Friday, April 7, 2017



எத்தனை முறை வாசித்தாலும் மனதை கலங்கடிக்கும் வரிகள்


நண்பர் ஜோதிஜி  தன் வலைத்தளத்தில் மிக அருமையான கவிதை ஒன்றை பகிர்ந்து  தன்  கருத்தை இப்படி பகிர்ந்து இருந்தார்

சமூகவலைத்தளங்கள் பலருக்கும் அவர்களின் தனிப்பட்ட திறமைகளை நொடிப் பொழுதில் உலகம் முழுக்கக் கொண்டு போய்ச் சேர்த்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் எழுதியவர் யார் என்றே தெரியாமல். பகிர்பவர்கள் கவனமாக எழுதியவர்களின் பெயரை தவிர்த்து விடுகின்றனர். எழுதியவருக்கே வந்து சேரும் போது வாசித்த பின்பு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியாமல் தவிக்கக்கூடும். இந்தக் கவிதையைச் சில வாரங்களுக்கு முன்பு நான் முகநூல் வழியாக வாசித்த போது பிரமித்துப் போனேன்.


எழுதியவர் யார் என்று தெரியவில்லை என்று பகிர்ந்தவர் எழுதியிருந்தார். மற்ற தளங்களில் நாம் வேகமாகச் செயல்பட்டாலும் நாம் எழுதிய பழைய விசயங்களை அவ்வளவு எளிதாக எடுத்து விட முடிவதில்லை. பதிவுலகத்தில் தேவையான சமயத்தில் தேவையானதை நாம் எடுத்துக் கொள்ள முடியும். முகநூல், டிவிட்டர், கூகுள் ப்ளஸ் ல் பழைய பதிவுகளைத் தேடிப் பெற முடிவதில்லை.  இந்தக் கவிதையை இங்கே என் விருப்பத்தின் பொருட்டு இங்கே பகிர்கின்றேன். இந்தக் கவிதையை எழுதிய நண்பருக்கு என் நன்றி. என்று எழுதி இருந்தார்
அந்த கவிதை இதுதான்

 வாழைத்
தோட்டத்திற்குள்
வந்து முளைத்த...

காட்டுமரம் நான்..!

எல்லா மரங்களும்
எதாவது...
ஒரு கனி கொடுக்க ,

எதுக்கும் உதவாத...
முள்ளு மரம் நான்...!

தாயும் நல்லவள்...
தகப்பனும் நல்லவன்...

தறிகெட்டு போனதென்னவோ
நான்...

படிப்பு வரவில்லை...
படித்தாலும் ஏறவில்லை...

இங்கிலீஷ் டீச்சரின்
இடுப்பைப் பார்க்க...

இரண்டு மைல் நடந்து
பள்ளிக்கு போவேன் .

பிஞ்சிலே பழுத்ததே..
எல்லாம் தலையெழுத்தென்று
எட்டி மிதிப்பான் அப்பன்...

பத்து வயதில் திருட்டு...
பனிரெண்டில் பீடி...

பதிமூன்றில் சாராயம்...
பதினாலில் பலான படம்...

பதினைந்தில்
ஒண்டி வீட்டுக்காரி...
பதினெட்டில் அடிதடி...

இருபதுக்குள் எத்தனையோ...
பெண்களிடம் விளையாட்டு...

இரண்டு ,மூன்று முறை கருக்கலைப்பு...

எட்டாவது பெயிலுக்கு...
ஹெட்மாஸ்டர் வேலையா கிடைக்கும் ?

மண்லாரி ஓட்டினால் லோடுக்கு...
நூறு தருவார்கள .

வாங்கும் பணத்துக்கு...
குடியும் கூத்தியாரும் என...

எவன் சொல்லியும் திருந்தாமல்...
எச்சிப் பிழைப்பு பிழைக்க ...

கை மீறிப்
போனதென்று...
கால்கட்டுக்கு ஏற்பாடு செய்தனா் .

வேசிக்கு காசு
வேணும் ...

வருபவள் ஓசிதானே...

மூக்குமுட்டத் தின்னவும்...
முந்தானை விரிக்கவும்...
மூன்று பவுனுடன் ...

விவரம் தெரியாத ஒருத்தி...
விளக்கேற்ற வீடு வந்தாள் .

வயிற்றில் பசித்தாலும்...
வயிற்றுக்குக் கீழ் பசித்தாலும்...
வக்கணையாய் பறிமாறினாள்...

தின்னு கொழுத்தேனே தவிர...
மருந்துக்கும் திருந்தவில்லை...

மூன்று பவுன் போட
முட்டாப் பயலா நான்...

இன்னும் ஐந்து வேண்டுமென்று ,
இடுப்பில் மிதித்து அனுப்பி வைக்க ...

கறவை மாட்டை சந்தைக்கு அனுப்பி ,

நான் கட்டினவளை வீட்டுக்கு அனுப்பினான் ,
சொந்தம் விட்டுப்போகாமல் இருக்க...

மாமனாரான மாமன்...!

பார்த்து வாரமானதால்...
பசிக்கிறதென்று கைப்பிடிக்க..,

தள்ளிப் போனதென்று தள்ளி விட்டாள்...
சிறுக்கிமவ .

இருக்கும் சனி...
போதாதென்று
இன்னொரு சனியா..?

மசக்கை என்று சொல்லி...
மணிக்கொரு முறை வாந்தி..,

வயிற்றைக் காரணம் காட்டி...
வாய்க்கு ருசியாய் சமைப்பதில்லை..,

சாராயத்தின் வீரியத்தால்...
சண்டையிட்டு வெளியே அனுப்ப..,

தெருவில் பார்த்தவரெல்லாம்
சாபம் விட்டுப்
போவார்கள் .

கடைசி மூன்று மாதம்...

அப்பன் வீட்டுக்கு
அவள் போக..,
கறிவேப்பிலைக்காரி ஒருத்தி...

வாசனையாய் வந்து போனாள்..,

தர்ம ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாக...
தகவல் சொல்லியனுப்ப..,

ரெண்டு நாள் கழித்து...
கடமைக்கு எட்டிப் பார்த்தேன்...

கருகருவென
என் நிறத்தில்...

பொட்டபுள்ள..!

எவன் கேட்டான் இந்த மூதேவியை... ?

'கள்ளிப் பால் கொடுப்பாயோ ...
கழுத்தை திருப்புவாயோ...
ஒத்தையாக வருவதானால் ...
ஒரு வாரத்தில்
வந்து விடு '

என்று சொல்லி திரும்பினேன் .

ஆறு மாதமாகியும் அவள் வரவில்லை...

அரசாங்க மானியம்
ஐயாயிரம்...
கிடைக்குமென்று

கையெழுத்துக்காகப்
பார்க்கப் போனேன் ,

கூலி வேலைக்குப் போனவளைக்
கூட்டி வரவேண்டி...

பக்கத்து வீட்டு பாப்பா ஓடிச் செல்ல...

ஆடி நின்ற ஊஞ்சலில்...
அழுகுரல் கேட்டது..,

சகிக்க முடியாமல்
எழுந்து ...
தூக்கினேன் ...

அதே அந்த பெண்
குழந்தை..!

அடையாளம் தெரியவில்லை ...
ஆனால் அதே கருப்பு...

கள்ளிப் பாலில்
தப்பித்து வந்த அது ,
என் கைகளில் சிக்கிக் கொண்டது..,

வந்த கோபத்திற்கு...
வீசியெறியவே தோன்றியது...

தூக்கிய நொடிமுதல்...
சிரித்துக் கொண்டே இருந்தது,

என்னைப் போலவே...
கண்களில் மச்சம்,

என்னைப் போலவே
சப்பை மூக்கு,

என்னைப் போலவே
ஆணாகப்..,
பிறந்திருந்தால் இந்நேரம் இங்கிருக்க
வேண்டியதில்லை...,

பல்லில்லா வாயில்...
பெருவிரலைத் தின்கிறது,

கண்களை மட்டும்..,
ஏனோ சிமிட்டாமல் பார்க்கிறது,

ஒரு கணம் விரல் எடுத்தால்...
உதைத்துக் கொண்டு அழுகிறது,

எட்டி... விரல் பிடித்துத்..
தொண்டை வரை வைக்கிறது,

தூரத்தில்
அவள் வருவது கண்டு...
தூரமாய் வைத்து விட்டேன்...

கையெழுத்து வாங்கிக்கொண்டு...
கடைசி பஸ்ஸுக்கு திரும்பி வருகிறேன்,

முன் சீட்டில் இருந்த குழந்தை...

மூக்கை எட்டிப் பிடிக்க
நெருங்கியும்...
விலகியும் நெடுநேரம்...

விளையாடிக் கொண்டு இருந்தேன்!

ஏனோ அன்றிரவு ...
தூக்கம் நெருங்கவில்லை,

கனவுகூட
கருப்பாய் இருந்தது,

வெளிச்சம் வரும்வரை காத்திருந்தேன்...

போட்ட கையெழுத்துப் பொருந்தவில்லை...
என்ற பொய்த்தனத்தோடு ,

இன்னொரு கையெழுத்துக்கு...
மீண்டும் சென்றேன்,

அதே கருப்பு,
அதே சிரிப்பு,

கண்ணில் மச்சம்,
சப்பை மூக்கு...

பல்லில்லா வாயில்
பெருவிரல் தீனி...

ஒன்று மட்டும் புதிதாய் ...

எனக்கும் கூட
சிரிக்க வருகிறது ...

கடைசி பஸ், ஆனால் பேருந்தில்...
எந்த குழந்தையும் இல்லை .

வீடு நோக்கி நடந்தேன்,

பாதி வழியில் கறிவேப்பிலைகாரி...

கைப் பிடித்தாள்
உதறிவிட்டு நடந்தேன்...

தூக்கம் இல்லை
நெடுநேரம்...

பெருவிரல்
ஈரம் பட்டதால் ...
மென்மையாக
இருந்தது ...

முகர்ந்து பார்த்தேன் ....

விடிந்தும் விடியாததுமாய்...
காய்ச்சல் என்று சொல்லி...

ஊருக்கு
வரச் சொன்னேன்,

பல்கூட விளக்காமல் ...
பஸ் ஸ்டேண்டுக்கு சென்று விட்டேன்,

பஸ் வந்ததும் லக்கேஜை
காரணம் காட்டி...
குழந்தையைக் கொடு என்றேன் !

பல்லில்லா வாயில் பெருவிரல் !

இந்த முறை பெருவிரலைத் தாண்டி... ஈரம் எங்கோ
சென்று கொண்டு இருந்தது...

தினமும் என் மீது படுத்துக்கொண்டு...
பொக்கை வாயில் கடிப்பாள்,

அழுக்கிலிருந்து
அவளைக் காப்பாற்ற...

நாளுக்கு நாலைந்து முறை குளிப்பேன்,

பான்பராக் வாசனைக்கு...
மூக்கைச் சொரிவாள் ,விட்டு விட்டேன் ...

சிகரெட் ஒரு முறை..,
சுட்டு விட்டது
விட்டு விட்டேன்...

சாராய வாசனைக்கு...
வாந்தியெடுத்தாள் ...விட்டு விட்டேன்,

ஒரு வயதானது ...

உறவுகளெல்லாம்...
கூடி நின்று ,

'அத்தை சொல்லு '
'மாமா சொல்லு '
'பாட்டி சொல்லு '
'அம்மா சொல்லு 'என்று...

சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்...

எனக்கும் ஆசையாக இருந்தது,
'அப்பா 'சொல்லு
என்று சொல்ல,

முடியவில்லை ......
ஏதோ என்னைத் தடுத்தது,

ஆனால் அவளை எதுவும் தடுக்கவில்லை...

அவள் சொன்ன முதல் வார்த்தையே...

'அப்பா'தான்!

அவளுக்காக எல்லாவற்றையும்...
விட்ட எனக்கு ,

அப்பா என்ற
அந்த வார்த்தைக்காக...

உயிரைக்கூட விடலாம் என்று தோன்றியது,

அவள் வாயில் இருந்து வந்த..,

அந்த வார்த்தைக்காக மீண்டும் பிறந்தேன்,

இந்த சாக்கடையை...
அன்பாலேயே கழுவினாள்...

அம்மா சொல்லித் திருந்தவில்லை,

அப்பா சொல்லித் திருந்தவில்லை ,
ஆசான் சொல்லித் திருந்தவில்லை ,

நண்பர்கள் சொல்லித் திருந்தவில்லை ,
நாடு சொல்லியும் திருந்தவில்லை,

முழுசாய் மூன்று வார்த்தை பேச வராத ...

இந்த முகத்தை பார்த்து திருந்தி விட்டேன்..

வளர்ந்தாள்..,
நானும் மனிதனாக வளர்ந்தேன்...

படித்தாள்,
என்னையும் படிப்பித்தாள்...

திருமணம்
செய்து வைத்தேன் ,

இரண்டு குழந்தைகளுக்குத் தாயானாள்,

இரண்டு குழந்தைகளுமே...
பெரியவர்களாய் வளர்ந்து விட்டார்கள்,

நானும்கூட தாத்தாவாகி விட்டேன் ,

என்னை மனிதனாக்க...
எனக்கே மகளாய் பிறந்த...

அந்த தாய்க்காகக் காத்திருக்கிறது ...

#இந்த_கடைசி_மூச்சு..!

ஊரே ஒன்று கூடி..,
உயிர்த் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்,

எனக்குத் தெரியாதா என்ன?

யாருடைய பார்வைக்கப்புறம்...

பறக்கும் இந்த உயிரென்று?

வானத்தை பார்த்துக் காத்திருக்கிறேன்...

......................வாசலில் ஏதோ சலசலப்பு,

நிச்சயம் என் மகளாகத்தான் இருக்கும்..,

என் பெருவிரலை யாரோ
தொடுகிறார்கள் ,

அதோ அது அவள்தான்,
மெல்ல சாய்ந்து ...

என் முகத்தை பார்க்கிறாள் ...

என்னைப் போலவே...

கண்களில் மச்சம்,
சப்பை மூக்கு,
கருப்பு நிறம்,
நரைத்த தலைமுடி,
தளர்ந்த கண்கள்,

என் கைகளை முகத்தில் புதைத்துக் கொண்டு,

'அப்பா அப்பா' என்று குமுறிக் குமுறி அழுகிறாள்,

அவள் எச்சில்
என் பெருவிரலிட,

உடல் முழுவதும் ஈரம் பரவ...

ஒவ்வொரு புலனும் துடித்து...

#அடங்குகிறது....................
.......................

"தாயிடம் தப்பி வந்த
மண்ணும்...
கல்லும்கூட ,

மகளின் ..
கை பட்டால் காந்தச் சிலையாகும்! "

இதை படித்ததும் என் மனதில் தோன்றிய சில கருத்துக்களை அங்கே போட்டதையும் மேலும் என் மனதில் தோன்றிய கருத்துக்களை இங்கே கிழே என் கருத்துக்களாக பதிந்து இருக்கிறேன்

மீண்டும் மீண்டும் எத்தனை முறை வாசித்தாலும் மனதை கலங்கடிக்கும் வரிகள் , இளைய ராஜா தன் இசைக்கு ராயல்டி கேட்பது போல இந்த கவிஞர் தான் எழுதிய  இந்த படைப்பிற்கு ராயல்டி கேட்ட்டால் மிக பெரிய பணக்காரார்களில் ஒருவராக ஆகி இருக்க கூடும். ஆனால் என்ன துரதிருஷ்டம் இவர் இந்த கவிதையை வலைத்தளத்தில் பகிராமல் பேஸ்புக் தளத்தில் பகிர்ந்து இருப்பார் என நினைக்கிறேன் அதனால்தான் இதை ஆயிரக்கணக்கான மக்கள்  அவர் பெயரை இருட்டடிப்பு செய்து தாங்கள் எழுதியது போல பேஸ்புக்கிலும் வாட்சப்பிலும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்


பேஸ்புக்கிலும் வாட்சப்பிலும் பகிரப்படுவது  தீ போல உடனடியாக உலகம் முழுவதும் பரவி விடுகிறது ஆனால் என்ன இந்த தீயில் படைப்பாளியின் பெயர் அங்கே எளிதில் மறைக்கப்படுகிறது அதை தேடி நிறுபிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல ஆனால் இதை வலைத்தளத்தில் பகிர்ந்து இருந்தால், தான் எழுதி வெளியிட்டது இந்த தேதியில் இந்த நேரத்தில் எழுதி வெளியிட்டது என்று கோர்ட்டுக்கு  கூட சென்று நிருபிக்க முடியும், இப்படி செய்ய தவறுவதால் படைப்பாளி தன் உரிமையை இழந்து விடுகிறார்


இந்த கவிதையை நானும் ஏற்கனவே படித்து இருக்கிறேன். இந்த மாதிரி கவிதை கட்டுரையை பகிரும் பலர் அதை எழுதியவர் பேரை கட் செய்துவிட்ட்டு பகிர்கிறார்கள். அடுத்தவரின் சிந்தனையை தம் சிந்தனையாக வெளிப்படுத்துவதில் இவர்களுக்கு என்ன போலி ஆனந்தமோ அடுத்தவர்களின் சிந்தனைக்கு தான் உரிமை கொண்டாடுவது அசிங்கம் என்று தெரியாமல் வளர்ந்து இருக்கிறார்கள்


மேலும் பேஸ்புக்கில் இருக்கும் பல பிரபலங்களை பார்த்து இருக்கிறேன் .அவர்கள் இப்படித்தான் பலரின் பதிவுகளை பகிரும் போது எழுதியவர் பெயர் தெரிந்து இருந்தாலும் தங்களின் தளத்தில் அவர்களது பெயரை போட்டால் எங்கே அவருக்கு அந்த கிரெடிட் போய் சேர்ந்து அவருக்கு பாலோவர் அதிகம் சேர்ந்து விடுவார்களோ என்று கருதி பெயரை கட் செய்து படித்தில் பிடித்தது என்று போடுகிறார்கள். சிலர் இன்னும் கொஞ்சம் உஷாராகி பபி என்று போடுகிறார்கள் பபி என்றால் படித்தைல் பிடித்ததாம் என்னவொரு மனநிலை இவர்களுக்கு.

என்னை பொறுத்தவரை தரமாக கவிதை கட்டுரை கதை போன்றவைகளை எழுதுபவர்கள் தாங்கள் எழுதுவதை முதலில் வலைத்தளங்களில் பகிர்ந்துவிட்டு அதன்பின் மற்ற சமுக தளங்களில் பதிய வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வு வேண்டும் ஆனால் பலர் இந்த வலைத்தளம் பற்றிய அறியாமலே இருக்கிறார்கள் அதனால் தாங்கள் எழுதுவதற்கு தாங்கள் சொந்த கொண்டாடும் உரிமையை இழந்து தாங்கள்தான் அந்த கருத்திற்கு சொந்தகாரார்கள் என்பதை நிறுபிக்க இயலாமல் இருக்கிறார்கள்

என்னை பொறுத்த வரையில் பேஸ்புக்கில் டிவிட்டரில் என்னை கவர்ந்தது ஏதும் இருக்குமென்றால் அவர்களின் பெயரை வெளியிட்டு இதை அவர்கள் பேஸ்புக்கில் எழுதியது டிவிட்டரில் எழுதியது வலைத்தளங்களில் எழுதியது என்றும் சொல்லுவேன் நேரம் கிடைக்கும் போது அவர்களின் அக்கவுண்டிற்கும் லிங்கும் தருவேன் இதை நெடுநாளாக நான் கடை பிடித்து இருக்கிறேன் ஆரம்பகாலங்களில் எழுதியவரிடமே அனுமதி கேட்டு பெறுவேன் சில சமயங்களில் அனுமதி கிடைக்க மிகவும் தாமதம் ஆகிவிடும் அந்த தாமதத்தில் அந்த விசயம் ஆறிப் போன கஞ்சி போல ஆகிவிடும் அதனால் இப்போது எல்லாம் நான் அவர்களின் பதிவை அவர்களின் பெயரோடு வெளியிட்டு அதற்கான லிங்கை அவர்களிடம் அனுப்பி உங்களுக்கு ஆட்சேபணை இருந்தால் அதை நீக்கிவிடுகிறேன் என்று அனுப்புவேன் அதன் பின் எவரும் ஆட்சேபணை சொல்லுவது கிடையாது


வலைதளத்திற்கும் பேஸ்புக் போன்ற சமுகதளங்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள் என்னவென்றால் நீங்கள் எழுதும் கருத்தை பிடிக்காதவர்கள் ஒன்று சேர்ந்து உங்களின் பேஸ்புக் போன்ற சமுகதளங்களை ரிப்போர்ட் செய்து எளிதில் முடக்கிவிடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் அதன் பின் நாம் போராடிதான் அந்த அக்கவுண்டை திரும்ப பெற முடியும் ஆனால் அப்படி செய்வது போல வலைத்தளங்களை எளிதில் முடக்க முடியாது வலைத்தளங்களை முடக்குவது என்பது அரசாங்கத்தால்மட்டுமே முடியும்

பேஸ்புக் அக்கவுண்டை எளிதில் முடக்குவது மாதிரி கூகுல் அக்கவுண்டை எளிதில் முடக்க முடியாது அதுமட்டுமல்ல கூகுல் மிக எளிதில் அக்கவுண்ட் ஹோல்டர் யார் என்ற தகவலை அரசாங்கட்திற்கு எளிதில் தந்துவிடாது அல்லது அரசாங்கம் அந்த அக்கவுண்ட ஹோல்டர் சமுகத்திற்கு கெடுவிளைவிக்கும் தகவலை செய்கிறார் என்று நிருபித்தால் ஒழிய அது தகவலை தராது


அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : வலைதளத்திற்கும் பேஸ்புக் போன்ற சமுகதளங்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள் நிறைய உள்ளன அதை விரிவாக இன்னொரு பதிவாக வெளியிடுகிறேன். 



15 comments:

  1. கலங்க வைத்து விட்டது தமிழா

    ReplyDelete
  2. நானும் ஜோதிஜி அவர்கள் பதிவிலும் அதற்கு முன்பே முக புத்தகத்திலும் பலமுறை பகிரப்பட்ட இக்கவிதை வரிகளை படித்திருக்கிறேன் ..உண்மையில் இக்கவிதையின் உரிமையாளர் ரசித்து உணர்ந்து எழுதியிருப்பார் மனதை தொட்ட வரிகள் ..ஒரு மோசமான மனிதனானாலும் அவனும் தந்தை மிருகமாய் மாறியவனை மீண்டும் மனிதனாக்க பிஞ்சு குழந்தையால் முடிந்ததே என ஆச்சயமாக்கிய வரிகள் ..
    வேதனை என்னன்னா எந்த கவிதை கதை கட்டுரைநாளும் அதன் முதல் அல்லது ஏதெனும் சில வரிகளை காபி பேஸ்ட் செஞ்சு தேடினா ஒரிஜினல் எங்காவது கிடைக்கும் ஆனா இந்த கவிதைக்கு மட்டும் என்னால் யார் உரிமையாளர்னு கண்டே பிடிக்க இயலவில்லை ..எலலாமே பபி போட்டு ஷேர் செய்திருக்க்ங்க ,

    விரைவில் அந்த வித்தியாசங்களை வேறுபாடுகளை எழுதுங்கள்

    ReplyDelete
    Replies
    1. நானும் தேடிப் பார்த்தேன் ஏஞ்சல் கிடைக்கவே இல்லை

      கீதா

      Delete
  3. மனதை நெகிழ வைக்கும் கவிதை . உணர்வு பொங்கும்சி சிறுகதை கவிதை வடிவில் . ஜோதிஜி பதிவில் நானும் படித்துக் கருத்திட்டிருந்தேன். மதுரைத் தமிழனின் பதிவின் மூலம் நிறையப் பேரை சென்றடையும் என்பதில் ஐயமில்லை முக நூலில் இயங்கும் பலருக்கு வலைப்பூ பற்றி அறியாமல் இருப்பது உண்மை.வலை தளத்தின் பயன்களை நானும் அவ்வப்போது சொல்வதுண்டு.அதை முகநூலில் சென்றுதான் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  4. மிகவும் நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  5. இது தமிழருக்கே உரிய ஒரு தனி குணம். எழுதியவர் பற்றியோ, அவர் பெயரையோ பகிர மனமிருப்பதில்லை. இதை சாதாரண மனிதர்கள் மட்டுமில்லை பல பெரிய பெரிய எழுத்தார்கள் கூட செய்கின்றனர். இது இன்று நேற்றில்லை ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் ஒன்று தான். நமக்கு தொல்காப்பியமும், திருக்குறளும் கிடைத்திருந்த போதும் அதை எழுதியவர் பெயரோ விவரமோ கிடைக்கவில்லை. நாமாகவே தொல்காப்பியன், திருவள்ளுவன் என பெயரிட்டு அழைத்து வருகின்றோம். பழங் காலத்தில் ஓலை சுவடிகளை படியெடுக்கின்ற போது வேண்டுமென்றே பலரது பெயரை இருட்டடிப்பு செய்துவிட்டனர். இது தான் உண்மையே.

    ReplyDelete
  6. ஆஆஆஆ என்ன ஒரு கவிதை, கிளிப்பிள்ளைக்கு கதை சொல்வதுபோல பேச்சு வழக்கில் அழகா எழுதியிருப்பது அனைவருக்கும் புரியும் படி இருக்கு. ஒருவேளை கவிஞர் வைரமுத்து எழுதியிருப்பாரோ என எண்ணத் தோணுது. மனதைத் தொட்டுவிட்டது, ஒருவரின் வாழ்க்கை வரலாறே அடங்கியிருக்கு.

    ReplyDelete
  7. நீங்கள் சொல்லியிருக்கும் காரணங்கள் அனைத்தும் உண்மையே, பேஸ் புக் பக்கம் போனபின்னரே நானும் அதை உணர்ந்தேன், அவசரத்துக்கு எதையும் தேடி எடுக்கவே முடியாது, அப்படியே அழிந்து போனதுபோலவே இருக்கும். அதனாலேயே எனக்கு புளொக் பிடிக்கும். இது நம் நாள் குறிப்புப் போல, நமக்கு வயதாகிவிட்ட காலத்தில், ஒவ்வொன்றாகத் திறந்து படித்துப் பார்க்க.. இப்போதைய ஞாபகங்கள் எல்லாம் வருமே... ஆனா அதே நேரம் துக்கமாகவும் இருக்கும்.... இப்போதிருக்கும் எல்லோருமே அப்பவும் இருப்போமா....

    ReplyDelete
  8. கண்கள் கலங்கிவிட்டன நண்பரே
    எழுதியவரை நினைத்துப் பார்க்கிறேன்
    உறவை உணர்ந்ததால் வந்து விழுந்த வார்த்தைகளை
    அழகாய் அடுக்கி மாலையாக்கி, கவி மாலையாக்கி இருக்கிறார்
    பெயர் தெரியா அக்கவிஞரை, அந்தத் தந்தையைப் போற்றுவோம்

    ReplyDelete
  9. உங்களை போல் பலரும் பிரமித்துப் போய், பலரும் அவ்வப்போது வாட்ஸ்-அப்பில் பகிர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்... நேர்மையானவர்கள் "படித்ததில் பிடித்தது" என்று போடுகிறார்கள்... மற்றவர்களுக்கு அவரவர் மனச்சாட்சியே தண்டனை...

    ReplyDelete
  10. முகநூலின் பயன் அல்லது பயனின்மை தெரியாமலே பலர் இருப்பது வேதனை தருகிறது. பத்து வரிகளுக்கு மேலான எதையும் அங்கே பகிர்வது பயனற்றது. ஏனெனில் ஒருமுறை படித்ததை யாரும் விரும்பிவந்து மறுமுறை படிக்கப்போவதில்லை. பெரிய சந்தையில் தொலைந்துபோன ஒற்றை வெங்காயத்தைத் தேடுவது போன்றது முகநூல். வலைப்பதிவு போல நம் எழுத்தின்மீது நமக்கு அதிகாரம் தரும் ஊடகம் வேறொன்றில்லை.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  11. நல்லதொரு கவிதை. மிகவும் பிடித்த வரிகள் எனக்கும். முன்பே படித்திருந்தாலும் மீண்டும் படிக்க வைக்கும் கவிதை.

    முகநூலுக்கும் வலைப்பதிவுக்கும் உள்ள வித்தியாசம்... நிறையவே. சொல்லுங்கள் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  12. மதுரை சகோ அங்கும் வாசித்து மனதை பாதித்த கவிதை. மிக மிக அருமையான பிடித்த வரிகள். இதோ மீண்டும் வாசித்து உனர்வுகள் மேலிட்டது...

    வித்தியாசங்கள சொல்லுங்க காத்திருக்கிறோம்

    கீதா

    ReplyDelete
  13. கவிதையி குற்றம் செய்தவனின் குறு குறுப்பும் தற்கான பரிகாரமும் வெகு அழகாக வெளியாகி இருக்கிறதுவெகு சிலரே வலைப்பூவிலோ முகநூலிலோ அக்கறையோடும் ஆர்வத்தோடும் படிக்கிறார்கள்மதுரைத் தமிழனின் இன்னொரு முகம் காட்டும் பதிவு

    ReplyDelete
  14. நன்று !
    நன்றி !
    வலைத்தளம் எப்படி ஆரம்பிப்பது . . .
    முழுமையான விவரங்களுடன் பதிவிடுங்கள் !
    பயன்பெற . . .

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.