Saturday, June 30, 2018

avargal unmaigal
எட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது?



சர்ச்சைக்குரிய சேலம்-சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டத்தை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மட்டுமல்லாது அரசியல் கட்சிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.

தற்போது சேலத்திலிருந்து சென்னை செல்வதற்காக பயன்பாட்டிலுள்ள இரண்டு வழிகளிலுமே போக்குவரத்து நெரிசலின் காரணமாக அதிக அளவிலான விபத்துக்கள் நடப்பதை குறைக்கும் பொருட்டும், தற்போதுள்ள பயண நேரத்தை வெகுவாக குறைக்கவுள்ளதாகவும் கூறும் மத்திய, மாநில அரசாங்கங்கள் இத்திட்டத்தை செயற்படுத்துவதில் முனைப்பாக உள்ளன.

இத்திட்டத்தால் பாதிக்கப்படும் மக்கள், தங்களது கருத்துக்களை கேட்காமலே நில அளவை செய்து எல்லைக்கல் நடுமளவுக்கு திட்டம் சென்றுள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது போன்ற திட்டத்தை செயற்படுத்தும்போது அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து, தைவான், மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அரசுகள் கடை பிடிக்கும் நடைமுறைகள் என்னவாக இருக்கும். அது சாத்தியமாக இருக்குமா என்பது குறித்து அறிய முயன்றோம்.

சுவிட்சர்லாந்து

மத்திய ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து, " மிகவும் ஒழுக்கமான ஜனநாயகத்தை கொண்டுள்ளது. இதன் அரசமைப்பானது அதிகாரத்தை ஓரிடத்தில் குவியாமல் பார்த்துக்கொள்கிறது. அதாவது, மத்திய அரசாங்கம் முன்வைக்கும் ஒரு திட்டத்தை செயற்படுத்தலாமா வேண்டாமா என்று சில ஆயிரம் பேர் வசிக்கும் ஒரு மாவட்டத்தால் கூட தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும்" என்று கூறுகிறார் சுவிட்சர்லாந்து தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியரான கல்யாணசுந்தரம்.

சுவிட்சர்லாந்தை பொறுத்தவரை அதன் மத்திய அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்துக்கு அரசியல் கட்சிகளோ அல்லது மக்களோ எதிர்ப்பு தெரிவித்தால் நாடு தழுவிய அளவில் பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெருவாரியானோரின் கருத்துப்படி முடிவெடுக்கப்படும்.

இதுவே, மாநில அளவில் அல்லது மாவட்ட அளவில் செயற்படுத்தப்படும் திட்டங்களுக்கு எதிர்ப்பு எழுந்தால் பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு பிறகு முடிவெடுக்கப்படும்.

சுவிட்சர்லாந்தை பொறுத்தவரை எங்கு கண்டாலும் இயற்கையான சூழல் நிறைந்திருக்க வேண்டுமென்று அனைவரும் விரும்புகிறார்கள். எனவேதான் பெரும்பாலும் 12 தளங்களுக்கு மேலான கட்டடங்களை இங்கு பார்ப்பதே மிகவும் அரிதானது என்று அவர் மேலும் கூறுகிறார்.

"போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் மத்திய சுவிட்சர்லாந்திலுள்ள சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மேம்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டது. இந்த திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அங்குள்ள புரோவிராடோ என்ற சிறிய ஊர் இரண்டாக பிரிக்கப்படும் சூழ்நிலை உருவானபோது பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, இரண்டாயிரம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக திட்ட வடிவத்தை மாற்றிய அரசாங்கம் சுமார் 100 மில்லியன் டாலர் செலவில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் சுரங்க வழிப்பாதையை அமைத்தது" என்று கூறுகிறார் கல்யாணசுந்தரம்.

இவ்வாறு, மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் திட்டங்களுக்கெல்லாம் வாக்கெடுப்புகளின் மூலம் தீர்வு எட்டப்படுவதாகவும், இயற்கையையும், மக்களையும் பாதுகாக்கும் அதிகாரப் பகிர்வுள்ள ஒரு நாட்டில் மட்டுமே இதெல்லாம் சாத்தியம் என்றும் அவர் கூறுகிறார்.

சிங்கப்பூர்

சிங்கப்பூர் அளவில் சிறியதாக இருந்தாலும், நவீனமயமாக்கம் என்ற பெயரில் இயற்கையை அழிக்கும் திட்டங்களை அரசோ அல்லது மக்களோ ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்றும் மக்களுக்கு போதிய விளக்கத்தை கொடுப்பதற்காக அரசாங்கமே ஒவ்வொரு திட்டதிற்கும் தனியே குறும்படத்தை திரையிட்டு கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்துவதாகவும் கூறுகிறார் சிங்கப்பூரை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநரான சுப்ரமணியம்.

"மூன்றாண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரின் மேற்குப்பகுதியையும், கிழக்குப்பகுதியையும் இணைக்கும் சாலைத்திட்டத்துக்கு ஆய்வுப் பணிகள் நடைபெற்றன. அப்போது, அந்த சுரங்க வழிச்சாலை அமைக்கப்பட்டால் அருகிலுள்ள நீர்த்தேக்கம் பாதிக்கப்படும் என்ற கருத்து எழுந்ததையடுத்து,அரசாங்கம்-வல்லுநர்கள்-மக்கள் இணைந்து நடத்திய கலந்துரையாடலுக்கு பிறகு திட்டத்துக்கு மறுவடிவம் கொடுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகிறது" என்று அவர் மேலும் சுட்டிக்காட்டுகிறார்.

சேலம்-சென்னை எட்டு வழிப்பாதை திட்டம் குறித்து பேசிய அவர், "இந்த திட்டம் சாமானிய மக்களுக்காக என்று அரசாங்கம் கூறுகிறது, ஆனால் மக்களோ தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். மேலும், அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வல்லுநர்களின் கருத்தையும் மக்கள் ஏற்பதாக தெரியவில்லை. எனவே, இத்திட்டத்தை பற்றி அறிந்திராத, இத்துறை சார்ந்த வல்லுநரை வெளிநாட்டிலிருந்து வரவழைத்து அவர்களின் கருத்தை கேட்டு முடிவெடுத்தால் நல்ல முடிவு கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது" என்று அவர் தனது யோசனையை முன்வைக்கிறார்.

பிரிட்டன்

இந்தியாவை பல்லாண்டுகளாக ஆண்ட பிரிட்டிஷ்காரர்களின் அரசமைப்பு சட்டத்தை முதன்மையாக கொண்டே இந்தியாவின் அரசமைப்பு சட்டமும் எழுதப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று கடந்த மூன்றாண்டுகளாக லண்டனில் வசிக்கும் தகவல் தொழில்நுட்ப வல்லுநரான சிவா சுப்ரமணியம் கூறுகிறார்.

"நான் பிரிட்டனின் நிரந்தர குடிமகன் கிடையாது. இருந்தபோதிலும், என் வீட்டருகில் புதியதாக ஆரம்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பல்பொருள் அங்காடி பற்றிய எனது கருத்தையும் தெரிவிக்கலாம் என்று என் வீட்டிற்கு வந்த கடிதம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அந்த கடிதத்தில் அத்திட்டத்தை பற்றிய அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த மேலதிக தகவல்கள் வேண்டுமென்றால், இந்தியாவை போன்று தகவலறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்துவிட்டு பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமேயில்லை. நாட்டில் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்கள் பற்றிய தகவல்களும் மின்னணுமயமாக்கம் செய்யப்பட்டு இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது" என்று அவர் கூறுகிறார்.

ஐரோப்பிய நாடுகளை போன்றோ அல்லது மற்ற உலக நாடுகளை போன்றோ இந்தியா வளராததற்கு முக்கிய காரணமாக மக்கள் தொகை முன்வைக்கப்படுகிறதே என்று கேட்டதற்கு, "ஐரோப்பாவை இந்தியா என்றும் பிரிட்டனை தமிழ்நாடு என்றும் வைத்துக்கொள்ளுங்கள். இங்கு ஒவ்வொன்றிற்கும் தனியே அரசாங்கமும், குறிப்பிட்ட மக்கள்தொகையும் உள்ளது. தமிழ்நாடு அளவிலுள்ள பிரிட்டன் போன்ற ஒரு நாடு முன்னேறும்போது ஏன் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்தையும் முன்னேற்ற முடியாது?" என்று கேள்வியெழுப்புகிறார்.

லண்டனின் பிரதான விமான நிலையமான ஹீத்ரு விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இங்குள்ள அரசாங்கம் மக்களுடன் கலந்துரையாடல் செய்தது மட்டுமல்லாமல், விரைவில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பையும் நடத்தவுள்ளது. ஆனால், ஒரு கட்சியின் ஆட்சியை கவிழ்ப்பதற்கும், குதிரை பேரத்தில் ஈடுபட்டு ஒரு கட்சி ஆட்சியமைப்பதற்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்து வாக்கெடுப்பை நடத்தும் அரசாங்கங்கள் ஏன் மக்களை பாதிக்கும் அல்லது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இதுபோன்ற திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்துவதற்கு தயங்குகின்றன என்று சிவா மேலும் கூறுகிறார்.

வெளிப்படைத்தன்மையற்ற அரசாங்கங்கள் மக்களுக்கு நல்லதே செய்தாலும், அரசின் மீது அவநம்பிக்கை கொண்டுள்ள மக்கள் அனைத்து திட்டங்களையும் சந்தேக மற்றும் தவறான கண்ணோட்டத்துடன்தான் பார்ப்பார்கள் என்றும் அரசாங்கங்கள் உண்மையை பேசும்வரை, வெளிப்படைத்தன்மை மற்றும் கேள்விகளுக்கு தகுந்த பதில்களை வழங்காத வரை இதில் மாற்றம் ஏற்படுவது கடினம் என்றும் அவர் கூறுகிறார்.

தைவான்

இந்தியா போன்ற ஒரு மிகப் பெரிய நாட்டிலே இதுபோன்ற திட்டங்களை செயற்படுத்துவது கடினமென்று நினைத்தால் வெறும் 36,197 சதுர கிலோ மீட்டரை பரப்பளவாக கொண்டுள்ள தைவானில் பொருளாதார வளர்ச்சிக்கேற்ப கட்டடங்கள் மற்றும் சாலைகள் போன்ற கட்டமைப்புகளையும் மேம்படுத்த வேண்டும், அதே வேளையில் இயற்கை வளங்களையும் பாதுகாக்க வேண்டுமென்ற நிலைமையை எண்ணிப் பாருங்கள் என்கிறார் கடந்த ஐந்தாண்டுகளாக தைவானில் வசிக்கும் தொழில் முனைவோரான வசந்தன் திருநாவுக்கரசு.

"மக்கள் வாழ்வதற்கென ஒரு பகுதி, மலைகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மிகுந்துள்ள மற்றொரு பகுதி என தைவான் இரண்டாக பிரித்தாளப்படுகிறது. நாட்டின் முக்கிய முனைகளான 400 கிலோ மீட்டர்கள் தென்முனையையும், வட முனையையும் மூன்று அல்லது அதற்கு குறைவான மணிநேரத்திலேயே இயற்கையை பாதிக்காத வகையில் மேம்பாலம்/ சுரங்கப்பாதை வழியே செல்வதற்குரிய ரயில் மற்றும் விமான சேவை மட்டுமல்லாமல் சுங்க கட்டணமே இல்லாத அதிவேக சாலை வசதியும் உள்ளது" என்று அவர் கூறுகிறார்.

சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை போன்ற ஒரு திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்தால் தைவான் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்று கேட்டதற்கு, "தைவான் மக்கள் நலன் மீது அக்கறை கொண்டுள்ள ஓர் அரசாங்கம். எனவே, இதுபோன்றதொரு திட்டத்தை அரசாங்கம் செயற்படுவதற்கான வாய்ப்பே கிடையாது" என்ற அவர் "சென்னையில் நிலங்களையும், குடியிருப்புகளையும் ஆக்கிரமிப்பு செய்யாமல் மெட்ரோ ரயில் தடத்தை மட்டும் அமைக்க முடியும்போது ஏன் இந்த திட்டத்தையும் மக்கள் பாதிக்கப்படாத வகையில் செயற்படுத்த கூடாது?" என்று கேள்வியெழுப்புகிறார்.

ஒரு பக்கம் பசுமை வழிச்சாலைத் திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சரோ மக்களே முன்வந்து திட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறுவது இந்த விடயத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவுவதை காட்டுவதாக கூறும் அவர் தனது ஆறு வருட தைவான் அனுபவத்தில் ஒருமுறைகூட அரசின் திட்டத்தை எதிர்த்து மக்கள் போராடும் சூழ்நிலையை பார்த்ததே கிடையாது என்றும், மக்களுக்கு போதிய விளக்கத்தையும், அவர்களின் ஒப்புதலையும் பெறாமல் அரசாங்கம் திட்டங்களை செயற்படுத்துவதே இல்லையென்று கூறுகிறார்.

அமெரிக்கா

வானுயர்ந்த நகரங்கள், நவீன தொழில்நுட்பங்கள் போன்றவற்றிற்கு அமெரிக்கா அறியப்பட்டாலும், இங்கு சாலை போன்ற கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் விடயங்கள் கவனத்துடன் கையாளப்படுவதாக கூறுகிறார் அமெரிக்காவின் மேரிலாந்தில் வசிக்கும் சங்கரபாண்டி.

"சேலம்-சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டத்தை பொறுத்தவரை, தற்போது எந்த நிலையில் சென்றுகொண்டிருக்கிறது என்ற தெளிவான புரிதலே இல்லை. பொதுவாக இதுபோன்றதொரு திட்டத்தை செயற்படுத்தும்போது கடைபிடிக்கப்படும் படிநிலைகள் குறித்த தகவலும், விழிப்புணர்வும் இல்லாதது அங்கு நிலவும் மோசமான நிலையை காட்டுகிறது" என்று அவர் கூறுகிறார்.

தான் 25 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் கொலம்பஸ் பகுதியில் இருந்தபோது, அங்குள்ள விமான நிலையத்தை நகரத்துடன் இணைக்கும் சாலையை 6 மைல் தூரம் விரிவாக்கம் செய்வதற்காக திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்னெடுத்ததையும், அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே பல ஆண்டுகள் நடந்த இருதரப்பு கூட்டங்களுக்கு பிறகுதான் அத்திட்டம் செயற்படுத்தப்பட்டதையும் அவர் நினைவுகூர்கிறார்.

"அமெரிக்காவை பொறுத்தவரை ஒரு சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நான்கு படிநிலைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். முதலாவது நிலையில் புதிய திட்டத்திற்கான தேவையும், ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள சாலையை மேம்படுத்துவதற்கான தேவை குறித்த தகவல்களும் திரட்டப்படும். இரண்டாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைக்குரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு திட்டவடிவம் உருவாக்கப்படும். இடையே பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு ஒருமித்த கருத்து எட்டப்படும் பட்சத்தில், மூன்றாவது நிலையில் இறுதி திட்டவடிவம் கொடுக்கப்பட்டு, நான்காவது நிலையில்தான் கட்டுமானம் ஆரம்பிக்கும்" என்று அவர் கூறுகிறார்.

அமெரிக்காவின் சட்டத் திட்டங்கள் அதன் மாநிலத்திற்கு மாநிலம் சற்றே வேறுபடுவதால், இதுபோன்ற திட்டங்களை செயற்படுத்தும் படிநிலைகளில் மாறுபாடு இருக்கலாம். உதாரணமாக, கலிஃபோர்னியா போன்ற மாநிலங்களில் ஒரு திட்டத்திற்கு பெரியளவிலான எதிர்ப்பு இருக்கும்பட்சத்தில் பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தி இறுதிமுடிவு எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா
கனடாவும் இந்தியாவை போன்று, சட்ட திட்டங்கள் பிரிட்டனை ஒத்த மாதிரிதான் இருக்கும் என்கிறார் டொரொண்டோவை சேர்ந்த நட்கீரன்.

"கனடாவில் பொதுத் தேவைகளுக்காகவும், அரசியல் ஆதாயத்துக்காகவும் நிலங்களை கையகப்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், இங்குள்ள அரசுத்துறை மற்றும் நீதி அமைப்புகள் ஊழலற்றது என்பதால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் திட்டங்களை செயல்படுத்தவியலாது" என்றும் "அரசுத்துறை அமைப்புகள் எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் தனித்து இயங்கக் கூடியது. மேலும் மக்கள் கருத்து கேட்கும் அமைப்புகள் மற்றும் தணிக்கைகள் குழுக்கள் கனடாவில் வலுவானவை" என்று கூறுகிறார்.

குறிப்பாக, காடு அல்லது பாதுகாக்கப்பட்ட இடங்களில் இதுபோன்ற திட்டங்களை வகுப்பது கூட சாத்தியமில்லாத வகையில் சட்டங்கள் கடுமையாக வகுக்கப்பட்டிருப்பதாகவும், கள ஆய்வு, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு, சமூக ஆலோசனை, மேற்பார்வை மற்றும் தணிக்கை, பராமரிப்பு திட்டம் போன்றவை இல்லாமல் கட்டுமான பணியை தொடங்க கூட முடியாது என்கிறார் நட்கீரன்.

"இந்தியா போன்றே கனடாவிலும் பெரும் கார்பரேட் நிறுவனங்கள் ஒரு பக்கமும், குடிமக்களும் சூழழியல் செயற்பாட்டாளர்களும் மறு பக்கமும் உள்ளார்கள். இங்கும் கூட வணிக ஆதரவு மத்திய அரசுக்கு இருக்கும் போது சூழலியல் சட்டங்கள் இலகுபடுத்தப்பட்டன. ஆனால், மாநிலத்தில் இடதுசாரிக் கட்சிகள், மத்தியில் லிபரல் கட்சி ஆட்சிக்கு வந்த பின்பு நிலைமை மாறி உள்ளது" என்று அவர் மேலும் கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

6 comments:

  1. எவ்வளவு விரிவான தகவல்கள்.
    மக்களை மனிதர்களாக நேசிக்கின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. மக்களின் கருத்துகளுக்கு கொஞ்சமாவது மற்ற நாடுகளில் மதிப்பு கொடுக்கின்றனர் என்பது உண்மைதான்

      Delete
  2. இவ்வாறான உத்திகளில் ஏதாவது ஒன்றை இங்கு கடைபிடிக்கலாமே?

    ReplyDelete
    Replies
    1. மக்களுக்கான திட்டம் என்றால் இதுபோன்ற உத்திகளை கடைபிடிக்கலாம் ஆனால் இந்த திட்டம் மக்களுக்காக போடப்பட்டது அல்ல

      Delete
  3. மிக மிக அருமையான
    அலசல். ஆராய்ச்சியுடன் வெளியிட்டிருக்கிறீர்கள் துரை.
    இது போல யார் நம் ஊரில் செயல் பட முடியும். மக்களை என்றாவது மதித்தார்களா.

    ReplyDelete
    Replies
    1. இது நான் எழுதிய பதிவு அல்லம்மா பிபிசியில் வந்த கட்டுரை அதை மறு பதிவு செய்தது மட்டும் நான்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.