Sunday, February 17, 2013







பெண்கள் போகப் பொருளாக பார்க்கபடுவதில்லை இந்த கூட்டங்களில் அது ஏன்? நம்மை சீரழிப்பது மேலைநாட்டு கலாச்சாரமா?? அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை


இந்த வாரத்தில் நான் இணையத்தில் படித்த கட்டுரை ஒன்று என் மனதை கவர்ந்தது அந்த கட்டுரை ஆசிரியர் செங்கோட்டை ஸ்ரீராம் இரண்டு முரண்பட்ட கலாச்சரத்தின் சாராம்சத்தை நன்றாக. வி.ளக்கி மிக அருமையான சிந்தனையை விதைத்துள்ளார் என்பதாகவே என் மனதிற்கு பட்டது. நமது இந்திய திருநாட்டின் பாரம்பரியக் கண்ணோட்டத்தில் ஒரு ஆன்மிக நிகழ்வில் பங்கு பெறும் ஒருவன் பிற பெண்களை சகோதரியாகவும், தாயாகவும் பார்க்கிறான்... அதுவே வர்த்தக மயமாக்கல், மேற்கத்திய நடைமுறைகளில் உள்புகும்போது போகத்தின் வழியில் காட்சிப் படுத்துகிறான்... என்பதை மிக தெளிவாக கூறியுள்ளார்.

இந்த கட்டுரை ஆசிரியர்  கோடிகளில் குழுமும் கும்பமேளாக் கூட்டத்தை உதாரணமாக கூறி இருக்கிறார். இது கும்பமேளாக் கூட்டத்திற்கும் மட்டுமல்ல ,மூஸ்லீம்கள் புனிதமாக கருத்து மெக்காவில் கோடிகளில் குழுமும் கூட்டத்திற்கும் சரி இது மிகவும் பொருந்தும். மெக்காவிலும் பல தேசத்தை சார்ந்த பெண்களும் குடும்பத்துடனும் தனியாகவும் வந்தால் அந்த பெண்களை எல்லோரும் சகோதரியாகவும், தாயாகவும் மட்டுமே பார்க்கிறார்களே ஒழிய காமக் கண்ணோட்டத்துடன் பார்ப்பத்தில்லை.


ஆனால் மேலை நாட்டுகலாச்சார வழியாக நாம் பார்க்கும் போதுமட்டும்தான் அவர்கள் போகப் பொருட்களாகவே பார்க்க படுகிறோம் என்பது மனதிற்கு தெள்ளத் தெளிவாக புரிகிறது. இது ஆணாகிலும் பெண்ணாகிலும் உணர்வுகளின் அடிப்படையில் இவ்வாறே அமைந்து விடுகிறது!


நான் படித்த அந்த கட்டுரையை  உங்களுடன் பகிர கிழே தந்துள்ளேன். அதில் என்னை கவர்ந்த வரிகளை சிகப்பு கலரில் காட்டியுள்ளேன்..

நீங்களும் படித்து உங்கள் மனதில் பட்டதை சொல்லிப் போகலாம் நன்றி

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்




தில்லி பலாத்கார சம்பவமும், கோடிகளில் குழுமும் கும்பமேளாக் கூட்டமும்! - ஒரு பார்வை!
By செங்கோட்டை ஸ்ரீராம்
First Published : 15 February 2013 05:43 PM IST

காதலர் தினம் (பிப்ரவரி-14)!

அட... இதற்குப் போய் எத்தனை விதமான கொண்டாட்டங்கள்?! இரவுக் கேளிக்கைகளும் அந்தரங்கங்களும் இந்த ஒரு தினத்தில் மட்டும் பகலில் அதுவும் எல்லோர் பார்வையிலும் படும்படியாக அரங்கேற்றம் கண்டிருக்கிறது? இதற்குப் பெயர்தான் நாகரிகமோ? நாகரிக வளர்ச்சியும் இதுதானோ? எங்கோ கற்கால மனிதர்களை அல்லவா இவையெல்லாம் நினைவூட்டுகின்றன?

தெருக்களும் பேருந்துகளும் இணையர்களின் இம்சைகளால் நிறைந்துவிட, பல நகரங்களிலும் பூங்கா(park) இன்று மூடப்பட்டுள்ளது என்ற பெயர்ப் பலகை தொங்கும் அளவுக்கு இந்தக் காதலர் தினக் கொண்டாட்டம் செல்லுவதற்குக் காரணம் என்ன?

இது ஒரு புறம் இருக்கட்டும்.... இன்று நூறு கோடியின் எழுச்சி (one billion rising) என்று ஈவ் என்ஸ்லெர் என்ற அமெரிக்கப் பெண்மணியின் அழைப்பை ஏற்று, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சம நீதி கோரி உலகம் முழுவதும் நூறு கோடி பெண்கள் 202 நாடுகளில் வீதிக்கு வரப் போகிறார்களாம்! இந்தப் பெண்மணியை இத்தகைய அறிவிப்பினைச் செய்யத் தூண்டியது எது?

பலவந்தத்தின் மூலம், ஒத்துழைப்பில்லாமல் ஒரு பெண் மானபங்கம் செய்யப்பட்டால், பெரும்பாலும் அந்தப் பெண் கர்ப்பமாவதில்லை” - இப்படி அமெரிக்க தேர்தல் பிரசாரத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டாட் அக்கின் பொதுக்கூட்டத்தில் பேசியதுதான் காரணம்!

இதைத் தொடர்ந்து, பெண் விடுதலை, சம நீதி என உலகம் முழுவதும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், சில செய்தி நிறுவனங்களும் இந்த நூறு கோடியின் எழுச்சி (one billion rising) என்ற ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் கலந்த நூதனப் போராட்டத்தை முன் நின்று நடத்துகின்றன. நம் நாட்டில் இந்தப் போராட்டத்தில் முன்நிறுத்தப்படுவது தில்லியில் டிசம்பர் 16, 2012 அன்று ஒரு பெண் கொடூரமாக ஒரு காட்டுமிராண்டி கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலையான சோக நிகழ்வு!

இதை அடுத்து, தில்லி உலகின் பாலியல் பலாத்காரத் தலைநகரம் என்று ஒரு சித்திரத்தை உலக நாடுகள் பரப்பத் தொடங்கிவிட்டன. உலக நாடுகள் மட்டும்தான் என்றில்லை!  இந்திய ஊடகங்களும் இப்படி ஒரு பரப்புரையை நொடிக்கு நூறு தரம் போட்டுக் காட்டத் தொடங்கிவிட்டன. இந்தியாவின் பண்பாடு பெண் அடிமைத்தனம் நிறைந்ததாம்! அதுவே பலாத்காரங்களுக்குக் காரணம் என்று சிலர்சந்தில் சிந்து பாடினர்’! இந்த நூறு கோடியின் எழுச்சி (one billion rising) சுதந்திர யுத்தம் என்றும் சிலர் முழங்கினர்! இது உலகப் பெண்களின் முழக்கம் என்று பெருமிதம் கொண்டனர் சிலர்.

இந்த முழக்கம் இந்தியாவை எப்படி பாதித்துள்ளது..?

தில்லி பலாத்கார சம்பவம் நடந்தவுடனே டிச.29, 2012 அன்று அமெரிக்க தூதரகமும், .நா பொதுச் செயலர் பான் கீ மூனும் கண்டனம் தெரிவித்தனர். அவர்களின் கண்டனச் செய்தி உலகமெல்லாம் வெளியானது. பாலியல் பலாத்காரத்தைக் கண்டித்து பாரீஸ் நகரிலுள்ள இந்தியத் தூதரகம் வரை பேரணி நடத்தி மனுவும் கொடுக்கப்பட்டது. உலகம் முழுவதும், ஏதோ இந்தியா ஒரு காமாந்தக நாடு என்பது போன்ற தோற்றத்தை இந்த ஊடகங்களும் போராட்ட அமைப்புக்களும் ஏற்படுத்தின. இத்தனைக்கும் இந்த ஊடகங்கள் எல்லாம் இந்தியத் திருநாட்டின் முதலீட்டில் இந்தியத் திருநாட்டின் ஊடகவியலாளர்களைக் கொண்டு, இந்தியத் திருநாட்டு மக்களுக்கான செய்திகளைத் தருவதற்கு இங்கேயே இயங்குபவை! இந்த லட்சணத்தில், ஊடகங்களில் அன்னிய நேரடி முதலீடும், அன்னிய ஊடகங்கள் இந்தியத் திருநாட்டில் இயங்குவதற்கும் அனுமதித்தால்..?

சரி இது போகட்டும்! பிப்.10, 2013 அன்று அலகாபாத்தில் சுமார் 3 கோடி மக்கள் கும்பமேளா புனித நீராடலுக்காகக் கூடினர். ஒரே நாளில், ஓர் ஆற்றுப் படுகையில் இத்தனை பேர் கூடினால்..?

பாதுகாப்புக்கு வெறும் 12,000 போலீசார்தான் நிறுத்தப்பட்டனர்! அதாவது சுமார் 3 ஆயிரம் பேருக்கு ஒரு காவலர் என்ற அளவில்!

இவ்வளவு பேர் கூடினாலும், கூட்ட நெரிசல் காரணமாக ஓரிரு விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அது சரியான திட்டமிடல் அல்லது முன்னேற்பாடு இல்லாமையாலோ, வழிகாட்டத் தவறுவதாலோதான்!

இந்தக் கும்பமேளா நிகழ்வுகளில் ஒரு வன்முறையோ, பெண்கள் மீதான தாக்குதலோ அல்லது, சாதாரணமாக இரவு 12 மணிக்கு சிறுமூளை கலங்கும் அளவுக்குக் குடித்துவிட்டு கும்மாளமிடும் ஆங்கிலப் புத்தாண்டுக்கொண்டாட்டங்களில் நடக்கும் சில்மிஷங்களோ எங்கும் காணப்படவில்லை!

தீபாவளி நேரம் என்று இல்லாமல் சாதாரண நாட்களில் கூட சிறு தெருவில் சுமார் பத்தாயிரம் பேர் ஒட்டி உரசிச் செல்லும் சென்னை தி.நகர், ரங்கநாதன் தெருவில் நடக்கும் ஒட்டு உரசல்கள்கூட இந்தக் கும்பமேளாவில் காணப்படவில்லை.

இன்பச் சுற்றுலா என்ற ரீதியில் குற்றாலத்துக்கும் பாபநாசத்துக்கும் ஒகேனக்கல்லுக்கும் கோவா கடற்கரைக்கும் இன்னும் எங்கெல்லாம் அருவிக் கரைகளும் ஆற்றுக் கரைகளும் இருக்கின்றனவோ அங்கெல்லாம் வக்கிரப் பார்வையுடன் சுற்றித் திரியும் கழுகுக் கண்கள் இந்தக் கும்பமேளாக் குளியலில் காணப்படவில்லை! இது கும்பமேளா சென்று திரும்பிய அன்பர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பகிரும் செய்தி. ஆனால், இந்த நிகழ்வு எந்த ஊடகத்திலும் வெளிச்சம் போட்டுக் காட்டப்படவில்லை! சமுதாய சிந்தனையாளர்களாலும் கண்டுகொள்ளப்படவில்லை. பாலியல் பலாத்காரத்தின் தலைநகரம் தில்லி- என்று முழங்கிய வாய்கள், இந்தக் கட்டுக்கோப்பான, தனி நபர் ஒழுக்கத்தை பிரதிபலிக்கும் நிகழ்வை மட்டும் மறைப்பது ஏன்?

பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நாட்டின் ஒழுங்குமுறையைப் பின்பற்றும் பாரம்பரிய சமுதாயத்தில்...  நவீன சிந்தனையாளர்களின் பார்வையில் சொல்லப் போனால், "பிற்போக்கு-ஆணாதிக்கவர்க்கீய முறையைப் பின்பற்றும் சமுதாயத்தில்... போலீசார் துணையின்றி பாதுகாப்புடன் பெண்களால் வலம் வர முடிகிறது. ஆனால், அடிமைத் தளையை அறுத்தெறிந்து, தெள்ளிய அறிவுமுதிர்ச்சியும், உலகாயத சிந்தனையும் கொண்ட பெண்ணால் ராணுவமும், காவல் துறையும் துப்பாக்கிகளுடனும் விழிப்புடனும் வலம்வரும் தலைநகர் தில்லியில் பாதுகாப்பாக வலம் வர முடியவில்லையே?!

ஏன்.. இந்தியத் திரு நாட்டில் இப்படி ஓர் ஏற்றத்தாழ்வும் மாறுபட்ட இருவேறு காட்சிகளும்!

இப்படி ஒரு விவாதம் ஏதாவது ஒரு தொலைக்காட்சி சேனலிலாவது நடைபெறுமா என்று கைகள் ரிமோட் கருவி பொத்தானை அழுத்தி அழுத்தித் தேய்ந்து போனதுதான் மிச்சம்!

குடும்பத்தார் இருக்கிறார்கள்... காதலிக்க இடமில்லை... அதனால் பொது இடத்தில் கட்டிப் புரளுவோம் என்று முழங்குகிறார் தனியார் தமிழ் டிவி விவாதத்தில் ஒரு பெண்ணிய முற்போக்குவாதி!

ஆங்கில சேனல்களிலோ, உடையில்லாமல் வலம் வருவது எங்கள் தனிப்பட்ட உரிமை என்கிறார் ஒரு பெண்மணி! உரிமைக் குரல்கள் பல ஊடகங்களில் இப்படி எதிரொலிக்க...

கும்பமேளா போன்ற ஒரு பெரும் கூட்டத்தில்கூட எங்கள் நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக உலவுகிறாள் என்று முழக்கம் இடத்தான் ஆளில்லை!

கும்பமேளாவில் கலந்துகொண்ட அதே இந்தியர்கள்தானே தில்லியிலும், புத்தாண்டுக் கொண்டாட்டத்திலும் இடம்பெறுகிறார்கள். அப்படி என்றால்...?இரு வேறு நிகழ்வுகளிலும் மனிதர்களின் மனநிலை எப்படி வேலை செய்கிறது...?

இந்த நாட்டின் பாரம்பரியக் கண்ணோட்டத்தில் ஒரு ஆன்மிக நிகழ்வில் பங்கு பெறும் ஒருவன் பிற பெண்களை சகோதரியாகவும், தாயாகவும் பார்க்கிறான்...

அதுவே வர்த்தக மயமாக்கல், மேற்கத்திய நடைமுறைகளில் உள்புகும்போது போகத்தின் வழியில் காட்சிப் படுத்துகிறான்... இது ஆணாகிலும் பெண்ணாகிலும் உணர்வுகளின் அடிப்படையில் இவ்வாறே அமைந்து விடுகிறது!

ஒவ்வோர் ஊரிலும் ஆற்றங்கரைகளும் குளக் கரைகளும் உள்ளன. இன்றும் கிராமங்களில் ஆறுகளிலும் குளக்கரைகளிலும் பெண்கள் இயல்பாகத் தங்கள் காலைக் கடன்களில் ஒரு பகுதியாக துணி துவைத்து குளித்துமுடித்து ஈரத் துணியுடன் கரையேறி வீட்டுக்கு நீர் சுமந்து செல்கிறார்கள். அங்கெல்லாம் பெண்களை கேலி செய்து யாரும் மீள்வதில்லை. கிராமப் புற காட்சியமைப்பு கொண்ட சினிமாக்களில் காட்டப்படும் கேலிக் காட்சிகளைத் தவிர!

ஆனால் நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் உயர் படிப்புடனும், ஜன்னல் ஜாக்கெட், தொப்புள் கம்மல் சகிதம் அலங்கார பவனி வரும் பெண்கள், படித்த, நாகரீக ஆண்களால் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்.

நாட்டின் நிலை இப்படி இருக்க, ஆங்கிலக் கல்வியால் மக்களை காமாந்தகர்களாக மாற்றும் மேற்கத்திய நாகரீகத்தை நாகரீகம் என்றும் அடிப்படை உரிமை என்றும் ஆதரித்துவிட்டு, நன்நெறி புகட்டி பெண்களை பாதுகாப்புடனும், மரியாதையுடனும் நடத்தும் இந்த நாட்டின் ஆன்மீக வழியை பெண் அடிமைத்தனம் என்று தூற்றும் மேல்தட்டு சிந்தனையாளர்களின் உள்மன நோக்கம்தான் என்னவோ?!


7 comments:

  1. ரொம்ப தெளிவா அழகா சொல்லியிருக்கீங்க. கெட்டதை வெளிச்சம் போட்டு காட்டிய ஊடகங்கள் நல்லதை என்னிக்கு வெளிக்காட்டும். உங்க ஒவ்வொரு கருத்தும் மறுப்பதற்கில்லை சகோ

    ReplyDelete
  2. விளம்பரங்களில் இருந்து ஆரம்பிக்குதோ...நல்ல அலசல்...

    ReplyDelete
  3. நல்ல கருத்தை எடுத்து கூரியுள்ளீர்கள் . நன்றி

    ReplyDelete
  4. கோவில்களில் மட்டும்தான் சாமி இருக்கிறது என்று நம்புகிறார்கள் போல தெரிகிறது. சுவரில் சிறுநீர் கழிப்பவர்களிடம் இருந்து சுவரை காப்பாற்ற சுவரில் சாமி படம் வரைந்து வைப்பார்கள். அதுபோல உலகமெங்கும் தெருவுக்கு தெரு சுவருக்கு சுவர் சாமி படங்களை வரைந்து வைத்துவிட்டால் குற்றங்களே நடக்க வாய்ப்பில்லை. உடனே செயல்படுத்துங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. எது கலாச்சாரம் எது நாகரீகம் என்ற தவறான புரிதலே எல்லாவற்றிற்கும் அடித்தளம்..ஊடகங்கள் எப்போதும் நல்லதை விட கெட்டதையே அதிகம் பிரதிபலிக்கின்றன என்பது முற்றிலும் உண்மை.

    ReplyDelete
  6. தேவநாதன், சரஸ்வதி ஸ்வாமிகள் பற்றியும் அலசியிருக்கலாமே

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.