Tuesday, December 9, 2014



மோடி சொன்னதும் செய்வதும் சரியா?

இன்றைக்கு மத்திய அரசில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தப்பட்டிருக்கும் மோடி சார்ந்திருக்கும் பாஜக என்ற கட்சிக்கு வாக்களித்த மக்களில் 90 சதவிகிதத்தினர் என்ன காரணத்திற்காக வாக்களித்திருக்கின்றார்கள் என்பதை ஆய்ந்து உணர வேண்டிய முக்கியமான தருணத்தில் மோடி இருப்பதை அவரது நலன் விரும்பிகள் அவருக்கு எடுத்துச் சொல்வது நலம்! (ஹப்பாஆஆ....  ஒரே மூச்சுல இம்ப்புட்டு பெரிய வாக்கியமா?)


மோடியும், பாஜகவும் தங்களது தேர்தல் பிரச்சாரங்களில் மோடி ஆண்ட குஜராத் மாநிலத்தில் நிகழ்த்தியதாகச் சொல்லப்பட்ட தொழில்துறை, மின்சாரம், விவசாயம், தனிநபர்... மற்றும் இன்னபிற வளர்ச்சிகளை சுட்டிக்காட்டித்தான் மக்களிடம் வாக்குக் கேட்டனர். அங்கு நடந்த மதக்கலவரங்களை அடியோடு மறைத்து/மறுத்து, அதற்கும் தங்களுக்கும் தொடர்பே இல்லை என்று சத்தியம் செய்து, தாங்கள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர்கள், எந்த மதச்சார்பாகவும் குஜராத்தில் ஆட்சி செய்யவில்லை என்று கோர்ட் தீர்ப்புகள் வாயிலாகவும், ஊடகப் பிரச்சாரங்களின் மூலமும் தலைகீழாக நின்று மக்களிடம் உறுதியளிதே வாக்குக் கேட்டனர்....

மேலும் இதற்கு முன்பு ஆண்ட ஐக்கியமுற்போகுக் கூட்டணி அரசு இந்துக்களுக்கு சலுகைகள் வழங்கவில்லை, சமஸ்கிருதத்தையும், இந்தியையும் மக்களிடம் பரப்பவில்லை, கீதை போன்ற இந்து சமய நூல்களை தேசிய நூலாக அறிவிக்கவில்லை....,   அதனால் அந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவை இந்து நாடாக மாற்றுவோம் என்றெல்லாம் சொல்லி வாக்குக் கேட்கவில்லை....!

மாறாக, முந்தைய ஐ.மு ஆட்சியில் நிர்வாகம் சீர்கெட்டிருக்கின்றது, கருப்புப் பணத்தை இந்தியா கொண்டுவரவில்லை, விலைவாசி உயர்கிறது, ஊழல் மலிந்து விட்டது, தொழில் வளர்ச்சி இல்லை....   இப்படியெல்லாம் சொல்லி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் சரி செய்வோம் என்று வாக்குக் கொடுத்துத் தான் மக்களிடம் வாக்குக் கேட்டனர்...!!!

ஆனால் இதையெல்லாம் மறந்து விட்டு, ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் கடந்து விட்ட நிலையில், இப்பொழுது, இந்தியை பரப்புவோம், சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்குவோம், கீதையை தேசிய நூலாக்குவோம், ராஜபக்‌ஷேவை இந்தியாவின் நண்பனாக அறிவிப்போம், கங்கையை சுத்தப்படுத்துவோம், ரேடியோவைத் திறந்தால், ஹிந்தியில் அரசுக்கு ஆதரவாக விளம்பரம் செய்வோம், ரயில் கட்டணங்களை ஏற்றிவிட்டு, காங்கிரஸ் வழியில் செல்கிறோம்......

.... இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால், மக்கள் ஏமாளிகளாக இருந்து விடுவார்கள் என்று நம்பிவிட வேண்டாம் திரு. மோடி அவர்களே.  அதானிக்கு நீங்கள் காட்டியிருக்கின்ற சலுகை உங்களுக்கு ஓட்டுப்போட்ட ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் ஆழமாக பதிந்திருக்கின்றது.  நூற்றுக்கு வெறும் 30 பேர் மட்டுமே வாக்களித்து உங்களை அரியணையில் ஏற்றியிருக்கின்றார்கள். அதாவது இந்திய மக்கள் உங்களை வெறும் கயிற்றின் மேல் மட்டுமே நடக்கவிட்டிருக்கின்றார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.


உங்களுக்கு வாக்களிக்காத அந்த 70 பேரின் நம்பிக்கையை பெருவது இருக்கட்டும், உங்களுக்கு ஆதரவளித்த அந்த 30 பேர் மீண்டும் உங்களுக்கு வாக்களிக்க வேண்டுமானால், முதலில் இந்த காவி கோஷங்களை ஓரம்கட்டி வைத்து விட்டு, சனாதன மனுதர்ம விவகாரங்களில் இருந்து முற்றும் முழுதாக விலகி நின்று, ஒவ்வொரு பிராந்திய மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, சிறுபான்மையின மக்களை சகோதரத்துவத்துடன் நடத்தும் பண்போடு செயல்படத் துவங்குங்கள்.

இப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பது டிரையல் மட்டுமே என்பதை புரிந்து செயல்படுங்கள்.  உங்களை விட மிருக பலத்துடன் அரியணை ஏறிய ராஜீவ் காந்தியையே தூங்கியெறிந்த மக்கள் தான் இந்தியர்கள் என்ற வரலாற்றைப் படித்துப்பாருங்கள். இந்தியா என்பது குஜராத் மட்டுமல்ல. இது ரொம்பப் பெருசு!!!

கட்டுரையாளர்


டிஸ்கி :  நான் எழுத வேண்டுமெறு நினைத்தை ‘அழகாக எனக்காக’ எழுதி வைத்ததை போலிருந்ததால் கொக்கரக்கோ சௌம்யன் அவர்களின் அனுமதி பெற்று  இங்கு பகிரப்படுகிறது அனுமதியளித்தற்கு சௌம்யன் அவர்களுக்கு நன்றி

கட்டுரையாளர் பற்றிய சிறு குறிப்பு :

இவர் அறிஞர் அண்ணா இயற்கை எய்திய 1969ம் ஆண்டு பிறந்ததால், அறிஞர் அண்ணா முதல் முதலில் எழுதிய கொக்கரக்கோ என்னும் சிறுகதைக்குப் பயன் படுத்திய புனைப்பெயரான சௌமியன் என்ற பெயரை இவருக்கு, இவரது பெற்றோர் இட்டனர். ஆனால் நட்பு வட்டம் இவரை சௌம்யன் என்றே அழைப்பதால் இவரும் சௌம்யன் என்ற பெயரையே இங்கு பயன் படுத்துகிறார். வேதியியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சென்னையில் 18 மாதங்களும் அபுதாபியில் 42 மாதங்களும் பணியாற்றிய பின், தற்போது குறைந்த பட்சம் நூறு பேருக்காவது வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற வேட்கையில், ரமணாஸ் ஃபுட் புராடக்ட்ஸ் என்ற பெயரில், உணவுப்பொருட்கள் உற்பத்தி மற்றும் சந்தைப் படுத்துதலை 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

அன்புடன்

மதுரைத்தமிழன்

7 comments:

  1. இன்றைய அரசியல் நிலையினை, மிக மிகத் தெளிவாக , அதுவும் மக்களின் மனதில் உள்ளதைப் படம் பிடித்துக் காட்டியுள்ள பதிவர், கொக்கரக்கோ சௌம்யன் அவர்கள் பெரும் பாராட்டுக்குரியவர்! அதனை எடுத்து இங்கே அனைவரும் அறிய வெளியிட்ட தாங்களும் பாராட்டுக்குரியவர்! நன்றி!

    ReplyDelete
  2. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...
    தமிழா.. ஒன்றே ஒன்று மட்டும் சொல்ல விரும்பி கொள்கிறேன்...
    "A Nation Deserves its Leader" . அம்புட்டுதேன்.

    ReplyDelete
  3. இறுதியில் சொல்லியிருக்கின்றார் பாருங்கள் அந்த பாரா....."கொக்கரக்கோ" என அழகாக கூவியிருக்கின்றார். மிகவும் சரியாக!!! மோடிக்கு இது கேட்குமா???

    ReplyDelete
  4. இன்னுமா இந்த உலகம் நம்மை நம்புது அப்டின்னு மோடி நினைக்கிறார் போல:))

    ReplyDelete
  5. நல்லதொரு பகிர்வை தாங்கள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.