Wednesday, June 24, 2015



Thiruvilayadal
நவீனகால திருவிளையாடல் (சிவபெருமானேயே கலாய்த்த மதுரைத்தமிழன் )

சிவபெருமானும் பார்வதியும் பேஸ்புக்கில் யாருக்கு அதிக லைக் வருகிறது. அது எதனால் வருகிறது என்று விவாதித்து கொண்டிருந்தனர். அப்போது பார்வதி சொன்னார் நான் சொல்லும் கருத்துகள் மிக நன்றாக இருப்பதால்தான் எனக்கு அதிக பாலோவர்களும் லைக்ஸும் கிடைக்கிறது என்று சொன்னார்

அதை கேட்ட சிவபெருமான் சிரித்தவாறே உனது கருத்துக்கு அல்ல. நீ பெண் என்பதால்தான் உனக்கு இவ்வளவு பாலோவர்களும் லைக்ஸும் கிடைக்கிறது. நான் போடும் சிறந்த கருத்துகளுக்கு சில லைக்ஸ்மட்டுமே கிடைக்கின்றது. இருந்தாலும் எனது கருத்துக்கள் மிக சிறப்பாக இருக்கின்றது என்று பலரால் பாராட்டப்பட்டு இருக்கிறது என்றார். மேலும் தொடர்ந்த சிவபெருமான் நான் ஒரு ரகசியம் சொல்லுகிறேன். சிவன் என்ற பெயரை ஷிவானி என்று பெயர் மாற்றம் செய்து ஒரு பேக் ஐடி வைத்து இருக்கிறேன். அதன் பாலோவர்கள் உனக்கு இருக்கும் பாலோவர்களை விட அதிகம். அதுமட்டுமல்ல அந்த பாலோவர்களில் நீயும் ஒருத்திதான் என்று சொல்லி சிரித்தார். அதை கேட்ட பார்வதி உங்களுக்கு ஏன் இந்த விளையாட்டு என்று கேட்கும் போது யாரோ ஒருவர் வரும் சத்தம் கேட்டு பேச்சை நிறுத்தி பார்க்கும் போது அங்கே மதுரைத்தமிழன் வருகை தந்து கொண்டிருந்தான்..



அதை பார்த்த சிவபெருமான் வழக்கமாக நாரதர்தானே வருவார். ஆனால் அவருக்கு பதில் இந்த மதுரைத்தமிழன் வருகிறானே...இவன் யாரையும் விட்டு வைக்காமல் கலாய்ப்பானே. இப்ப எதற்கு இங்கு வருகிறான் தெரியவில்லையே ?சரி பார்வதி இப்ப நாம பேஸ்புக் பற்றி பேசியதை பற்றி ஏதும் மூச்சு விடாதே . அது மட்டும் இந்த மதுரைத்தமிழன் காதுக்கு கிடைச்சா நம்மை கலாய்த்துவிடுவான் ஜாக்கிரதை என்று சொன்னாவாரே மதுரைத்தமிழனை வரவேற்றார்.

என்ன மதுரைத்தமிழா செளக்கியமா என்ன இந்த பக்கம். எல்லா தலைவர்களையும் கலாய்த்துவிட்டு கடைசியாக எங்களையும் கலாய்க்க வந்து விட்டாயா என்ன என்றார்

சிவ சிவா அப்படியெல்லாம் உங்களை எல்லாம் நான் கலாயக்க முடியுமா என்ன அகில உலகத்தையும் ஆளுபவர் நீங்கள்தானே உங்களை அப்படியெல்லாம் கலாய்க்க முடியுமா பெருமானே..

மதுரைத்தமிழா நாய் வாலை கூட நிமிர்த்திவிடலாம் .ஆனால் நீ கலாய்ப்பதைதான் நிறுத்த முடியாது. சரி சரி வந்துவிட்டாய் உன் நோக்கம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் .நீ என்னை பார்க்க வந்துவிட்டாய் என்ன சாப்பிடுகிறாய் காபியா டீயா அல்லது பழரசமா?

என்ன பெருமானே நீங்கள் இன்னும் காலத்திற்கு ஏற்ப மாறவில்லையா என்ன? இங்கே சோமபானங்கள் எல்லாம் கிடையாதா என்ன?

மதுரைத்தமிழா இது என்ன தமிழ்நாடு என்று நினைத்துவிட்டாயா அல்லது இங்கு ஆட்சி செலுத்துவது அம்மா ஜெயலலிதாவா என்ன இங்கு சோமபானம் கிடைப்பதற்கு? தமிழகத்தை தவிர்த்து அகில உலகங்களையும் ஆள்பவன் நான் அதனால் இங்கு சோமபானங்களுக்கு அனுமதி இல்லை

பெருமானே நான் பழக்கதோஷத்தில் கேட்டுவிட்டேன் மன்னித்து கொள்ளுங்கள்... பழரசம் கொண்டு வரச் சொல்லுங்கள் அது போதும் ந்த சிறுவனுக்கு. ஆஆஆ..... ஒன்று சொல்ல மறந்துட்டேன். பழரசத்தில் எனக்கு பிடித்தது திராட்சை பழ ரசம்தான் அதுவும் மிகப்பழைய பழ ரசமாக இருந்தால் மிக நன்றாக இருக்கும்...

சிவபெருமான் சிரித்தவாரே ஹாஹாஹா மதுரைத்தமிழா ஒயின் வேண்டுமென்று கேட்பதற்கு பதிலாக இப்படி சுற்றி வளைத்து கேட்கிறாயா? நீ ரொம்ப ஸ்மார்ட் தமிழா ஆனால் அந்த பழரசம் இங்கே கிடைக்காது என்று சொல்லியாவாறு யாரு அங்கே இந்த தமிழனுக்கு எலுமிச்சம் பழ ஜூஸ் கொண்டு வந்து கொடுத்துவிட்டு இவன் தலையில் 2 எலுமிச்சம் பழத்தை வைத்து தேய்த்துவிடுங்கள் என்றார்

சரி  மதுரைத்தமிழா நீ வந்த காரியத்தை சொல்லவே  இல்லையே. ஒரு வேளை உன் மனைவியிடம் இருந்து பூரிக்கட்டையால் அடிவாங்குவதில் இருந்து தப்பிக்க வரம் ஏதும் கேட்டு வந்து இருக்கிறாயா என்றார்.

அதற்கு நான் (மதுரைத்தமிழன்) சிரித்தவாறே என்ன பெருமானே நான் அடிவாங்குவது உங்கள் வரைக்கும் தெரிஞ்சிருக்கா என்று கேட்டாவாறே பெருமானே நான் அதற்காக வரவில்லை. அடுத்த வருடம் வெளியாகப் போகும்  ஐபோன் 7  ட்ரையல் மாடல் எனக்கு கிடைத்துள்ளது அதை நான் உபயோகிப்பதை விட நீங்கள் உபயோகித்தால் நன்றாக இருக்கும் என தோன்றியதால் அதை எடுத்து வந்தேன் என்றேன்

நாரதர் பழம் கொண்டு வந்தது போல நீ ஐபோனை கொண்டு வந்து நாடகத்தை ஆரம்பித்து வைக்கிறாராயா? சரி உன் நாடகத்தை ஆரம்பி என்றார்

பெருமானே என்னை நம்புங்கள் நான் அப்படி ஏதும் திட்டத்துடன் வரவில்லை என்று சொல்லி அவரின் கையில் ஐபோனை கொடுத்தேன்..

சிவ பெருமான் சிரித்தவாரே வயசான எனக்கு அது எதற்கு எனவே என்னில் பாதியாக இருக்கும் சக்தியாக இருக்கும் பார்வதியிடம் கொடுத்துவிடுகிறேன் என்றார். அதை கேட்ட பார்வதியோ ஐயனே இது எனக்கு எதற்கு இதை நம் குழந்தைகளிடம் கொடுத்துவிடுவோம் என்றார்.

அதை கேட்ட வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த முருகனும் கணபதியும் அந்த ஐபோன் எனக்குதான் என்று ஆள் ஆளுக்கு சத்தம் போட ஆரம்பித்தனர்

அதை பார்த்த பெருமான்  என்ன மதுரைத்தமிழா நாரதர் வேலையை நீயும் செய்ய ஆரம்பித்துவிட்டாயா என்ன? சரி இந்த ஐபோனை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை நீயே தீர்மானித்து சரியான ஆளுக்கு கொடுத்துவிடு என்று சொன்னார்.

அதை கேட்ட முருகன் என்ன மதுரைத்தமிழா ஞானப்பழத்திற்காக உலகை சுற்றி வர செய்து போலதானே நீங்களும் சொல்லப் போகிறீர்கள். இந்த தடவை நான் ஏமாறமாட்டேன். நான் இந்த ஐபோனை நானே வெல்லுவேன் என்று முருகப் பெருமான் சொன்னார்.

அதை கேட்ட மதுரைதமிழன்  நான் ஒன்றும் நாரதர் இல்லை, அதனால் நான் அப்படி செய்யப்போவதில்லை நான் வேறு ஒரு ஐடியா வைச்சிருக்கேன் அதன்படி யார் தகுதியானவர்களோ அவர்களுக்குதான் இந்த ஐபோன் என்றார்

என்ன ஐடியா என்று அனைவரும் ஆச்சிரியமாக கேட்டனர்.

நான் மூன்று கண்டிஷன் வைத்து இருக்கிறேன் அதையார் கண்டிப்பாக பாலோ செய்கிறார்களோ அவர்களுக்குதான் இந்த ஐபோன் என்றேன்.அது என்ன தெரியுமா?

உங்களில் யார் அம்மாவின் பேச்சுக்கு கிழ்படிகிறார்களோ? அம்மாவிடம் பதிலுக்கு பதில் எதிர்த்து பேசாமல் இருக்கிறார்களோ? அம்மா சொல்வதை அப்படியே செய்கிறார்களோ அவர்களுக்குதான் இந்த ஐபோன் என்று சொன்னேன்.

அதை கேட்ட முருகன் டேய் அண்ணா கணேசா  வா போகலாம் இந்த ஐபோன் நமக்கு கிடைக்காதுடா.. இந்த ஐபோன் நம்ம தந்தைக்கிற்குதான் என்ற முடிவோட இந்த மதுரைத்தமிழன் வந்து இருக்கிறான்.. நாம போய் விட்ட வீடியோ கேமை தொடரலாம் என்று அங்கே இருந்து நகர்ந்தனர்.

அவர்களின் பதிலை கேட்ட பார்வதியோ விடாமல் சிரித்தார்.

சிவபெருமானோ ஙே.....என்று முழித்துவிட்டு தனது கண்களால் மதுரைத்தமிழனை சுட்டு எரிக்கலாம் என்று பார்த்தால் நான்  அங்கே இருந்து ஜுட் விட்டு பல நாழியாகிவிட்டது

டிஸ்கி :இந்த பதிவு நகைச்சுவைக்காக எழுதப்பட்டுள்ளது. கடவுளையோ மதத்தையோ புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.

திருவிளையாடல் முழு நீள வண்ண‍த் திரைப்படம் - வீடியோ
https://www.youtube.com/watch?v=zztzKqHb66c

அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments:

  1. இலவச ஐபோன் வழங்கும் திட்டம் விரைவில் வரப் போவதாக தகவல்... (!)

    ReplyDelete
  2. இலவச ஐ-ஃபோன்.... நல்ல விளையாட்டு....

    உம்மோடு விளையாடவே யாம் வந்தோம் என்று அவரிடமே நீங்கள் சொல்லியதாக தகவல்!

    ReplyDelete
  3. செம சகோ! அடேங்கப்பா ஆண்டவனையும் விட்டு வைக்கவில்லையா.? யார் கீழ்ப்படிகிறார்களோ அவர்களுக்கு தான். அப்படி என்றால். அது தந்தைக்கு தான். ஆஹாஆஹா ஹாஹா ........சிரிப்பு அடக்கவே முடியலைப்பா. wow அசத்தல் பதிவு .நன்றி வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete
  4. ஹாஹாஹா! செம கலாட்டா! ரசித்து மகிழ்ந்தேன்! நன்றி!

    ReplyDelete
  5. சூப்பர் இதை ஒருகாமெடி ட்ராமாவா ஆக்ட் பண்ண வச்சிடலாம் போலிருக்கே..

    ReplyDelete
  6. முடிவில்தான் எனக்கு சற்று குழப்பம் - அதாவது மூன்று கண்டிஷன் ( உங்களில் யார் அம்மவின் பேச்சுக்கு கீழ்படிகிறார்களோ , அம்மாவிடம் பதிலுக்கு பதில் எதிர்த்து பேசாமல் இருக்கிறார்களோ , அம்மா சொல்வதை அப்படியே கேட்கிறார்களோ அவர்களுக்குத்தான் இந்த இஃபோன் . ) அப்படியானால் நம் தமிழக முன்னால் முதல்வர் மற்றும் சக அமைச்சர் பெருமக்கள்தானே ?

    கே.எம். அபுபக்கர்

    ReplyDelete
  7. ஒரு வேலை பன்னீருக்கு கொடுத்து விடுவீர்களோ என்று நினைத்தேன்.

    ReplyDelete
  8. ஹஹஹஹஹஹ்ஹ் அருமை! மிக மிக ரசித்தோம்......தமிழா இன்னும் அடங்க வில்லை சிரிப்பு.....அந்த கண்டிஷன் கள் மதுரைத் தமிழனிடமிருந்து வந்ததன் காரணம் எங்களுக்கு எல்லாம் தெரியாதா என்ன....சிவ சிவ.....இல்ல இல்ல....ஹர பார்வதிக்கு ஜெய்!!!

    ReplyDelete
  9. நான் ஓபிஎஸ்ஸூக்குத்தான் என்று பதிவிடலாம் என்று பார்த்தால், அபுபக்கர் அதுக்கு முன்பே பதிவிட்டிருக்கிறார். நகைச்சுவையாய் இருந்தாலும், ஜெ சரியான கன்ட்-ரோல் வைத்துள்ளார். எம்ஜியாருக்கு அன்பால் இணைந்திருந்தனர். ஜெவுக்கு பயத்தில் சலாம் போடுகின்றனர்.

    அதிருக்கட்டும். உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது. இப்போதெல்லாம் எதை எழுதினாலும் டிஸ்கி போட்டு,விடவேண்டியிருக்கிறது. இல்லைனா, மதத்தைக், ஜாதியைக் காப்பாற்றக் கடவுளால் படைக்கப்பட்ட ஆத்மாக்கள் எரி நெருப்பை உமிழும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.