Thursday, July 18, 2013

கணவன் வீட்டிற்கு செல்லும் கன்னிப் பெண்கள் அறிய வேண்டிய ரகசியம்
.
அந்த காலத்தில், ஒரு குடும்பத்திற்கு புதியதாக திருமணமாகிச் செல்லும் பெண்கள் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி விளக்கிக் கூறும் அருமையானப் பாடல் இது. உண்மையில் இது தான் ஒரு தமிழ்நாட்டு பெண்ணின் வாழ்வு முறை. ஆனால் அது அந்த காலத்திற்கு இது மிகவும் பொருத்தமாக இருந்தது என்று சொல்லாம் ஆனால் இந்த காலத்தில் இது ஒரு பெண்ணடிமைப் பாடல் போல இருக்கிறது என்று சொல்லலாம்
திரைப் படம்: பானை பிடித்தவள் பாக்கியசாலி (1958)
பாடியவர்: திருச்சி லோகநாதன்





அந்தகாலப் பாடல்

புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே
தங்கச்சிக் கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
தங்கச்சிக் கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
அரசன் வீட்டு பொண்ணாக இருந்தாலும்
அம்மா
அகந்தை கொள்ளக் கூடாது என்னாளும்
அரசன் வீட்டு பொண்ணாக இருந்தாலும்
அம்மா
அகந்தை கொள்ளக் கூடாது என்னாளும்
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே
தங்கச்சிக் கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
மாமனாரை மாமியாரை மதிக்கனும்
உன்னை மாலையிட்ட கணவரையே துதிக்கனும்
சாமக் கோழி கூவையிலே முழிக்கனும்
குளிச்சி சாணம் தெளித்து கோலம் போட்டு சமையல் வேலை துவக்கனும்
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே
தங்கச்சிக் கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
கண்ணால் பேசும் பயல்கள் முன்னே நில்லாதே
நீ காணாததை கண்டேன் என்று சொல்லாதே
கண்ணால் பேசும் பயல்கள் முன்னே நில்லாதே
நீ காணாததை கண்டேன் என்று சொல்லாதே
இந்த அண்ணே சொல்லும் அமுத வாக்கைத் தள்ளாதே
நம்ம அப்பன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே
தங்கச்சிக் கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
புருசன் உயிரை மீட்டுத் தந்தவ பொண்ணுதான்
ஓடும் பொழுதை அங்கே நில்லுன்னு சொன்னவ பொண்ணுதான்
அரசன் நடுங்க நீதி சொன்னவ பொண்ணுதான்
அவுக ஆஸ்தி கணக்கு சொன்னா கற்பு ஒன்னுதான்
ஆஸ்தி கணக்கு சொன்னா கற்பு ஒன்னுதான்
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே
தங்கச்சிக் கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
தங்கச்சிக் கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
தாலிக் கட்ட போகையிலே தாய் தகப்பன் இல்லையினு
சன்ஜலப்படாதே அம்மா தங்கச்சி
தாலிக் கட்ட போகையிலே தாய் தகப்பன் இல்லையினு
சன்ஜலப்படாதே அம்மா தங்கச்சி
தார வார்க்க நானிருக்கேன்
சீர் கொடுக்க நான் இருக்கேன்


இந்த காலப் பாடல்

புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே
தோழிக் கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
தோழிக் கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
ஏழை வீட்டு பொண்ணாக இருந்தாலும்
அம்மா
அகந்தையை விட்டுவிடக் கூடாது என்னாளும்
ஏழை வீட்டு பொண்ணாக இருந்தாலும்
அம்மா
அகந்தையை விட்டுவிடக் கூடாது என்னாளும்
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே
தோழிக் கண்ணே
மாமனாரை மாமியாரை மிதிக்கனும்
உன்னை மாலையிட்ட கணவரையே உதைக்கனும்
காலையிலே 10 மணிக்கு முழிக்கனும்
லேப்டாப்பை ஆன் செய்து நண்பர்களுக்கு காலை வணக்கம் சொல்லனும்
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே
தோழிக் கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
நல்லவனாக நடிக்கும் பயல்களை நம்பாதே
புரொபைல் பிக்சர்களையும் உண்மை என்று நம்பாதே
உன் ஸ்டேடஸுக்கு லைக் போடும் ஆட்களையும் நம்பாதே
ஜெயலலிதாவை பற்றி மட்டும் தப்பான ஸ்டேடஸ் போட்டு மாட்டிக்காதே
இந்த மதுரைத்தமிழன் சொல்லும் அமுத வாக்கைத் தள்ளாதே
சேலை கட்டி நம்ம அப்பன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே
தோழிக் கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
புருசன் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக வாங்குறவ பொண்ணுதான்
பயந்து ஓடும் கணவனை அங்கே நில்லுன்னு சொன்னவ பொண்ணுதான்
புருஷன் அலற அலற அடிக்கிறவ பொண்ணுதான்
அவுக மண்டைய போட்டா இன்சூரன்ஸ் பணத்தை பெறுபவள் பொண்ணுதான்
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே
தோழிக் கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
தோழிக் கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
கல்யாணம் பண்ணப் போகையிலே தாய் தகப்பன் இல்லையினு
சன்ஜலப்படாதே தோழி கண்ணே
கல்யாணம் பண்ணப் போகையிலே தாய் தகப்பன் இல்லையினு
சன்ஜலப்படாதே தோழிக் கண்ணே
சாட்சி கையெழுத்து போட நானிருக்கேன்
சீர் கொடுக்க நண்பர்கள் இருக்கிறார்கள் தோழி


இதுதான் இந்த காலப் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய ரகசியம். நான் வேற ஏதாவது ரகசியம் சொல்லப் போறேன்னு நினைச்சு இங்க வந்து ஏமாந்து இருந்தா அதற்கு நான் பொறுப்பல்ல

சரி வந்ததுதான் வந்தீங்க எங்க ஊர் தமிழ் பொண்ணு சொன்ன அறிவுரையையும் படித்துவிட்டு போங்க
காயத்ரி வெங்கட் - NJ,யூ.எஸ்.ஏ
17-ஜூன்-201308:09:36 தினமலர்
 1. மனதாலும் எண்ணங்களாலும் தீயதை நினைக்காதது
 2. ஆடம்பரமில்லாத எளிய வாழ்க்கை
3. எதிர்பார்ப்பில்லா உதவிகள் (பண உதவி தான் என்றில்லை, ஷரீர ரீதியிலான உதவி, படிப்பைக் கற்பித்தல், வேண்டுதல்....)
4. ஒருவருடன் ஒருவர் ஒப்புமைப்படுத்தி போட்டி, பொறாமை இல்லாமல் வாழ்தல்
 5. இருப்பதைக் கொண்டு நிறைவுடன் வாழுதல்
 6. பாடல், ஆடல், தோட்டக்கலை, விளையாட்டு என்று பிடித்த விஷயத்தில் கவனம் செலுத்தித் தனித்திறமைகளை வெளிக்கொணர்தல்
7. உறவுகள்/ நண்பர்களது குறைகளைப் பெரிதுபடுத்தாமல் எளிதாக எடுத்துக் கொண்டு மறந்து விடும், மன்னித்து விடும் பக்குவம்
8. நகைச்சுவை உணர்வு- எப்போதும் எந்தச் சூழலிலும் சிடுசிடுவென்று இருக்காமல் தானும் மகிழ்ந்து சுற்றி இருப்பவர்களையும் கலகலப்பூட்டுவது
 9. காதல்- ஒருவரை அழகாக்குவது மகிழ்வாக்குவது. காதலன் - காதலி காதல் தான் என்றில்லை. தந்தை/தாயுடன் காதல், நண்பர்/ நண்பியுடன் காதல் என்று பாசாங்கில்லாத உண்மையான பாசத்தைப் பகிர வேண்டும்.
10. புகைப்படங்கள் எடுப்பது, அதில் இருப்பது, தோற்றத்தில் மாற்றங்களுடன் அழகாக இருப்பது, ஆடையில் அக்கறை, விதிகளையும் வழக்கங்களையும் மாற்றுதல் மகிழ்ச்சிக்குரிய அம்சங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இரவும் வரும் பகலும் வரும், வெற்றி வரும் போது ஓஹோவென ஆடாமல் தோல்வியின் போது துவளாமல் தோல்வி தந்த வலிகளிலிருந்து பாடங்களைக் கற்று மகிழ்வுடன் அடுத்தக் கட்டத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். எதுவும் இல்லை என்று புலம்பாமல் நம்மை விடக் கீழ் இருப்பவர்களைப் பார்த்து சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மால் இயன்ற வரை பிறருக்கு உதவ வேண்டும். பழகும் மக்களிடம் குளிர குளிர அன்பைக் கொட்டித் தர வேண்டும். இவையெல்லாம் சந்தோஷம் கிடைப்பதற்கான வழிகள்.

 
அன்புடன்
மதுரைத்தமிழன

5 comments:

  1. அந்தக் கால அறிவுரையை இப்போ சொன்னா அண்ணனா இருந்தாலும் அடி வாங்கித்தான் ஆகணும்.
    புருஷன் எப்படி இருக்கணும்னு இன்னொரு பாட்டை எடுத்து விடுங்க

    ReplyDelete
  2. // மாமனாரை மாமியாரை மிதிக்கனும்... உன்னை மாலையிட்ட கணவரையே உதைக்கனும்... //

    இப்படி நண்பர்கள் பலரும் பாடுவதுண்டு...! உண்மையோ....? மற்ற வரிகள் கலக்கல்...

    காயத்ரி வெங்கட் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. யோவ் மதுரை தமிழா! நீதிக்கு பேர் போன மதுரையில பொறந்துட்டு இப்படி பொய் பேசலாமா?! உன்னை கல்யாணம் கட்டும் வரை 8 மணிக்கு முன் எழுந்துக்காத நான்!!

    5 மணிக்கு அலாரம் வச்சு, அது அடிக்கும் முன் எழுந்து அதை ஆஃப் பண்ணிட்டு, அப்பார்ட்மெண்ட் வாசல்ல சின்னதா இருந்தாலும் கோலம் போட்டு, நாலு பர்னர் கொண்ட அடுப்புல ஒண்ணுல பால், ஒண்ணுல டிக்காஷன், ஒண்ணுத்துல பருப்பு, இன்னொணுல இட்லின்னு பரபரன்னு 7 மணிக்குலாம் சமைச்சு முடிப்பேன். அதுக்கிடையில கீரைக்காரம்மா, பேப்பர் கார பையன் கேள்விகளுக்கு பதில் சொல்லி, நைட் ஓவரா தண்ணி அடிச்சுட்டான் உன் புருசன் அவனுக்கு தலைவலி எப்படி இருக்குன்னு உன் மொக்கை ஃப்ரெண்டுக்கு பதில் சொல்லி...,

    எவ்வ்ளவுதான் எழுப்பினாலும் போகோ பார்த்துட்டு எழும்ப மனமில்லாம தூங்கும் உன்னை உரிச்சு பொறந்திருக்கும் உன் வாரிசை குளிப்பாட்டி பாலூட்டி யூனிஃபார்ம் போட்டு அது வாயில இட்லியை திணிச்சு.., ஃப்ரைடு இட்லி இல்ல சப்பாத்தி அதுக்கு லஞ்ச் கட்டி வாட்டர் பாட்டில், ஸ்னாக்ஸ் டப்பா, சாக்ஸ்ன்னு ரெடி பண்ணி அதை அனுப்பி...,

    காலுக்கொரு தலைகாணி, கைக்கொரு போர்வை, சைடு வாக்குல ஸ்வெட்டர்ன்னு தூங்கும் உன்னை எழுப்பி பிரஷ்ல பேஸ்ட் வச்சு பாத்ரூம்ல தள்ளி..., சூடா இட்டிலி தக்காளி, வேர்கடலைன்னு ச்ட்னி வச்சு, உனக்கு டப்பாவுல் லஞ்ச் கட்டி கொடுத்து, உனக்கு டை மாட்டி, பெல்ட் எடுத்து கொடுத்து உன்னை ஆஃபீசுக்கு அனுப்பி...,

    அரக்க பரக்க குளிச்சு, கைக்கு கிடைச்சதை சாப்பிட்டு, டப்பாவுல எதோ அள்ளிக்க்கொட்டி.. ஆஃபிசுக்கு போய்.., உன்னைப்போல ஒரு சூமூஞ்சி டேமேஜர்கிட்ட மாட்டி முழி பிதுங்கி......,

    ReplyDelete
  4. ஆஃபீசுல இருந்து கலைஞ்சிருக்கும் வீட்டை கூட்டி..., துணிலாம் மெஷின்ல போட்டு நீ ஜன்னல் மேல வச்சிருக்கும் டீ டம்ப்ளர், டிவி மேல வச்சிருக்கும் டிஃபன் தட்டைலாம் கலெக்ட் பண்ணி கழுவி, துணி காய வெச்சு, உன் பிஏ க்கு பிடிச்ச ப்ளூகலர் சட்டையை மறுநாள் ஆஃபீஸ் போக அயர்ன் பண்ணி, நைட் டின்னருக்கு சாப்பாடு ரெடி பண்ணி, உன் தங்கச்சி வளைகாப்புக்கு உன் வீட்டுக்கு ஆன்லைன்ல பணம் டிரான்ஸ்பர் பண்ணி, போனில் என் வீட்டுக்கு பேசி, பாப்பாக்கு ஹோம் வொர்க் சொல்லி கொடுத்து..., மாவரைச்சு..,
    ஆஃபீஸ் எரிச்சலை வீட்டில் வந்து வள்ன்னு கொட்டும் உன்னை சமாளிச்சு.., டின்னர் சாப்பிட்டு.., கிச்சன் கிளீன் பண்ணி, ஆஃபீஸ் வேலையை பார்த்து.., படுக்க மணி பதினொண்ணு ஆகும். இப்படி வேலை செய்யும் பொண்டாட்டி கட்டியும் எப்ப பாரு பிளாக்குல பொண்ணுங்களை குறை சொல்லுறதே உனக்கு பொழப்பா போச்சு. எவ்வளவுதான் உன் சகோதரிங்க ராஜியும், சசியும் கும்மினாலும் அடங்க மாட்டேங்குறியே!! உன்னை இந்த பூரிக்கட்டையால மொத்துனாதான் சரி வரும் ;-(

    ReplyDelete
  5. பாட்டு நல்லா இருக்கு! :)

    நான் எந்தப் பாட்டை சொன்னேன்னு சொல்ல மாட்டேனே! :)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.