Friday, June 7, 2013





ஜெயலலிதா அவர்களை பார்த்து கேள்வி கேட்கும் சொரணையுள்ள காங்கிரஸ்தொண்டர் ????

இது எனக்கு வந்த இமெயில். இதை எழுதியவர் இது எனது தளத்தில் வெளிவர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதை எனக்கு அனுப்பி இருக்க வேண்டும் என்பதால் இந்த மெயிலை பதிவாக வெளியிடுகிறேன் அவர் இந்த மெயிலை சி. எம் செல் விகடன் திணமணி மற்றும் பல எம் ஏல் களுக்கும் அனுப்பி இருக்கிறார். அவரது ஆசை நிறைவேறவே இதை வெளியிடுகிறேன். இதை காங்கிரஸ் தொண்டன் எழுதி இருக்க முடியாது என நான் உறுதியாக நினைக்கிறேன்.  இந்த கடிதத்தை நீங்கள் கூர்ந்து படித்து பாருங்கள் இதை எந்த கட்சிகாரகள் எழுதி அனுப்பி இருக்கலாம் என நீங்கள் யூகிப்பதை  முடிந்தால் பின்னுட்டத்தில் சொல்லவும்.



பெறுனர்
செல்வி ஜெ. ஜெயலலிதா
மாண்புமிகு முதல்வர் (அரசியலில் வேறுபட்டாலும் உயரிய பதிவிகளுக்கு மரியாதை வைக்க தெரிந்தவன்தான் காங்கிரஸ்காரன்)

மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாக்கு,

மானமுள்ள காங்கிரஸ்காரன் என்ற முறையில் வெளிப்படையாக  ஒரு கடிதம். வீரமுள்ள அண்ணன் .வி.கே.எஸ் இளங்கோவன் வழியில் வந்த காங்கிரஸ் நிர்வாகிகள் என்ற முறையில் உங்களுக்கு பதிலடி கொடுக்க கடமைப்பட்டுள்ள்ளோம்.

நேற்று வந்த செய்தியில் முதல்வர் மாநாட்டை புறக்கணிப்பதாக வந்துள்ளது. அந்த மாநாட்டில் உங்கள் கருத்தை பதிவு செய்ய அமைச்சர் கே.பி. முனுசாமியும் (இவர் அடுத்த டம்மி முதல்வரா என்ற கேள்வி மனதில் வருகிறது),  தலைமை செயலர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணனும், காவல்துறை இயக்குனர் திரு கே. ராமானுஜமும் டில்லி பயணம் செய்கிறார்கள் என்பதை அறிந்தோம். நீங்கள் சொன்ன காரணம் இந்த மாநாடு ஒரு சம்பிரதாயம் ஆகி விட்டது என்று காரணம் சொன்னீர்கள். எப்பவும் போல் உங்கள் குறைகளை மறைக்க மத்திய அரசை குறை சொல்லி நீளமான அறிக்கைகள்.

மத்திய அரசை குறை சொல்லும் உங்கள் நடவடிக்கை குறித்து பார்க்கலாமா?

1. சட்டசபையில் மான்ய கோரிக்கைகள் விவாதம் நடத்தி முடிவு எடுக்க வேண்டிய விவகாரங்களை 110 விதியின் படி அறிவிப்பு செய்வது ஏன்? நீங்கள் எந்த ஜனநாயகத்தை மதிக்க செய்கிறீர்கள்? எதிர்க்கட்சிகளுடன் விவாதம் செய்யாமல் அரசு முடிவி எடுப்பதற்கு பெயர் ஜனநாயகமா?

2. ஒரு முதல்வர் வரும்போது, மந்திரிகள் எழுந்து நிற்க வேண்டும் என்பது மரபு. ஆனால் நீங்கள் தலைமை செயலகம் வரும்போதும் பணி முடிந்து உங்கள் இல்லம் திரும்பி போகும்போதும் தமிழக மந்திரிகள், கோவிலில் தேங்காய் உடைத்தால் பொறுக்கும் கூட்டம் போல அடித்து பிடித்து வரிசையில் நிற்கிறார்கள் என பல பத்திரிகைகளில் புகைப்படத்துடன் வந்துள்ளது. இதில் வருத்தத்துக்கு உரியது பொது மக்களிடம் ஓரளவு நல்ல பெயர் எடுத்த மேயர் சைதை துரைசாமியும் சேர்ந்து கொண்டதுதான். இது என்ன சட்டசபை நாகரிகமா? இல்லை தமிழர்களின் நாகரிகமா?

3. எதிர்க்கட்சி தலைவரை பற்றி மிக மலிவான விமர்சனங்களை உங்கள் கட்சி உறுப்பினர்கள் வைப்பது ஏன்? ஆளுங்கட்சியை சேர்ந்த திரு விஜய பாஸ்கர் எம்.எல்.  எதிர்க்கட்சி தலைவரை மிக மலிவான வார்த்தைகளில் "கறுப்பு வாத்து" என்று ஒரு குட்டி கதையில் தாக்கினார். நீங்களும் திருச்சியில் ஒரு மேடையில் ஒரு குட்டி கதை சொல்லி விஜயகாந்தின் எண்ணமும் அவரைப்போலவே கறுப்பு என்று சொன்னீர்கள். கறுப்பாக இருந்தால் கேவலமா? உங்களுக்கு ஓட்டு போடும் தமிழர்களில் 90 சதவீதம் கறுப்புதானே, இதை சொன்ன சட்டமன்ற உறுப்பினர் டாகடர் . விஜயபாஸ்கர் உட்பட. திரு கடம்பூர் ராஜு என்ற உறுப்பினர் திமுக தலைவரை "குஷ்பு" கூட இணைத்து மட்டமாக பேசினார். பொது மேடையில் எப்படி வேண்டுமானாலும் அடித்துக்கொள்ளலாம். ஆனால் சட்டசபையில் இப்படி கேவலமாக பேசுவது ஏன்? இதை அனுமதிப்பது யார்? அடிப்படை நாகரிகமே தெரியாத நீங்கள் மத்திய அரசை குறை சொல்வது மகா கேவலம்? எதிர்க்கட்சி தலைவர் மீது ஆயிரம் குறை இருக்கலாம் ஆனால் திமுக பேச்சாளர்கள் போலவும், உங்கள் கட்சி ஆட்கள் போலவும் இரட்டை அர்த்தங்களில் பேசுவது இல்லை. விஜயகாந்த் உங்கள் கட்சியை விடவும், திமுகவை விடமும் எவ்வளவோ பரவாயில்லை.

4. எப்பவும் சந்தனம் வைக்கும் இடத்தில் சாணி வைத்து அழகு பார்க்கும் பழக்கம் உங்களுக்கு உண்டு. கருணா நிதி குடுமபத்தை திட்டினார் என்ற காரணத்துக்காக எஸ்.எஸ். சந்திரனுக்கு ராஜ்யசபா பதவி. அவர் பேசுவதை கேட்டால் காது கூசும். அவர் உங்களையும் ஒரு காலத்தில் அப்படி பேசினவர்தான். இருந்தாலும் கருணாநிதி குடும்பத்தை கடுமையாக ஏசுவார் என்ற ஒரே காரணத்துக்கு மிக உயர்வான ராஜ்ய சபா பதவியை கொடுத்த நீங்கள் அரசியல் நாகரிகம் குறித்து பேச அருகதை இல்லாத ருவர்.

5. சமீபத்தில் மாநில அளவில் ..எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு விவகாரத்தில் "மத்திய அரசின் முடிவை அரை வேக்காட்டுத்தனம்" என்று கடுமையாக சாடினீர்கள். ஆனால் உங்கள் அறிக்கைதான் அரை வேக்காட்டுத்தனம் என்பதை புதிய தலைமுறை டிவியில் இது சம்பந்தமாக நடந்த விவாதத்தில் உங்கள் கட்சியை சேர்ந்த ஆவடி குமார் சொதப்பிய சந்தர்ப்பத்தில் பொது மக்கள் புரிந்து கொண்டார்கள். முன்னாள் ..எஸ் அதிகாரி சிவகாமி ..எஸ் (விருப்ப ஓய்வு) கச்சிதமாக அழகாக விளக்கி மத்திய அரசின் முடிவை சரி என்று சொன்னார். சிவகாமி ..எஸ் எங்கள் கட்சியை சேர்ந்தவரில்லை. எங்களை ஆதரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. முதலில் ஒழுங்காக விவாதம் செய்ய தெரிந்த ஆட்களை பொது மேடைக்கு அனுப்பி விட்டு அடுத்தவர்களை "அரை வேக்காடு" என்று குற்றம் சொல்லுங்கள். தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட வீடியோவை பார்த்து யார் அரை வேக்காடு என்று முடிவு செய்து கொள்ளவும்.

6. பெயர் சொல்ல விருப்பமில்லை, ஆனால் உங்கள் கட்சியில் உள்ள மிக மூத்த்த்த பிரமுகர் சொன்ன விளக்கம் என்ன தெரியுமா? திருமணம் ஆகாத ஆண்களுக்கு மென்மை, பாசம் பொங்கும், திருமணம் ஆகாத பெண்களுக்கு ஆங்காரம் கூடும் என்ற கருத்தை சொல்லி எடுத்துக்காட்டும் சொன்னார். எங்கள் எதிர்க்கட்சி என்றாலும், மாற்று கருத்து உள்ளவர் என்றாலும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நாகரீகம் அரசியலில் உள்ளவர்களுக்கு தெரியும். திருமணமே செய்யாத முன்னாள் ஜனாதிபதி அவர்களின் குழந்தை தனம் இன்னொரு எடுத்துக்காட்டு. எங்கள் பெருந்தலைவர் காமராஜரின் பெருந்தன்மை மற்றொரு எடுத்துக்காட்டு. ஆனால் திருமணம் ஆகாமல் அரசியலில் உள்ள மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானெர்ஜி, முன்னாள் உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி, பா..கவை சேர்ந்த உமா பாரதி முதல் உங்களையும் கவனித்தால் ஒன்று விளங்கும் என்று விளக்கம் சொன்னார். வெறும் கூச்சல், வீண் ஆங்காரம், வறட்டு கவுரவம் என்பது உங்கள் நடவடிக்கைகளில் புலப்படும் காணப்படும் ஒற்றுமை என்று சொன்னார். அடுத்தவர்களை சதா குற்றம் சொல்வதுதான் உங்களைப்போன்றவர்களுக்கு வேலை. எம்.ஜி.ஆர் காலம் முதல் அபாண்ட குற்றசாட்டுகளை அடிப்படையாக வைத்துதானே உங்கள் அரசியல் வளர்ச்சி இருந்தது.

7. என்ன நீங்கள் மட்டும்தான் இந்தியாவில் பெரிய மாநில முதல்வரா? காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதல்வர்களை விட்டுத்தள்ளுவோம். பெரிய மாநிலமான பீகாரில் பா.. கூட்டணி ஆட்சி செய்கிறது. பெரிய மாநிலமான மத்திய பிரதேசத்தில் பா.. ஆட்சி செய்கிறது. ஆனால் உங்கள் அளவுக்கு மத்திய அரசை குறை சொல்வது இல்லையே. காங்கிரஸ் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணிக்க செய்கிறது என்றால் குஜராத் வளர்ந்து இருக்க முடியாது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லும் நோக்கமே உங்கள் குறைகளை மறைக்கும் நாடகம். மின்வெட்டை கையாள தெரியாமல் வைகோவை விட்டு மாணவர்கள் போராட்டம் என்று நாடகம் நடத்தி கடந்த மூன்று மாத வெயில் காலத்தை சமாளித்தது மக்களுக்கு தெரியாதா? டாக்டர் ராமதாசின் மது ஒழிப்பு பிரச்சாரம் பிரபலம் ஆனவுடன் வைகோவிடம் பேசி போட்டி மது ஒழிப்பு இயக்கம் ஆரம்பித்து விட்டது என்று சதி திட்டங்களை நிறைவேற்றுவதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை. இப்படி சதி திட்டங்களை நிறைவேற்றும் நேரத்தில் மக்கள் பணிக்கு செலவிட்டால் நாங்கள் தடுக்கிறோமா?

8. எங்கள் அன்னை சோனியாவும் பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்க் அவர்களும் சாதனை நிகழ்த்தி இந்திய அளவில் இரண்டாம் முறை ஆட்சி பிடித்தவர்கள். உங்கள் அரசியல் வாழ்வில் சாதனை நிகழ்த்தி ஆட்சி பிடித்ததுண்டா? 1991 ஆம் ஆண்டில் எங்கள் தலைவர் ராஜீவ் காந்தியின் மரணத்தில் அனுதாப அலையில் வெற்றி. 2011 ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணா நிதி குடும்பத்தின் மீதுள்ள வெறுப்பில் உங்கள் கட்சிக்கு வெற்றி. எந்த தேர்தலிலாவது சாதனைகளை முன் வைத்து நீங்கள் வெற்றி பெற்றதுண்டா?

9. சென்னையில் குப்பைகள் தேங்கி இருப்பதற்கு மத்திய அரசுதான் காரணமா?திமுக தலைவர் கலைஞர் கருணா நிதி சொன்னது போல், கடந்த மே மாதத்தில் 50 கொலைகள் தமிழகத்தில் நடந்ததுக்கு மத்திய அரசுதான் காரணமா?டாஸ்மாக் கடையில் 20% வருமானம் குறைந்ததற்கு மத்திய அரசு காரணமா?

எங்கள் அண்ணன் கைகள் மேலிட கட்டளையால் கட்டப்பட்டுள்ளது. எங்கள் அண்ணன் களம் இறங்கினால் திராவிட கட்சிகளுக்கு இணையாக சூடாக பதில் கொடுக்கும் திறமை படைத்தவர். எங்கள் அண்ணன் தலைவர் ஞானதேசிகன், மத்திய அமைச்சர் சிதம்பரம், ஜி.கே வாசன்  போல சகித்துக்கொள்ள மாட்டார். எங்களுக்கும் அதிரடி அரசியல் தெரியும். வீணாக அன்னை சோனியா வழி காட்டுதலில், டாக்டர் மன்மோகன் தலைமையில் நடக்கும் மத்திய அரசை சீண்ட வேண்டாம். மத்திய அரசை குறை சொல்வதை நிறுத்தி விட்டு உங்களை நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு நல்ல ஆட்சியை கொடுக்க பார்க்கவும்.

இங்கனம்

அண்ணன் .வி.கே.இளங்கோவன்
வழி செல்லும் காங்கிரஸ் நிர்வாகிகள்

பிரதிகள்:

1. திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் ..எஸ்
தலைமை செயலர்
2. திரு கே. ராமனுஜம் .பி.எஸ்
காவல்துறை இயக்குனர்
3. திரு விஜயகாந்த்
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர்
3. திரு பண்ருட்டி ராமசந்திரன்
மாண்புமிகு எதிர்க்கட்சி துணை தலைவர்
4. திரு சந்திரகுமார்
கொறடா, தே.தி.மு.
5. எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்
6. தமிழக பத்திரிகை நண்பர்கள்

====================================





4 comments:

  1. எனக்கு ஒண்ணுமே புரியலை.., கண்ணைகட்டி காட்டில் விட்ட மாதிரி இருக்கு

    ReplyDelete
    Replies
    1. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் காங்கிரஸ் கட்சி அடக்கிதான் வாசித்து கொண்டிருக்கின்றன அதனால் அந்த கட்சியை சார்ந்தவர்கள் ஜெயலலிதாவைப் பற்றி இப்போது இப்படி கேள்வி கேட்கமாட்டார்கள் எங்கே காங்கிரஸ் கட்சி ஒரு வேளை அவர்களுடன் சேர்ந்தாலும் சேர்ந்து விடுமோ என்று நினைக்கும் மற்ற கட்சிகள்தான் இதை காங்கிரஸ் பேரில் இதை எனக்கு எழுதி அனுப்பி இருக்க கூடும்.. இப்படி யோசிச்சு பாருங்க உங்களுக்கு எந்த கட்சி செய்து இருக்கும் என்ற உண்மை புலப்படும்


      காங்கிரஸ் அதிமுகவுடன் சேர்ந்தால் மற்ற கட்சிகளை அதிமுக தூக்கி ஏறிந்து விடும் என்று நினைத்து இதை எழுதி இருக்கலாம் அல்லது காகாங்கிரஸ் அதிமுகவுடன் சேர்ந்தால் நாம் அந்த கூட்டணியில் இருக்க முடியாது என நினைக்கும் கட்சி ஆட்கள் இதை எழுதி இருக்கலாம் அல்லவா இப்ப யோசிங்க சகோ

      Delete
  2. ஒவ்வொரு பாயிண்ட்'ம் ஒவ்வொரு கட்சி சொன்னதுமாதிரி இருக்கு.

    ReplyDelete
  3. ம்.... நல்லாத்தான் கேள்வி கேட்டு இருக்காரு! :)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.