உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, July 16, 2012

ரதியின் மனதில்.... (தரமான பதிவு)


ரதியின் மனதில்.... (தரமான பதிவு)


நான் படித்து ரசித்து மகிழ்ந்த மிக நல்ல பதிவுகளை அந்த வலைத்தள பதிவாளர் அனுமதியுடன் எனது தளத்தில் தரமான பதிவுகள் என்ற தலைப்பில் Satisfaction Guaranteed என்ற படத்துடன் அறிமுகப்படுத்துகிறேன். அதன் படி எனது முதல் அறிமுகம் ரதி.


நமது மனதில் நினைப்பவைகளை அப்படியே எழுத்தில் கொண்டுவருவது என்பது இயலாத காரியம். ஆனால் அதை இந்த தோழி ரதி அவர்கள் கொண்டுவந்து காண்பித்து இருக்கிறார்

படித்துவிட்டு சொல்லுங்கள்.....எனது அறிமுகம் எப்படி என்று.......அவர் எழுத்து எப்படி என்று?

இந்த பதிவை வெளியிட அனுமதி அளித்த ரதிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.எனக்கும் அவ்வப்போது வானம் பார்க்கும் பழக்கமுண்டு, சின்ன வயசிலிருந்தே! நீலவானத்தில் திட்டுத்திட்டாய் இருக்கும் மேகக்கூட்டத்தில் எனக்கு பிடித்ததை எல்லாம் உருவகப்படுத்தி காட்சிப்பிழைகள் சமைத்திருக்கிறேன், என் மனதுக்குள். சின்னவயசில் நான் உருவாக்கிய காட்சிப்பிழை முயல்குட்டி முதல் இந்த நிமிடம் வரை வெளியே விரிந்திருக்கும் தெளிவான வானம் போல் நிறையவே நினைவுகள், ஞாபகங்கள், அனுபவங்கள்.


அத்தனையும் காட்சிகளாய், கனவுகளாய் மனிதமனங்களில் பதிந்துபோகும் நிகழ்வுகள், சம்பவங்கள், உரையாடல்கள், பரிசுகள், ஸ்பரிசங்கள் இப்படி இன்னும் என்னென்ன விதங்களிலோ! போர்பூமியில் புழுதி கிளப்புவது போல் கலவர நினைவுகள், கடற்கரையில் அலைகளாய் கால்கள் வழி இதயம் நனைக்கும் ஈரமான நினைவுகள், பூவிதழின் மேல் ஒற்றைப் பனித்துளியாய் ஏகாந்த நினைவுகள், என் இருப்பை எனக்கு அவ்வப்போது ஞாபகப்படுத்தும் பசி, அயர்ச்சி, தூக்கம் என்கிற என் உடலின் தேவைகள் குறித்த ஞாபகங்கள், இப்படி பல.

தேவைகள் குறித்த தீர்மானமும் ஆசைகள் குறித்த நிதானமும் வாழ்க்கையின் படிநிலை வளர்ச்சியையொற்றி அறிவின் முதிர்ச்சியை பெற்றுக்கொடுத்தது எனக்கு. நினைவுகளின் சுவடுகள்  வழி பின்னோக்கிப் போனால் சிறுபிராயம் முதற்கொண்டு தற்காலம் வரை எத்தனையோ ஞாபகங்கள் நிரம்பி வழிகிறது. எதுவுமே அபத்தமாய் தோன்றவில்லை எனக்கு. இருந்தாலும், என் அனுபவமுதிர்ச்சி கொடுத்த இனிய நினைவுகள் என் எரிசிதை வரை என்னை தொடரவேண்டும். என் இனிய நினைவுகளுக்கு என் நாளில் இறவாமை வேண்டும்.

சிறுபிராய அம்புலிமாமா ஆசை முதல் ஓடிவிளையாடிய நினைவுகள், பள்ளிக்கூட நாட்கள், பழகிப் பிரிந்த நட்பு, பகை, துரோகம், மறக்கவே முடியாத முதல் காதல், அது தவிர மனிதர்களும்  உறவுகளும் நிறைந்த வீடு என்கிற ஞாபகங்கள், கண்ணை கட்டி காட்டில் விட்டது போன்ற திருமண பந்தம் அது குறித்த நினைவுகள் இப்படிப்பல. மொத்தத்தில் சந்தோசங்கள், சஞ்சலங்கள், நம்பிக்கை, ஏமாற்றம் இவற்றுக்கிடையே அல்லாடும் சராசரி மனமே எனக்கும்.

வயது குறித்த படிநிலை வளர்ச்சியும் அனுபவமும் பழைய ஞாபகங்கள், நினைவுகளை பட்டை தீட்டவும் செய்கின்றன. முன்னொரு பொழுதில் புரியாமலோ அல்லது பிழையாகவோ தெரிந்த அனுபவம் பிறிதொரு நாளில் இது ஏன் இப்படி இருந்திருக்க கூடாது என்றும் தோன்றுவதுண்டு. வாழ்க்கை அனுபவங்கள் குறித்த இந்த ஏன் என்கிற கேள்வி தான் தனிமனித சிந்தனை வளர்ச்சிக்கும், முடிவெடுக்கும் திறன் மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் முதற்படி ஆகிறது போலும்.

என் நினைவுகள் வழி எனது இருப்பு, நிகழ்காலம், கடந்தகாலம், அதிலிருந்து எப்படி என் எதிர்காலத்தை பட்டை தீட்டுவது என்று எதையோ ஒன்றை சதா சர்வகாலமும் மனம் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது. அந்த நினைவுகள் எனக்குள் இறந்து போனால் நான் என்ன பெயர் கொண்டு அழைக்கப்படுவேன், சொல்லத்தெரியவில்லை. நினைவுகளும் ஞாபகங்களும் எம் மனங்களில் இருந்து நீங்கிவிட்டால் வாழவேண்டிய காரணங்களும், வாழ்க்கையின் அர்த்தமும் கூட மாறிப்போகலாம்.

நினைவுகள் என்பது எப்போதுமே தனியே அசைப்போடப்படுமா. அல்லது, ஓர் ஏகாந்தப் பொழுதில் மெளனமாய் மார்பணையும் இணையோடு, துணையோடு கதைபேசுமா. அது அவரவர் அனுபம் சார்ந்தது. ஆனால், இரண்டுமே அதனதன் மொழியில் சுகமானது. என் காட்சிப்பிழைகள்முதல் தெளிந்தவானம் போன்ற துல்லிய சிந்தனை வரை எல்லாமே எனக்கு மட்டுமே உரிய நிகழ்வுகள் தான். இருந்தும் அதையெல்லாம் பகிரும் பொழுதில் அது குறித்த பிரதிபலிப்புகளும் கூடவே நிகழ்வது போல் உணர்வேன். அதை ஓர் ஆசானாய், நண்பனாய், தாயாய், இருந்து என்னை "உம்" கொட்டி ஒருவர் அக்கறையோடு உள்வாங்கும் பொழுதில் மனம் இன்னும் அமைதியாகிறது.


பகிர முடியாத, பகிர விரும்பாத இறந்தகால நினைவுகள் ஓர் தனிமனிதனுக்குள் நெருப்பாய் தகிப்பதும் உண்டு. அதுவே பகிரப்படும் போது அதிகாலைப் பனி போல் சுகமாய் குளிரவும் செய்யும். அந்தப் பகிர்தலில் கூட நினைவுகள் சுகமாய், மீண்டும் மனதில் மலர்கிறது.

நினைவுகளை, ஞாபகங்களை பகிர்ந்து கொள்ள நினைத்து நபிக்கையான உறவோ நட்போ கிடைக்காவிட்டால் மனக் குழிக்குள்ளேய புதைக்கப்படுகிறது அல்லது அங்கேயே பாழடைந்து போகவும் செய்கிறது. அனுபவங்களை, ஞாபகங்களை  மனக்குழிக்குள் புதைத்துவிட்டு புதுமனிதராய் ஒன்று எங்களை ஏமாற்றுவோம் அல்லது சுற்றியிருப்பவர்கள் எங்களிடம் ஏமாந்து போகச்செய்வோம். அதுவே வாழ்க்கையின் நியதி என்றும் சில, பல தருணங்களில் ஆகிப்போகிறது.

மனித மனங்களின் புரிதல் என்பதும், புரிந்துகொள்ளப்படுவதும் ஒரே நேர்கோட்டில் நிகழ வேண்டும். பரஸ்பரம் நிர்ப்பந்தங்கள் அற்ற பகிர்தலே நிகழ வேண்டும், காதலோடு நிகழும் கலவி போல். பிரிக்கமுடியாததாய்.

என்னை நிர்ப்பந்தங்கள் இன்றி புரிந்துகொள் என்று மற்றவர்களிடம் எனக்கு கேட்கத்தெரியும். அதுவே மற்றவர்களை புரிந்துகொள்ளும் போது மட்டும் அனுபவமும் அனுமானங்களும், வறட்டு பிடிவாதங்களும்  குறுக்கே வந்து விழுந்து என்னை குறைபாடுடைய மனம் கொள்ளச் செய்யும். அதையெல்லாம் கடந்து மனித மனங்களை, எண்ணங்களை படிக்க கற்றுக்கொண்டிருக்கிறேன்.

எப்படி நான் நினைப்பவைகளை மற்றவர்களுக்கு சிதைவுகள் இன்றி சொல்வதென்று ஒரு பிரக்ஞையோடும் பேசப் பழகுகிறேன். என் அனுபவங்கள் வழி நான் சொல்ல நினைப்பதற்கும், நான் சொல்லும் சொற்களுக்கும் இடையே ஒவ்வாப் பொருளாய் என் சுயம் செயலிழந்து போக கூடாது. எனக்குரிய போலியான அங்கீகாரங்கள் தேவையற்றது என்பதால் உணர்வுகளுக்கும், தேவைகளுக்கும் இடையேயான போராட்டத்தில் என் தனித்தன்மைகளை இழந்தும் விடுவதில்லை. அது தெளிவான முடிவில், தீர்க்கமான வார்த்தைகளின் வடிவில் எனக்குள்ளே புலப்பட வேண்டும்.

முடிவாக என் கசப்பான வாழ்பனுபவங்களுக்கு உயிர் கொடுத்து என் புலனுணர்வுக்கு, அறிவாற்றலுக்கு புதிதாய் வடிவம் கொடுப்பதில்லை நான். அது தேவையற்ற மன உளைச்சலையே கொடுக்கும் என்பதையும் நானறிவேன். அப்பப்போ வானம் பார்த்து மேகக்கூட்டத்தில் எனக்குரிய காட்சிப்பிழைகளையும், தெளிந்த வானத்தில் என் மனப் பிரதிபலிப்பான நிஷ்களங்கம் என்கிற நிலையையும் கண்டுகொள்கிறேன். மனித மனங்களை படிக்கத் தெரிந்தவர்களிடம் என் சந்தோஷ நினைவுகளையும் பகிர்ந்துகொள்கிறேன். அங்கே என்னை நான் அடையாளம் காண்கிறேன்.

என் இனிய நினைவுகள் இறவாமை வேண்டும்!!!


----------------------

நிச்சயம் இவரது எழுத்துக்கள் உங்களுக்குள்  விழிப்புணர்வையோ, புரிதலையோ , தாக்கத்தையோ ஏற்படுத்தி இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

4 comments :

 1. பகிர்தலுக்கு நன்றி, மதுரை தமிழன்!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிவை எனது தளத்தில் இட அனுமதி அளித்தற்கு மனம்மார்ந்த நன்றிகள்

   Delete
 2. ரதியின் எழுத்துக்கள் அருமையாக இருக்கின்றது. அவரின் மற்ற எழுத்துக்களையும் படிக்கும் ஆவல் மேலோங்குகிறது. பதிவிலேயே அவர் தள முகவரியையும் தந்திருக்கலாமே நண்பா. அருமையாக எழுதிய ரதிக்கு இத்யம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். பகிர்ந்த உங்களுக்கு நிறைய நிறைய நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. கணேஷ் பதிவின் தலைப்பான நினைவுகள் இறவாமை வேண்டும்!!! (September 07, 2011) என்பதனை க்ளிக் செய்தால் அவரது தளத்திற்கு செல்லாம் அல்லது என் மனவானில் என்ற படத்தை க்ளிக் செய்தாலும் அவரது தளத்த்திற்கு செல்லாம்.

   ரதியின் எழுத்துக்கள் மிக அருமைதான் அவைகள் உள்ளத்தில் இருந்து வந்து விழுந்த எழுத்துக்கள்

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog