Tuesday, April 19, 2016



 மிகவும் ரசித்து படித்த பதிவுகள் ( என்னை கவர்ந்த பதிவு )


இன்று அகிலா அவர்கள் எழுதிய பதிவைபடித்த பின் மனதிற்குள் ஒரு சந்தோஷம். அவர்கள்  தெளிவாக சொல்லி சென்றவிதம் மிக அருமை....அந்த பதிவு என்னை கவர்ந்ததால் அவர்களின் அனுமதியை பெறாமலே இங்கே பதிகிறேன். அது போல  கீதா மதிவாணன் அவர்கள் எழுதிய குடியை பற்றி எழுதிய கவிதையும் என்னை கவர்ந்தது. அதையும் இங்கே பதிகிறேன். பெண்களுக்கு இந்த சமுகம் பல கட்டுபாடுகள் வைத்திருக்கும் நிலையிலும் இந்த பெண்கள் அந்த கட்டுபாட்டிலும் மிக அருமையாக எழுதி கலக்குறாங்க...  அகிலா மற்றும் கீதா அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்


 பெரிய பூப்போட்ட சேலை..

பெண்பிள்ளைகளின் சின்ன சின்ன ஆசைகள் பதின் பருவத்தில் அதிகமாய் இருக்கும். அந்த கட்டத்தில்,அதாவது, பாவாடை சட்டை போட்ட வயதில், எங்களுக்கெல்லாம் அக்காமார்கள் கட்டும் தாவணியின் மீது ஒரு கண் இருக்கும்.

தாவணி கட்டத் தொடங்கியபிறகு, அடுத்ததாய் அம்மா கட்டியிருக்கும் சேலையின் மீது மோகம் ஸ்டார்ட் ஆகிரும்.

எண்பதுகளின் காலகட்டத்தில், நமது தமிழ் சினிமா கதாநாயகிகளின் பெரிய பூக்களுடன் பார்டர் வைத்த ஷிப்பான் மற்றும் ஜார்ஜட் புடவைகளின் மீதும் ஒற்றை ரோஜாவின் மீதும் அளவுக்கதிகமான காதல் இருந்தது.

டிவியில் காட்டும் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில், கதாநாயகியை அந்த சேலையுடன் பார்த்தால், அம்மாவிடம் அப்ளிகேஷன் போடத் தொடங்குவோம்.

அவங்களுக்கு நாம சேலை கட்டனும்ன்னு சொன்னாலே கடுப்பாகி பத்ரகாளி ஆகிருவாங்க. ' முளைச்சு மூணு இலை விடல, அதுக்குள்ளே சேலையாம்...' ன்னு விரட்டிவிட்டுருவாங்க. நாம அம்மாவான பின்னாடிதானே அவங்க கஷ்டம் நமக்கு தெரியுது.

அப்படி இப்படி போராடி ஒரு சேலை வாங்கினால், அதுக்கு இருக்கும் வாழ்வே தனி. பீரோவில், நமக்குன்னு ஒதுக்கிய அறையில் எல்லா துணிகளுக்கும் மேலே அது உட்கார்ந்திருக்கும்.

இப்படி இருக்கிற நேரத்தில, பாரின்லேயிருந்து (எந்த பாரின்லேன்னு எல்லாம் கேட்கக்கூடாது, அப்போ அப்படிதான் சொல்லுவாங்க) எங்க சொந்தகாரங்க ஒருத்தங்க, ஒரு பாரின் புடவையைக் கொடுத்துட்டு போனாங்க.

அதன் உடம்பு முழுவதும் குட்டி பூக்கள். கண்ணாடி மாதிரி இருக்கும். அதன் ஸ்பெஷாலிட்டியே அதை மடிச்சா கைக்குட்டை சைஸ்க்கு ஆகிடும். அம்மாவுக்கு அந்த வயசுல அதை கட்ட முடியாதுன்னு அது என்கிட்டே வந்தது. (நாம எந்த வயசுலேயும் எதையும் கட்டுறோம் இப்போ)

ஏதாவது வீட்டு விசேஷங்களுக்கு கூட்டிட்டுப் போகமாட்டாங்களான்னு இருக்கும், அப்போ அதை கட்டிக்க அனுமதி கொடுக்கணுமேன்னு இருக்கும், எப்போடா பள்ளிக்கூடத்தை மூட்டை கட்டிட்டு, காலேஜ் சேருவோம்ன்னு இருக்கும். அப்போதானே கலர் டிரஸ் போடமுடியும்ன்னு தோணும். அதை பார்க்கும் போதெல்லாம், நம்மளை பெரிய மனுஷி ஆகவே விடமாட்டேங்குறாங்களே இந்த அம்மான்னு எரிச்சலாக இருக்கும்.

அதன் வழுவழுப்பை, அப்பப்போ தடவிப் பார்க்கிறது, மெலிசாய் இருக்கும் அதன் ஒரு சைடுக்குள் கையை வைத்து அந்த பக்கம் இந்த பக்கம் கண்ணாடி காட்டுறது இப்படி எல்லாம் நடக்கும்.

நம்ம செய்றதை எல்லாம் பார்த்து நம்ம அம்மாவுக்கு கலவரம் ஆகிடும். வயித்துல புளியைக் கரைக்கும். அதைப் பார்த்தாலே நமக்கு, இரட்டை சடையில் ஒன்றை பின்னிக்கொண்டே பின்னாடி தூக்கி வீசிட்டு ஒரு சந்தோஷத்துடன் நடக்கச் சொல்லும். எல்லாம் சேர்ந்து, திமிரும் சந்தோஷமுமாய் அழகான ஒரு பருவம் அது.

ம்ம்...மீண்டும் வராத மகிழ்வான பருவமும் அதுதான்..

~ அகிலா..Ahila Puhal https://www.facebook.com/ahila.d


குடி உன் உரிமையென்கிறாய்..
குடி.. உன் உரிமையில் தலையிடுவதார்..
குடிக்குமுன் உன்னிடம் சிறு பிரார்த்தனை..
குடிமேல் சத்தியமாய் இது உபதேசமன்று…

எவ்வளவு வேண்டுமானாலும் குடி… ஆனால்…
இடுப்பு நழுவும் உடுப்பை இறுக்க
உன் கரத்துக்கு வலுவிருக்கட்டும்.
இயல்பு நழுவும் நிதானம் இறுக்க
உன் மனத்துக்குத் தெளிவிருக்கட்டும்.
சொல் குழறாது.. கால் துவளாது
செல்லுமிடங்குறித்த பிரக்கினையிருக்கட்டும்
எதிர்ப்படும் உயிர்கள்மீதுன் வாகனமேற்றி
எமலோகம் அனுப்பா எச்சரிப்பிருக்கட்டும்

எதை வேண்டுமானாலும் குடி… ஆனால்..
அதிபோதையில் அடுத்த வீடுபுகும்
அவலம் நேராதிருக்கட்டும்.
உன்னவள் யார் அடுத்தவள் யாரென்று
அடையாளமுணரும் அறிவிருக்கட்டும்.
உன்னவளேயானாலும் உதறும் கரங்களின்
வளை நொறுக்கா மாண்பிருக்கட்டும்.
உன் வீட்டின் உலைப்பானை அரிசிக்கு
ஒருநாளும் குறைவாராதிருக்கட்டும்.
உன் பிள்ளையின் கண்களில்
உன்மீதான பயம் ஒளிராதிருக்கட்டும்.

எங்கு வேண்டுமானாலும் குடி.. ஆனால்..
பன்றியோடும் நாயோடும் சாக்கடையோரம்
படுத்துருளும் பாழ்நிலை வாராதிருக்கட்டும்
புழக்கடை வீச்சம் மிஞ்சும் போதையின் வீச்சம்
பெண்டிர் தரம் குறைக்காதிருக்கட்டும்.
வட்டிக்காரன் வாசலில் நின்றுன்
பெற்றவளைத் தூற்றாதிருக்கட்டும்.
இறுதியாய்…
குடிப்பவனுக்கும் குடிகாரனுக்குமான
குறைந்தபட்ச வித்தியாசமாவது
உனக்குப் புரிந்திருக்கட்டும்.

கீதா மதிவாணன்
அகிலாபுகழ் & கீதா மதிவாணன் இருவருக்கும் எனது நன்றிகள்

அன்புடன்
மதுரைத்தமிழன்


8 comments:

  1. ஹ்ம்ம்ம் திமிரும் சந்தோஷம் கலந்த ஒரு ஆணவபருவம் தான் அது !! அதுவும் ப்ளஸ் டூ படிக்கும்போது நாங்க தான் ஸ்கூல் சீனியர்ஸ் அதனால் ஸ்போர்ட்ஸ் டே அப்புறம் முக்கிய பங்க்ஷன் என்றால் சீனியர்ஸ் மட்டுமே புடவை கட்டிட்டு ஜூனியர்சை மேற்பார்வை செய்வோம் !! மற்ற நாளெல்லாம் அரைத்தாவணி ரெண்டு ஜடை ..நோட் திஸ் :) அப்படியே ஜமுனா பாரி ஆடு மாதிரியே மடிச்சி கட்டி ரிப்பன் போடனும் ..அந்த ரெட்டை ஜடை மடிச்சி கட்டி விடறதில் அந்த அம்மாங்களுக்கு என்னா ஒரு ஆனந்தம் தெரியுமா !! ..நான் முதல் முதலா கட்டின அந்த நேவி ப்ளூ பாரின் சேலை நினைவுக்கு வருது அதோட ..ஸ்கூலில் இருந்து வந்த பின்னரும் சும்மா எங்க ஏரியாவையே ஒரு ரவுண்டும் சுத்தி வந்தேன் :)எல்லாருக்கும் நான் புடவை கட்டினதை காட்ட :)) மற்றும் அன்னிக்குதானே ஒற்றை ஜடை போடவும் சான்ஸ் கிடைச்சது :)

    ReplyDelete
  2. கீதா மதிவண்ணனின் கவிதை அருமை...

    ReplyDelete
  3. உங்களுடன் சேர்ந்து நாங்களும் ரசித்தோம். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. ஒப்பீடு அருமை தமிழா....நல்ல பதிவு

    ReplyDelete
  5. உங்களைக் கவர்ந்த பதிவுகளில் என் கவிதையும் இருப்பது அறிந்து மிகவும் மகிழ்ச்சி. எதிர்பாராது இந்த இனிய அங்கீகாரத்துக்கு மிக்க நன்றி. தோழி அகிலாவின் பதிவு என்போன்ற நடுத்தர வயதில் உள்ள பெண்கள் அனைவருக்குமான அழகான மலரும் நினைவு.. நன்றி மதுரைத்தமிழன்.

    ReplyDelete
  6. அகிலா அவர்கள் சொல்லியிருப்பது போல்தான் எனது பருவமும் அந்த நாட்களில். டிட்டோ!! பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை யூனிஃபார்ம். 11,12 தாவணி யூனிஃபார்ம். ஆனால், பி ஏ படிக்கும் போது தாவணி. கலர் தாவணி. ஆனால் அதற்கென்று வாங்கித் தரமாட்டார்கள். குடும்பக் கஷ்டத்தினால். 12 வரை படித்திருந்த அந்தப் பாவாடை சட்டடை, அம்மாவின் கிழிந்த சாரி தாவணியாக மாறிவிடும் அதுவும் இரண்டு தாவணிகளாய். என்னை எங்கள் ஊர் பையன்கள், பஸ்ஸ்டாண்ட் பையன்கள் எல்லோரும், "ஈஸ்ட்மென் கலர் வருது" என்று கமென்ட் அடிப்பார்கள் இல்லை என்றால் பாடுவார்கள். ஹ்ஹஹ். புதியதாய் ஒரே ஒரு தாவணி செட் தீபாவளியின் போது கிடைக்கும். அப்புறம் எம் ஏ யில் சாரி கம்பெல்சரி. ஆனால் மொத்தமே 4 சாரிகள். அதிலும் ஒன்று அம்மாவினுடையதாக இருக்கும். இரண்டு தினப்படிக்கு மாறி மாறி கட்டிக் கொள்ள மற்ற இரண்டு எப்போதேனும் கல்லூரி விழா என்று...அகிலா அவர்கள் இறுதியில் சொல்லியிருப்பது போல...சந்தோஷம்....தோழிகள் புதுவிதமாக எல்லாம் உடுத்தி வந்தாலும் அதைப் பார்த்து எந்த ஏக்கமும் வந்ததில்லை.....அருமையான அந்த வ்யது உள்ளத்தைப் பிரதிபலிக்கும் பதிவு....

    தோழி கீதா மதிவாணன் (தமிழா மதிவண்ணன் அல்ல. எனது புரிதலின் படி கீதாமதிவாணன். நாங்கள் தொடர்பவர். கீதாமதிவாணன் அவர்களின் வலைப்பூ கீதமஞ்சரி ) அவர்களின் கவிதை அருமை! அருமை! அதுவும் கடைசி வரிகள்!! செம ! மிகவும் ரசித்தோம்...

    பகிர்வுக்கு மிக்க நன்றி தமிழா...

    கீதா

    ReplyDelete
  7. நானும் ரசித்தேன் நண்பரே

    ReplyDelete
  8. இரண்டுமே அருமையான பதிவு. ரசித்தேன் நண்பரே!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.