உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, December 16, 2015

இப்போது கலைஞர் முதல்வராக இருந்திருந்தால் ?(கற்பனைக் கடிதம்)

இப்போது கலைஞர் முதல்வராக இருந்திருந்தால் ?(கற்பனைக் கடிதம்)


பேஸ்புக் நண்பர் ஒருவர் எழுதிய பதிவு இது.படித்தில் பிடித்தது . எப்படியெல்லாம் கற்பனை பண்ணுகிறார்கள் என்று நினைக்கும் போது ஆச்சிரியமாக இருக்கிறது


நீங்களும் படித்து ரசியுங்கள்......இதை பதிவிட அனுமதி அளித்ததற்கு மிகவும் நன்றிகள்

அன்புடன்
மதுரைத்தமிழன்ஐயகோ உடன்பிறப்பே:
(கற்பனைக் கடிதம்)


(இந்த மழை வெள்ளத்துக்கு கலைஞர் முதல்வராக இருந்திருந்தால்)

ஐயகோ உடன்பிறப்பே,

என் வாழ்வாய், உடலாய், உயிராய், கழகமாய், தமிழாய் என்றென்றும் நான் நேசிக்கும் உடன்பிறப்பே !!

எழுத்தாணியை வைத்துத் தொடர்ந்து எழுதக் கூட முடியாமல் கண்கள் நீரை குளமாகஅல்ல அல்ல ஏரியாக இல்லையில்லை ஆறாக அதுவுமில்லை கடலாகச் சொறிகின்றன!! ஐயகோ இதென்ன சோதனை? இந்த வயதில் எனக்கேன் தருகிறாள் இயற்கையன்னை இந்த வேதனை?? இது அடுக்குமோ அண்ணாவின் இதயம் இயற்கையை மன்னிக்குமோ?? எனக்குப் பின் தமிழகத்து மக்கள் அனாதைகளாகப் போய் விடாமல் நீ பார்த்துக் கொள் தம்பி என்று அமைதியாகக் கல்லறையில் உறங்கிய அண்ணன் என்னிடம் சொன்னாரே ஐயகோ முதல்முறையாக அண்ணனின் சொல்லைக் காப்பாற்ற முடியாத பாவியாகி விட்டானே இந்தக் கருணாநிதி நான் என் செய்வேன்??

கழகத்தின் ஆட்சிக்கு எவ்வளவோ இடர்கள் வந்ததுண்டு! மைய அரசுகள் தம் மேட்டிமைத்தனத்தைக் காட்டியதுண்டு! ஆணவம் நிறைந்த பல அரசியல்வாதிகளையும் சந்தித்ததுண்டு, அவரிடம் பணிந்து போகாமல் தலைநிமிர்ந்து நின்றதுண்டு! வெஞ்சிறையைக் கண்டும் பயந்ததில்லை! ஆட்சிக் கலைப்பையும் கண்டு அஞ்சியதில்லை! இன்னும் விஷஜந்துக்கள் இருப்பது அறியாமல் அவ்வீட்டில் பலநாட்கள் வசித்த பின்னும் அதை அறிந்த பின்னால் அங்கிருந்து வெளியேறிய கதையுமுண்டு!! ஆனால் எதற்கும் இந்தக் கருணாநிதியோ கழகமோ பயந்ததில்லை, பணிந்ததுமில்லை என்பது நீயும் பேராசிரியரும் அறியாத விஷயமில்லை!!

ஆனால் இப்போது நடந்தது? சிங்காரச்சென்னையாக ஸ்டாலின் மாற்ற நினைத்த சென்னை மாநகரம் என்ன ஆனது? ஐயகோ நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் வரலாறு காணாத கடும் மழை!! சென்னை நகரின் பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது! பணக்காரன் ஏழையென்றா வெள்ளம் பார்க்கும்? பற்பல குடிசைகள் நீரில் மூழ்கி சென்னை மாநகரே தத்தளித்தது! அம்மட்டோ அது மட்டுமா? அதேயளவு வெள்ளம் கழகத்தைச் சோதிக்க கடலூர் நகரிலும் அல்லவா பெய்து வெள்ளமாகப் பாய்ந்தது? இது ஒரு பாட்டம் அடித்து ஓய கழக அரசு புயலினும் விரைவாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டு சகஜ நிலையைக் கொண்டு வர அரும்பாடு பட்டுக் கொண்டிருந்தது!!

தம்பீ அதுவும் கூடப் பொறுக்கவில்லையடா இந்த இயற்கைக்கு?? திரும்பவும் நான்கே நாட்கள் இடைவெளியில் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் முன்பு பெய்ததை விட மிகக் கடுமையான மாரி பெய்ய ஆழிப் பேரலை அழிக்க வந்தது போல திரும்பவும் சென்னையைச் சூழ்ந்ததடா வெள்ளம்!!! அதே போல கடலூர் நகரையும் கடல் கொண்டு விடுமோ என்று அஞ்சுமளவு பெருமழை வெள்ளம்!! சென்னை நகரே மிதந்தது! அந்த நீர்ப்பெருக்கில் பல தமிழர்களின் உடல்களும் மிதந்தது கண்ட என் கண்கள் நீரைச் சொறிந்தன!! ஐயகோ என்னை நம்பி இம்மாநிலத்தின் முதலமைச்சராக ஆறாம் முறையாக ஆக்கி அழகு பார்த்த என் தமிழ் மக்கள் அடையாற்று வெள்ளத்தில் பிணமாகச் சென்றதைக் கண்ட நான் எப்படி அமைதியாக இருக்க முடியும்?

எதிரிகள் வீணே புறம் பேசுகிறார்கள், செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதாம் அதை யாருமறியாமல் நள்ளிரவில் திறந்து விட நான் ஆணையிட்டேனாம்! ஐயகோ இது அடுக்குமா? புல்லர்கள் ஆயிரம் புறம் பேசிப் போகட்டும், சென்னையின் வரலாற்றிலேயே ஐயாயிரம் ஆண்டுகளில் பெய்யாத மழை இப்போது பொழிந்துள்ளதாக பல தமிழறிஞர்கள் கூறியுள்ளனரே அது குறித்து இவர்கள் ஏதேனும் சொல்வார்களா என்ன? எப்படிச் சொல்வார்கள் தமிழர்களாக இருந்தால்தானே சொல்ல?

ஆயிரம்பேர்கள் ஆயிரம் பேசட்டும் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று வெள்ளம் ஆரம்பித்த நாள் முதலாக என் உடல், பொருள், ஆவி அனைத்தையும் என் அன்புத் தமிழ் நெஞ்சங்களைக் காப்பதற்கே என்று அண்ணாவின் பெயரால் உறுதி எடுத்து உணவின்றி, கண்துஞ்சாமல் நிவாரணப் பணிகளைக் கவனித்து வருகிறேன்!! அந்த நிவாரணப் பணிகளில் என்னுடன் இணைந்து கொள்ள உன்னையும் அழைக்கிறேன்!!

நிவாரண உதவிகளை அதிகமாக அளிப்பது அரசா அல்லது கழகமா என்ற பட்டிமன்றம் தமிழ்நாட்டு மக்கள் நடத்தக் கூடிய வகையில் நீயும் அரசுடன் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு உதவிகளை அளித்திட வேண்டுமென்று உனக்கு அறைகூவல் விடுத்து அண்ணன் அழைக்கிறேன்! உடனே வா, விரைந்து வா!! அனைத்து மாவட்டத்திலிருந்தும் நிவாரணப் பொருட்களை ஏற்றிய வாகனங்கள் சென்னை நோக்கி விரையட்டும்!! உன் கைகள் அவற்றை அறிவாலயத்தில் இறக்கட்டும்!! அனைத்தும் நம் தமிழ் மக்களைக் காப்பதற்குப் பயன்படட்டும்!! நான் சொல்லாமலேயே நீ அனைத்தையும் செய்வாய் என்ற நம்பிக்கை எனக்கிருந்தாலும் நீ ஓடி வரும் வேகத்தை அண்ணனின் சொல் அதிகமாக்கும் என்ற நம்பிக்கையில் உன்னை இருகரம் நீட்டி சென்னைக்கு வர வேண்டுகிறேன்!!

இந்த பதிவை பேஸ்புக்கில் எழுதி பதிந்தவர் அச்சுதன் ஜயங்கார். அவரின் அனுமதியுடன் இங்கு மறுபதிவு செய்யப்படுகிறது

9 comments :

 1. என்னவொரு படைப்பாற்றல்?!

  ஹ ஹ ஹா

  ரசனை.

  பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 2. ஹஹஹஹ அச்சுதன் இப்படிக் கிச்சுக் கிச்சு மூட்டிவிட்டாரே!

  ReplyDelete
 3. கடிதம் கற்பனை என்றாலும் உண்மையாகவே கலைஞர் சொல்வது போலவே உள்ளது

  ReplyDelete
 4. செம...
  கட்டுமரத்த விட்டுடீங்களே..!!

  ReplyDelete
 5. கடிதம் கற்பனையானது என்பதைத் தோலுரிப்பதே, அந்தத் தமிழ்ப்பிழைகள்தாம்!
  கட்டுமரம் தமிழனுக்குத்தான் துரோகம் செய்தது. ஆனால், இந்தக் கற்பனையாளர் தமிழ்மொழிக்கே துரோகம் செய்கிறார்.
  சொறிவதற்கும் சொரிவதற்குமான வேறுபாட்டை யே அறிந்திராத இவர், கட்டுமரத்தைக் கேலி செய்கிறாராம்..
  இந்த வகையில், கட்டும‌ரம் இவரைவிட எத்தனையோ மடங்கு மேல்.
  தமிழினத்துக்குத் துரோகமிழைத்திருந்தாலும், கட்டுமரத் தமிழ், என்றுமே அழகு தமிழ்தான்!
  தட்டச்சுத்தவறு என்று நீ தப்பித்துவிட முடியாது தம்பி!
  ஒன்றிற்கிரண்டு முறைகள் இதே தவறு இடம்பெற்றிருக்கிறது உனது எழுத்தில்.
  உனக்குத்தான் அது கண்ணிற்படவில்லையெனினும், இதை மீள்பதிவு செய்த ´தமிழ் மாமணி` க்கும் தெரியவில்லையே!
  தமிழை அறியாமல் தமிழனாக முடியாது!

  ReplyDelete
  Replies
  1. "தமிழ்ப்பிழைகள்" - சரியா?

   Delete
 6. சூப்பர் கடிதம்.

  ReplyDelete
 7. அட்டகாசமான கற்பனை! இப்போதுதான் கணிணி சீரடைந்து இணையம் பக்கம் வர முடிந்தது! நண்பர்களின் பதிவுகளை பார்க்க வேண்டும். நேரம் கிடைக்கையில் பழைய பதிவுகளை வாசிக்கிறேன்! நன்றி!

  ReplyDelete
 8. நல்ல கற்பனை. இப்படி ஒரு கடிதம் தான் எழுதி இருக்கக்கூடும்! :)

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog