உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, June 23, 2016

திருக்குறளால் தமிழனுக்கு பயன் ஏதும் உண்டா?திருக்குறளால் தமிழனுக்கு பயன் ஏதும் உண்டா?

திருவள்ளுவர் (Thiruvalluvar) இயற்றிய திருக்குறள் (Thirukkural) உலகப் புகழ் பெற்ற இலக்கியமாம். இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூலாம். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறதாம்.


வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதாலும்  கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூலை "உலகப் பொது மறை" என்றும் அழைக்கிறார்கள். அதனால் என்னவோ இதை பள்ளிக் கூடத்தில் பாடமாக வைத்து இதைப் போதிக்கிறார்கள். இதை சிறுவயதில் இருந்தே தமிழ் மாணவர்கள் கற்று வருகிறார்கள்.இப்படி இவர்கள் கற்றதை வாழ்க்கையில் பயன்படுத்துகிறார்களா என்று பார்த்தால் அதை பயன்படுத்துவது போலத்தான் இருக்கிறது. இப்படி இவர்கள் பயன்ப்டுத்துவது எப்படி இருக்கிறது என்று பார்த்தால் பள்ளிக் கல்லூரிகளில் மற்றும் பொது மக்களிடையே கட்டுரைகள் எழுதும் போதும் அல்லது சொற்பொழிவுகள் ஆற்றும் போதும் மட்டும் மேற்கோள் காட்டி பேசுவதற்காக அல்லது எழுதுவதற்காகவே பயன்படுகிறது & பயன்படுத்தப்படுகிறது அன்றி பராக்டிக்கல் வாழ்க்கையில் இதில் கூறப்பட்டுள்ளதை யாரும் கடைபிடித்து வாழ்வது மாதிரி எனக்கு தோன்றவில்லை.  இதில் தலைவர்களும் விதி விலக்கு அல்ல


இல்லை இல்லை நான் இந்த திருக்குறள்களை படித்துவிட்டு என் வாழ்க்கையில் இன்றும் பயன்படுத்துகிறேன் என்று சொல்பவர்களை பார்த்தோமானால் நாம் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் இருக்கிறார்கள்.


இந்த பதிவை படித்தவர்கள் இல்லை இல்லை திருக்குறளை படித்து அதை எங்கள் வாழ்க்கையில் இன்று வரை  பயன்படுத்தி பலன் காண்கிறோம் என்று உண்மையாக சொல்லக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் நீங்கள் எப்படி அதை பயன்படுத்துகிறீர்கள் என்று சொல்ல உங்களால் இயலுமா?

இன்று நான் படித்த ஒரு திருக்குறள் இல்லறவியல் உள்ள ஒன்று

புகழ்
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: புகழ்.

குறள் 231:

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

இதற்கு விளக்க உரையை நம்ம தலைவர் மு. கருணாநிதி இப்படி சொல்லி இருக்கிறார்:
கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை.

இதை படித்து புரிந்து விளக்கம் தந்த கலைஞராவது இந்த குறளில் சொன்னபடி நடக்கிறாரா என்று அர்த்தம் புரிந்த யாரவது சொல்ல முடியுமா?

கொடுங்கோன்மை
பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கொடுங்கோன்மை.
குறள் 551:

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.

இக் குறளுக்கு விளக்கம் குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும் அரசு பகைகொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது.

இப்பொழுது ஆட்சியை நடத்துபவர்கள் இப்படித்தானே இருக்கிறார்கள்


இது எல்லாம் சரிதான். மதுரைத்தமிழா உங்கள் வாழ்க்கையில் நீங்கள் திருக்குறளை நடைமுறையில் பயன்படுத்தி இருக்கிறீர்களா என்றுதானே நீங்கள் கேட்கவருகிறீர்கள்..

உங்கள் கேள்விக்கு என் பதில் ஆமாம் என் வாழ்க்கையில் நான் திருக்குறளை பயன்படுத்தி வருகிறேன் இப்படி ஒரு பதிவு எழுதுவதன் மூலம்.

டிஸ்கி: திருக்குறளை தமிழர்கள் முறையாக பயன்படுத்துகிறார்களா இல்லையா என்பதைவிட அதை வேறு மொழிகளில் படித்த பலரும் நிச்சயம் பயன் பெற்று வருகிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்


அன்புடன்
மதுரைத்தமிழன்
குறள் 165:

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.
மு. கருணாநிதி உரை:
பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.


13 comments :

 1. வணக்கம் மதுரைத்தமிழரே!
  நீண்ட நாள்களாயின உங்கள் பதிவுப்பக்கம் வந்து... நானும் எழுதி...
  ஓர் அதிர்ச்சித் தலைப்பின் வழியாக அழைத்துவிட்டீர்கள். பதில் எழுதத் தனிப்பதிவே போடவேண்டும்.
  வீட்டிலிருக்கும் வயதான அம்மாவோ, வயது மிகுந்த அப்பத்தாவோ ஏதாவது புலம்பிக்கொண்டுதான் கிடப்பார்கள். அதுபோலத்தான் திருக்குறளும்.
  அந்தப் புலம்பலும் இல்லையென்றால் நம்மை யார்தான் இழுத்துப் பிடிப்பது?
  அம்மாவால் பயனுண்டா என்னும் கேள்வியும் திருக்குறளால் பயனுண்டா என்னும் கேள்வியும் அப்படித்தான் ஒன்றாகத் தோன்றுகிறது.
  செய்தக்க அல்ல செயக்கெடும், செய்தக்க
  செய்யாமமை யானும் கெடும் - எதிர்க்கட்சிகளுக்கு
  எற்றிற் குரியர் கயவர்?ஒன்று உற்றக்கால்
  விற்றற் குரியர் விரைந்து - நடிப்புச் சுதேசிகளான அரசியல் வாதிகளுக்கு.
  நன்றி மறப்பது நன்றன்று - சாதாரண மக்களுக்கு
  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - ஆணவக் கொலைஞர்களுக்கு
  மக்களே போல்வர் கயவர் - தவறு செய்யும் எல்லார்க்கும்
  இவை மனசிலிருந்து உடனடியாக வந்தவை. இன்னும் சொல்லலாம்.
  நீங்க ச்சும்மா டபாய்க்கிறீங்க..அதுக்கு இது போதும்னு..என்ன சரிதானே?
  (ஆமா,பள்ளியில் தவிர இன்பத்துப் பால் படிச்சதில்லையா நீங்க? ஒவ்வொன்னும் ஒருசிறுகதை மாதிரி இருக்கும்..“கண்ணும் கொளச்சேறி நெஞ்சே” ஒன்று போதும். நேரம் இருக்கும்போது படிச்சுப் பாருங்க. கண்ணதாசன் இன்பத்துப் பாலுக்கு மட்டும் குட்டிக் குட்டிக் கவிதையிலயே விளக்கம் எழுதியிருப்பார் கிடைச்சா அதையே கூடப் படிக்கலாம்) நன்றி

  ReplyDelete
  Replies
  1. என்னது திருக்குறளில் இன்பத்து பால் இருக்கிறதா? ஆஹா எல்லா டீச்சர்களும் எனக்கு எதிராக சதி செஞ்சு இருக்கிறார்கள் போல அதை யாரும் எனக்கு சொல்லியே தரலையே..

   Delete
  2. ஆமாம் உங்க ஊர்கார பதிவர்களுக்கு என்ன ஆச்சு எல்லோரும் சொல்லி வைத்து போல யாருமே பதிவு எழுதவில்லையே என்ன எல்லோரும் ஸ்டிரைக்கா

   Delete
 2. மதுரைத் தமிழனின் தலைப்பைப் பார்த்து அதுவும் திருக்குறள் பற்றிக் குரலா தமிழனிடமிருந்து இலக்கியப் பதிவா!! இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறதே என்று வந்தால் அதே தான்....ஹஹஹஹ நீங்கள் சொல்லியிருக்கும் கருத்தும் கேட்ட கேள்வியும் சரியே தமிழா....

  துளசி, கீதா

  ReplyDelete
  Replies
  1. மனதில் தோன்றியதை பதிவு வழியாக கேள்வி கேட்டால் வில்லங்க பதிவர் ஆக்கிவிட்டீர்களே என்னை?

   Delete
 3. தலைப்பைப் பார்க்கும்போது பிறிதொரு எண்ணம் வருகிறது. சரி. பிறவற்றைப் படிப்பதால் தமிழனுக்கு பயன் எதுவும் உண்டா?.... என்றால் இக்கேள்விக்கு விடை கூறுவது சற்றுச் சிரமமே. எதுவும் அவரவர்களின் மனதைப் பொறுத்தே. அரிய பல கருத்துகளைக் கொண்ட நூல் திருக்குறள். வியாபார நோக்கிலும், விளம்பரத்திற்காகவும் திருக்குறள் பேசுபவர்களை விடுத்து அதனைப் படிப்போம், சிந்திப்போம், வாழ்வியலில் கடைபிடிப்போம்.

  ReplyDelete
  Replies
  1. பலரும் படிப்பதோட சரி ஆனால் அதில் உள்ளதை கடைபிடிக்காமல் ஆஹா அது சிறந்த புத்தகம் என்று பாராட்டிவிட்டு செல்கிறார்கலே என்ற ஆதங்கம் என் மனதில் தோன்றியதால் விளைந்த பதிவுதான் இது

   Delete
 4. பசங்களுக்கு ரெண்டே வரியில் இருக்கிற ஒரே மனப்பாடப் பகுதி அதைப் போய் .....கெடுக்கணுமா ?
  டீச்சர் கூட தப்பா எழுதுனா திட்டுவாங்க . அதுக்காக அவங்கள நீ சின்னப் புள்ளையா இருந்தப்ப தப்பே பண்ணலயான்னா கேக்க முடியும்

  ReplyDelete
  Replies
  1. என்னது திருக்குறள் மனப்பாட பயிற்சிக்கு உதவுவதற்காக திருவள்ளுவரால் எழுதப்பட்டதா பாருங்க அது தெரியாமல் நானு பதிவு எழுதிவிட்டேன் ஹீஹீ

   Delete
 5. நிறைய பதிப்புக்கள் கண்டு நிறைய பேர் வருமானன் ஈட்டவாவது உதவுதே!

  ReplyDelete
 6. ம்ம்ம்.... நல்ல கேள்வி.

  ReplyDelete

 7. நண்பரே,

  திருக்குறள் பற்றி உங்களை எழுதத்தூண்டியதும் ஒரு நன்மைதானே?

  பாவம் வள்ளுவர்? விட்டுவிடுங்கள் அந்த நல்லவரை.

  கோ

  ReplyDelete
 8. கோபம் நியாமானது, அதற்கு வள்ளுவரை வம்புக்கு இழுப்பது போல். கருத்துரையை இடித்து சொன்ன விதம் நன்று

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog