேறுமத நாடாக மாற்றிவிடுவார்கள். பிறகு நாம் நமது கலாச்சார அடையாளங்களை இழந்து, நம் மத பழக்கவழக்கங்களை கடைபிடிக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவோம். முஸ்லீம் நாடுகளில் எப்படி ஹிந்துக்கள் இருக்கிறார்களோ, அப்படி இருக்கவேண்டிய நிலை ஏற்படும். ஆகவே, இப்போதே சுதாரித்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால்.....
***

இந்த பயமுறுத்தலை பல இந்துக்கள் கேள்வி கேட்காமல் நம்புகிறார்கள்.

உண்மை நிலவரம் என்ன?

ஒரு 38 சதவீதம் பேர் பாஜகவுக்கு ஓட்டளிப்பவர்கள். இதில் மைனாரிட்டி மதத்தினர் ஒரு 3 சதவீதம் இருப்பார்கள் என்று கொண்டால், 35 சதவீதம் இந்துக்கள் பாஜகவுக்கு ஆதரவளிப்பவர்கள். அப்படி என்றால் என்ன அர்த்தம்? மீதம் உள்ள 65 சதவீதத்தினருக்கு இந்து மதம் ஆபத்தில் இருப்பதாக தோன்றவில்லை. அவர்கள் இந்து கலாசாரம், மத பழக்கவழக்கம் ஆகியவை பாதிக்கப்படாது என்று நினைக்கிறார்கள் என்று கொள்ளலாம் அல்லவா?

சுலபமாக நம்மை மதமாற்றம் செய்ய முடியும் என்றால் , முஸ்லீம் அநாடுகளில் பல வருடங்களாக வாழும் இந்துக்கள் எப்படி இன்னும் இந்துக்களாகவே இருக்கிறார்கள்? (பாகிஸ்தானிலும் இந்துக்கள் உண்டு, இந்துக் கோவில்கள் உண்டு; சில அரபு நாடுகளிலும் இந்துக்கோவில்கள்... முஸ்லீம் போலீஸ் பாதுகாப்புடன் உண்டு)

இதேபோல் கிருத்துவம் பெரும்பான்மையான அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், பவுத்தம் பெரும்பான்மையாக இருக்கும் சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளிலும் இந்துக்கள் மதம் மாறிவிடவில்லையே.

அதெல்லாம் இல்லை, அங்கெல்லாம் அவர்கள் (மதம் மாற்றுபவர்கள்) மிதவாதிகள். நம் நாட்டை மாற்றத்தான் அவர்கள் விரும்புகிறார்கள் என்று ஒரு வாதம் வரலாம்.

ஒரு இருநூறு, முன்னூறு, ஐநூறு, ஏன் ஆயிரம் வருடங்கள் வரை பின் சென்று பார்க்கலாம்.

முகலாய மன்னர்கள் பலர் நம் நாட்டை ஆக்கிரமித்தார்கள். அவுரங்கசீப் போன்ற கொடுங்கோல் மன்னர்களும் இருந்திருக்கிறார்கள். நம்நாட்டையே சேர்ந்த அசோகர் போன்ற மன்னர்களும் இந்து மதத்தை விட்டு புத்த மதத்தை தழுவியிருக்கிறார்கள். அப்போதேல்லாம் ஜனநாயக ஆட்சி, ஒரு கான்ஸ்ட்டியூஷனுக்கு கீழா நடந்தது? மதம் மாறு, இல்லாவிட்டால் சிரச்சேதம் என்று சொல்லும் அளவுக்கு அதிகாரமும், ரத்தம் குடிக்கும் கத்திகளும், வீரர்களும் இருந்தார்கள். கேள்வி கேட்க ஆளில்லை. ஆனாலும் இந்து மதம் அழியவில்லையே?

இப்போது மட்டும், அதுவும் என்றும் இல்லாத அளவுக்கு இத்தனை பயம் ஊட்டி பிரிவினை செய்வது எதனால்? ஓட்டுக்காகதானே?

கலாசார அடையாளங்கள் காணாமல் போகும் என்று வாதிடுபவர்களுக்காக...

நான் பிறப்பால் பிராமணன். நடப்பால் நான் பிராமணன் இல்லை. இன்றைய நிலையில், பல பிராமணர்களின் நிலை இதுதான். முடிந்த அளவுக்கு பிராமணீயம் கடைபிடிக்கிறார்கள். இந்த நாளில் நடைமுறைக்கு ஒவ்வாதவை என்பதை விட்டுவிட்டார்கள். சில அவர்களாகவே விட்டது. சில பிள்ளைகள் தலையெடுத்து சொல்லிக்காட்டியதால் விட்டது. நம் பெற்றோர் கடைபிடித்ததையும், அவர்களுடைய பெற்றோர் கடைபிடித்ததையும், நாம் கடைபிடிப்பதுடன் ஒப்பிட்டால், பல வேறுபாடுகள் நிச்சயம் இருக்கும். உதாரணத்துக்கு, தரையில் அமர்ந்து இலையில் சாப்பிட்ட காலம் ஒன்று உண்டு. கணவன் சாப்பிட்ட எச்சில் இலையில் மனைவி சாப்பிட்ட காலம் ஒன்று உண்டு. மாதவிடாய் நாட்களில் பெண்கள் வீட்டில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு தனியாக அமர்ந்திருந்ததுண்டு. தினமும் இறைவனுக்கு அர்ச்சிக்காமல், ஆராதனம் செய்யாமல் சாப்பிடாமல் இருந்ததுண்டு. ஆங்கில காய்கறிகள் என்று சிலவற்றை சுத்தமாக ஒதுக்கியதுண்டு. கிணற்றுத் தண்ணீரை (அல்லது ஆற்று நீர்) மட்டும்தான் உபயோகிப்பேன் என்று இருந்த காலம் உண்டு. இளம் வயதிலேயே ஆண்களுக்கு பூணூல் போட்ட காலம் உண்டு. பிராமணன் நிச்சயம் குடுமி வைத்திருக்க வேண்டும், வைத்திருந்தார்கள் என்கிற காலம் ஒன்று உண்டு.

ஒரு நூறு வருடத்திற்கு முன் தமிழ்நாட்டில் இந்துத் திருமணங்கள் ஐந்து நாள் நடந்ததாக நான் கேட்டிருக்கிறேன். இப்போதைய திருமணங்கள் ஒன்றரை, அதிகபட்சம் இரண்டு நாட்களில் முடிந்து விடுகின்றன. இப்போதைய திருமணங்களும் வட, தென்னாட்டு பழக்கங்களின் கலவையாக மாறியிருக்கிறது.

கைம்பெண் மறுமணம் செய்யாமலும், அவர்களின் அழகை குறைக்கும் செயல்களை செய்தும் இருந்த காலம் ஒன்று இருந்தது. இப்போது கைம்பெண் மறுமணம் நடக்க வேண்டியது வாழ்க்கைக்கு அவசியம் என்று மாறியிருக்கிறது.

இந்து மதத்தினர் வேறு மத வழிபாட்டுத்தலங்களுக்கு செல்லாமல் இருந்ததும், வைணவர், சைவ வழிபாட்டை ஒதுக்கியதும், சைவர்கள் திருமால் வழிபாட்டை ஒதுக்கியதும் சரித்திரத்தில் உண்டு.

இன்று பல இந்து மதத்தினர் பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு செல்கிறார்கள். எனக்குத் தெரிந்த சில பிறமதத்தவர் இந்து மத வழிபாட்டுத்தலங்களுக்கு இறைவனை தரிசிக்க சென்றிருக்கிறார்கள். பிரபலங்கள் என்று எடுத்துக் கொண்டால், கிருத்துவ மதத்தைச் சார்ந்த யேசுதாஸ், இளையராஜா ஆகியோர் கிட்டத்தட்ட இந்துக்களாகவே இருப்பது அனைவரும் அறிந்தது.

சைவ, வைணவ பிரிவுகளை இணைக்கும் பாலமாக சிவன், விஷ்ணு இருவரையும் வழிபடும் ஸ்மார்த்தர்கள் என்கிற வகுப்பு உருவானதும் சரித்திரம்.

கிட்டத்தட்ட மேலே சொன்ன அனைத்தும், ஜாதி சார்ந்த பழக்கவழக்கங்களாக இருந்து காலத்தின் மாற்றத்தில் காணாமல் போனவை. இந்த மாற்றம் பிராமண ஜாதி மட்டுமல்ல, வேறு பல ஜாதிகளிலும் நடந்திருக்கிறது. (மற்ற மதங்களில் நடந்திருக்கிறதா என்று சொல்ல எனக்கு அந்த மதங்களைப் பற்றிய அறிவும் புரிதலும் கிடையாது.)

இந்து மதத்தின் அனைத்து ஜாதிகளிலும் இது நடந்திருக்கிறது என்று கொண்டால், இந்து மதமும் மாறியிருக்கிறது என்றுதானே பொருள்? இந்து மதம் தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்கிறது என்றுதானே பொருள்?

மதம் தன்னை புதுப்பித்துக் கொள்வதன் பலன் என்ன? புதுப்பித்துக் கொள்வது சர்வைவலுக்கு நல்லதா, ஆபத்தானதா?

அதனால்தான் சொல்கிறேன். ஓட்டுப் போடுங்கள்...

மதத்தை முன்னிறுத்தி ஓட்டுப் போடாதீர்கள். இது அனைத்து மதத்தினருக்கும் நான் வைக்கும் வேண்டுகோள். அது பிரிவினையை, பிளவை அதிகப்படுத்தும். நம் வாழ்வில் நாம் தினமும் பிற மதத்தினரை சந்திக்கிறோம். அப்போது நம்முடன் நட்பும், அன்பும் பெருகவேண்டும். மதம் கொண்ட அரசியலால் நேசமும், நட்பும் நாசமாக அனுமதிக்கக்கூடாது.

பதிவை எழுதி வெளியிட்டவர் இரா. சத்தியமூர்த்தி அய்யங்கார் அவர்களுக்கு எனது நன்றிகள்
8.4.2019


பேஸ்புக்கில் படித்த இந்த பதிவு சற்று நம்மை சிந்திக்கவும் வைக்கிறது


அன்புடன்
மதுரைத்தமிழன்






1 comments:

  1. நல்ல பகிர்வு.மதங்களின் பிடிவாதத் தன்மையை அடுத்தடுத்த தலைமுறைகள் நீக்கிவிடும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.