உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, April 19, 2013

ஜெயலலிதா தமிழக மக்களின் அம்மாவா அல்லது மாமியாரா?ஜெயலலிதா தமிழக மக்களின் அம்மாவா அல்லது மாமியாரா?

தமிழக மக்கள் ஜெயலலிதாவை அம்மாவாக ஏற்றுக் கொள்கிறார்கள் அப்படி அழைக்ககூட அவர்கள் தயங்குவதில்லை ஆனால் ஜெயலலிதா அவர்கள் தமிழக மக்களின் உண்மையான அம்மாவாக மாறத் தயாரா? அல்லது சினிமாவில் நடிக்கும் அம்மாக்கள் மாதிரிதான் நானும் என்று தைரியமாக சொல்வாரா?

உண்மையான அம்மா என்றால் பிள்ளைகளின் நலன் காப்பதுதான் அது போல தமிழக மக்களின் நலன் காப்பாரா?
இதை இங்கு கேட்க காரணம் உங்களுக்கு தமிழக மக்களிடம் இருந்து ஆயிரம் கடிதங்கள் தினசரி வரலாம் அதில் 2 அல்லது மூன்று கடிதங்களையாவது எடுத்து படித்து அதில் அவர்கள் சொல்லும் கருத்துகளுக்கு ஏற்ற நல்ல நடவடிக்கைகள் எடுக்க உங்களால் முடியவில்லையா என்ன? மக்கள் உங்களுக்கு எழுதும் கடிதங்களை படிக்க சில நிமிஷங்கள் கூட ஆகாது என்பது படித்த உங்களுக்கு புரியாதா என்ன? நீங்கள் இந்த குறைகளுக்கு செவிசாய்த்து நடவடிக்கைகள் எடுத்தால் நீங்கள் மறைந்தாலும் உங்கள் புகழ்பாடி உங்களை வாழ்த்தி கொண்டிருப்பார்கள் இந்த தமிழ் மக்கள்.இப்படிதான் புரட்சி தலைவர் எம்ஜியார் நல்லது செய்துவிட்டு சென்றதால் இன்னும் அவரை மக்கள் வாழ்த்தி  வணங்குவதோடு அதற்கு நன்றி கடனாக உங்களை அவரது வாரிசாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அது மாதிரி உங்களால் செய்ய முடியமா?

இந்த வாரம் எனக்கு வந்த பல கடிதங்களில் சிலவற்றை பொதுமக்களின் பார்வைக்காக இங்கே வெளியிடுகிறேன். இந்த கடிதங்கள் சி எம் செல்லுக்கும் பிரபல தமிழ் தினசரி மற்றும் வார இதழ்களுக்கும் எனது வலைதளத்திற்கும் அனுப்பபட்டுள்ளது..கடிதங்களை எடிட் ஏதும் செய்யாமல் இங்கு வெளியிட்டு இருக்கிறேன்.

அன்புடன்
மதுரைத்தமிழன்ஓமலூர் பொது மக்கள் சார்பில் குறை தீர்க்க முதல்வருக்கு கடிதம்


தேதி: ஏப்ரல் 17, 2013

அனுப்புனர்
ஓமலூர் பேரூராட்சி பொது மக்கள்
சேலம் மாவட்டம்

பெறுதல்
முதல்வர் தனிப்பிரிவு
முதல்வர் அலுவலகம்
தலைமை செயலகம், சென்னை

மாண்புமிகு அம்மா அவர்களின் கவனத்துக்கு,
மற்றும்
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு

கருத்து: ஓமலூர் பொது மக்கள் கோரிக்கை - மாவட்ட மந்திரியின் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் 

முதல்வர் அம்மாவுக்கு ஓமலூர் பொது மக்கள் சார்பில் எழுதி கொள்ளும் கடிதம். வணக்கம்.

ஓமலூர் பேரூராட்சியில் மருத்துவமனை, பூங்கா மற்றும் பஸ் ஸ்டாண்ட் போன்றவை முறையாக பராமரிக்கப்படாததால், பொதுமக்கள் அடிப்படை வசதியின்றி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த மாவட்டத்தை சேர்ந்த நெடுஞ்சாலை துறை அமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமியிடம் இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இது மிகவும் கண்டிக்க தக்க செயலாகும்.

அரசு மருத்துவமனையில் கட்டிட வசதி இருந்தும், பயன்படுத்தாமல் மூடி வைத்துள்ளனர். ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு, எம்.பி., நிதி உதவியில் உபகரணங்கள், ஆம்புலன்ஸ் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சேலம் எம்.பி. திரு செம்மலை பெரும் சிரத்தை எடுத்துக்கொண்டார் என்பதனால் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். ஓமலூர் மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட, இரண்டு ஆம்புலன்ஸ்கள் ஓராண்டு இயங்கிய நிலையில், "பர்மிட்' கட்ட நிதி ஒதுக்காததால், பல ஆண்டுகளாக ஷெட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. புதியதாக கட்டப்பட்ட அவசர சிகிச்சை பிரிவுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதை ஆண்கள் சிகிச்சை பிரிவாக மாற்றி, "சாதனை' புரிந்துள்ளனர். மருந்து வினியோகிக்க கட்டப்பட்ட புதிய கட்டிடமும் இழுத்து பூட்டு போடப்பட்டு, பழைய கட்டிடத்திலயே மருந்து வினியோகம் நடந்து வருகிறது. மின்தடை காரணமாக, ஸ்கேன் சென்டரை எப்பொழுதுமே மூடி வைத்துள்ளனர். பொதுமருத்துவர்கள் மட்டும் உள்ள நிலையில், சிறப்பு மருத்துவர்கள் ஒருவர் கூட இங்கு பணியில் இல்லை.

ஓமலூர் பஸ் ஸ்டாண்டுக்கு பெங்களூரு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும், 10,000த்துக்கு மேற்பட்ட மக்கள், ஓமலூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியூர் சென்று வருகின்றனர். பஸ் ஸ்டாண்ட் முழுவதும் கடைகள் ஆக்கிரமித்துள்ளன. சேலம் ரோடு, மேச்சேரி ரோடு, பெங்களூரு ரோடுகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு காரணமாக, போக்குவரத்து நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பு செய்து இருப்பவர்கள் இங்குள்ள எம்.எல்.ஏ திரு சி. கிருஷ்ணனின் நெருங்கிய நண்பர்கள். இதனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறார்கள். ஓமலூரில் உள்ள சிறுவர் பூங்கா, குப்பை கொட்டி வைக்கும் இடமாக மாறியுள்ளது. பேரூராட்சி குப்பை வண்டிகளை சிறுவர் பூங்காவில் நிறுத்தி வைப்பதோடு, மூட்டை மூட்டையாக குப்பைகளை தேக்கி வைக்கின்றனர். புற்கள் காய்ந்தும், மலர் செடிகள் இல்லாமலும் பூங்காவுக்கான எவ்வித அடையாளமும் இல்லாமல் பாழடைந்து உள்ளது. காமராஜர் பெயரில் திறக்கப்பட்ட சிறுவர் பூங்காவை பராமரிப்பதில், பேரூராட்சி நிர்வாகம் அக்கறை காட்டாமல் உள்ளது. இது தவிர, பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே, ஓமலூர் பேரூராட்சி மக்கள் வாழ வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எங்கள் பிரச்சினைகளை எழுதி கலெக்டர், மாவட்ட மந்திரி திரு எடப்பாடி பழனி சாமி, முன்னாள் சுகாதார துறை அமைச்சர் டாகடர் விஜய், சேலம் எம்.பி திரு செம்மலை என்று பலரிடம் அணுகினோம். பலன் இல்லை. அதிமுக எம்.பி. திரு செம்மலை எங்களிடம் காது கொடுத்து கேட்டார். ஓரளவு முயற்சி செய்ய முன் வந்தார். ஆனால் லோக்கல் கட்சிகாரர்கள் கொடுத்த நிர்ப்பந்தம் காரணமாக பின் வாங்கி விட்டார். மற்றபடி மாவட்ட மந்திரி எடப்பாடி பழநிசாமியோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ துளியும் கண்டு கொள்ளவில்லை.

எங்கள் பிரச்சினைகளை முன்வைத்து பிரபல பத்திரிக்கைகளை அணுகினோம். எங்கள் குறைகளை விவரித்து தினமலர் கட்டுரைகள் (இன்று மாவட்ட செய்திகள்) வந்துள்ளது. தினமணி நிருபரும், ஜூனியர் விகடன் நிருபரும் எங்கள் குறைகளை விவரித்து கட்டுரை எழுதுவதாக உறுதி அளித்துள்ளார். இது தவிர புதிய தலைமுறை டிவியில் பேட்டி எடுக்க ஏற்பாடும் செய்துள்ளோம். இன்னும் ஒரு சில நாட்களில் நேரில் வர உறுதி அளித்துள்ளனர்.  பா.ம.க கட்சி நிர்வாகிகள் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்க முன் வந்துள்ளனர். சட்டசபை நடக்கும்போது இந்த பிரச்சினையை பா.ம.க எம்.எல்.ஏக்கள் மூலம் எழுப்ப முயற்சி செய்வதாக எங்களுக்கு உறுதி செய்துள்ளனனர் . மற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவை திரட்டி மறியல் போராட்டம் நடத்துவோம். எங்கள் பிரச்சினை தீராவிட்டால் சேலம் பெங்களூர் நெடுஞ்சாலை மறியலில் ஈடுபட தயங்க மாட்டோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

வரும் நாடாளு மன்ற தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களிக்க தயங்க மாட்டோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

நன்றி. வணக்கம்.
 

இப்படிக்கு,
ஓமலூர் பேரூராட்சி பொது மக்கள் சார்பில்
கே. சேகர்
மற்றும்
எஸ். மயில்வாணன்
தி. ராஜ்குமார்
ந. பழனிவேல்
வி. சுஜாதா


அனுப்புதல்:

வெ. கந்தசாமி
1/139-2, வள்ளுவன் நகர்
கலெக்டர் அலுவலகம் (அஞ்சல்)
விருது நகர், அஞ்சல் எண் - 626204

பெறுதல்:

மாண்புமிகு தமிழக முதல்வர்
தலைமை செயலகம், சென்னை

கருத்து: தமிழத்தில் மின் வெட்டு பிரச்சினை தீராவிட்டால் அதிமுகவுக்கு ஓட்டு கிடைப்பது சிரமம் - ஜூனியர் விகடன் சர்வே

மரியாதை மிக்க தமிழக முதல்வர் அவர்களுக்கு,

எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

என் மகன் கல்லூரியில் போன வருடம் சேர்ந்துள்ளான். அவனுக்கு மடிகணினி கொடுத்தமைக்கு முதல்வர் அம்மாவுக்கு என் முதற்கண் நன்றி.

கடந்த சில வாரங்களுக்கு முன் ஜூனியர் விகடன் குழு விருதுநகரில் என்னைப்போன்ற சாதாரண பொது மக்களிடம் அதிமுக ஆட்சி குறித்து கருத்து கேட்டது. என் மனதில் பட்டதை சொன்னேன். என்ன ஆச்சர்யம், நான் நினைத்தது போலவே, தமிழக மக்கள் எண்ணங்களும் ஒன்றியுள்ளது. எங்க அப்பச்சி காலத்தில் இருந்து நாங்கள் பெருந்தலைவர் இருந்த கட்சி என்பதால் மத்தியில் காங்கிரசுக்கும், மாநிலத்தில் திமுக அல்லது அதிமுகவுக்கு ஓட்டு போடுவோம். ஒரு மாறுதலுக்கு திமுக வேண்டாம் என்றுதான் அதிமுகவுக்கு ஓட்டு போட்டோம். ஆனால், பல பிரச்சினைகள் தீராமல் இருப்பது வேதனையாக உள்ளது. வளர்ச்சித்திட்டங்கள் இல்லை. பணபுழக்கம் இல்லை.

மின் வெட்டால் பல தொழில்கள் முடங்கி விட்டன. என் அச்சக தொழிலே பாதிக்கப்பட்டுள்ளது. இலவச மடிகணினி, மிக்சி கொடுத்தாலும், எங்களைப்போன்ற சாதாரண பொது மக்கள் வெகுவாக இந்த அரசிடம் எதிர்பார்ப்பது மின் வெட்டுக்கு தீர்வு. இதைதான் ஜூனியர் விகடன் சர்வே பிரதிபலிக்கிறது. இலங்கை பிரச்சினையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதே தமிழக அரசின் மறைமுக உதவியுடன்தான், அதுவும் கோடையில் மின் வெட்டினால் எரிச்சல் ஆகி உள்ள மக்களின் கவனத்தை திசை திருப்பத்தான் மாணவர்கள் போராட்டத்தை தமிழ் நாடு அரசு ஊக்குவிக்கிறது என்று எங்கள் தொகுதி எம்.பி திரு மாணிக்க தாகூர் மற்றும் அவர் கட்சி ஆட்கள் என்று கூட்டத்தில் பேசி வருகிறார்கள். புதிய தலைமுறை டிவியில் ஒரு முக்கிய காங்கிரஸ் தலைவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. மின் வெட்டு இவ்வளவு தீவிரமாக இருந்தும், இத்தனை வருடமாக பார்லிமெண்டில் ஏன் அதிமுக எம்.பிக்கள் குரல் எழுப்பவில்லை என்றும் கேள்வி கேட்டார். எதிர்க்கட்சி ஆளும் குஜராத்தில் மின் வெட்டு இல்லை, தமிழ் நாட்டில் மட்டும் ஏன் மின் வெட்டு உள்ளது என்று காங்கிரஸ் கட்சி கேள்வி கேட்பது நியாயம் தானே என்று எனக்கே படுகிறது. நான்கைந்து வருடம் முன்  இலங்கையில் நடந்த போர் குறித்து யாரும் தமிழ் நாட்டில் குரல் கொடுக்கவில்லை, இப்ப திடீரென ஆர்ப்பாட்டம் முளைத்துள்ளது. மாணவர்கள் போராட்டமே மின்வெட்டில் இருந்து திசை திருப்பத்தான், இதில் மாணவர்கள் வாழ்க்கை பாழ் ஆகிறது என்ற எண்ணம் என்னைப்போன்ற பெற்றோர்களுக்கு வருகிறது.

இந்த மண்ணை சேர்ந்த பெருந்தலைவர் காமராஜர் ஐயா இருந்தபோது எப்படியெல்லாம் திட்டம் வகுத்தார் என்று நினைக்கும்போது மலைப்பாக உள்ளது. மின் வெட்டு தீராமல் இருப்பதற்கு காரணம் மந்திரிகளின் தவறா, சரியாக திட்டம் போட தெரியாத அதிகாரிகளின் தவறா, மத்திய அரசாங்கத்தின் தவறா என்று என்னை போன்ற சாதாரண மக்களுக்கு தெரியவில்லை. செயலில் எப்படி என்று தெரியவில்லை, ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் தமிழ் நாட்டின் எதிர்காலம் பற்றி அடிக்கடி பேசுவார். திராவிட கட்சிகள் தமிழ் நாட்டுக்கு எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களும் கொண்டு வரவில்லை என்பார். அவர் சொல்வதில் கொஞ்சம் உண்மை உள்ளது என்றே நினைக்கிறேன். தே.தி.மு.க எம்.எல்.ஏ அண்ணாச்சி பாண்டியராஜனும் இந்த ஆட்சியில் நிர்வாகம் சரியில்லை என்று சொல்கிறார். எதுகெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லி அதிமுக அரசு தப்பிக்கிறது என்பார். அவர் ஒரு அரசியல்வாதி மாதிரி பேச மாட்டார். உள்ளதை உள்ளபடி சொல்வார். அண்ணாச்சி படித்தவர், நிறைய பேருக்கு உதவி செய்து வருகிறார். அவர் வார்த்தைக்கு எப்பவுமே இங்கே மதிப்புண்டு. 

என் மகனுக்கு மடிகணினி கொடுத்த நன்றி கடனுக்கு அதிமுகவுக்கு மீண்டும் ஓட்டு போடுவேன். ஆனால் பெரும்பாலான மக்கள் மின் வெட்டினால் இந்த ஆட்சி மீது வெறுப்பில் உள்ளனர் என்பதை முதல்வர் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். தமிழ் புத்தாண்டிலாவது விடிவு பிறக்க ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன். நன்றி. 

இப்படிக்கு,
க. விஜயபாஸ்கர் (என் அப்பா வெ. கந்தசாமி சார்பில்)போக்குவரத்து விதிகள் கடுமையாக்க பட வேண்டும்

அன்புள்ள தமிழக முதல்வர் அம்மாவுக்கு,

என் அன்பு கலந்த வணக்கங்கள்.

நேற்று விருத்தாச்சலம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 12 மாணவர்கள் காயமடைந்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் தனியார் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இங்கு படித்த வரும் மாணவர்கள் வேன் ஒன்றி சென்றனர். இன்று காலை சுண்ணாம்புவாரி ஓடை சென்ற போது‌ வேன் கவிழந்து விபத்தில் 12 மாணவர்கள் காயம‌டைந்தனர்.

இதில் காயமுற்ற ஒரு பையன் எனக்கு உறவினர். லைசென்ஸ் கொடுக்கும்போதும், வாகன புதிப்பித்தல் செய்யும்போதும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டு விடுவதே இது போன்ற நிகழ்சிகளுக்கு காரணம். டிவியில் தினமும் ஏராளமான விபத்து செய்திகள் வருகிறது. இப்படி தொடர்ச்சியான விபத்துக்கள் எங்களைப்போன்ற தாய்மார்களை திகில் அடைய வைக்கிறது.

துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மந்திரிகளை கூப்பிட்டு நீங்கள் கண்டிக்க வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
செல்வி வரதராஜன்  
13/A , பாரதி நகர்
கூத்தபாக்கம், கடலூர் 607001


                

டிஸ்கி : பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க இங்கு கடிதம் வெளியிடப்படுகிறது. அதில் அவர்கள் சுட்டிக்காட்டும் குறைகளுக்கு ந்த வலைத்தளம் பொறுப்பேற்காது. அதில் ஏதும் தவறுகள் அல்லது உண்மைகள் ஏதும் இல்லாது இருப்பின் அதற்கு கடிதம் எழுதியவர்கள் தான் பொறுப்பு. அந்த கடிதங்களில் வந்த கருத்துகள் இந்த வலைதளத்தின் கருத்துக்கள் அல்ல

No comments :

Post a Comment

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog