Sunday, June 23, 2013



சென்னையில் நடக்கும்  விபரீதங்களும் ஸ்ரீரங்கத்தில் பட்டாச்சாரிகள் மீது ஜெயலலிதா கொண்ட கோபமும்

பேஸ்புக்கில் நான் ஃப்லோ செய்யும் செங்க்கோட்டை ஸ்ரீராம் எழுதிய கட்டுரை இது. அவரின் அனுமதியுடன் இங்கு பதிவிடப்படுகிறது. அனுமதி அளித்த ஸ்ரீராம் அவர்களுக்கு எனது மனம் மார்ந்த நன்றி https://www.facebook.com/senkottaisriram இதை நான் வெளியிடக் காரணம்  பிற மதங்களில் நடக்கும் தவறுகளையே சுட்டிகாட்டிக் பதிவுலகில் பேஸ்புக்கில் விவாவதம் நடத்துபவர்கள் மத்தியில் தன் மதத்தில் நடக்கும் வீபரிதத்தை உண்மையாகவும் வெளிப்படையாக சொல்லும் இவரின் மனநிலை எனக்கு பிடித்ததால் தான்



சென்னையில் இப்போதெல்லாம் ஒரு விபரீதத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!

வர்த்தக நகர்! வர்த்தக வளாகங்கள், கடைகள் அவ்வப்போது புதிதாய் முளைக்கின்றன. அதிகாலை நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் ஹோமத்துக்கான திரவியங்களோடு, சில பல வைதீகர்கள் நாய்களின் குரைத்தலையும் பொருட்படுத்தாமல் அல்லது பயத்தில் உறைந்தபடி.. செல்வதைப் பார்த்திருக்கிறேன். அப்படியே சில ஹோமங்களில் கலந்து கொண்டு இவர்கள் அடிக்கும் கூத்துகளையும் பார்த்து வருகிறேன்.

காசு ஆசை யாரை விட்டது!? யாகம் செய்யும் கர்த்தாவை மகிழ்விப்பது ஒன்றே யாகத்தின் பிரதான நோக்கமாம்! அது சாஸ்த்ரமாம். கர்த்தா எப்படிப்பட்டவராக இருந்தாலும் சரி..! எந்த நிலையில் எந்தக் கோலத்தில் இருப்பவராக இருந்தாலும் சரி! (மேற்கொண்டு விவரிக்க இயலவில்லை..!) அந்த கர்த்தாவை ஆசனத்தில் அமர வைத்து, அவர் கையிலேயே தர்ப்பையைக் கொடுத்து, சங்கல்பம் என்ற பெயரில் ஏதேதோ சொல்லி, அவர் கையிலேயே பூவைக் கொடுத்து, மஞ்சள் பிள்ளையாருக்கு போடச் சொல்லி, மணி அடிக்கச் சொல்லி, (இதெல்லாம் பரவாயில்லை... ஓரளவுக்கு ஏற்கலாம்) அடுத்து உடனேயே ஹோம குண்டத்தில் கற்பூரத்தைக் கொளுத்திப் போட்டு, நாலு சுள்ளிகளைப் போட்டு, மூல மந்திரத்தை 108 ஆவர்த்தி என்ற பெயரில் நாலு பசங்களைக் கூட வைத்துக் கொண்டு ஆளுக்கு 28 சொல்லுங்கடான்னு கணக்கு வைத்துக் கொண்டு, அவர்கள் மூலமந்திரம் சொல்லச் சொல்ல, இங்கே கர்த்தாவே அக்னியில் ஹோம திரவியத்தை நேரடியாகச் சேர்க்கச் செய்கிறார்கள்...!!!
 
இது அடுத்த சில வருடங்களில் எங்கே போய் முடியுமோ?! சட்டம் படித்தவன் சட்டத்தை மீறுகிறான்! வன்முறையில் இறங்குகிறான். வேதம் படித்தவன் விதி விலக்குகளைத்தான் முதலில் கையாள்கிறான்...!!! சாஸ்திரத்தில் எங்காவது ஓட்டை இருக்கிறதா, பிராயச் சித்தம் இருக்கிறதா என்று தேடுகிறான்.

ஒருமுறை இப்படி ஒரு ஹோமத்தில் பார்த்துக் கொண்டிருந்தபோது, காலை 5 மணிக்கு வந்து 5.15க்குள் மண்டலம் அமைத்து, 5.40க்குள் கர்த்தாவே நேரடியாக ஹோம குண்டத்தில் சுள்ளிகளைப் போடத் தொடங்கிவிட்டார்.மெதுவாக என்ன ஸ்வாமி ஜயாதி ஹோமம் ஆயிடுத்தான்னு கேட்டேன்! ஒரு முறை முறைத்தார். எல்லாம் ஆயிடுத்துன்னார்! பூர்வ பாகம்னேன்! முடிஞ்சாச்சே! நீர் கவனிக்கலையான்னார்~...வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை!


ஸ்ரீரங்கத்துக்கு முதல்வர் ஜெயலலிதா சில மாதங்களுக்கு முன் வந்தார். வழக்கமான இரண்டு பட்டாச்சாரியர்கள் (பெயர் சொல்ல விரும்பவில்லை) பூரண கும்ப மரியாதை கொடுத்தார்கள். அவர்களிடம் ஸ்ரீசூக்தம் சொல்லச் சொன்னார் முதல்வர். அவர்கள் விழித்தார்கள். அம்மையாருக்கு கோபம்! உங்களை யார் இங்கே நியமித்தது? என்று! நாங்கள் பரம்பரை ஸ்தானீகர்கள் என்றார்கள் அவர்கள்! அப்படி என்றால் ஸ்ரீசூக்தம் கூட தெரியாமல் உங்களை எப்படி நியமித்தார்கள் என்றார். விஷயம் அங்கிருந்த பெரியவரிடம் போனது. அவர் சொன்னார்.. இவர்கள் பெருமாள் திருவடி கைங்கர்யம் செய்பவர்கள். இவர்களுக்கு அது தெரிந்திருக்க வேண்டிய கட்டாயமில்லை! அதெல்லாம் சந்நிதிக்கு வெளியே இருக்கும் கோஷ்டியில் சொல்வார்கள், அல்லது அதற்கு தனியாக வேறு சிலர் இருப்பார்கள் என்றார். விஷயம் அத்தோடு முடிந்துபோனது.

இதெல்லாம் எதற்காக என்றால்... எந்தத் தொழிலுக்குப் போனாலும், ஒன்று முழுதாகப் படித்திருக்க வேண்டும், அல்லது அனுபவத்தாலாவது படிக்க வேண்டும், அல்லது அந்தத் தொழிலுக்குப் போன பின்னாவது தன்னை அதற்குத் தகுதியுள்ளவர் ஆக்கிக் கொள்ள வேண்டும்..! இவை எதுவும் இல்லாமல் வைதீகத்துக்கு வந்துவிடுபவர்களால் தர்மம் குலைகிறது! சாஸ்திரக் கலப்பு; சாஸ்திரக் குழப்பம் ஏற்படுகிறது! நோக்கம் போல் எதையாவது சொல்லிவிட்டுச் செல்பவர்களால் சனாதன தர்மத்துக்கு குறைவுதான் ஏற்படுகிறது.

இன்னோர் அதிர்ச்சிச் செய்தியும் அடியேன் காதில் விழுந்தது.
திருவரங்கம் பெரிய கோவிலில் இந்த முறை கடும் தண்ணீர்ப் பஞ்சம். நந்த வனம் தொடங்கி நீர் இன்மையால் நொந்த மனம் அதிகம். கோயிலில் பக்தர்கள் சிலர் கேட்டார்கள். செயலில் ஊக்கம் கொண்டிருக்க வேண்டிய செயல் அதிகாரி உறக்கம் கொண்டு, நன்கொடையாளரைப் பிடித்து வாருங்கள் என அன்புக் கட்டளை இட்டார். இதனை சிரமேற்கொண்ட சிலர், பணம் திரட்டி ஆழ்துளை பம்பு போட்டார்கள்.

ஆச்சு... கோயில் மடப்பள்ளியும் வறட்சி கண்டது. மடப்பள்ளி கிணற்றில் நீர் இல்லை! வற்றிய கிணற்றில் ஆழ்துளைபோட எண்ணினார்கள். பிளாஸ்டிக் பம்பு ஆயிற்றே! பெருமாள் தளிகைக்கு ஏற்க முடியாதே என்று உதடு பிதுக்கினார்கள் சில பௌராணிகர்கள் (பழைமைவாதிகள்).

இந்த நேரத்தில் ஒருவர் மடப்பள்ளி பக்கம் சென்றார். மடப்பள்ளிக்குள் யாரையும் நுழைய விட மாட்டார்களே! வேறு வழியின்றி உள்ளே விட்டார்கள். மடப்பள்ளி சுவர் ஓரங்களில் ஆங்காங்கே பான் மசாலா பாக்கு சுவைத்து துப்பிய கறைகள் தெரிந்துள்ளன. அது இருக்கும் லட்சணம் கண்டு தலைசுற்றி மயக்கம் வராத குறையாக வெளியே வந்தார் அந்த நபர்.இப்படி எல்லாம் மடப்பள்ளியை வைத்திருந்தால், அரங்கன் கோயில் எப்படி தெய்வீகத்துடன், சாந்நியத்துடன் திகழும்.!?அதுதான் வேண்டிக் கொண்டது நடக்கவில்லையோ? ஹே அரங்கநாதா? எப்போது மாறும் இந்நிலைமை?!இப்போது எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது, வடக்கே பீகாரில் இப்படித்தான் சுவர் ஓரங்களில் காறித்துப்புகிறவர், பான் மசாலா பாக்கு போட்டு துப்புகிறவர்கள் சுவர்களை அலங்கோலம் செய்யாமல் இருக்க, டைல்ஸ் பதிக்கப்பட்ட ஹனுமான் உருவத்தை சுவர் ஓரங்களில் பதித்து விட்டிருக்கிறார்கள்!

ஒழுக்கம் பேண வேண்டியவர்கள் இப்படி எல்லாம் இருந்தால், பிறகு இந்தக் காலத்தைப் பற்றிச் சொல்வானேன்! அண்மையில்... மயிலையில் ஒரு (அரைகுறை) வைதீகரின் பையனுக்கு பெண் பார்த்தார்கள். அந்தப் பையனுக்கு வைதீகம் தெரியாது என்றாலும், நீண்ட தேடலுக்குப் பின்னர் ஒரு பெண் அமைந்தார். நிச்சயமும் செய்தார்கள். திடீரென ஒரு நாள் அந்தப் பெண் நட்பு வட்டாரங்களுடன் அமர்ந்து அசைவம் உண்பதை பையன் பார்த்தான்! அதிர்ச்சி அடைந்தவன், நேராக அம்மாவிடம் சென்று அழுதான். திருமணம் வேண்டாம் என்றான். இப்போது அது தொங்கலில்!

ஏன் இந்தப் பண்பாட்டுச் சீரழிவு வைதீகக் குடும்பங்களில்!?
இன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கிறது. இருந்தாலும் ஓரிரண்டைப் பதிவு செய்தேன்.
இந்த இடத்தில், படித்த ஒரு சுவையான விவரத்தைப் பதிவு செய்ய வேண்டும்.!
வைதிக தர்ம வர்த்தனீ 1965ம் ஆண்டு இதழ் ஒன்றில், ஹாஸ்யம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்த சிறிய துணுக்கு இது....
=====
சமயோசித புத்தி
-----
ஆறு பூனை அல்லவா வரவேண்டும்?
ஒருவர் சிராத்தம் செய்து 6 பிண்டங்களை வைத்துப் பிண்ட பூஜை நடந்தது. அவர் செல்லமாக வளர்த்து வந்த பூனை அடக்கமாகப் பிண்டத்தினருகே அமர்ந்திருந்தது. அது திடீரெனப் பாய்ந்து ஒரு பிண்டத்தைப் புஜித்து விட்டது.கர்த்தா பரம துக்கத்துடன் கேட்டார்... வாத்யாரே என்ன செய்வது? சிராத்தம் நஷ்டமா? மறுபடியும் சிராத்தம் செய்ய வேண்டுமா? என்றார்.

சமயோசித புத்தியுள்ள வாத்தியார் கூறினார்... ஐயா தாங்கள் சிரத்தையுடன் சிராத்தம் செய்யப் பிண்டத்த்ம் வைத்தீர்களல்லவா? அதனால் சந்தோஷமடைந்த பித்ருக்கள் நேரில் வந்து பிண்டத்தை சாப்பிட்டார்கள். ஆதலால் சிராத்தம் நஷ்டமில்லை! மறுபடி செய்ய வேண்டாம்
கர்த்தா: அப்படி சாஸ்திரமிருக்கிறதோ?
வாத்யார்: சாஸ்த்ரமா? வேதமே கூறுகிறதே! சாஸ்த்ரம் வேறு வேண்டுமா?
ஷண்மார்ஜாலீயே ஜுஹோதி ஷட்வாரிதவ:
ரிதவ: கலுவை தேவா: பிதர:|| என்கிறதே வேதம்!
இதைக் கேட்ட கர்த்தா சந்தோஷம் அடைந்தார். வாத்யார் இப்படி வேதம் அறியாத கர்த்தாவை ஏமாற்றியது, பிரும்மாவாக இருந்த சாஸ்திரிகளுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர், வாத்யாரே.. ஆனால் ஆறு பிண்டங்களை ஆறு பூனைகள் அல்லவோ வந்து புஜிக்க வேண்டும். ஒரு பிண்டத்தை ஒரு பூனை தானே புஜித்தது?! என்றார்.
வாத்யார்: ஓய். உமக்குத் தெரிந்த லட்சணம் இவ்வளவுதானா? இது அப்பா சிராத்தம் அல்லவா? அவர்தானே முக்கியம் இதில்?!
பிரும்மா: அதுசரி.. மற்றவர் சிராத்தத்தில் இப்படி பூனை வருவதுமில்லையே! புஜிப்பதும் இல்லையே!
வாத்யார்: கர்த்தாவுக்கு பூனையிடமும் பிதாவிடமும் அபரிமிதமான அன்பு. அதனால்தான் பிதா பூனையாக வந்தார்.புஜித்தார். உமக்கு சூட்சும தர்மம் தெரியாது!
இப்படி வாத்யார் கூறியதைக் கேட்டு விஷயம் தெரியாத கர்த்தா படு சந்தோஷப் பட்டார்.

-----
இந்தத் துணுக்கில் சொன்ன ஷண்மார்ஜாலீயே என்றதில், மார்ஜாலம் என்பதன் பொருள் பூனை என்பது. மார்ஜாலீயம் என்பது யாகத்தில் ஒரு இடத்துக்குப் பெயர். இவை இரண்டையும் போட்டுக் குழப்பி வாத்யார் எப்படி ஏமாற்றினார் என்பது தெர்கிறது.
சிராத்த காலத்தில் பூனை வரக்கூடாது. அவ்வளவு ஏன்..? பூனையை வைத்துக் கொண்டு, பூனைக்கு எதிரே அமர்ந்து நாம் உணவு உண்ணக் கூடாது என்கிறது சாஸ்திரம்,
ஆனால், லௌகீகத்துக்கு மாறிவிட்ட பிராமணக் குடும்பங்களில் இன்று பூனையும் நாயும் வளர்ப்பு பிராணிகள். இதுபோன்ற வளர்ப்பு பிராணிகளை வீடுகளில் வளர்ப்பதற்கு சாஸ்திரம் தடை விதிக்கிறது. ஆனால், நாம்தான் சட்டத்தை மீறுபவர்களாயிற்றே! உலகாயதப் படிப்பு ஏறிவிட்டால்... சட்டமாவது.. ஒண்ணாவது?!
நாய்க்காக உருகுவது, பூனைக்காக மருகுவது இதை எல்லாம் பிராமணக் குடும்பங்கள் விட்டுவிட்டு, இயல்பான, தர்மசாஸ்திரத்துக்குட்பட்ட நல்ல வாழ்க்கையை வாழப் பழக வேண்டும்! அப்போதுதான் இயற்கைப் பேரழிவுகள், சீரழிவுகள், வறட்சி இல்லாமல், சுபிட்ச மழை இருக்கும். லோக க்ஷேமம் வஹாம்யஹம் என்பதற்கு அர்த்தம் இருக்கும்!


அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. காலம் பல விஷயங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்து விடுகிறது. அதில் ஒரு சீர்கேடுதான் வைதீகர்கள் பான் பராக் போடுவதும், ரகசியமாக தம் +மது உபயோகிப்பதும். என்னத்தச் சொல்ல! இவை தவிர மந்திரங்களிலும் கூட ஏமாற்றுதல் நடைபெறுகிறது என்று தெரிந்ததில் மிக அதிர்ச்சி ஏற்பட்டது! நல்லதொரு விழிப்புணர்வுக் கட்டுரை தந்ததற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தலைப்பை தந்தது மட்டும் நான் ஆனால் தனது கட்டுரையை பதிவிட அனுமதி அளித்த ஸ்ரீராமுக்குதான் நாம் நன்றி சொல்ல வேண்டும்

      Delete
  2. அது சரி. அவர்களை ஶ்ரீசுக்தம் சொல்லச் சொல்ல ஜயலலிதாவிற்கு என்ன தகுதி இருக்கிறது? கூத்தாடிதானெ அவர்?

    செங்கோட்டை ஶ்ரீராம் திருமண்/ஶ்ரீசூர்ணம் போட்டிருந்தால் மட்டும் பிராமணராகி விடுவாரா? அவர் தர்ப்பக் கட்டை எடுத்த்க் கொண்டு போக வேண்டியது தானே?

    ReplyDelete
  3. விதி மீறல் தான் எங்கும்http://swthiumkavithaium.blogspot.com/

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.