உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, March 28, 2012

அமெரிக்காவில் "கெளரவ வேலை" பார்க்க இந்திய முதியோர்களுக்கு வாய்ப்பு.(மறைந்து இருக்கும் உண்மைகள்)அமெரிக்காவில் "கெளரவ வேலை" பார்க்க இந்திய முதியோர்களுக்கு வாய்ப்பு.(மறைந்து இருக்கும் உண்மைகள்)


அமெரிக்காவில் கெளரவ வேலை பார்க்க இந்திய முதியோர்களுக்கு கோடைகாலங்களில் எப்போதும் வாய்ப்புக்கள் அதிகம். இந்த வேலை வாய்பை  பெறுவதற்கென சில சிறப்பான தகுதிகள்  வேண்டும். அந்த தகுதிகள் இருந்தால் நீங்கள் இங்கு வந்து போவதற்கான செலவுகளில் இருந்து தங்குவதற்கான செலவுகள் அனைத்தும் இலவசம்.

தகுதிகள்:

1.கொஞ்சமாவது சமைக்க தெரிந்து இருக்க வேண்டும்.
2.அரை குறை ஆங்கிலம் தெரிந்து இருக்க வேண்டும்.
3.ஹிந்தி தெரிந்து இருந்தால் மிக ப்ளஸ் பாயிண்ட் ( இது அவசியம் அல்ல ஆனால் இது இருந்தால் உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்)
4.டையப்பர் மாற்ற தெரிந்து இருக்க வேண்டும் ( இல்லையெனில் அதற்கு இங்கு வந்தவுடன் செலவு இல்லாமல் பயிற்சி அளிக்கப் படும்)
5. மிக மிக முக்கிய தகுதி உங்கள்  மகனோ ,மருமகனோ,மகளோ, அல்லது மருமகளோ அமெரிக்காவில் வசிக்க வேண்டும்.

இத்தனையும் இருந்தால் உங்களுக்கு கோடைகால வேலைவாய்ப்பு கிடைக்கும். இது மினிமம் 6 மாத காலத்தில் இருந்து ஒரு வருடம் வரை செல்லும்.

சம்பளமாக கிடைப்பது இதுதான்:

நீங்கள் வந்து போகும் செலவை வேலைவாய்ப்பு தருபவர்களே ஏற்றுக்  கொள்வதாலும் மற்றும் இங்கு இருக்கும் போது உணவும் இடமும் அவர்களே ஏற்றுக் கொள்வதாலும் அதிகம் கிடைக்க வாய்ய்பு இல்லைநீங்கள் இங்கு தங்கி இருக்கும் காலத்தில் உங்களை வேலை தருபவர்கள் அவர்கள் செலவில் நயகாராவோ, டிஸ்னி வோர்ல்டுக்கோ, வாஷிங்டன், கோல்டன் ப்ரிஜ்ஜோ, நீயுயார்க்கில் உள்ள டைம் ஸ்கோயருக்கோ கூட்டி செல்வார்கள்மேலும் நீங்கள் திரும்பி செல்லும் போது இந்தியாவில் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ளவர்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் பிடித்தமானதை வாங்கி உங்களிடம் தருவதால் உங்களுக்குள் வேண்டுமென்றால்  மட்டும் உங்கள் அக்கவுண்டில் சிறிது பணம் போடப்படும்.

இதற்கு சம்மதம் என்றால் நீங்கள் இப்போதே வேலைக்கு அப்ளை பண்ணவும். நீங்கள் தாமதித்தால் உங்கள் சம்பந்தி அப்ளை செய்து அந்த வாய்ப்பை தட்டி பறித்துவிடுவார்கள்

ஆனால் இரு கண்டிஷன்  நீங்கள் இங்கு வேலை பார்க்க வருவதை அமெரிக்கன் தூதரகத்தில் கண்டிப்பாக வாய் தவறியும் உளறி விடக் கூடாது மேலும் உங்கள் உறவினர்களிடம் , அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லும் போது எனது மகனோ ,மருமகனோ,மகளோ, அல்லது மருமகளோ மிக பாசத்துடன் எங்களை அழைக்கிறார்கள் என்று உதார்விட்டு வர வேண்டும்.

இதற்கெல்லாம் நீங்க ரெடியா? அப்ப எதுக்கு வெய்ட் பண்ணிகிட்டு இருக்கீங்க ஒரு கால் பண்ணுங்க இப்போதே.

ஆ ஓண்ணு சொல்ல மறந்துட்டேன். உங்கள் மகனோ ,மருமகனோ,மகளோ, அல்லது மருமகளோ புதிதாக கல்யாணம் ஆகி இப்போதுதான் சென்று இருந்தால் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. உங்களுக்கு சீக்கிரம் வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் பேரக்குழந்தைகளை நாங்கள் கண் மூடுவதற்குள் பார்க்க வேண்டும் சீக்கிரம் ஒன்றாவது பெற்று கொடு என்று பாசத்தை வெளிப்படுத்த வேண்டும். அதில் வெற்றி பெற்றால் வாய்ப்பு கிடைக்க சான்ஸ் உண்டு.


இதை நான் நகைச்சுவைக்காக எழுதி இருப்பதாக  நினைத்து படிக்க வேண்டாம் இதில் 90% க்கு மேலும் உண்மைதான் என்பதை மனசாட்சி உள்ள யாவரும் ஒத்துக் கொள்வார்கள். மன உறுத்தல் உள்ளவர்கள் யாரும் இதை ஒற்றுக் கொள்ளவில்லையென்றாலும் உண்மை இதுதான்

குழந்தைகள் பிறந்த பின் அழைப்பதன் காரணம் குழந்தைகளை வளர்த்த அனுபவம் இல்லை என்பதாலும் குழந்தை பிறந்த ஒரு மாதத்திற்குள் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்ததாலும் அல்லது வேலைக்கு செல்ல வேண்டியது இல்லை யென்றாலும் குழந்தையுடன் தனியாக நாள் முழுவதையும் கழித்து கணவருக்கு வேண்டியதை செய்து கொடுக்க வேண்டி இருப்பாதாலும்தான்.

மேலும் பள்ளிக்கு செல்லும் வயதில் சிறு குழந்தைகள் இருந்தால் கோடை விடுமுறையை சாமாளிக்க பெற்றோர்களை அழைப்பதுண்டு. காரணம் சம்மர் கேம்ப்க்கு அதிக செலவு பிடிக்கும் என்பதாலும் சம்மர் கேம்ப் அதிக பட்சம் அவுட்டோரில் செயல்படுவதால் நம்ம குழந்தைகள் வெயிலுக்கு தாங்க மாட்டார்கள் என்பதாலும்தான் இந்த ஏற்பாடு. அதனால் பெற்றோர்களை இந்த மாதங்களில் அழைப்பவர்கள் அநேகம்.அவர்கள் வந்தால் குழந்தைகளை கவனித்து கொள்வதோடு வேலைவிட்டு வீட்டுக்கு வந்தால் சுட சுட நமது இந்திய பாரம்பரிய உணவுகள் தட்டில் அல்ல தமது வாய்க்கே நேரடியாக வருவதால் பெற்றோர்கள் மீது அதிக திடீர் பாசம் முழைத்துவிடும் நம் இந்திய குழந்தைகளுக்கு.

இந்த பாசம் எல்லாம் குழந்தைகள் ஹை ஸ்கூல் போவது வரை மட்டும் அல்லது பெரியவர்கள் இறைவனிடம் சேரும் வரை மட்டும்தான்.


மனதை சுடும் பதிவு என்றாலும் இதில் இருக்கும் உண்மையை மறுக்க முடியாது.


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : நஞ்சை விதைப்பதற்கோ அல்லது யாருடைய மனதை காயப்படுத்துவதற்கோ இந்த பதிவு போடவில்லை என் அறிவுக்கு எட்டிய எனக்கு தெரிந்த விஷயத்தை இங்கே பதிவாக போட்டுள்ளேன். அறிவி ஜீவி போட்ட பதிவாக எடுத்து கொள்ளாமல் ஒரு சாதாரண மனிதன் போட்ட பதிவாக எடுத்து இதைப் படியுங்கள். நன்றி

25 comments :

 1. அமெரிக்காவில் மட்டுமல்ல... உள்நாட்டிலேயே இப்படி நடத்தப்படும் முதியவர்கள் எண்ணிக்கை நிறைய. முடிவில் நீங்கள் ‌சொல்லியிருப்பது அட்சர லட்சம் பெறும்! குழந்தைகள் வளர்வது வரைதான் பாசம் எல்லாம்! அதன்பின் அந்தப் பெரியவர்கள் கறிவேப்பிலைதான்! (கண்ணெதிரே கண்டவன் என்பதால் உங்கள் பதிவின் நிஜம் எனக்குப் புரிகிறது)

  ReplyDelete
 2. மனதை சுடும் பதிவு என்றாலும் இதில் இருக்கும் உண்மையை மறுக்க முடியாது.

  உண்மையை சுடுகிறது என்பதற்காக மறைக்கமுடியாதே!

  ReplyDelete
 3. பெற்றோர்கள்... அவர்களுக்கு சம்பளமில்லா வேலைக்காரர்கள்
  :-(

  ReplyDelete
 4. மிகச் சரி
  எனக்குத் தெரிந்த பலர் கோடை விடுமுறை
  பகுதி நேர வேலைக்கு போயிருக்கிறார்கள்
  தாங்கள் நகைச்சுவையாகச் சொல்லிப் போனாலும்
  அதிலுள்ள யதார்த்தம் கொஞ்சம் மனச் சங்கடம் செய்துதான் போகிறது.பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 5. மனசுக்கு வேதனை அளிக்கும் பதிவுதான் இருந்தாலும் ஊருக்கே வரமுடியாமல் தவிக்கும் பிள்ளைகளை பார்க்க பெற்றோருக்கும் ஆசை இருக்கத்தான் செய்யும் இல்லையா...

  ReplyDelete
 6. அதே சமயம் வேலைகுப்போகும் 50 அல்லது 55 வயதுள்ள முதியவர்கள், தன் வேலைக்குச்செல்லும் மகளோ அல்லது மறுமகளோ எத்தனை துன்பப்பட்டாலும் வேலையை விட்டுவிட்டு வண்டு உதவ முன்வராவிட்டாலும், கடைசி காலத்தில் தன் மகன்/மகள் தன்னை பார்த்த்டுக்கொள்ள வேண்டும் என்று ஆசைபடுகிறார்கள்.

  இப்போதெல்லாம் இளையவர்களோ,பெற்றோரோ, முதியவர்களோ தன் சுகம், பணம் மட்டுமே குறிக்கோள், அதற்கு இளையவர், முதியவர் பாகுபாடு கிடையாது. உதவி தேவைப்படும் போது அவர்கள் சுகத்துக்காகவும், பணத்துக்காகவும் உதவியை மறுப்பது எல்லாரும் தான், ஏன் முதியவர்களும் கூட.

  எல்லா வசதியும் இருக்கும் (2 வேலையாளுடன்) வீட்டிற்கு கூட வந்து குழந்தையை பார்த்துக்கொள்ள தயாராக இல்லாத பெற்றோர்கள், தன் குழந்தைகள் இறுதிகாலத்தில் தங்களை பார்த்துக்கொள்ள மட்டும் வேண்டும் என்பதும் சுயநலம் தான்.

  மோகனா.

  ReplyDelete
 7. மனதை சுடும் உண்மைகள் தான்!

  அமெரிக்காவின் அங்கே இருந்தே
  நேரடி ஒளிபரப்பாக கொடுப்பது-
  நன்று!

  ReplyDelete
 8. நிஜம் சுடும் என்றாலும் அதனோடும் முதுமை போரிடுகிறது .

  ReplyDelete
 9. மோகனா, இதற்கு எப்படி பதில் எழுதுவது என்று நினைத்தேன்.  உங்கள் கருத்து 100 சதம் சரி.  சொந்த பேரனை பர்த்துக் கொள்வதைக் கூட சுமையாக நினைக்கும் பெற்றோர்கள் அவர்களை வயதான காலத்தில் பிள்ளைகள் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று நினைப்பது சுயநலம்.  

  இந்த மாதிரி பதிவுகள் எழுதி இருக்கும் ஒன்றிரண்டு நல்லவர்களையும் நஞ்சாக்க வேண்டாமே.

  ReplyDelete
 10. இங்கேயும் இப்ப நிலைமை இது தான்.

  ReplyDelete
 11. இங்கே வந்து வருகை தங்களது மனக் கருத்துகளை வழங்கிய

  @ கணேஷ் சார்
  @ இராஜராஜேஸ்வரி மேடம்
  @ பட்டாபட்டி
  @ ரமணி சார்
  @ மனோ சார்
  @ அருள் சார்
  @ மோகனா மேடம்
  @ சீனி சார்
  @ சசிகலா மேடம்
  @ அமர பாரதி மேடம்
  @ அமுதா கிருஷ்ணா மேடம்

  அனைவருக்கும் எனது நன்றிகள்

  ReplyDelete
 12. இந்த பதிவை சில பேர் தவறாக புரிந்து கொண்டார்கள் போலிருக்கிறது. இந்த பதிவின் மூலம் நான் சொல்ல விரும்புவது பிள்ளைகள் தான் தம்மை கஷ்டப்பட்டு வளர்த்த பெற்றோர்களை மிஸ் யூஸ் பண்ணுகிறார்கள் என்றுதான்.

  இந்த வயதான காலத்தில் நாடு விட்டு நாடு வருவது என்பது எளிதல்ல முதலில் நெடுந்தூர பயணம் அதுவும் எக்னாமி கிளாஸில் அடுத்து வெதர் அதன் பின் பேச்சு துணைக்கு யாருமில்லாமல் இருப்பது என்பது மிக கொடுமையான விசயம் அதை இங்கு வந்து அனுபவிக்கும் பெரியவர்களுக்குதான் அது தெரியும். எனது கடைசி மூன்று "பாராவை" கவனமாக படிப்பவர்கள் இதை நன்றாக புரிந்து கொள்வார்கள்" அதற்கு முந்தைய பாராக்கள் படிக்க நகைச்சுவையாக இருக்க வேண்டுமென்று எழுதியது.

  இங்கு வரும் பெரியவர்களை நான் குறை கூறவில்லை. இந்த வயதான காலங்களில் அவர்கள் இங்கு வருவது ஏதோ வெளிநாடு பார்க்க வேண்டுமென்ற ஆசையால் அல்ல தன் குழந்தைகளின் மேல் மற்றும் பேரக் குழந்தைகளின் மேல் உள்ள பாசத்தால் மட்டுமே.

  அமெரிக்கா வரும் பெரியவர்கள் ஒரு மாதத்திற்கு மேல் இருந்தால் அது அவர்களுக்கு கிடைக்கும் தண்டனைதான் என்பதை இங்கு வந்து சென்ற பெரியவர்கள் அனைவரும் ஒத்துக் கொள்வார்கள். மற்ற நாடுகளுக்கு செல்பவர்களின் அனுபவம் பற்றி எனக்கு தெரியாது. வயதான காலத்தில் இந்த தண்டணை மிக பெரியதுதான் ,இருந்த போதிலும் அந்த தண்டனையை தங்களது பிள்ளை பாசத்திற்க்காக அவர்கள் ஏற்று கொள்கிறார்கள். அப்படிபட்ட இந்த பெரியவர்களை நான் வாழ்த்தி வணங்குகிறேன்.

  ReplyDelete
 13. @மோகனா

  ///அதே சமயம் வேலைகுப்போகும் 50 அல்லது 55 வயதுள்ள முதியவர்கள், தன் வேலைக்குச்செல்லும் மகளோ அல்லது மறுமகளோ எத்தனை துன்பப்பட்டாலும் வேலையை விட்டுவிட்டு வண்டு உதவ முன்வராவிட்டாலும், கடைசி காலத்தில் தன் மகன்/மகள் தன்னை பார்த்த்டுக்கொள்ள வேண்டும் என்று ஆசைபடுகிறார்கள்.///

  இந்த மாதிரி உள்ள முதியவர்கள் தண்டிக்கப் படவேண்டியவர்களே

  ///இப்போதெல்லாம் இளையவர்களோ,பெற்றோரோ, முதியவர்களோ தன் சுகம், பணம் மட்டுமே குறிக்கோள், அதற்கு இளையவர், முதியவர் பாகுபாடு கிடையாது. உதவி தேவைப்படும் போது அவர்கள் சுகத்துக்காகவும், பணத்துக்காகவும் உதவியை மறுப்பது எல்லாரும் தான், ஏன் முதியவர்களும் கூட.///

  நீங்கள் சொன்னது 100% உண்மை....


  ///எல்லா வசதியும் இருக்கும் (2 வேலையாளுடன்) வீட்டிற்கு கூட வந்து குழந்தையை பார்த்துக்கொள்ள தயாராக இல்லாத பெற்றோர்கள், தன் குழந்தைகள் இறுதிகாலத்தில் தங்களை பார்த்துக்கொள்ள மட்டும் வேண்டும் என்பதும் சுயநலம் தான்.///

  மிகச் சுயநல வாதிகள் இவர்கள். அவர்களின் எண்ணம் போல கடைசிகாலங்களில் கஷ்டப்படுவார்கள்

  ReplyDelete
 14. @அமர பாரதி


  //இந்த மாதிரி பதிவுகள் எழுதி இருக்கும் ஒன்றிரண்டு நல்லவர்களையும் நஞ்சாக்க வேண்டாமே.//

  எனது பதிவில் எதை நஞ்சு என்று நீங்கள் கருதுகிறிர்கள் என்பது எனக்கு புரியவில்லை. நான் அமெரிக்காவில் நடந்த @ நடக்கும் சம்பவத்தை அப்படியே எழுதியுள்ளேன்.

  உங்களுக்கு நேரம் இருந்தால் என் பதிவில் நீங்கள் கருதும் நஞ்சு என்ன என்பதை விளக்கமாக கூறவும்

  ReplyDelete
 15. இந்தியாவில் இருக்கும் உங்களுக்கு இந்தியாவில் உள்ள உங்கள் பெற்றோர்கள் உதவ மறுத்தால் அது மிகவும் தவறே. ஆனால் இங்கு மிகவும் கவனிக்க பட வேண்டிய ஓன்று நீங்கள் கல்யாணமாகி போனது முதல் குழந்தை பெறும் வரை அவர்களை கவனிக்காமல் விட்டுவிட்டு அதன் பின் உங்களுக்கு வேண்டிய சமயத்தில் அழைத்தால் அவர்கள் வரமாட்டார்கள் என்பதில் எந்த அதிசயம் ஏதும் இல்லை. அதனால் கல்யாணம் ஆகி போனது முதல் பெரியவர்களிடம் இருந்து நாம் என்ன கறக்கலாம் என்பதைவிட அவர்களுக்கு அவர்களின் திருமண நால், பிறந்தநாள், அல்லது பண்டிகைகளின் போது அவர்களுக்கு பரிசு பொருட்களை வாங்கி சென்று அவர்களை மகிழ்விக்கலாம் அல்லது அவர்களை உங்கள் வீட்டுக்கு அழைத்து கெளரவப்படுத்தலாம் இப்படி எல்லாம் நீங்கள் செய்தீர்கள் என்றால் உங்களுக்கு வேண்டிய சமயத்தில் அவர்கள் உங்களுக்கு வந்து உதவுவார்கள் என்பது மிக நிச்சயம்.

  இந்தியாவில் வசிக்கும் சில நண்பர்களையும் சில உறவினர்களையும் கவனித்து இருக்கிறேன் உள்ளூரிலேயே பெற்றோர்கள் இருந்தாலும் பண்டிகை நாட்களில் அவர்கள் வீட்டிற்கு செல்லாமல் நண்பர்களின் வீட்டிற்கு மட்டும் செல்வது. அது மிகவும் தவறுதான் இப்படிபட்டவர்கள் தங்களுக்கு உதவி வேண்டும் என்ற பொழுதுதான் பெற்றோர்கள் நினைவுக்கு வருவார்கள் இவர்கள் மிக கேவலமான சுயநல வாதிகள்

  ReplyDelete
 16. கணேஷ் சொல்லியுள்ள கருத்தே நான் நினைத்ததும். உள் நாட்டிலேயே தனிக் குடித்தனம் இருக்கும், அல்லது கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகும் எந்த வீட்டிலும் நடப்பவையே இவை.

  பின்னூட்ட விவாதங்களும் சுவையாக இருந்தன.

  ReplyDelete
 17. உண்மையை உள்ளங்கை நெல்லிக்கனி போல
  உரைத்தீர்! நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 18. அன்பின் அவர்கள் உண்மைகள்,
  நீங்க இவ்விடுகையில் செய்திருக்கும் Generalization தான் அமரபாரதி நஞ்சென்று சொல்லியிருப்பார் என கருதுகிறேன்...

  அமெரிக்க வாழ் NRI க்கள் அனைவரும் பெற்றோரை ”உபயோகிப்ப”தாக இருக்கும் தொனியை மறுக்கிறேன்.

  2007ல் நாங்கள் அமெரிக்காவுக்கு வந்தோம். எவ்வளவு நாள் இங்கு இருப்போமெனத் தெரியாத நிலையில், பெற்றோரை அழைத்து வந்து வைத்திருக்க வேண்டும் என எண்ணி வந்து ஒரே ஆண்டு ஆன நிலையில் என் அம்மாவையும் (அப்பா இறந்து நாளாச்சு), மாமனார் & மாமியாரையும் கூட்டி வந்தோம்.
  2011ல் எங்களுக்கு பெண் குழந்தை பிறந்த போது முதலில் மாமியார் பிரசவத்துக்கு வந்திருந்தார். அவருக்கு வயது அதிகமில்லை, மனைவியும் அவரும் குழந்தையை பார்த்துக் கொண்டனர். அப்புறம் என் அம்மா வந்தார். வயதான அவரால் குழந்தையை பார்த்துக் கொள்ள முடியாது. இருப்பினும் அவர் குழந்தை கூட இருக்க வேண்டும் என நாங்கள் விரும்பியதால் Daycare இல் சேர்க்காமல் மாசம் 2200 $ செலவில் Nanny வைத்து குழந்தையை பார்த்துக் கொண்டோம் - எல்லாம் எதற்காக - அம்மா குழந்தையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக.

  5 ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர் ஒருவர் தன் தாயின் Knee Cap replacement ஆபரேஷன் அமெரிக்காவில் செய்தார். இந்தியாவில் அப்போது அந்த ஆபரேஷனுக்கு எவ்வளவு ஆகியிருக்கும் என்று கேட்டுப் பாருஙக்ள், அவர் தன் இங்கு 50 லட்ச ரூபாய் செலவழித்து ஆபரேஷன் செய்து, 6 மாதங்கள் வீட்டில் வைத்து கவனித்து அனுப்பினார்.

  எல்லா இடத்திலும் எல்லா விதமான ஆட்களும் இருக்கிறார்கள். Generalization வேண்டாமே நண்பா

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 19. @பாஸ்டன் ஸ்ரீராம்

  சகோதர் ஸ்ரீராம் அவர்களுக்கு உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றி. நான் ஒருபோதும் 100% மக்கள் அப்படி செய்கிறார்கள் என்று சொல்லவில்லை. அதனால்தான் இதில் 90% உண்மைகள் இருப்பதாக கூறியுள்ளேன்.

  உங்களை போல பெரியவர்களை மதிக்கும் நபர்கள் இருப்பதால்தான் இன்னும் மனித நேயம் சிறிதளவாவது தழைத்து இருக்கிறது. வாழ்த்துக்கள்

  எனக்கு நான் போட்ட பதிவைவிட உங்களின் பின்னுட்டம்தான் மிக அதிகம் பிடித்து இருக்கிறது. காரணம் நீங்கள் ,உங்கள் மனைவி மற்றும் உங்கள் நண்பர் போன்ற நல்லவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பது என்னுடைய பதிவின் மூலம் இந்த உலகத்திற்கு தெரிய வந்திருப்பதால்தான். நன்றி ஸ்ரீராம்.

  இறுதியாக நான் சொல்ல வருவது உங்களைப் போல இருப்பவர்களின் சதவிகிதம் நான் சொன்னவர்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது மிக குறைவாக இருக்கிறது என்பது உண்மைதான்.


  நான் அமெரிக்காவில் 1997 முதல் வசித்து வருகிறேன் அதில் முதல் 3 வருடம் மிக்ஸிகனிலும் அதன் பின் நீயூஜெர்ஸியிலும் வசித்து வருகிறேன். நீயூஜெர்ஸியில் இருப்பது என்பது இந்தியாவில் இருப்பது மாதிரி என்பது உங்களுக்கு தெரியும். இங்கு நான் பார்த்த கேட்ட அனுபவங்களை வைத்துதான் நான் இந்த பதிவை எழுதியுள்ளேன்.

  வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 20. @ஸ்ரீராம்
  @புலவர் சா இராமாநுசம்

  உங்களின் வருகைக்கும் உங்கள் மனதில் பட்ட கருத்துக்களை வழங்கியதற்கும் மிகவும் நன்றி

  வாழ்த்துக்கள்....வாழ்க வளமுடன்

  ReplyDelete
 21. இவ்வாறு நடப்பது உண்மையே! ஆனால் பொதுப்படுத்த முடியாது.
  எங்கள் வீட்டிற்கு ஒவ்வொரு முறை எங்கள் பெற்றோர்கள் வரும்போதும்,
  அவர்கள் திரும்பி இந்தியா செல்லவே விரும்புவது இல்லை.
  அது போல அவர்களைச் சிறப்பாக கவனித்தே அனுப்புகின்றோம். இந்தியாவில்
  செய்ய முடியாத அல்லது செய்யத் தயங்குகின்ற நிறைய விஷயங்களை
  அவர்களை இங்கு செய்ய வைப்பதும், அவர்களோடு எப்போதுமே நேரம் செலவிடுவதும்,
  அவர்களுக்காக பல புதிய உணவுகளை செய்துக் கொடுப்பதும், அவர்களுக்கு முடிந்தவரை
  எந்த வேலையும் கொடுக்காமலிருப்பதும்...அவர்கள் இங்கு மீண்டும் மீண்டும் வர விரும்ப வைக்கின்றது.

  ReplyDelete
 22. @இனியா

  உங்களின் வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் மிகவும் நன்றி நீங்கள் கூறிய கருதுக்களிலும் உண்மை இருக்கிறது ஆனால் சதவிகிதத்தில்தான் வித்தியாசம் இருக்கிறது.

  வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 23. நான் ந்ழுத நினைத்ததை ஶ்ரீராம் எழுதி விட்டார்.  அவருக்கு நன்றி.  அதாவது தன் மக்களையும் பேரப் பிள்ளைகளையும் நிஜமான பாசத்தோடு பார்க்க வருபவர்கள் இந்த்ச்ப் பதிவைப் படித்தால் அவர்களும் தங்களை "உபயோகிக்க" நினைப்பதற்க்கு வாய்ப்பு இருக்கிறது.  அப்படியே பேரக் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வந்தாலும் என்ன தவறு? தன் சுயநலம் அந்த அளவுக்கு கண்ணை மறைத்தால் தன் அந்திம காலத்தில் தனியே கிடந்து அல்லாடுவதுதான் நியதி.

  ReplyDelete
 24. இந்த பதிவின் கருத்து தளம் மற்றும் வேறொரு பதில் எழுதிய இந்தியப் பெண்மணியின் திருட்டு போன்ற தளங்கள் மிக்க கவனத்துடன் எழுதப் பட வேண்டும்.  இந்தப் பதிவைப் படித்தால் அமெரிக்காவில் இருக்கும் அனைவரும் பெற்றோரை அழைத்து வருவது சுயநல நோக்குடன் மட்டுமே என்பதாகப் புரிந்து கொள்ளப் படும்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog