Monday, August 19, 2013




மோடியின் பல முகங்கள்


நரேந்திர மோடிதான் பாரதத்தின் அடுத்த பிரதமர் என்று பாஜக அபிமானிகள் உற்சாகமடைந்துள்ளனர். மோடியின் புகழ் இந்துத்துவ ஆதரவாளர்களையும் தாண்டி விரிந்து வருகிறது. கார்ப்பரேட் இந்தியாவின் வலுவான ஒரு பகுதி மோடி பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறது. கார்ப்பரேட்களின் ஆதிக்கத்தில் இருக்கும் ஊடகங்களும் இந்த எண்ணத்தை முன்னெடுக்கின்றன. ஊழல் இல்லாத, நிர்வாகத் திறம் கொண்ட, வல்லரசாக இந்தியாவைக் கனவு காண்பவர்கள் பலருக்கும் மோடி சிறந்த தேர்வாகத் தெரிகிறார். பல அறிவுஜீவிகளும் மோடி நாமத்தை முன்னெடுக்கின்றனர். இந்தியாவின் முக்கியப் பெண்ணியவாதியாக அறியப்பட்ட மது கிஷ்வர், மனித உரிமை திருஉருவாகப் பார்க்கப்படும் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத் எனப் பல பெயர்களைக் குறிப்பிடலாம்.அதே நேரம் மோடிக்குக் கடுமையான எதிர்ப்பும் அரசியல் தளத்தில் ஏற்பட்டுள்ளது. 2002இல் வாஜ்பாய் கோவாவில் மோடியைப் பதவி நீக்கத் தயாரானபோது இடைமறித்துக் காப்பாற்றியவர் அத்வானி. பத்தாண்டுகளுக்குப் பிறகு கட்சி கோவாவில் அத்வானியின் கருத்தை உதாசீனம் செய்து மோடியை முன்னிறுத்தியுள்ளது. இதன் பின்விளைவாக தேசிய முற்போக்கு அணி உடைந்து அதிலிருந்து ஜனதா தளம் - பிகார் முதல்வர் நிதிஷ்குமாரின் கட்சி - விலகியுள்ளது.

அத்வானி நீங்கலாகவும் பாஜகவில் மோடிக்கு எதிர்ப்பு உண்டு. பாஜகவைக் கட்டுப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்.சிலும் மோடிக்கு முழு ஆதரவு இல்லை. சிவில் சமூகத்திலும் கடுமையான எதிர்ப்பு உள்ளது. மோடிக்கு எதிர்ப்பு என்பது பொதுவாக மூன்று அம்சங்களைக் கொண்டது. குஜராத் 2002 மதக்கலவரம். மோடி இதில் முக்கியக் குற்றவாளி என்பதை நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லாவிட்டாலும் சாட்சியங்களின் அடிப்படையில் உறுதியாகச் சொல்ல முடியும். அக்கலவரத்தை ஒருங்கிணைத்து, இன்றுவரை குற்றவாளிகளைக் காப்பாற்றி வருவதோடு, முஸ்லிம்களை இரண்டாம் கட்டப் பிரஜைகளாக நடத்தி அந்நிகழ்வுக்காக இப்போதுவரை வருத்தம் தெரிவிக்க மறுத்து வருவது அவருக்குக் கணிசமான எதிர்ப்பு ஏற்பட முக்கியக் காரணம். சில நாடுகளில் அனுமதி மறுக்கப்படும் ஒருவர் நம் பிரதமராவதன் இழிவும் நினைத்துப் பார்க்கப்பட வேண்டியது.



இரண்டாவது காரணம் சாதி அரசியல். மோடி மிகவும் பிற்படுத்தப்பட்ட, எண்ணெய் தயாரிக்கும்கஞ்சி’ (தமிழில் வாணியச் செட்டியார்) ஜாதியைச் சேர்ந்தவர். அவருக்கு பாஜகவிலும் ஆர்.எஸ்.எஸ்.சிலும் இருக்கும் பிராமணர்களோடு இசைவான உறவு இல்லை. மோடியோடு முரண் உறவுகொண்ட வாஜ்பாயி, நித்தின் கட்கரி, எம்.ஜி. வைத்தியா, சஞ்சய் ஜோசி போன்ற பலரும் பிராமணர்கள். குஜராத்தில் உயர்நிலை பிராமண அதிகாரிகள் பலரையும் மோடி விலக்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதைத் தமிழகப் பிராமணர், பிராமணர் அல்லாதார் அரசியல் அடிப்படையில் புரிந்துகொள்வது கடினம். மோடி பிராமணியத்திற்கு எதிரானவர் அல்ல. தன்னைப் பிற்படுத்தப்பட்டவராக அவர் எப்போதும் அடையாளப்படுத்திக் கொள்வது இல்லை. குஜராத் பிராமணர் சம்மேளனத்தைத் துவங்கி வைத்து அவர் உரையாற்றியிருக்கிறார். ஆனால் அவருடைய தடாலடியான, செயல்முறை சர்வாதிகாரப் பண்புடைய ஆர்.எஸ்.எஸ்.சின் பிராமணியத் தலைமைக்கு இசைவாக இல்லை.

மூன்றாவது காரணம் அவருடைய அதிகாரச் செயல்பாட்டு முறை. அரசியல் தளத்தில் அவருக்கு ஏற்படும் எதிர்ப்புக்கு இதுவே முக்கிய காரணம். மதச்சார்பற்ற அரசியல் என்பது வாடகைக்கு விடப்படும் வேட்டியைப் போன்றது. சந்தர்ப்பவாதத்தின் நிர்வாணத்தை அவசரமாக மறைக்க உதவும். டக்கென்று கழற்றிவிடவும் முடியும். இடதுசாரிகளைத் தவிர பிற எல்லாக் கட்சியினரும் சந்தர்ப்பம் ஏற்படும்போது பாஜகவுடன் இணைந்துள்ளார்கள், இனியும் இணைவார்கள் என்பதே யதார்த்த நிலை. இன்று மோடியைக் கடுமையாக எதிர்க்கும் நிதிஷ்குமார் குஜராத் கலவரத்தின்போது வாஜ்பாய் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது மோடிக்கு எதிராக அவர் முனகக்கூட இல்லை. கலவரத்திற்குப் பிறகு பொது மேடையில் மோடியைப் புகழ்ந்து அவருடைய திறம் குஜராத்தைத் தாண்டிப் பரவ வேண்டும், நாடே பயனடைய வேண்டும் என்று பேசியவர். மோடியின் அரசியலிலும் கருத்தியல் உள்ளடக்கத்திலும் அத்வானிக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் மோடியின் செயல்முறையில் உள்ளது.

மோடியின் தலைமைப் பண்பு பிற தலைமைகளை அழித்துவிடக் கூடியது. அமைப்புகளைச் சிதைக்கக் கூடியது. இன்று குஜராத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். இரண்டுமே இல்லை. மோடி ராஜ்ஜியம் மட்டுமே உள்ளது. இது பல தலைமைப் பண்புடைய, ஆர்.எஸ்.எஸ். சாட்டையைச் சொடுக்கும் வரை உள்கட்சி ஜனநாயகத்தோடு செயல்படும், பாஜகவின் தலைவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பல பிராந்தியத் தலைவர்களுக்கும் அச்சத்தைத் தருகிறது.

இந்திரா மற்றும் சஞ்சய் காந்தியின் கூட்டு உருவம் மோடி. அவரது தலைமை இந்திராவுக்குப் பிறகு வலுப்பெற்று வரும் நம் ஜனநாயக நிறுவனங்களை அழித்துவிடும் அபாயம் உண்டு. அவருடைய அரசு கார்ப்பரேட் இந்தியாவின் வளர்ச்சிக்குக் குறுக்கே வரும் பொதுமக்களை, ஆதிவாசிகளை ஒடுக்கிக் கேடான ஒரு வளர்ச்சிப் பாதையில் நாட்டை முன்னெடுக்கும். மோடியின் ஆட்சி இந்திய அரசியல் அமைப்புக்கே அச்சுறுத்தலாக அமையும் வாய்ப்பு அதிகம்.


மோடியை சில பொதுப் பண்புகளின் அடிப்படையில் ஹிட்லருடனும் அவரது அடிதடி ஆதரவாளர்களை நாஜி படையுடனும் ஒப்பிட முடியும். இருவருமே அடிமட்டத்திலிருந்து மேலெழுந்து வந்தவர்கள். ஹிட்லர் தேர்தல் வழி ஆட்சிக்கு வந்தவர். அவர் தொழிலாளர்கள் மற்றும் அடிமட்ட ஜெர்மனியர்களின் ஆதரவையும் அக்கால உலக கார்ப்பரேட்டுகளின் ஆதரவையும் ஒருங்கே பெற்றிருந்தார். ஹிட்லரின் ஆட்சியில் ஜெர்மனி ஒருங்கிணைந்து, பொருளாதார வளர்ச்சி கண்டு, வல்லரசாக மாறியது. ஆட்சிக்கு வரும் முன்னரே தனது செயல்பாடுகளில் குஜராத் கலவரம் போன்ற தடயங்கள் பலவற்றைத் தந்தவர் அவர். ஊடகங்களின், தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தைச் சிறப்புற உணர்ந்தவர். நாட்டுப்பற்றாளர், ஊழலற்றவர், ‘வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டவர். சிறந்த பேச்சாளர். மோடி முஸ்லிம்களை நடத்த ஆசைப்படுவதுபோல் யூதர்களை நடத்திக் காட்டியவர். இருவருடைய உடல் மொழியாலும் ஆதிக்கத்தையும் எதிர்ப்புணர்வையும் வெளிப்படுத்தும் கூறுகள் அதிகம். இப்படிப் பல ஒப்பீடுகளைச் சொல்ல முடியும். மோடி ஆர்.எஸ்.எஸ் இல் ஒரு சாதாரணப் பிரச்சாரகராக இருந்த போது அவரை நேர்கண்ட இந்தியாவின் முக்கியமான உளவியல் அறிஞரான அஷிஸ் நந்தி மோடி அப்போதே ஒரு அப்பழுக்கற்ற பாஸிஸ்டாக இருந்தார் என்று கூறியுள்ளார். மேலும் 1906இல் உருவான முஸ்லிம் லீக்கிற்கு சற்றே காலம் தாழ்ந்த எதிர்வினையாக 1925இல் உருப்பெற்ற ஆர்.எஸ்.எஸ்., 1919இல் முசோலினி கட்டமைத்த பாசிஸ்ட் இயக்கத்தின் தாக்கத்தையும் உள்வாங்கிய அமைப்புதான்.

மோடிக்கு ஆதரவு என்பது இந்தியாவை முன்னெடுக்க ஒரு சர்வாதிகாரி வேண்டும் எனப் பல்லாண்டுகளாக ஏங்கிவரும் ஒரு மனோபாவத்தின் எழுச்சி. ஆர்.எஸ்.எஸ்.க்கு இந்துத்துவத் தலையும் கூட்டணிக் கட்சிகளுக்குத் தாராளவாத வாலையும் காட்டி வரும் பாஜகவுக்கு அரசியலில் நின்று நிலைக்க இப்போது மோடியை ஆதரிப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை. மோடியின் தலைமை கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்திக் கட்சியின் வளர்ச்சிக்கு உதவும். ஒருகால் முந்தைய தேர்தலைவிட அதிக தொகுதிகளில் பாஜக வெற்றிபெறக் கூடும்.

எனவே மோடியின் ஆபத்தைக் குறைத்து மதிப்பிடுவது என்பது மோடியைக் குறைத்து மதிப்பிடுவது போலவே அபத்தமாகவே முடியும்.

ஆனால் மோடிக்குக் கிடைக்கும் ஆதரவைப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை எண்ணிக்கையாக மாற்றுவது 2014 தேர்தலில் ஆகக் கடினமானது. நமது பாராளுமன்ற ஜனநாயகம் மோடியிடமிருந்து இம்முறை நம்மைக் காப்பாற்றும் என்று நம்ப வலுவான காரணங்கள் உள்ளன.

இன்றைய இந்தியாவின் மூல லட்சியங்களை விதைத்து வளர்த்தெடுத்த காந்தியினுடைய பார்வையின் அழிவு குஜராத்திலிருந்தே மேலெழுந்து வருவது ஒரு நகைமுரண். மோடியின் ஆதரவாளர்களில் ஒருவர்கூட அவர் ஒரு சிறந்த ஜனநாயகப் பண்புடைய தலைவர் என்று நம்பி ஆதரிக்கவில்லை. எதிர்ப்புகளை அடித்து உடைத்து தீர்மானமான முடிவுகளை எடுக்கும் தலைவராகவே அவரை ஆதர்சிக்கின்றனர். இந்தியாவின் வருங்காலம் பற்றிய நமது கனவு என்ன என்பதே முக்கியம். நம்முடைய கனவு எதிர்ப்புகளை ஒடுக்கக்கூடிய, சிறுபான்மையினரைப் படுகொலை செய்யக்கூடிய, கார்ப்பரேட் பேராசைக்கு உடுக்கடிக்கும் அண்டை நாடுகளை ஆதிக்கம் செய்யும், ‘வளர்ச்சிஎனும் தேவதைக்கு கண்மூடித்தனமாகப் பணிவிடை செய்யும் வல்லரசான இந்தியாவா அல்லது காந்தி, நேரு, அம்பேத்கர் போன்ற தலைவர்களின் மாறுபட்டத் தரிசனங்களுக்கு இடமளிக்கும் இந்தியாவா என்பதே முக்கியமானது. இந்தியாவின் இளைய தலைமுறைக்கு மோடி இன்று நாயகனாகத் தெரிவது விடுதலைப் பெற்றுத் தந்த தலைவர்களின் லட்சியங்கள் பொய்த்துவிட்டதின் அடையாளம். மோடியைப் பிரதமராக்குவது ஒரு தேர்தலில் அவருக்கு வாக்களிக்கும் முடிவு அல்ல. வருங்கால இந்தியா பற்றிய நம் அந்தரங்க ஆசையின் வெளிப்பாடு.

-எழுதியவர் :  கண்ணன் -- Courtsey :காலச்சுவடு ( From ஜூலை 31,2013 To ஆகஸ்ட் 20,2013 ) தலைப்பு மட்டும் என்னுடையது


டிஸ்கி : நான் படித்ததை பலருடன் பகிரவே இந்த பதிவு
அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments:

  1. எவ்வளவு முக்குனாலும் முடியலீயேப்பா..

    ReplyDelete
  2. But Why we ready to support Modi, Because of Congress Corruption and till date they didn't take any strong action against Pak due to Minorities Vote and China. I can't understand why our Govt not ready to release any strong statement against China or Pakistan while crossing the border.

    ReplyDelete
    Replies
    1. இப்போது ஆளும் காங்கிரஸுக்கு நாடு முக்கியமல்ல அவர்கள் பிஸினஸில் இன்வெஸ்மெண்ட் செய்த மூதலீடுதான் முக்கியம் அதனால்தான் இப்படி நிகழ்வுகள் நேருகின்றன

      Delete
  3. நீங்க இந்த பதிவை எழுதல்ல. நல்லது.

    ReplyDelete
    Replies
    1. நாந்தான் எழுதினேன் தலைப்பை மட்டும் ஹீ.ஹீ

      Delete
  4. பொறுத்திருந்து பார்ப்போம்...

    ReplyDelete
  5. we want freedom from Foreign( sonia) govt. we will only ruled by indians not by binami indians

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்தை நான் 100% ஆதரிக்கிறேன்

      Delete
  6. என்னை பொருத்த வரை காங்கிரஸ் தலைவர்கள் வருவதை விட மோடி வருவதைதான் ஆதரிப்பேன் காரணம் காங்கிரஸுக்கு மாற்றாக இப்போது வேறு யாரும் இல்லை என்பதால் சொல்லுகிறேன் ஆனால் மோடிக்கு போட்டியாக ஜெயலலிதா வந்தால் ஜெயலலிதாவுக்குதான் என் முதல் ஆதரவு. நான் அதிமுக கட்சிக்காரன் கிடையாது ஆனால் ஜெயலலிதா போன்ற தைரியமாக நடவடிக்கை எடுப்பவர்கள் தான் இந்தியாவிற்கு தேவை என்பது என் கருத்து

    ReplyDelete
  7. Hi,
    I am not a pro-BJP or pro-Modi person, but I support Modi to be the next PM. Everyone who opposes Modi only speaks about post-Godra riots and Modi's failure or support in controlling it(I have a question here, why none is speaking about Godra riots. Because that Lalu appointed committee had confirmed it an accident??????). But Modi has been ruling the same state for the past 11 years after riots. In a present day world where media plays a major role, even in a person's everyday life, it is highly impossible to hide AUTOCRACY, had Modi made others to sense that in Guajrat, in the past 11 years, there have been no riots, good development etc. Here I would also like to stress that almost 90% of Indian media, which got developed post-independence has direct or indirect christian investments. in this scenario I dont think they will publish something for a pro-Hindu politician.

    I would not agree comparing Modi with Hitler. As soon as Hitler raised to power, concentrated on developments for 3 years and then he started hitting Jews. But nothing had happened in last 11 years to Muslims in Gujarat. Reg fascistic attitude, why not a leader be like that when he is not a corrupt. Till this day no scams or accusations have been projected on him. All his opponents speak only one thing. We all know it is very tough nowadays to hide corruption.

    Present day India requires a LEADER not any other Politician. So you want to handover powers to someone(Rahul) who is not even willing to take leadership of his mom's slaves? Pls listen to statements of Kapil Sibal, Dig Vijaya, Salman Kurshid, Anand Sharma and Chidambaram everyday, before taking any decisions on next PM. Whether it is about Corruption-free development for India or selling India to foreigners??

    Pls also remember that we are in a country where BJP is called a communal force but DMK's alliance with Muslim-league and Christian fathers, project them as Secular alliance.

    Thanks.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.